கப்டன் லிங்கம்
யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட (படுகொலை செய்யப்பட்ட) தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் லிங்கம் ஆகிய மாவீரரின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
லிங்கத்தின் மறைவு விடுதலைப்போரில் திருப்புமுனை
லிங்கம் 16.12.1960ல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இயற்பெயர் செல்வகுமார். இந்துக்கல்லூரியில், படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளரானார். 1980ம் ஆண்டில், 12ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இயக்கத்தின் உதவியாளனாகச் செயல்பட ஆரம்பித்தார். எமது விடுதலை குறித்து சுவரொட்டிகளை ஒட்டுதல், சுலோங்களைச் சுவர்களில் எழுதுதல் போன்ற வேலைகளை ஆர்வத்துடன் செய்தார். விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டாத அவ்வேளையில் விடுதலைப் புலிகளை வேட்டையாட இரகசிய பொலிசார் மோப்பம் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சுவரொட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளைக்கூட மிகவும் சிரமங்களுக்கிடையிலும், கைதாகும் ஆபத்துக் கிடையிலும் செய்தார். 1981ல் முழுநேர உறுப்பினரான லிங்கம் யாழ்ப்பாணத்தில் அரியாலை சனசமுக நிலையத்தில் உடற்பயிற்சிகளைப் பெற்றார். சிறந்த போர்வீரனாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் ‘கராத்தே’ (தற்பாதுகாப்புக்கலை) பழகி பிரவுன் பட்டிக்குத் தகுதி பெற்றார்.
1982ல் தலைவர் பிரபாகரனை லிங்கம் சந்தித்தபின் பிரபாகரனின் ஆகர்ஷிப்பில் அமிழ்ந்து போனார். அவருக்கும், இயக்கத்துக்கும் விசுவாசமாக நடப்பதே தன் கடமை என உணர்ந்து இயக்க வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1982ம் ஆண்டில் கடைசிப் பகுதியிலும், 1983ம் ஆண்டின் முதற்பகுதியிலும் வன்னிப் பகுதியில், ஒரு காட்டில் அவருக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு சுடப்பழகிக் கொண்டார். கடுமையான பயிற்சிகளையும் மிகுந்த ஆர்வத்துடன் செய்தார். குறிதவறாது சுடுவதில் திறமையைக் காட்டினார். A.K சுரிகுழல் துப்பாக்கி அவருக்கு விருப்பமான ஆயுதம். தலைவர் பிரபாகரனுடன் போட்டி போட்டுக் கொண்டு துப்பாக்கி சுடுவதில் முனைந்து நிற்பார். 300 யார் உயரத்தில் பறந்து கொண்டிருந்த பருந்தொன்றினை தனது A.K சுரிகுழல் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியமை அவரது கடும் திறமைக்குச் சான்றாகும்.
சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட பல மோதல்களில் பங்கேற்றுக் கொண்டார். தாக்குதல்களின் போது முன்னின்று சண்டையிடுவார். ஜூலை 1983ல் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் 13 இராணுவ வீரர்களைக் கொன்றொழித்த அத்தாக்குதலில் லிங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.
1984ம் ஆண்டு மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக கடமையாற்றினார். அக்காலத்தில் அரசியல் பிரச்சாரத்தை திறம்பட நடத்தி, தமிழக மக்களுடன் மிகுந்த நல்லுறவை வளர்த்துக் கொண்டார். 1985ம் ஆண்டுக் காலத்தில் தமிழீழக் காடுகளில் இருந்த பயிற்சி முகாம் ஒன்றின் பொறுப்பாளராகச் செயற்பட்டார். அக்காலத்தில் விசேஷ பயிற்சி பெற்று விடுதலைப் புலிகளின் அதிரடிப்படைப் பிரிவு கப்டன் ஆனார். தலைவர் பிரபாகரனின் மிக நெருங்கியவர்களில் ஒருவராகவும், உதவியாளராகவும், மெய்க்காப்பாளராகவும் செயற்பட்டார்.
தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் நெடுமாறனும், பின்னர் பிரெஞ்சுப் பத்திரிகையாளர் இருவரும் தமிழர்படும் துன்பங்களையும், அரச பயங்கர வாதத்தையும் அறிந்து வர தமிழீழம் சென்றபோது அவர்களின் பயணப் பொறுப்பு லிங்கத்திடமே கொடுக்கப்பட்டது. லிங்கம் தமது கடமையை பூரணமாக நிறைவேற்றினார்.
