மாவீரனின் தந்தை என்பதை நிலை நிறுத்திய தீரர் வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம்.
மாவீரனின் தந்தை என்பதை நிலை நிறுத்திய தீரர் வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம்.
உலகத் தமிழினத்திற்கு வீரமிக்க ஒரு தலைவனை பெற்றுத் தந்த அய்யா திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கள வதை முகாமில் மரணமடைந்த செய்தி தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் வேதனை அலைகளைப் பரப்பியுள்ளது.
86 வயது முதிர்ந்த அவரையும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மை யார் அவர்களையும் கடந்த 8 மாதங்களாக வதை முகாமில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களுக்கு மன அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, பக்குவமான உணவுகள் எதுவும் அளிக்காமல் சிறுகச்சிறுக சாகடித்த கொடுமையைச் செய்த இராசபக்சே அவரது மர ணம் இயற்கையானது என பசப்புகிறார்.
கடந்த 8 மாதத்தில் அவர்களைச் சந்திக்க யாரையும் இராசபக்சே அனு மதிக்கவில்லை. தமிழக முதல்வர் கருணா நிதி அனுப்பிவைத்த நாடாளுமன்ற குழுவினர்களாவது அவர்களைச் சந்திக்க முயற்சிசெய்திருக்க வேண்டும். இராச பக்சேவைச் சந்திக்கும் போது அவர் களை விடுதலை செய்யும்படி வலியுறுத்தி யிருக்க வேண்டும். ஆனால் இக்குழு வினர் அவ்வாறு செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறிவிட்டார்கள்.
வெளிநாடுகளில் வாழும் பிரபாகரனின் சகோதரியும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனும் தங்கள் பெற்றோரை தங்களிடம் அனுப்பி வைக்கும்படி விடுத்த வேண்டுகோளையும் இராசபக்சே மதிக்கவில்லை. அய்யா வேலுப்பிள்ளையின் மரணத்திற்கு இராசபக்சேயே பொறுப்பாவார் என நான் குற்றம் சாட்டுகிறேன்.
தனது சாவிலும் தானொரு வீரனின் தந்தை என்பதை அய்யா வேலுப்பிள்ளை நிரூபித்திருக்கிறார். இராசபக்சேயிடம் முறையிட்டு விடுதலை பெற விரும்பாமல் இறுதிவரை வதை முகாமிலேயே வாழ்ந்து அந்தக் கொடுமைகளை அனுபவித்து கொஞ்சம்கூட கலங்காமல் இருந்து மறைந்திருக்கிறார்.
அவர் மறைவிற்குப் பிறகு உலகெங்கும் எழுந்த கண்டனக் குரலுக்குப் பணிந்து அவர் உடலை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் சிவாஜிலிங்கம் அவர்களிடம் ஒப்படைக்க இராசபக்சே முன்வந்திருக்கிறார். அவரது உடலுக்கு இறுதிமரியாதை செலுத்த உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பிலும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பிலும் வழக்கறிஞர் என். சந்திரசேகரன் அனுப்பப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையில் புகழ்பெற்ற குடும்பமான திருமேனியார் குடும்பத்தில் பிறந்தவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஆவார். இக்குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வேங்கடாசலம் என்பவர் அவ்வூரில் உள்ள வல்லைமுத்து மாரியம் மன் கோவில், வல்லை வைத்தீஸ்வரன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோவில் ஆகிய மூன்று முக்கிய கோயில் களை கட்டினார். திருவேங்கடம் வேலுப் பிள்ளை திருமதி வல்லிபுரம் பார்வதி அம்மையார் ஆகியோருக்குப் பிறந்த கடைக்குட்டிப் புதல்வரே பிரபாகரன் ஆவார். இவருக்கு மனோகரன் என்ற மூத்த சகோதரரும் ஜெகதீஸ்வரி, வினோதினி இரு மூத்த சகோதரிகளும் உண்டு.
