கரும்புலி மேஜர் மலர்விழி
தாய்மை…..
அது கரும்புலிகளின் பாசறை, பயிற்சிகளும் பம்பல்களுமாக கலகலப்பாக இருக்கும் அந்தப் பாசறையில் மலர்விழியுமிருந்தாள். சண்டைக்களங்களில் உறுதிமிக்க வீராங்கனையாகத் தோன்றும் அவள் முகாமிற்கு வந்துவிட்டால் ஒரு தாயைப்போல மாறிவிடுவாள்.
அவளின் அந்த இயல்பிற்கு ஒரு காரணமிருந்தது. குடும்பத்தின் மூத்த பிள்ளையாக அவள் பிறந்திருந்தாள். அவளுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உறவாக இருந்தார்கள். சடுதியாக அன்னையவள் இடையில் பிரிந்துபோக குடும்பத்தில் அன்னையின் பொறுப்பை அவளே சுமந்து நின்றாள்.
தம்பியையும் தங்கையையும் தாயைப்போல அரவணைத்து அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து, அவர்களை வளர்த்துவிட்ட அவள் காலத்தின் தேவையறிந்து போராளியாகிப் பின்னர் சாதனைகளின் உச்சத்தைத் தொடுவதற்காகக் கரும்புலியாக மாறிக்கொண்டாள்.
அந்த முகாமில் பயிற்சி நேரம் தவிர்ந்த ஓய்வு நேரத்தில் யாரிற்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்காகவே தனது நேரத்தைச் செலவிடுவாள். யாராவது போராளிகள் கசங்கிய உடையோ அல்லது சற்றேனும் புழுதிபடிந்த உடையை அணிவதோ அவளுக்குப் பிடிக்காது. கசங்கிய உடைகளை அழுத்தி மடித்துக் கொடுத்து அதைப்போட வைத்து அதன் அழகை இரசிப்பதில் தான் அவளது மகிழ்ச்சியிருந்தது.
போராளிகளின் ஆடைகளைத் தோய்த்துக் கொடுக்கக்கூட அவள் தயங்கியதில்லை. அவர்களின் இந்தப் பாசறை ஒருநாள் சிங்களப் படையின் விமானத் தாக்குதலுக்குள்ளாகிறது. உயிர்களுக்குச் சேதமேற்படா விட்டாலும் காயம் ஏற்பட்டு போராளியொருவர் மருத்துவமனையிலிருந்தான். அவர்களின் தங்ககம் விமானத்தாக்குதலால் சிதைந்தது. உடைமைகள் யாவும் சிதறுண்டன.
காயம்பட்ட போராளிக்கு மாற்று உடையில்லை. அந்த விடுதியிலிருந்த எல்லோருக்கும் அதுவே நிலைமை. மலர்விழி மருத்துவமனைக்குச் சென்று அவனைப் பார்க்கிறாள். மாற்றுடையில்லாமல் அவன் அவதிப்படுவது தெரிந்தது. ஆனால், உடனடியாகப் புது உடை வாங்கக்கூடிய வசதி அவளிடம் இருக்கவில்லை.
மலர்விழி முகாம் வருகிறாள். விமானத் தாக்குதலால் சிதறிய விடுதியில் வந்து பார்க்கிறாள். அங்கே கிழிந்தபடி காயப்பட்டவனின் சேட் ஒன்று கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு போனாள். ஊசி நூல் எடுத்து குண்டுச் சிதறலால் ஏற்பட்ட கிழிசல்களைப் பொறுமையாக இருந்து தைத்தாள். பின்னர் அந்த ஆடையைத் தோய்த்து காய்ந்த பின்னர் அழுத்தி மடித்து மருத்துவமனையில் மாற்றுடையை எதிர்பார்த்திருக்கும் அந்தப் போராளியிடம் ஒப்படைத்தாள். அந்தக் கரும்புலி வீராங்கனையின் தாய்மையின் நேசம் எல்லோரையும் வியக்கவைத்தது.
மலர்விழி பல நடவடிக்கைகளுக்காக எதிரியின் முகாமுக்குள் ஊடுருவி வெற்றியுடன் திரும்பி வந்தாள். நடவடிக்கைக்காகச் செல்லும் ஒவ்வொரு தடவையும் வழியனுப்புவோரிடம் அவள் சொல்வது ~தம்பியும் தங்கையும் கவனம் என்பதை மட்டும் தான்.
இவள், வீழ்த்த முடியாத பெருந்தளமாக எதிரி இறுமாந்திருந்த ஆனையிறவுத் தளத்தினுள் மேஜர் ஆந்திரா, கப்டன் சத்தியா ஆகிய கரும்புலிகளோடு இணைந்து அதிரடியான ஊடுருவலொன்றின் மூலம் தாமரைக்குளத்திலிருந்த நான்கு ஆட்லறிகளை வெற்றிகரமாகத் தகர்த்தெறியப் பெருந்துணை புரிந்தாள். தம் பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தியுடன் தாம் திரும்பிக்கொண்டிருக்கும் போது எதிரியின் பலம்மிக்க கொமாண்டோ அணியொன்றின் சுற்றிவளைப்பிற்குள்ளாகினர்.
மூன்று பெண் கரும்புலிகளும் மிகவும் துணிச்சலோடு சண்டையிட்டு எதிரியின் கோட்டையாயிருந்த இயக்கச்சிப் பகுதியில் பன்னிரெண்டு கொமாண்டோக்களைக் கொன்று கொமாண்டோப் படையைக் கதிகலங்கவைத்து 31-03-2000 அன்று ஓயாத அலைகளின் வெற்றிவீரர்களாக வீரச்சாவை அணைத்துக்கொண்டார்கள்.
நினைவுப்பகிர்வு:- புரட்சிமாறன்.
விடுதலைப் புலிகள் (04 புரட்டாதி, 2008) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”