கப்டன் ரஞ்சன்
கப்டன் ரஞ்சன் (லாலா)
” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள்.
ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும்.
அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் என நினைத்து எங்களைத் தவிர எல்லோரும் கெரில்லாப் போராட்டத்தை கிண்டல் செய்து வந்த காலத்தில் நேரடியாக பொதுமக்களைத் கலந்து கொள்ளும் இராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன்.
பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத் தாக்குதல் மூலம் “இதுவும் மக்கள் போராட்டம் தான் புரிந்து கொள்ளுங்கள் ! ” என பாடம் புகட்டியவன் ரஞ்சன்.
இன்று இந்த மக்கள் எழுச்சிகளைக் காணும் போது உனது தியாகங்கள் வீண்போகவில்லை நாளைய தமிழீழ வரலாற்றில் உனது பெயரில் இன்றைய சிறுவர்களால் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டும் போல இருக்கும், கண்ணெதிரே நீ இல்லாவிட்டாலும் என் எண்ணங்களை என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள என்றுமே நான் தயங்குவதில்லை.
ஒவ்வோர் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியும் உன்னை எனக்கு ஞாபகப்படுத்தியே தீரும், இயக்கத்தின் முழுநேர போராளியாக எழுபத்தி எட்டாம் ஆண்டில் நீ அடியெடுத்து வைத்த நாள் அது தானடா. 78ஆம் ஆண்டு மார்கழியில் இயக்க ரீதியாக அறிமுகமான நீ துண்டுப் பிரசுரம் கொடுத்தல், இயக்கத்திற்கு ஆட்சேர்த்தல், எதிரியின் நடமாட்டங்களை எமக்குத் திரட்டி தருதல் போன்ற வேலைகளை அதுவரையில் செய்து வந்தாய்.
சிறு அசைவைக்கூட மிகவும் திட்டமிட்டே நடைமுறைப்படுத்த வேண்டிய அந்தக் காலகட்டத்தில் உனது பணி இயக்கத்திற்கு மிகவும் தேவையாக இருந்து. கட்டையான கறுவலான உனது உருவத்தை காணுபவர்கள் உன்னை இயக்கத்தைச் சேர்ந்தவன் என ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். உனது உருவஅமைப்பு இரகசியமான வேலைகளை உன் முலம் செய்து கொள்ளுவதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.
விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக இணைந்துகொண்ட ஆரம்ப காலத்தில் நீ பட்ட கஷ்டங்களை இன்று விடுதலைப் பாதையில் காலடி எடுத்து வைக்க எண்ணும் அத்தனை போராளிகளும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள், அப்போது தான் சுதந்திரத்தின் பெறுமதி எத்தகையது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
நீயும் நானும் குறிப்பிட்ட அக்காட்டில் கொட்டில் அமைத்து பண்ணை வேலைகளை செய்வதற்காகப் புறப்பட்டோம். யாழ்பாணத்தில் இருந்து வாளியில் சில அத்தியாவசியப் பொருட்களுடன் அங்கே சென்றோம். மழையினாலும் புயலினாலும் அந்தப் பாதையில் சீர்குலைந்து காணப்பட்டது பலத்த சிரமத்தின் மத்தியில் எமது பிரயாணத்தை மேற்கொண்டோம். எமது பிரயாணத்தின் கடைசி எட்டு மைல்களையும் நடந்தே போகவேண்டியிருந்து இவ்வளவு தூரம் நடந்து போவது உனக்கு பழக்கமில்லாத விடயமாக இருந்தாலும் உனது ஆர்வம் கையில் வாளியையும் பொருட்களையும் மாறி, மாறித் துக்கிச் சென்று எமது பிரயாணம் முடியும் இடம் வரை கொண்டுபோக வைத்து. இரவு பத்து மணியளவில் நாம் சந்திக்க வேண்டியவரின் வீட்டுக்குச் சென்றதும் ‘அப்பாடா’ என்று நிம்மதியுடன் எமது நோக்கத்தைத் தெரிவித்தோம். ஆனால் நாம் எதிர்பாத்துச் சென்றவர் மனதில் என்னதான் குடியிருந்ததோ? கையை விரித்து விட்டார்.
மீண்டும் திரும்பி எட்டு மைல்கள் நடந்துவந்து பஸ் மூலம் யாழ்ப்பாணம் திரும்பி வந்தோம். பளையில் கிடுகு வாங்கிக்கொண்டு மீண்டும் அங்கே சென்றோம்.போக்குவரத்து மேற்கொள்ளவது சிரமமாகவே இருந்து. எமது பிரயாணம் முன்று நாட்கள் தொடர்ந்தது, இரவில் நடைபாதையே எங்கள் மஞ்சம். கொட்டும் மழையும் கிடுகிடுக்கும் பனியும் எங்கள் இலட்சிய உணரவை மீண்டும் பட்டை தீட்டின.