திருவேங்கடம் பிள்ளை தனது 19ஆம் வயதில் இலங்கை அரசுப்பணி யில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று மாவட்டக் காணி அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றார். அரசுப் பணி யில் இவர் இருந்த காலத்தில் ஏராளமான தமிழ் மக்களை அரசு நிலங்களில் குடி யேற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். நேர்மையுடன் பணியாற்றி புகழ்பெற்றார். ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டு அனைவரின் பாராட்டுதலுக்கும் உரியவராகத் திகழ்ந்தார். தந்தையிடமிருந்த இந்த நற்பண்புகள் பிரபாகரனிடமும் எதிரொலித்தன. தமிழர்களுக்காகப் போராடும் மனஉறுதியை பிரபாகரன் தனது தந்தையிடமிருந்தே பெற்றார் என்றுதான் கூறவேண்டும்.
பெற்றோரின் செல்லப் பிள்ளை யாகத் திகழ்ந்த பிரபாகரன் மீது அவரது தந்தைக்கு மிகவும் அன்பு. எங்கு சென்றாலும் தனது செல்ல மகனையும் அழைத்துக்கொண்டு போவார். அப்படிச் செல்லும்போது சிங்களக் காவல்துறை யினர் அப்பாவித் தமிழர்களை அடித்துத் துன்புறுத்துவதைப் பார்த்து சிறுவனான பிரபாகரன் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தான். இந்த நிகழ்ச்சிகள் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஆழமான வடுவை ஏற்படுத்திவிட்டன.
1956ஆம் ஆண்டு பண்டார நாயகா பிரதமராக இருந்த போது சிங்கள மொழியை அரசு மொழியாக ஆக்கும் சட்டத்தை இயற்றினார். அந்த சட்டத்தை மிகக்கடுமையாக விமர்சித்து வேலுப் பிள்ளை பேசியதை சிறுவனான பிரபாகரன் கேட்டு கோபமும் கொதிப்பும் அடைவது வழக்கம். அந்த வயதில் தந்தை மூட்டிய தீ பிரபாகரனின் மனதில் புரட்சித் தீயாக மூண்டு வளர்ந்தது.
அனுராதபுரத்தில் வேலுப்பிள்ளை பணியாற்றிய காலத்தில் இவர்கள் வீட்டிற்கு அருகில்தான் எல்லாளனின் சமாதி இருந்தது. அந்த சமாதியில் தினசரி விளக்கேற்றி பார்வதி அம்மையார் வழிபடுவது வழக்கம். அப்போதுதான் பிரபாகரன் அவர் வயிற்றில் கருவாக உதித்தார் என வேலுப்பிள்ளை பிற்காலத்தில் கூறியிருக்கிறார்.
பிரபாகரனின் புரட்சிகர நடவடிக் கைகளை அவரது தந்தை விரும்ப வில்லை என்பது போன்ற பொய்யான கட்டுக்கதைகளை சிலர் திட்டமிட்டுப் பரப்ப முயன்று வருகின்றனர். உண்மை அது அல்ல. பிரபாகரனின் தந்தை இயற்கையிலேயே பற்றற்ற உள்ளம் படைத்தவர். தனது பிள்ளைகள் அவரவர்களின் எதிர்காலத்தை அவர்கள் விருப்பப்படிதான் அமைத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளை பெற்று வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கு வதோடு பெற்றோரின் கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்கக்கூடியவர். எனவே பிரபாகரனை அவரின் போக்கி லேயே விட்டுவிடுவது என்றுதான் அவர் முடிவுசெய்தார்.
மிக இளவயதில் அதாவது 17ஆம் வயதில் பிரபாகரன் தனது படிப்பை நிறுத்திவிட்டு விடுதலைப் போராட்டத் திற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண் டதை அவர் தவறாக நினைக்கவில்லை. ஆனால் படிப்பை முடித்துவிட்டுச் சென்றிருக்கலாமே என்றுதான் கருதினார். பிரபாகரனின் புரட்சிகர நடவடிக்கை களின் விளைவாக அமைதி நிலவிய அவர் குடும்பத்தில் புயல் வீசத் தொடங் கிற்று. காவல் துறையின் தொந்தரவுகள் அதிகமானபோதிலும் எல்லாவற்றையும் அந்தக் குடும்பம் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டது.
