வல்லமை பொருந்திய தலைவர்
தமிழீழத் தேசியத் தலைவர் மேன்மைமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன்… அவர் ஒரு சாராரண தலைவர் அல்லர். ஒரு தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்திய தலைவர். சமாதான காலத்தில் கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. உலகெங்கிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அது ஒரு சர்வதேச ஊடகவியலாளர்கள் மாநாடாக அமையும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தலைவர் நிதானமாக பொறுமையுடன் பதிலளித்தார். அதற்கு முன்பு அவர் அவ்வாறானதொரு மாநாட்டில் பங்குபற்றியிருக்கவில்லை. அரசியல் தலைவர்கள் மிகத் தந்திரமாக பதிலளிப்பார்கள் என்பது ஊடகவியலாளர்களுக்குத் தெரியும்.
எனவே அவர்களை தம் பொறியில் சிக்க வைப்பதற்காக ஊடகவியலாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு திண்டாட வைத்துவிடுவர். ஆனால், ஊடகவியலாளர் அன்று சந்தித்த தலைவர் ஓர் அரசியல்வாதியல்லர். பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு விடிவைத் தேடித் தரப்போராடும் ஒரு தலைவரையே அவர்கள் சந்தித்தார்கள்.
பிரபல்யமான பி.பி.சி. தொலைக்காட்சியில் பின்வரும் விபரம் வெளியாகியிருந்தது.
“பிரபாகரன் ஓர் அரசியல்வாதியல்லர். எந்தவொரு அரசியல் தந்திரத்தையும் அவர் பயன்படுத்தவில்லை. அதேவேளையில், அவர் ஒரு கெரில்லா இயக்கத் தலைவராகவும் எமக்குத் தெரியவில்லை. ஏனெனில் முழுக்க முழுக்க ஆயுதப் போராட்டத்தின் மூலமே விடுதலையை வென்றெடுக்க முடியும் என்றும் அவர் கருதவில்லை.
தமிழ் மக்களுக்கு இறையாண்மையுடைய சுயாட்சி ஏற்படுவதற்கு ஜனநாயக வழியில் போராடவும் அவர் தயாராகவே இருக்கின்றார். ஏனையவர்களைப் போல் உண்மைகளை மறைத்து வெறுமனே தமது பாதை ஜனநாயகப் பாதையென்றும் அவர் தெரிவிக்கவில்லை. வெளிப்படையாகவே தமிழ் மக்களின் உண்மை நிலை குறித்துப் பேசினார். தீர்வு காணும் ஆலோசனைகளையும் தாம் வரவேற்பதாகவும் கூறினார். தங்களது வீடுகளைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வது உலக ஜனநாயக நெறிமுறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பி.பி.சி.யைப் போன்ற பெரும்பாலான ஊடகங்களும் தமது கருத்தை வெளியிட்டிருந்தன. ஆனால் இந்தியச் சதியினால் வெளிநாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள். எங்கள் தலைவர் சிந்தித்துச் செயற்பட்ட ஒரு சில நடவடிக்கைகளை வெளிநாடுகளும் குறிப்பாக மேற்கத்தேய நாடுகளும் தற்போது உணரத் தலைப்பட்டுள்ளன. முக்கியமாக சீனா தொடர்பான அவரின் நிலைப்பாடு வெளிநாடுகளின் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.
சீனா சிறிலங்காவுக்குள் வர்த்தகத்தை முன்நிறுத்தி பிரவேசிப்பதை தலைவர் விரும்பவில்லை. நாளடைவில் சீனாவின் நடவடிக்கையினால் இந்திய மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம். அதேவேளையில் சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் வாழும் மக்களுக்கும் பல பாதிப்புகள் ஏற்படலாம் என அவர் கருதினார். அதனை வெளிப்படையாக அவர் தெரிவிக்காவிட்டாலும், சீனாவின் ஊடுருவல் குறித்து தமிழீழ புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வந்ததை சீனா வெளியிட்டிருந்தது. 2004ஆம் ஆண்டிற்கும், 2005ஆம் ஆண்டிற்கும் இடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி அம்பாந்தோட்டைக் கடலில் இரண்டு தாக்குதல்களை நடத்தி இருந்தது.
அதன்போது, சீன அதிகாரிகளின் சொகுசுப் படகுகளே தாக்கியழிக்கப்பட்டன. அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுவது தொடர்பாகவும்,சிறிலங்காவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தவே சீன அதிகாரிகள் அங்கு வந்திருந்தனர். இதற்கு தமிழர்களின் எதிர்ப்பபைத் தெரிவிக்குமுகமாக தலைவர் மேற்படி தாக்குதல்களை நடத்தினார் என்பதை சில வெளிநாடுகள் தற்போது உணர்ந்துள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளின் தளம் அழிக்கப்பட்டதின் பின்பே சீனா சிறிலங்காவுக்குள் பிரவேசித்தது என்பதை உலகமே அறியும்.