லிங்கம் இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவருடனும் சகஜமாகப் பழகியிருந்ததால் எல்லோரும் அவரிடம் அன்பு கொண்டிருந்தனர். கடமை என்று வரும்போது கண்டிப்பானவராகி விடுவார். அப்படிக் காட்டிக்கொள்வதற்காக முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கடுகடுப்பாக பேச முயன்றாலும், வெகுளித்தனம் தான் வெளியே தெரியும். கடைசியாகத் கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டிலிருந்து சென்றபோது தனது தோழர்களைப் பிரிந்த வேளையில் கண்களில் நீர் வழிய விடைபெற்றார். புதியவர்கள் அக் காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவரைப் புரிந்தவர்கள் கேலி செய்து சமாதானப் படுத்தினர்.
கட்டையான தோற்றம், தீட்சண்யமான கண்கள்; தடிப்பான மீசை; மெதுவான, உறுதியான நடை; அவரது குட்டையான உருவம் குறித்து அவரது நண்பர்கள் கேலி செய்வார்கள். அவர்களுடைய உரையாடலுக்கிடையே ஏதாவது லிங்கம் கூற முனைந்தால் ‘நீ சின்னப் பொடியன்; அங்கால போ’ என்று வேடிக்கையாகக் கூறிச் சிரிப்பார்கள். நண்பர்களின் கேலிப் பேச்சுக்களை ரசிப்புடன் ஏற்றுக் கொள்வார்.
27.04.1986 அன்று சிறிலங்காவின் கடற்படையுடன் மோதலில் ஈடுபட்ட மேஜர் அருணாவும் அவருடன் கூடச் சென்ற விடுதலைப் புலி வீரர்களும் தளம் திரும்பவில்லை. அவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக கருதிய தமிழீழ மக்கள் 28.04.1986 அன்று அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழீழமெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன. கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டன. மேடைகள் அமைத்து அருணாவின் படத்தை வைத்து மக்கள் வீரவணக்கம் செய்தனர்.
ஒலி பெருக்கிகள் அவரது வீரவரலாற்றை முழங்கின. எவரது தூண்டுதலுமின்றி மக்கள் எழுச்சி பெற்று தமிழீழ விடுதலைப்புலி வீரர்களுக்கு ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்தது கண்டு எரிச்சலடைந்தனர் டெலோவினர். 24.04.1986ல் கடலில் இறந்த டெலோ உறுப்பினர்களின் பொருட்டு மக்கள் எதுவித அனுதாபமும் தெரிவிக்கவில்லை. 29.04.1986 அன்று ஹர்த்தால் செய்து இறந்த தமது தோழர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களை பலவந்தப் படுத்தினர். இக்கட்டாய ஹர்த்தாலை மக்கள் ஏற்கவில்லை. தாம் ஒழுங்குசெய்த ஹர்த்தாலுக்கு மக்களிடமிருந்து எவ்வித ஆதரவும் இல்லாதது கண்டு ஆத்திரமடைந்தனர் டெலோவினர். தமது கோட்டையாகக் கருதிய கல்வியங்காட்டுப் பகுதியிலேயே மக்கள் விடுதலைப் புலிகளுக்கு அமோக ஆதரவளித்தது கண்டு புழுங்கிய டெலோவினர் மக்களைப் பயங்கரமாகத் தாக்கினர்.
அருணாவின் படம் வைத்திருந்த அஞ்சலி மேடைகளை உடைத்தெறிந்தனர். அருணாவினதும் மற்றும் தோழர்களினதும் படம் போட்ட சுவரொட்டிகளைக் கிழித்தெறிந்தனர். மக்கள் அராஜக வாதிகளினால் தாக்கப்படுவதைக் தடுக்கச் சென்ற மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் டெலோவால் கடத்தப்பட்டனர். கடத்திச் சென்று கொல்வது டெலோவினருக்கு கைவந்தகலை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய ஆலாலசுந்தரம். தர்மலிங்கம் ஆகியோர் டெலோவால் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். திருச்சி அகதிகள் முகாமிலிருந்து 3 அகதிகள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படனர். பேச்சு வார்த்தைக்கென அழைத்து வஞ்சகமாகக் கொல்வதில் வல்லவர்கள் டெலோவினர். டெலோவின் ராணுவத் தளபதியான தாஸையும் அவரது 3 தோழர்களையும் பேச்சுவார்த்தைக்காக யாழ்ப்பான வைத்தியசாலைக்கு அழைத்துச் சுட்டுக் கொன்றனர். வைத்தியசாலைகளைத் தாக்குதலுக்குள்ளாக்குவது சர்வதேச சட்டங்களுக்கு முரணான செயல். மனித நாகரீகத்துக்கே இழுக்கானது. அங்கு நின்ற ஒரு தாதி உட்பட பல நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டதுடன். நீதிபதி ஒருவரும் கொல்லப்பட்டார்.