பதவியிலிருந்து ஓய்வுபெற்று 80களின் நடுவில் அவர் தமிழகத்திற்கு வந்து தங்கியபோது அவருடன் நெருங் கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத் தது. அவர் தன் மனைவியுடன் திருச்சி யில் குடியிருந்தார். திருச்சி செல்லும்போ தெல்லாம் அவர்களைச் சந்திப்பது எனது வழக்கம். அப்போது பிரபாகரன் சென்னையில்தான் இருந்தார். ஆனா லும் மகனுடன் தங்கவேண்டும் என்று அவரோ அல்லது பெற்றோரைத் தன் னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்று பிரபாகரனோ நினைக்கவில்லை. அவர்கள் அவ்வப்போது சந்திப்பார்கள்; அவ்வளவுதான்.
”ஒருமுறை சென்னையில் பிரபாகரனை நான் சந்தித்தபோது ‘அண்ணா ஒரு உதவி செய்யவேண்டும்” என்று கூறினார். வழக்கத்திற்கு மாறான அந்த பீடிகையைக் கண்டு திகைத்தேன்.
”என்ன செய்யவேண்டும் என்ப தை சொல்லுங்கள் செய்கிறேன். எதற்காக இந்தப் பீடிகையெல்லாம் போடுகிறீர்கள்” என்று நான் கூறினேன்.
அவர் புன்னகையுடன் ‘தமிழீ ழத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளின் வரைபடங்கள் உள்ளன. அவற்றை திருத்தி இன்றிருக்கும் நிலையில் ஆக்கித் தரவேண்டும்’ என்று கூறினார்.
வரைபடத்தை திருத்துவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்பது புரியாமல் நான் திகைத்தபோது அவர் தொடர்ந்தார்.
”இதை முற்றிலுமாக சரியாகச் செய்யக்கூடியவர் ஒருவர் இருக்கிறார்/ அவரிடம் நீங்கள்தான் பேசி அதைச் செய்யவைக்கவேண்டும்” என பிரபாகரன் கூறியபோது அருகிலிருந்த பேபி சுப்பிரமணியமும் மற்றவர்களும் சிரித்தனர். எனது திகைப்பு மேலும் அதிகமாயிற்று.
பேபி குறுக்கிட்டு ‘அண்ணா’ தலைவரின் தந்தைதான் இதை சரியாகச் செய்யக்கூடியவர். அவரிடம் நீங்கள் பேசி இதை எப்படியாவது முடிக்கவேண்டும்’ என்று கூறினார்.
தனது தந்தையிடமிருந்து இந்த உதவியைப் பெற பிரபாகரன் தயங்கு வதைப் பார்த்து நான் மனதிற்குள் நகைத்துக்கொண்டேன். பிறகு திருச்சியில் உள்ள அய்யா வேலுப்பிள்ளையுடன் தொடர்புகொண்டபோது பளிச்சென்று ‘மகன் கூறினாரா?’ என்று கேட்டார். ஆம் என்று நான் சொன்னபோது அடுத்த வாரம் சென்னை வருவேன் வந்து செய்து தருகிறேன் என்று சொன்னார். அதைப் போல சென்னை வந்து ஒரு வாரம் எனது வீட்டிலேயே தங்கியிருந்து அந்த வரை படங்களை எல்லாம் திருத்திக்கொடுத்தார்.
1988ஆம் ஆண்டு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று நூலை நான் எழுதியபோது அய்யா வேலுப்பிள்ளை அதை முழுவதுமாகப் படித்துத் திருத் தங்கள் செய்து தந்தார். பிரபாகரனின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் அதுவாகும். பிற்காலத்தில் அதிருந்து தான் பலர் குறிப்புகளை எடுத்து பிரபாகர னைப் பற்றிய நூல்களை எழுதினார்கள்.