வாகனப் பிரயாண முடிவில் எட்டு மைல் தூரமும் மாறிமாறி கிடுகுக் கட்டைத் தூக்கிக்கொண்டு சென்றோம். எமக்கென ஒரு கொட்டில் போட்டு அதனுள்ளேயே படுத்து உறங்கிய அன்று ஏற்பட்ட உணர்வு அலாதியானது தான். ஒரு ஏக்கர் காணியை திருத்தத் தொடங்கினோம். இடையில் இயக்கத்தின் வேறு அலுவல்களுக்காக நான் யாழ்பாணம் வந்துவிட்டேன்.
உனக்குப் பின் வந்த வேறு சிலருடன் நீ இணைந்து நீ அந்தக் காணியை சிறந்ததொரு பண்ணையாக்கினாய். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு மிளகாய்ச் செய்கையைப் ப்ற்றி படிப்பிக்கக் கூடியளவு அனுபவம் உன்னை ஆக்கிவைத்தது.
‘சித்தாந்த வேறுபாடு’ என்ற பெயரில் இயக்கத்தை நாசஞ் செய்யப் புறப்பட்ட குழு உன்னையும் இயக்கத்தை விட்டு பிரிக்க பெருமுயற்சியெடுத்தது. நீ அவர்களுக்கே புத்திசொல்லி வந்த நீங்கள் வடிவாகச் சாப்பிட்டுவிட்டுப் போங்கோ என்று சாப்பாடு கொடுத்து அனுப்பிவைத் தாய். இவனுக்காக இவ்வளவு தூராம் அலைந்தோமே என்று புறுபுறுத்து விட்டுச் சென்றனர் அவர்கள். ‘தம்பி’யின் மீது நீ கொண்டிருந்த நம்பிக்கை தொடர்ந்து இயக்கத்தில் உன்னை இயங்க வைத்தது. மாவட்ட அபிவிருத்திச்சபை என்னும் மாயமான போராட்டத்தில் இடையே வேடிக்கைப் பொருளாகக் கொண்டு வந்தனர் கூட்டணியினர். கிராம யாத்திரை என்ற பெயரில் அவர்களது நாடகம் ஆரம்பமாயிற்று.
கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர் குழப்பவாதிகள், அரசின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தினர் பதில் சொல்லத் தெரியாத கூட்டணியினர். நீயும் சங்கரும், சீலனும் உங்களுக்குத் தெரிந்த வழியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள்.S.S.O பதவிகளுக்காகவும் வேலை வங்கிப்படிவத்துக்காகவும் ஏங்கித் திரிந்த கூட்டணியின் தொண்(குண்)டர்கள் சீலனைக் கட்டிப்பிடித்தனர். கட்டிபிடித்தவரின் பின்னால் சென்று உனது சிலிப்பரை தூக்கி முதுகில் வைத்துக் “ஹான்ஸ் அப்” என்று நீ சொன்னதும் நிலை குலைந்தனர் அந்த வீராதிவீரர்கள். நீ வைத்திருப்பது என்ன என்பதை திரும்பியும் பார்க்காமல் தமது எஜமானர்களை நோக்கி ஒடித்தப்பினர். உனது சமயோசித புத்தி அன்று சீலனைக் காப்பாற்றியது.
நீரவேலி வங்கிப் பணத்தைக் காப்பாற்றுவதில் நீ எடுத்துக் கொண்ட சிரமங்கள் எழுத்தில் வடிக்கமுடியாதவை இராணுவத்தினர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் அதற்குக் கொஞ்சநேரம் முன்தான் நீ அங்கிருந்து அவற்றை அகற்றியிருப்பாய். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக இராணுவத்தினர் மீதான தாக்குதலை மேற்கொண்ட மூவரில் ஒருவன். மக்கள் நடமாட்டம் நிறைந்த யாழ் நகரில் சீலனின் தலைமையில் கைத்துப்பாக்கியுடன் அச்சாதனையைப் புரிந்தீர்கள்.
