தேசியத் தலைவர் பிரபாகரன் தொடர் : 07
உடனே சென்னைக்குச் செல்லவும்..
யாழ்ப்பாணத்திலிருந்து அந்த ஒரு வரி உத்தரவு லண்டனில் இருந்த பாலசிங்கத்துக்குச் சென்றபோது, அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பிரபாகரனுக்கு அறிமுகமாகி வெகுகாலம் ஆகியிருக்கவில்லை. படித்தவர், யோசிக்கத் தெரிந்தவர், அரசியல் தெரிந்த அளவுக்குத் தத்துவம் அறிந்தவர், மார்க்ஸியம் புரிந்த அளவுக்கு மனித மன ஆழங்களையும் புரிந்துகொள்ளக்கூடியவர், இயக்கத்துக்கு சித்தாந்த ரீதியில் ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்துக்கொடுக்க வல்லவர், அதே சமயம் அரசியல் ரீதியில் இயக்கம் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வல்லவர் என்று பிரபாகரன் அவரைப் பற்றி மதிப்பிட்டிருந்தார்.
மதிப்பீடுகளில் தவறேதும் இல்லை. ஆனால், பாலசிங்கத்திடம் பிரபாகரன் தீர்க்கச் சொல்லி அளித்த முதல் பிரச்னை ஒரு காதல் விவகாரமாக அமைய நேர்ந்ததுதான் விசித்திரம்.
தன் மனைவி அடேலுடன் பாலசிங்கம் சென்னை வந்து சேர்ந்ததும் பிரச்னையின் முழுப்பரிமாணம் அவருக்குப் புரியவைக்கப்பட்டது.
`என்னால் நம்ப முடியவில்லை. இயக்கமே பிளவுபடும் அளவுக்கா இது முற்றிவிட்டது?’ என்றார் பாலசிங்கம்.
சந்தேகமில்லாமல். ஏனென்றால், அந்தக் காதல் வலையில் சிக்கியிருந்த உமாமகேஸ்வரன், புலிகள் அமைப்பின் மத்தியக் குழு சேர்மன்! சர்வ வல்லமை படைத்த பதவி. தேச விடுதலை என்னும் மிக உயர்ந்த நோக்கத்துடன் போராடத் தொடங்கியிருந்த வீரர்கள் அத்தனை பேரையும் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்தவர் அவர். பிரபாகரனுக்கு அடுத்தபடி அவர்தான் எல்லாம். இயக்கத்தின் செயல்பாடுகளைப் பரவலாக்குவது, வெளிநாடுகளில் ஆதரவு திரட்டுவது என்று அடுத்தடுத்த ஏராளமான பொறுப்புகள் அவரிடம் விடப்பட்டிருந்தன. வெளிநாட்டுத் தொடர்புகள் அனைத்தையும் உமா மகேஸ்வரனே வைத்திருந்தார்.
அதுதான் பிரச்னையாகிப் போனது. அத்தனை சுலபத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடிக்குத் தடுத்து நிறுத்தியது.
`உமா, ஏன் இப்படி? நீங்களும் ஊர்மிளாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறீர்கள் என்றால், அதனை வெளிப்படையாகத் தெரிவித்துவிடலாமே? திருமணம் தவறல்ல. முறை தவறிய உறவுதான் பிரச்னை. தயவுசெய்து ஒப்புக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு முடிவுக்கு நீங்கள் வந்தே ஆகவேண்டும். ஒன்று, ஊர்மிளாவைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். அல்லது மத்தியக் குழுத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீங்களாக விலகிவிடுங்கள்’ என்றார் பாலசிங்கம்.
உமாமகேஸ்வரனும் ஊர்மிளாவும் பாலுறவு கொண்ட காட்சியை நேரில் சிலர் பார்த்திருந்தார்கள். அவர்கள்தாம் தலைமைக்குத் தகவல் கொடுத்தவர்கள். முன் விரோதம் கொண்ட யாரோ ஒருவர் என்றெல்லாம் எளிதில் தள்ளிவிட முடியாதது அது. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பார்த்திருக்கிறார்கள். நம்பகமானவர்கள். இயக்கத்தின் விசுவாசம் மிக்க போராளிகள்.
இல்லவே இல்லை என்றார் உமா மகேஸ்வரன். ஆமாம், இல்லவே இல்லை என்றார் ஊர்மிளா.
சரி, முறை தவறிய உறவு இல்லை என்றே வைத்துக் கொண் டாலும் காதல் உண்டல்லவா? திருமணம் செய்துகொள்வதில் என்ன பிரச்னை என்று பாலசிங்கம் கேட்டார். உமா பேசாதி ருந்தார். காரணம் இருந்தது. தெல்லிப்பளை கணபதி பிள்ளை என்பவரது மகளை உமா மகேஸ்வரன் தனது கல்லூரிக் காலம் முதலே காதலித்து வந்தார். (பிறகு அவரைத்தான் திருமணமும் செய்து கொண்டார். ஊர்மிளா மஞ்சள் காமாலை வந்து இறந்தார்.) இப்போது ஊர்மிளாவைத் திருமணம் செய்து கொண்டால் அந்தக் காதல் என்னாகும்?
சென்னை தண்டையார் பேட்டையில் தங்கியிருந்தபடிக்கு, அமைப்பு சார்பில் கடிதங்கள் எழுதுவது, ஆவணங்கள் தயாரிப்பது போன்ற பணி களில் ஈடுபட்டிருந்த உமாமகேஸ் வரனுக்கு உதவி செய்யத்தான் ஊர்மிளாவும் சென்னை வந்திருந்தார். இருவருக்கும் ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்பதால், எழுத்து சார்ந்த பணிகள் அனைத்தும் அவர்கள் வசம் விடப்பட்டிருந்தன. வெகு விரைவில் இயக்கத்தைப் பரவலாக்க பிரிட்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் உமா தயாராக இருந்தார்.
