ரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள் …..
1983 யூலை இன அழித்தொழிப்பில் இத்தீவு தமிழ் மக்களின் இரத்தத்தில் தோய்ந்த வரலாற்றை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். ஓவ்வொரு தமிழனின் மனங்களிலும் ஆழப் புதைந்துகிடக்கும் ரணமது. இதிலுள்ள துரதிஸ்டம் என்னவென்றால் அந்த கொடூரத்திற்கு மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் பலியாகிவருவதுதான். புரிந்துனர்வு ஒப்பந்தம், நல்லிணக்கப் பேச்சுவார்த்தை, சர்வதேசத் தலையீடு எவையுமே சிங்களத்தின் கொடூர மனோபாவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எஞ்சிக்கிடந்த கொஞ்ச நம்பிக்கைகளும் பொய்த்துப் போனதன் சாட்சியாக இருக்கிறது அந்தநாள். புதுவருடக்கொண்டாட்டங்களுக்கான முனைப்பில்கிடந்தனர் திருமலை வாழ் தமிழ் மக்கள். அப்பொழுதுதான் அந்தக் கொடூரங்கள் அரங்கேறின. 2006 ஏப்பிரல் 12 ஆம் திகதி அன்று , மாலை 3.45 மணியளவில் திருமலை நகரின் மத்தியசந்தையின் பின் வாயில் பகுதியில் ஒரு குண்டு வெடிக்கிறது. அதில் 8 தமிழ்மக்கள் உட்பட 10பேர் காயமடைகின்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த சிங்களக் காடையர்கள் கூட்டம் சில மணி நேரம் வெறித்தாண்டவமாடினர். அந்த வெறித்தாண்டவம் பற்றிய சிலரது நினைவுகள் தான் இங்கு பதிவாகிறது. இத்தாக்குதல்களில் சிங்களவர் காட்டிய வேகத்தைப் பார்த்தால் முன் கூட்டியே எல்லாம் தயார்நிலையில் இருந்திருக்கிறது போல்தான் தெரிகிறது. சரியாக 4.20 மணியளவில் சிங்களக்காடையர்கள் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த தமிழ்மக்கள் மீது குண்டு வீச்சை நடாத்தினர். அதில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டும் 12பேர் காயமடைந்தனர். தொடர்ந்து மத்திய வீதியில் புகுந்த காடையர்கள் கூட்டம் கத்திகள், இரும்புக்கம்பிகள், பொல்லுகள் சகிதம் தமிழ் மக்கள் மீது தாக்குதல்தொடுத்தனர். அதே வேளை நகரின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்படுகின்றனர். லிங்கநகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டு எரிக்கப்படுகின்றார்.
அனுராதபுரச் சந்தியில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த தமிழர்கள் இருவர் வெட்டிக் கொல்லப்பட்டு எரிக்கப்படுகின்றனர். இசிட் அப்பகுதி மக்கள் பலர் பார்த்திருக்கின்றனர். இவையனைத்தும் சிறிலங்காவின் முப்படையினரின் பார்வையிலும் ஆசியிலுமே நடந்தேறின. முதல் நாள் வெறித்தாக்குதல்களில் திருப்தியடையாத சிங்களக் காடையர் கூட்டம் மறுநாள் புதுவருடதினத்தன்று தமிழ் மக்கள் வாழும் கிராமங்கள் மீது தமது தாக்குதல்களை நடாத்தியது. தமிழ் மக்களின் வீடுகளை எரித்து சொத்துக்களையும் கொள்ளையடித்தனர். இதுவும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடனேயே நடந்துமுடிந்தது. இதன் போது கன்னியா சிவயோகபுரம் நடேசர் கோயில் சிங்களக் காடையர்களால் எரிக்கப் பட்டிருக்கிறது.