இராணுவத்தினரின் றைபிளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி வந்தபோது பக்கத்து வீட்டு அக்கா “சம்பவம் முடிந்து பெடியன்கள் சென்ற போது நான் கண்டேன்” என்று சொன்னா. என்னமாதிரி சம்பவம் நடந்தது என்று எதுவும் அறியாதது போல விசாரித்துத் தெரிந்துகொண்டாய். நல்லவேளை அவ பதற்றத்தில் இருந்ததாலும் நேடியாகக் காணாததாலும் அந்த இடத்தைவிட்டு மாறவேண்டிய நிலமை ஏற்படவில்லை.
பயிற்சிக்காக இந்தியா சென்றாய், பயிற்சி முகாமின் ‘கொத்துரோட்டி ஸ்பெசலிஸ்ட்’ நீ. ஏற்கெனவே உன்னிடம் இருந்த சுறுசுறுப்பு, துணிவு என்பவையும் கராட்டித்திறமயும் பயிற்சி முகாமில் உனது திறமையில் பளிச்சிட வைத்தன.
மீண்டும் புலேந்திரனுடன் தமிழீழம் வந்தாய், வரும் போது வள்ளக்காரர் உங்களைப் பேசாலைக் கரையில் இறக்கி விட்டனர். கரை இறங்கிய உங்களை அங்கே குடியிருந்த சிங்களக் காடையர் பிடித்துக்கொண்டனர். எமது மண்ணில் அண்டிப் பிழைக்க வந்தவர்கள் எம்மையே அதிகாரம் செய்து இந்த மண்ணிற்குச் சொந்தக்காரர்களான எம்மை அடிமைகளாக நடத்துகிறார்களே என அனைவரும் குமுறினோம்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் 30 காபைன் சகிதம் புகுந்து விளையாடினாய். தாக்குதல் முடிந்து வரும் போது காயமுற்ற ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து அழுதாய் உனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப பெருகியதை அன்றுதான் முதன்முறையாகக் கண்டேன்.
உமையாள்புரத் தாக்குதல், கந்தர்மடத்தாக்குதல் என்பனவும் உன் திறமையைப் பளிச்சிட வைத்தன. யாழ் கச்சேரியில் இராணுவத்தினருக்கும், கூட்டணியினரும் பாதுகாப்பு மகாநாடு கூட்ட இருந்த சமயத்தில் முதல் நாளிரவு மகாநாடு நடக்க இருந்த மண்டபத்திற்கு குண்டு வைத்துப் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். அன்று மண்டபத்தின் உட்சுவர்களில் பூவரசம் இலைகளாலும் பூக்களாலும் “பாதுகாப்பு மகாநாடு யாரை பாதுகாக்க” என்று எழுதியிருந்தாய், உனது கேள்வி மக்களைச் சிந்திக்க வைத்து பத்திரிகைகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அன்று பாதுகாப்பு மகாநாடு கூடிய கூட்டணியினர் நீண்டகால இடைவெளிகளின் பின்னர் மெல்ல மெல்ல வந்து பதுங்கு குழியில் பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர்.
உள்ளூராட்சித் தேர்தலில் பருத்தித்துறையில் ஐ.தே கட்சியின் தலைமை வேட்பாளராக இருந்த இரத்தினசிங்கம் உனது ஆசிரியர். ஆனாலும் உனது பார்வையில் துரோகி என்றே இருந்தது. உரிய இடத்திற்கு அனுப்புவதற்கு உனது பங்கையும் வழங்கினாய்.
மீசாலையில் சீலனை இழந்த வேதனை சில நாட்களாக உன்னுள்ளத்தில் குடிகொண்டிருந்தது. உனது உணர்வுகளுக்கு வாய்ப்பளிக்க ‘திருநெல்வேலித் தாக்குதல்’ சந்தர்ப்பமளித்தது. மதிலுக்கு மேல் நடப்பது உனக்குத் தெரியாமலிருக்கும் என்பதற்காக சீமேந்துக் கற்களை உனது உயரத்திற்கு ஏற்றவாறு அடுக்கினாய் தனியே நின்று தலைவருக்கு அடுத்ததாக நின்றது நீ தான். தலைவருக்கு அருகில் கிறனைட் வீழ்ந்ததும் பதறி விட்டாய். தமிழ் மக்களின் அதிர்ஷ்டம் கைக்குண்டு சக்தியிழந்தது. அன்றைய தாக்குதலில் சுறுசுறுப்பாக எல்லா இடமும் திரிந்தாய். ஒரு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது அம்மானை இழந்ததால் இந்த வெற்றியினை நினைத்து பூரிக்கும் நிலையில் நாம் இல்லை.