அப்போதுதான் இந்தப் பிரச்னை வெடித்தது. பிரபாகரன் கண்மூடி யோசித்தார். வேறு வழியில்லை. உயிர்த்தோழனானாலும் இனி உனக்கு இயக்கத்தில் இடமில்லை என்று சொன்னார்.
உமாமகேஸ்வரனும் ஊர்மிளாவும் புறப்பட்டுப் போனார்கள். மனத்துக் குள் வன்மம் வளரத் தொடங் கியிருந்தது. ஏதாவது செய்ய வேண்டும், ஏதாவது செய்யவேண்டும் என்ற வேகம் மேலோங்கி நின்றது. அவருக்கு இயக்கத்தில் கணிசமான ஆதரவாளர்கள் இருந்தார்கள். பிரபாகரன் யார் நம்மை வெளியேற்றுவதற்கு? நாம் அவரை வெளியேற்றுவோம். நாம் தான் நிஜமான விடுதலைப்புலிகள். அறிவித்துவிடுங்கள் என்று ஏகமனதாகச் சொன்னார்கள்.
இயக்கம் இரண்டு பட்டு நின்ற காலம் (1981) அது. அரசியல் தளத்திலும் பரபரவென்று பல மாறுதல்கள் நடந்து கொண்டிருந்தன. `டெலோ’வை நிறுவி, வளர்த்துக்கொண்டிருந்த குட்டிமணியும், தங்கத்துரையும் கைதாகி சிறையில் இருந்த நிலையில், சிறீ சபாரத்தினம் டெலோவின் தாற்காலிகத் தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். பிரபாகரனுக்கு மிக இளம் வயதிலிருந்தே குட்டி மணியையும் தங்கதுரையையும் தெரியும். அப்பழுக்கில்லாத நேசமும் நட்பும் கொண்டவர்கள் அவர்கள்.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளும் அட்ட காசங்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில், டெலோவும் விடுதலைப்புலிகள் அமைப்பும் இணைந்து பணியாற்றினால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று இரு தரப்புத் தலைவர்களுமே நினைத்தார்கள். நட்பு அடிப்படையில் இரு இயக்கங்களும் இணைந்து பணியாற்ற முடிவு செய்தது அன்றைய சூழலில் சாத்தியமாகவும் இருந்தது.
ஆனால், அதையே காரண மாகச் சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு தன்னுடையதுதான் என்று உமா மகேஸ்வரன் பிரசாரம் செய்யத் தொடங்கிவிடும் அபாயம் பலமாக இருந்தது. டெலோவுடன் இணைந்து வேலை செய்வது பிரபாகரன் தான்; விடுதலைப்புலிகள் அல்ல என்று சொல்லிவிடலாம் அல்லவா?
ஒன்று, உமாமகேஸ்வரன் விவகாரம் தீரவேண்டும். அல்லது அவர் இயக்கத் திலிருந்து முற்றிலுமாக வெளி யேற வேண்டும். இரண்டு மில்லாமல் டெலோவுடன் கூட்டணி வைப்பது மிகப்பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று பிரபாகரன் நினைத்தார்.
சிறீ சபாரத்தினத்தைச் சந்தித்துப் பேசினார். அவருக்கும் புரியாமல் இல்லை. ஆனால் தனி நபர் ஒருவருடைய பிரச்னை யினால் ஒரு போராட்டத்தின் வேகம் மட்டுப்படுகிறதே என்கிற கவலையும் கோபமும் அவருக்கு இருந்தது. பிரபாகரனுக்கு இல்லாத கோபமா?
அந்தக் கோபம்தான் பாண்டி பஜாரில் வெடித்தது. கண்ணன் என்கிற நண்பருடன் டிபன் சாப்பிட வந்திருந்த உமா மகேஸ்வரனை பிரபாகரன் தற்செயலாகக் கண்டார். மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். உடன், இராகவன். (புலிகள் இயக்கத்தில் தொடக்க காலத்தில் மிக முக்கியமான உறுப்பினராக இருந்தவர். பிறகு அபிப்பிராய விரோதங்கள் காரணமாக வெளியேற்றப்பட்டு, இயக்கங்கள், அரசியல் அனைத்திலிருந்தும் ஒதுங்கி, கனடாவில் வசித்து வருகிறார்.)
`உமா, பிரபா!’ என்று முதலில் பார்த்து எச்சரித்தது கண்ணன் தான். சட்டென்று உமாமகேஸ்வரன் தன் பிஸ்டலில் கைவைக்க, அதற்குள் பிரபாகரன் முந்திக் கொண்டார்.
காலில் குண்டடி பட்டு கண்ணன் விழ, உமா மகேஸ்வரன் உயிர் பிழைக்கத் தப்பியோட ஆரம்பித்தார். துரத்திய பிரபாகரனையும் இராகவனையும் பாண்டி பஜார் போலீஸ்காரர்கள் கைது செய்தார்கள். உமாவும் பிறகு பிடிபட்டார். பெயரென்ன என்று இன்ஸ்பெக்டர் கேட்டபோது உமா மகேஸ்வரன், முகுந்தன் என்று சொன்னார். பிரபாகரன், கரிகாலன் என்று சொன்னார்.
அங்கே, நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயவர்த்தனே. இங்கே குலுங்கிச் சிரித்தார் எம்.ஜி.ஆர்.
(தொடரும்)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”