பல்லாயிரம் கோடிக்கணக்கான டொலர்களை சிறிலங்காவுக்கு கடனாகக் கொடுத்து பல அபிவிருத்தித் திட்டங்களை சீனா ஆரம்பித்துள்ளது. பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பையும் சீனா தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. சிறிலங்காவிலுள்ள குடிமக்கள் சந்ததி சந்ததியாக சீனாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள். இப்போது, இந்தியாவும் மேற்குலக நாடுகளும் சீனாவை சிறிலங்காவிலிருந்து துரத்துவதற்கு பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால்,மிகவும் தூரநோக்கோடு தேசியத் தலைவரால் முன்னெடுக்கப்பட்ட சீன எதிர்ப்பு நடவடிக்கையை அன்று அந்த நாடுகள் கண்டுகொள்ளவில்லை.
வெள்ளம் தலைக்கு மேல் போனதின் பின் அந்நாடுகள் இன்று திண்டாடுகின்றன. இதேபோன்று தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழீழமே ஒரே தீர்வு என்பது தேசியத் தலைவரின் ஒரே முடிவு.
இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம். ஆனால், அதற்காக தமிழீழத் தனிநாடு தீர்வாகாது என இந்தியாவும் மேற்கத்தேய நாடுகளும் கூக்குரலிட்டன. பேச்சுவார்த்தைமூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் குறிப்பிட்டார்கள்.
போர் முடிந்து ஐந்தாவது ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தினால் மகிந்த அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
மகிந்த ஒவ்வொரு முறையும் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதும், பின்பு நிறைவேற்றாமல் தட்டிக்கழிப்பதும் ஐந்தாண்டுகளுக்குள் பல தடவைகள் நடைபெற்றுள்ளன.
ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூனை மகிந்த ஏமாற்றினார். இந்தியாவை ஏமாற்றினார். மனித உரிமை அமைப்புகளை ஏமாற்றினார். இப்போது பொதுநலவாய அமைப்பை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார். தாயகத் தமிழர்களை ஏமாற்றினார். முஸ்லீம் மக்களை ஏமாற்றினார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையையும் ஏமாற்ற அவர் முயற்சிக்கின்றார்.
ஆனால், சர்வதேசத்தின் நடவடிக்கைகள் இப்போதும்கூட சிறிலங்கா அரசுக்கு எதிராக எடுக்கப்படவில்லை. உலகிலுள்ள சகல விதிகளையும் மீறி சிறிலங்கா நடந்துகொள்கின்றது. தேசியத் தலைவர் மிக அழுத்தமாக சர்வதேசத்திடம் பலமுறை தெரிவித்துவிட்டார். இனவாத சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. இது பல்லாண்டு காலமாக தமிழர்கள் பெற்ற பட்டறிவு. எனவே நீங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழீழத்துக்கு ஆதரவு தாருங்கள் என நாடு நாடாகப் பிரதிநிதிகளை அனுப்பிக் கேட்டுக்கொண்டார்.
“நீங்கள் பயங்கரவாதிகள்“ எனக் கூறி அவரின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள், சிறிலங்காவில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதை இப்போதுதான் உணர்கின்றார்கள். 19,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த தேசியத் தலைவர், நாளடைவில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் உத்தரவாதம் அளித்திருப்பார்.
ஆனால், அந்தப் பாதையை மாற்றிய வெளிநாடுகளால் இன்று தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை. போர் முடிந்ததின் பின் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். அதே அளவான தொகையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்களின் நிலை மிக மிக மோசம். பல்லாயிரக்கணக்கான பெண்கள் போரின் பின் இராணுவத்தினரால் தொடர்ந்தும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
சில பெண்கள் பாலியல் வல்லுறவின் பின் கொல்லப்பட்டு பாழடைந்த கிணற்றுக்குள் போடப்படுகின்றார்கள். தமிழர்களின் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆலயங்களில் பணம்,நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அவற்றின் பெறுமதி சுமார் நூறு கோடியாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இவையனைத்தும் சிறிலங்கா இராணுவத்தாலேயே நடத்தப்படுகின்றது. தேசியத் தலைவர் குறிப்பிட்டதைப் போல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடு இல்லாவிட்டால் தமிழ்பேசும் மக்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பது தற்போது நிரூபணமாகிக்கொண்டிருக்கின்றது.
அதுமாத்திரமல்ல, தம்புள்ளயில் பத்திரகாளி அம்மன் ஆலயம் தகர்க்கப்பட்டதற்கும்,நாட்டிலுள்ள முஸ்லீம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதற்கும் அதுவே காரணம். இந்நிலையை சர்வதேசம் உணர்ந்து செயற்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்களின் சுதந்திர நடமாட்டத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். தமிழீழத் தேசியத் தலைவரின் வேண்டுதலை நிறைவேற்ற சர்வதேசம் முன்வர வேண்டும். சிறிலங்காவிலுள்ள தமிழ்பேசும் மக்களுக்கு பாதுகாப்புத் தேவை.
வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு பெரும் தலைவர் எமது தேசியத் தலைவர். அடிபணிந்து தலைகுனிந்து, அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன்.
அவர் ஓர் அற்புதமான மனிதர். பிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள். தமிழர்களின் வாழ்வென்று பொருள். தமிழர்களின் கீர்த்தி என்று பொருள். இப்பெருந்தலைவரை தமிழீழ தேசம் பெற்றெடுத்த நாளும் இம்மாதத்தில் வருகின்றது.
– வீ.ஆர்.வரதராஜா.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”