தொடர்ந்து வந்த இனக்கலவரம் ஆயிரக்கணக்கில் இளைஞர்களை போராட்டத்தில் உள்வாங்கியது. கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு சில நூறு பேரை மட்டுமே நாம் எம்முடன் இணைத்துக் கொண்டோம். அப்போது நடந்த இரண்டு பயிற்சி முகாம்களில் முதாவதற்கு பொன்னம்மானும், இரண்டாவதற்கு நீயும் பொறுப்பாக விளங்கினீர்கள் பயிற்சி முகாம் முடிந்து வந்ததும் அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை பருத்தித்துறையில் நடத்தினாய். பருத்தித்துறை பொலிஸ் நிலையம் வரை அதிரடிப்படையினரை ஒட ஒட விரட்டினாய்.
அதன் பின்னே பருத்தித்துறை பொலிஸ் நிலையம் உனது தலைமையிலான பொதுமக்களின் போராட்டத்தில் உன்னிடம் வீழ்ச்சியடைந்தது. ஆயுதங்கள் பொலிஸ் நிலைய ஆவணங்களுடன் நீயும் நானும் பொலிஸாரிடம் பறிகொடுத்த மோட்டார் சைக்கிளும் எமது கையில் கிடைத்தன.
மோட்டார் சைக்கிள் பறிகொடுத்த அந்தச் சம்பவத்தை நினைக்கையில் உனது நிதானத்தை மேச்சிகொள்வேன். கடல்வழியாகப் பயணம் மேற்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நீயும் நானும் பயணமானோம் வழியில் போலிஸாரிடம் மாட்டிக்கொண்டோம் எமது பையை சோதனையிட்ட போலிஸார் “இதென்னடா கிறனைட்டோ” என்றுகேட்டபடியே எடுத்த பொருள் கிறனைட்டாக இருக்கவே அதிர்ச்சியடைந்து நின்ற அந்தக் கணநேரத்தில் போலிஸாரிடமிருந்து பிலிம் றோஸ், படங்களை என்பவற்றை பறித்துக்கொண்டு”ஒடிவா” என என்னையும் கூட்டிக்கொண்டு ஒடினாய். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்தான் எம்மால் பறிகொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் எமது கையில் கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
போலிஸ் நிலைய ஆவணத்திலிருந்து கிடைத்த விபரங்களின் படி துரோகி நவரட்ணத்திற்கு உரிய தண்டனை வழங்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாய்.
ஆனால் உனது சேவை நீண்டகாலம் தமிழினத்திற்குக் கிடைக்கக் கூடாது என்ற துரஷ்டமோ விதி உன்னையும் எம்மையும் பிரித்துவிட்டது. வாகனத்தில் சீலனின் போஸ்டரை ஏற்றிவந்து கிட்டுவின் காருக்கு வழிகாட்டியாக நீ மோட்டார் சைக்கிளில் விக்கியுடன் வந்துகொண்டிருந்தாய், தொண்டமானாற்றில் அதிரடிப்படையினர் உன்னை வழி மறித்த போது நீ அவர்களை போக்குக் காட்டிவிட்டு தப்ப முயன்றாய் ஜீப்பினால் அதிரடிப்படையினர் உன்னை மோத முயன்றனர். வெட்டவெளிப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை நீ திருப்பி அது எதிர்பாராமல் சேற்றினுள் சிக்கியது. சேற்றிலிருந்து எழும்பி தப்பியோடினீர்கள். அதிரடிப்படையினர் சுட்டனர் தப்பி ஒடிய நீங்கள் ஒரு சைக்கிளை எடுத்தபோது சைக்கிள் உரிமையாளர் தடுத்தார். நிலைமையை விளக்கியபோதும் கொடுக்கவில்லை. முடிவு உங்களை நெருங்கி வந்தது. அதிரடிப்படையினர் துப்பாக்கி வேட்டுகளுக்கு நீ இரையானாய்.
உனது உயிரைக் கொடுத்து பின்னால் காரில் வர இருந்த அனைவரது உயிரையும் நீ காப்பாற்றினாய். உனது தியாகத்தை அர்த்தமுள்ளதாக்கி விட்டாய்.
உன் உயிரை பலியெடுத்த அதிரடிப்படையினர் நெடிய காட்டில் எமது கண்ணிவெடியில் பலியாகி விட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய நாட்குறிப்பொன்றில் உன்னைச் சுட்டது தானே என ஒருவன் குறிப்பிட்டிருந்தான்.
அனைவரது இதயத்திலும் “கட்டைக்கறுவல்” ரஞ்சன் நீக்கமற நிறைந்திருக்கிறான்.
நினைவுப்பகிர்வு:- அஜித்
களத்தில் இதழிலிருந்து…………..
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “