கறுப்பு வீதியின் சொந்தக்காரர்
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்.
எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர
என்னால் முடியவில்லை.
எனவே
எழுதாத என் கவிதையை….
வரிகளின் சொந்தக்காரி கப்டன் வானதி. 1991.07.11 இல் தொடங்கவிருந்த ஆணையிறவுச் சிங்களப் படைத்தளம் மீதான ஆ.கா.வெ சமருக்கான நீண்ட கடும் பயிற்சியை நிறைவுசெய்து, வெவ்வேறிடங்களில் வெவ்வேறு பயிற்சிகளைப் பெற்றோர் ஒன்றுகூடி, அப்போதிருந்த சிங்கள அரசின் தமிழர்மீதான பொருளாதாரத் தடையை மீறி முடிந்தளவு சிறப்பாக தமிழீழ நிதித்துறையினரால் தயாரிக்கப்பட்ட உணவை உண்டுவிட்டு, இயக்கச்சித் திசையில் ஆணையிறவைத் தாக்கப்போகின்றவர்களும் பரந்தன் திசையால் ஆனையிறவைத் தாக்கப்போகின்றவர்களும் பிரிகின்ற வேளை இதோ நெருங்கிவிட்டது.
ஓடிவந்தார் வானதி. அவர் கேணல் விதுஷா / யாழினியின் தலைமையில் இயக்கச்சியிலிருந்து நகரப்போகும் அணிக்குரியவர். பரந்தன் திசையால் தாக்கப்போகின்ற கப்டன் தமயந்தி முதலானோரிடம் ஓட்டத்தில் வந்தார்.
“இப்ப போய்வாங்கோ. நான் கறுப்பு றோட்டாலை வந்து உங்களைச் சந்திக்கின்றேன்” காலம் வானதியின் வருகைக்காகக் காத்திருந்தது.
பரந்தன் திசையால் சுற்றுலா விடுதியைத் தாக்கப்போகும் அணி, தலை நிமிர்த்த முடியாத வெட்டையில் வீதியைக் குடைந்து வெட்டப்பட்டிருந்த அகழியினூடே நகர்ந்தவாறு எதிரி நிலைகளை அவதானித்தது. யாருடையதோ தலையசைவைச் சிங்களப் படையினர் கண்டிருக்க வேண்டும். பொழிந்து தள்ளினார்கள் ரவைகளை.
நம்மவர்கள் தலையை உள்ளிழுத்துக் குனிந்தவாறே ஓட முயன்றனர். முடியவில்லை. ஆணையிறவுக்கே உரித்தான சதுப்பு நிலம் முழங்கால் வரை புதைத்ததோடு நில்லாமல், இழுத்தும் விழுத்தியது. தோள்களில் கொழுவப்பட்டிருந்த பலரது சுடுகலன்கள் சேற்றில் விழுவது தவிர்க்க முடியாதது ஆகியது. லெப்.வாகினியின் நடைபேசியும் சேற்றில் அமிழ்ந்து மீண்டது. ஒட்டிய சேற்றை ஒற்றியவாறே, “பழுதாய் போனாலும் பரவாயில்லை. சண்டையில ஒரு புதுசு எடுத்து இயக்கத்துக்குக் குடுப்பன்” என்றார் நம்பிக்கையோடு.
பகைவரிடமிருந்து ஆணையிறவில் படையியல் உபகரணங்கள் எம்மால் பறிக்கப்படும் நாளுக்காகக் காலம் காத்திருந்தது.
கட்டைக் காட்டில் கடுமையான சண்டை நடந்துகொண்டிருந்தது. வெட்டை வெளிப் பகுதியில் எம்மவர்களுக்கான விநியோகம் சிரமமாகவே இருந்தபோதும், பாணும் நெகிழப் பையில் கட்டப்பட்ட இறைச்சிக் குழம்பும் எப்படியோ எம்மிடம் வந்து சேர்ந்துவிடும் நெகிழப்பையைப் பாணாலேயே துடைத்துச் சுத்தம் செய்து சாப்பிட்டுவிட்டு, பையிலேயே எமக்கான குடிநீரை வாங்கித் தலைக்கு மேலே எங்காவது கொழுவி வைத்துவிட்டு, நா வறளும் போதெல்லாம் வாயெரிய வாயெரியக் குடித்தோம்.
பல தடவைகள் பகைவரின் எறிகணை வீச்சில் பைகள் பிய்ந்து கறித்தண்ணீர் தலையோடு முகம் கழுத்தெல்லாம் நனைத்து எரிவை உண்டாக்க, தண்ணீர் வரப்போகும் அடுத்த வேளைக்காய்த் தவிப்போடு காத்திருந்தோம்.
நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியவில்லை. ஒரு மாதத்தில் பல தடவை நகர்ந்துகொண்டேயிருப்போம். மந்துப் பற்றை, சதுப்பு நிலம், பூவரசம் வேலி, வரம்படி, ஒற்றை ஆலமரத்தடி என்று இடங்கள் மாறும்.