1989ஆம் ஆண்டில் சூலை மாதம் 23ஆம் தேதி திருச்சியில் அய்யா வேலுப்பிள்ளை தம்பதியரைச் சந்தித்தேன். சந்தித்துவிட்டு நான் திரும்பியபோது பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஒரு பர பரப்புச் செய்தி வெளியானது. உடனடியாக புலிகளின் தலைமை அலுவலகத்திற்குத் தொடர்புகொண்டு அச்செய்தியில் உண்மையில்லை என்பதை அறிந்தேன். அய்யா வேலுப்பிள்ளையும் அம்மாவும் இச்செய்திகேட்டு மனங்கலங்கி விடக்கூடாது என்பதற்காக திரும்பவும் அவசரஅவசரமாக அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். ஆனால் வழக்கம் போல அவர்கள் எவ்விதப் பரபரப்பும் இல்லாமல் இருந்தார்கள். பொய்ச் செய்தியை நம்பவேண்டாம் என்று நான் கூறியபோது அய்யா வேலுப்பிள்ளை சிரித்தார். மனைவியைக் காட்டி ”இவர் தான் கொஞ்சம் கலங்கிப்போனார். ஆனால் நான் அவருக்கு தைரியம் கூறி னேன்” என்று சொன்னார். அந்தளவுக்கு தனது மகன் மீது அவருக்கு அளவு கடந்த நம்பிக்கையிருந்தது.
அதற்குப் பிறகு பலமுறை இரு வரும் மதுரையில் உள்ள எங்கள் வீட்டிற்கும், பாபனாசத்தில் உள்ள எங்கள் வீட்டிற்கும் பலமுறை வந்து தங்கியிருக் கிறார்கள். எங்கள் குடும்பத்திலேயே அவர்களும் அங்கமாகிவிட்டார்கள் என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்கு எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற சுகதுக்க நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் அவர்கள் உரிமையோடு கலந்து கொண்டார்கள். சில வேளைகளில் மகன் மனோகரன் மகள் வினோதினி ஆகியோரின் குடும்பங்களை யும் அழைத்து வந்திருக்கிறார்கள். அந்த நாட்கள் இனியவை; என்றும் மறக்க முடியாது.
1990ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரபாகரனின் அழைப்பை ஏற்று தமிழீழம் சென்றேன். விரிவான சுற்றுப் பயணம் செய்துவிட்டு மார்ச் மாதம் நடு வில் தமிழகம் திரும்பினேன். உடனடி யாகத் திருச்சியில் தம்பியின் பெற்றோ ரைச் சந்தித்து தம்பி கூறிய செய்தி களைத் தெரிவித்தேன். இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட்டு தமிழீழப் பகுதி முழுவதிலும் புலிகளின் ஆட்சி நடப்பதையும் அங்குள்ள மற்ற நிலைமைகளையும் அவர்களுக்கு எடுத் துக்கூறினேன். அவர்களின் பேரக் குழந்தைகளான சார்லஸ், துவாரகா ஆகியோரின் படங்களை எடுத்துக் கொடுத்த போது வயது முதிர்ந்த அந்த இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முதன் முதலாக தங்கள் பேரக் குழந்தைகளின் படங்களை பார்த்த போது அவர்களின் விழிகளில் நீர்துளிர்த்தது. ஆனால் காலத்தின் கோலம் பேரன் சார்லஸ் போரில் கரும்புலியாகச் சென்று போரிட்டு சாவை அணைத்துக்கொண்ட போது அந்த இருவரின் மனமும் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பார்வதி அம்மையாரை பக்கவாதம் தாக்கிற்று. அதன் விளைவாக அவர் கை, கால்கள் செயலற்றுப்போயின. அந் தச் சூழ்நிலையில் அவர்களை ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. முசிறியில் உள்ள டாக்டர் இராசேந்திரன் தாமாகவே முன்வந்து அவரது வீட்டில் வைத்து மருத்துவமும் பார்த்து அவர்களை நன்கு பராமரித்தார். அம்மையாரின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக தேறியது.