“ஜயா தம்பி இதை எரிக்காதியுங்கோ” என்று மன்றாடிய 60வயது வயோதிபத் தாயார் ஒருவரை வெட்டிக் கொன்றுவிட்டே இக்கோயிலை எரித்திருக்கின்றனர் காடையர்கள். சிங்களக்காடையர்களின் கோரத்தாண்டவத்தின்போது தமிழ் பெண்கள் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கின்றனர். சிங்களக்காடையர்கள் இறந்தவர்களின் நகைகளையும் ஒன்று விடாமல் எடுத்திருக்கின்றனர். இதன்போது தோடுகளை எடுப்பதற்காகக் காதுகளை வெட்டியிருக்கின்றனர். இவைகள் பற்றி ஆதங்கப்பட்ட திருகோணமலையின் கல்விமான் ஒருவர் இந்த நூற்றாண்டில் இப்படிக் கொடுமை செய்தவர்கள் சிங்களவர்களாகவும் இப்படியொரு கொடுமைக்கு ஆளாகியவர்கள் தமிழ்மக்களாகவும்தான் இருக்கமுடியும் என்றார். இந்தக் கொடுமைகளில் அகப்பட்டு தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் தங்களது வேதனைகளையும் ஆதங்கத்தினையும் இப்படிக் கொட்டித்தீர்த்தனர்.
மேற்படி நடேசர் கோயிலில் வெட்டிக் கொல்லப்பட்ட தாயாரின் மருமகனான திரு.ரவீந்திரன் தனது அனுபவங்களை இவ்வாறு விபரித்தார் “புதுவருசத்தண்டு சொந்தக்காரர் எல்லோருமாகச்சேர்ந்து எங்கடவீட்டில் சந்தோசமாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நாலு நாலரை மணியிருக்கும், சிங்கள இளைஞன் ஒருவன் காணாமல்போய் விட்டதாகச் செய்திகள் வந்தது. அந்தச்செய்தி வந்து 10 நிமிடங்களிருக்கும் எங்கடவீட்டுக்கு முன் பக்கத்தில் இருந்த வீடுகள் எரியுது. கூடவே ஐயோ அம்மா என்ற அவலக்குரல் களும் கேட்குது. உயிரைக்காப்பாற்றிக் கொண்டால் போதுமென்டு பொருட்கள் எல்லாத்தையும் விட்டிட்டு வளவுக்குப் பின்னாலிருந்த வயலுக்கால ஓடினம். என்டமாமி வயதானவர். அண்டைக்கு கோயில்ல பஜனை இருக்குதெண்டு உயிர் போனாலும் வரமாட்டன் எண்டு சொல்லிட்டார். என்ர கண்ணால பார்த்தனான் சிங்களக்காடையர்கள் கத்திகள், பொல்லுகளோட ஓடி வந்தாங்கள். பொலிஸ் அல்லது ஆமி நினைச்சிருந்தால் இதையெல்லாம் தடுத்திருக்கலாம். காலுக்கு கீழ் சுட்டிருந்தால் ஓடியிருப்பாங்கள். ஆனால் அவங்கள் காடையர்களின் காடைத்தனங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாங்கள். இதேநேரம் தமிழனென்டால் சுட்டு விட்டு கலவரத்தை அடக்கச் சுட்டம் என்டிருப்பாங்கள். இனி ஒரே வழி ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தலைவரோட போறது தான்”.
மூன்று பிள்ளைகளின் தாயான கிருபாகரன்- யோகராணி கோரமாதனது அனுபவங்கள் குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்.
“வீட்டில் நாங்கள் நித்திரை. திடீரென்டு எங்கட வீட்டைச் சுற்றியிருந்த வீடுகள் எல்லாம் எரியுது. ஒரே புகைமண்டலம் எங்கட நடேசர் கோயிலைப் பார்த் தால் அங்கேயும் புகைமண்டலம். எல்லாத்தையும் பொலிஸ் பாத்துக்கொண்டுதானிருந்தது. அவங்கள விட்டுப்போட்டு பயத்தில ஓடி வந்த எங்கள வீட்ட போகச் சொல்லியது பொலிஸ். இப்ப எங்களிட்ட ஒன்றுமில்ல எல்லாத்தையும் இழந்து நிக்கிறம்” என்றார் அவர்.