காலமும் மாறும். கடும் வெயில் காலத்தில் வெட்டையில் அகழியில் தலைக் கவசமணிந்து கண்ணாடியால் முகத்தை மூடத்தவறினால், உப்பு மணலை வாரியள்ளியவாறு வீசும் வெப்பக்காற்று, நிலமட்டத்தோடு சுழலும். எமது விழிகளைத் தாக்கத் தவறாது.
வசந்த காலத்தில் வெளிகளில் வந்து ஆட்காட்டிகள் முட்டையிட்டு, எமது வயிற்றுப்பாட்டைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும்.
எங்கிருந்தோ திடீரென வரும் கொக்குக் கூட்டம் ஒற்றை ஆலமரத்தில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு, மறுபடி பறக்கும்.
பெயர் தெரியாத பறவைகளெல்லாம் சிறுசிறு கிளைகளில்கூட கூடுகட்டி, முட்டையிட்டுக் குஞ்சுகளோடு பறந்துபோகும்.
நிலத்தின் கீழ் வெட்டப்பட்ட அகழிகளில் நுளம்புத் திரிகளிலிருந்து விழும் சாம்பல் துணிக்கைகளை எண்ணி எண்ணி நேரத்தைக் கணக்கிட்டோம்.
ஆணையிறவை நாம் முதற்தடவை தாக்கி, ஆண்டு ஒன்று அதற்குள் ஆகிவிட்டதா? காவலுக்கு அடுத்தவரை எழுப்பிவிட்டு, விடியும் வேளைக்காகக் காத்திருந்தோம்.
1996ஆம் ஆண்டு. காலம் போகப்போக ஆனையிறவுக்கும் எங்களுக்குமான தூரம் அதிகரித்துக்கொண்டேபோனது. இப்போது எமது இருப்பு தட்டுவன்கொட்டிக் கிராமத்தில். சொத்துப் பத்தென்று சொல்லிக்கொள்வதற்குச் சுடுகலன், ரவைகள், ஒரேயொரு மாற்றுடையைத் தவிர எம்மிடம் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் அவரிடம் ஒரு கனமான முதுகுப்பை. எங்கு போனாலும் கூடவே போகும்.
“நகைப் பெட்டியோ?” என்ற தோழிகளின் கேலியையும் பொருட்படுத்தாமல் அவர் காவிய பையினுள் யுரேனியத்தைவிடவும் பெறுமதியானவை இருந்தன.
ஆணையிறவில் அடிக்கடியும், அவர் போன வேறு களங்களிலும் நடந்த பல சம்பவங்களை அன்றன்றாடம் சுவையாக எழுதிவைத்த குறிப்பேடுகள் அவை.
அன்று அதிகாலை வழமைபோலவே அவரும் தோழிகளும் முன்னே காப்பரண்களில். சொத்துப் பத்தெல்லாம் பின்னேயுள்ள மண் வீட்டில். சண்டை தொடங்கிவிட்டது. சிங்களப் படையினரின் ராங்கிகள் முன்னேற முன்னேற, அவற்றின் திசைக்கேற்ப எமதணிகள் நகர்ந்து நகர்ந்து சண்டையிட்ட வேளையும் குறிப்பேட்டுப் பொதியின் நினைவு வராமலில்லை.
‘இதோ சண்டை முடிந்துவிடும். அப்படி இடம் விடுபட்டால்கூட இரண்டு நாட்களில் அடித்துப் பிடித்து எடுத்துவிடலாம்’ என மனம் ஆறுதல் கொள்ள சண்டையிட்டவாறு நகர்ந்து, சண்டையிட்டவாறு நகர்ந்து…
அந்தோ, இந்தோ என்று நான்காண்டுகள் கழிந்தனவா! குறிப்பேடுகளைக் கறையான் தின்றிருக்கக்கூடாது. ஏக்கத்தோடு காத்திருந்தது மனம்.
அவரையே உற்றுப் பார்த்தன அனைவரது விழிகளும். அவரது விழிகளில் தெரிந்த புத்துணர்வும் சொற்களில் தொனித்த நம்பிக்கையும் எல்லோரிலும் தொற்றிக்கொண்டது.
“இம்முறை வென்று விடுவோம்”
1991, 1997, 1998இல் போய்ப் போய் வந்தவர்களும் புதியவர்களுமாகப் 2000 இல் படகேறினார்கள்.
வழியனுப்பும்போது அவர் சொன்னதையே அவர்கள் எதிரொலித்தார்கள்.
“போட்டாலை போறம். திரும்பி றோட்டாலை வாறம்” என்றபடி போனார்கள்.
சொன்னபடி, ஆனையிறவூடே பயணிக்கும் யாழ் நெடுஞ்சாலையால் திரும்பிவந்தார்கள்.
– மலைமகள்
விடுதலைப்புலிகள் இதழ் (சித்திரை – வைகாசி 2006)
இணைய முதல் தட்டச்சு உரிமம் தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”