மறுநாள் இப்படுபாதகச் செயலை எதிர்த்து ஊர்வலம் சென்ற பொதுமக்கள் மீது டெலோவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மூவர் இறந்தனர். மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் கொலை செய்யப்படலாம் என்று உணர்ந்த எமது தலைமைப்பீடம் பேச்சுவார்த்தை மூலம் அவர்களை விடுதலை செய்விப்பதற்காக லிங்கத்தை அனுப்பியது. சிறி சபாரத்தினமும் அவரது ஆட்களும் தங்கியிருந்த கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்திற்கு லிங்கம் ஆயுதமேந்தாது சென்றார். சமாதானத் தூதுவனாகச் சென்ற லிங்கம் துப்பாக்கியால் கண்ணில் சுடப்பட்டு படுபாதகமான முறையில் கொல்லப்பட்டார்.
லிங்கத்தின் வீரமரணம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. போராட்டக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்ற விடுதலைப்புலிகளின் முதுகில் குத்திக் கொண்டிருந்த டெலோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இரு மூத்த உறுப்பினர்கள் கடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள் என்ற நிலையில் விடுதலைப் புலிகளை அழிக்க முற்பட்ட டெலோமீது தற்காப்பு யுத்தம் தொடுக்க வேண்டிய கட்டாயத்துக் குள்ளானார்கள் விடுதலைப்புலிகள். நாசகார சக்திகளில் கைப்பொம்மையாக, எதிர்ப்புரட்சி அமைப்பாக, விடுதலைப் போருக்கு முட்டுக்கட்டையாக செயல்பட்டு வந்தது டெலோ. மக்கள் விரோத நடவடிக்கைகளான கோவில் கொள்ளைகள், வாகனக் கடத்தல்கள் போன்றவற்றில் ஈடுபட்டு விடுதலைப் போராட்டத்தின் மீது மக்கள் வெறுப்புக் கொள்ளும்படி செய்தனர். இஸ்லாமிய மக்களைத் துன்புறுத்தி மதரீதியான சண்டைகளை தமிழ் மக்களிடத்தில் ஏற்படுத்தியவர்கள் இவர்கள்தான். சமூக விரோதக் கும்பலை வளர்ந்து அதற்குத் தலைமை தாங்கிய கொள்கையற்ற, பொறுப்பற்ற டெலோ தலைவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையின் போது சொந்த இரத்தத்தையே சிந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இந்த நிலைக்கு காரண கர்த்தாக்களாக இருந்த டெலோ தலைமை தண்டிக்கப்பட்டபோது மக்கள் எமது செயலை ஆதரித்தனர்; பாராட்டினர்; ஒத்துழைத்தனர். டெலோவின் அழிவினால் தமிழீழப் போராட்டம் உறுதியான ஒரு தலைமையின் கீழ் மேலும் பல மடங்கு பலம் அடைந்திருந்திருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் தனித்த பெரும் சக்தியாக உருப்பெற்று சிறிலங்காவின் முப்படைத் தாக்குதல்களை முறியடித்து வெற்றி கண்டது இதன் நேரடி விளைவாகும். இதனை எதிரிகள் உட்பட உலகமே ஒத்துக் கொள்கிறது.
சிங்கள இராணுவத்துடன் பொருதச் சென்ற லிங்கம் துரோகிகளால் கோழைத் தனமாகச் கொல்லப்பட்டார். தமிழீழப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு காரணமாக நேற்றிருந்த லிங்கம் இன்றில்லை. நாளையும் அதற்கு அடுத்து வருகின்ற காலங்களிலும் லிங்கம் எமது வரலாற்றோடு வாழப் போகிறார்.
விடுதலைப்புலிகள் (ஜூலை 1986) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”