இதன்போது பாதிக்கப்பட்ட சந்திரன் ஜெகநாதன் என்பவர் கூறும் போது “நான் என்ர கண்ணால பாத்தனான். ஊர்க்காவல்படையும் மகிந்தபுரம் சிங்களவரும் டயரைக் கொளுத்திக்கொண்டு வந்தாங்கள். நான் தனியாளாத்தான் இங்க இருக்கிறன். வாய்க்கால் கரையோட நிண்டு பார்த்தனான் எனக்கு நல்லாத் தெரியும். மகிந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோக்காரங்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படையைச்சேர்ந்தவங்கள் முகத்தைக் கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு வந்த வங்கள், சிலர் ஆமியின்ர சேட் போட்டிருந்தாங்கள். கத்திகள் பொல்லுகளோட வந்தாங்கள். எங்கட பகுதியிலிருந்த 42 வீடுகளை எரிச்சும், எங்கட சாமாங்களையெல்லாம் கொள்ளையடிச்சிட்டுப் போனாங்கள் இவங்களுக்குப் பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள் குறுப் முன்னால் சென்றது”
இது பற்றி ஒரு ஆசிரியை இவ்வாறு கூறினார். திருகோணமலை மத்தியசந்தை குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற வீதியைச்சேர்ந்த அந்த ஆசிரியை நாங்கள் வாயில் கதவை மூடிக்கொண்டு இருந்தம். பெரும் சத்தத்தோட சிங்களக் காடையர் கூட்டம் எங்கட வீட்டுக் கதவைத் தட்டி உதைத்தனர். எங்கள் வளவிற்கு மதில் இல்லாததால் நாங்கள் தப்பினம். எங்கட வீட்டிற்கு முன்னால் இருந்த வீடொன்றையும் எரித்தனர். வெளியிலிருந்துதான் பல காடையர்கள் கொண்டுவரப்பட்டிருகின்றனர். யாரோ ஒருவர் இது தமிழருடையது என அடையாளம் காட்ட ஒவ்வொரு கடையாக எரிக்கப்பட்டிருக்கிறது. இதில எல்லாச் சிங்களவரும் பங்கு கொண்டார்கள் எண்டுதான் நான் சொல்லுவன். இங்கயிருக்கிற சிங்களவர்கள் நினைச்சிருந்தால் நாங்கள் இஞ்ச ஒண்டா இருக்கிறம் இஞ்ச நீங்கள் இப்படியெல்லாம் செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டம் எண்டு சொல்லித் தடுத்திருக்கலாம். சிங்களவர்கள் எப்போதும் எங்கள அழிக்கத்தான் காத்துக்கொண்டிருக்கிறாங்கள். அவங்கள் திருந்தப்போறதில்ல என்று ஆதங்கப்பட்டார்.
சிங்களக் காடையர்களுக்குப் பயந்து பாடசாலைகளில் தஞ்சமடைந்த மக்களையும் சோதனை என்ற பெயரில் பாதுகாப்புப்படையினர் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இதுபற்றி கருத்துத் தெரிவித்த ஒரு தன்னார்வ நிறுவனப் பிரதிநிதி தங்கட வேலையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போலத்தான் என ஆதங்கப்பட்டார். ‘இந்த நாலுவருட காலமாக நாங்கள் நல்லிணக்கம், ஜக்கியம், மனிதப்பாதுகாப்பு என்றெல்லாம் காசச் செலவளித்ததுதான் மிச்சம். ஜ.நா அகதி மக்களின் உரிமையெல்லாம் பேசிச்சு. நாங்களும் பேசினம். ஆனால் அகதி முகாமிலிருக்கும் மக்களையே சந்தேகத்தின் பேரில் ராணுவம் கைது செய்கிறது. விசாரணைக்கு என அழைத்துக்கொண்டு செல்கிறது. அவர்களது அகதி உரிமைவாதங்களின் அர்த்தம் என்ன?”
இவ்வாறு இந்த கொடூர இன அழித்தொழிப்பு தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான கதையிருக்கிறது. திருமலை இன்று அச்சம் கலந்த அமைதியுடன் தன் மண்ணின் கீழே கொதித்துக் கொண்டிருக்கும் சிங்கள இனவாத எரிமலைக் குழம்பின் மேல் உள்ளது.
– கதிரவன்.
விடுதலைப்புலிகள் (சித்திரை – வைகாசி 2006) இதழிலிருந்து தேசக்காற்று.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”