சில வாரங்களுக்கு ஒருமுறை முசிறி சென்று அவர்களைப் பார்த்து நலம் விசாரித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பிறகு அவர்கள் தாயகம் திரும்பிச் செல்வதென முடி வெடுத்தபோது நான் வெளியில் இல்லை. பொடாக் கைதியாக சிறையில் இருந்தேன். அதற்குப் பின்னர் அவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவேயில்லை.
2005ஆம் ஆண்டில் வழக்கறிஞர் சந்திரசேகரன் தமிழீழம் சென்று பிரபாகரன் அவர்களையும் அவரின் பெற்றோரையும் சந்தித்துப்பேசிவிட்டு திரும்பினார். அவர்கள் நலமாக இருப்பதாக அவர் கூறிய செய்தி எனக்கு நிம்மதியை அளித்தது.
பின்னர் அந்த போர்ச்சூழலில் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் கவலையடைந்தேன். தனது பெற்றோரைப் போன்ற ஏராளமான வய தானவர்கள் போர்ச் சூழலில் சொல் லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும்போது தனது பெற் றோரை மட்டும் பாதுகாப்பாக வெளி நாட்டுக்கு அனுப்பிவைக்க பிரபாகரன் விரும்பவில்லை. அவர்களும் அவ்வாறு பத்திரமாக வெளியேற விரும்பவில்லை. தங்களுடைய புதல்வன் தலைமையில் நடைபெறும் விடுதலைப் போராட்டத் தின் போது அருகேயே இருப்பதுதான் தாங்கள் செய்யும் உதவி என அவர்கள் உறுதியோடு இருந்தார்கள்.
கடந்த எட்டு மாதங்களாக சிங்கள வதை முகாமில் அவதிப்பட்ட இலட்சக் கணக்கான தமிழ் மக்களைப் போல இவர்களும் அவதிகளுக் குள்ளானார்கள். தாங்க முடியாத கொடுமைகளையெல் லாம் தாங்கிக்கொண்டார்கள். தங்கள் தலைவனின் பெற்றோர்கள் படும் துயரை பார்த்த மக்கள் மனம் கலங்கினார்கள். ஆனாலும் அவர்கள் இருவரும் தங்க ளுடனேயே இருந்து அந்த துயரங் களை பகிர்ந்து கொண்டதைப் பார்த்து அந்த மக்கள் நெக்குருகினார்கள்.
திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் மாவீரனின் தந்தை மட்டு மல்ல எக்காரணத்தைக் கொண்டும் சிங் கள அரசிடம் மன்றாடி முறையிட்டு விடுதலை பெறவேண்டும் என்று ஒரு போதும் எண்ணாத திண்ணிய நெஞ்சுரம் கொண்ட அவரும் ஒரு மாவீரரே!. இறுதிவரை துன்பச் சூழலிலேயே வாழ்ந்து வீர மரணத்தைத் தழுவிக்கொண்டார். அவரது மரணம் தமிழர்கள் ஒவ்வொரு வரின் உள்ளங்களிலும் சோகமுத்தி ரையை பதித்தாலும் அதனுடன் வெஞ்சின மும் பதியவேண்டும். அவரின் சாவுக்குக் காரணமான இராசபக்சேயின் கும்பலுக்குத் தகுந்த தண்டனை அளித்தே தீரவேண் டும் என்ற சூளுரையை ஒவ்வொரு தமி ழனும் மேற்கொள்ள வேண்டும். திரு வேங்கடம் வேலுப்பிள்ளையின் மீது உல கத் தமிழர்கள் சபதம் செய்வோம். சிங்கள வெறியர்களின் பிடியில் சிக்கியுள்ள சகோ தரத் தமிழர்களை விடுதலை செய் யவும் தமிழீழ அன்னையின் விலங்கு களை உடைத்தெறியவும் வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம்.
– பழ.நெடுமாறன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”