மேஜர் தமிழரசன் (டொச்சன்)
புன்னாலைக்கட்டுவன் பெற்ற புலிவீரன் மேஜர் தமிழரசன் (டொச்சன்)
வடக்குப்புன்னாலைக்கட்டுவன் 80களில் விடுதலைப்புலிகளை ஆதரித்த ஊர்களில் ஒன்று. இங்கு பல ஆரம்பகால விடுதலைப்புலிகளின் வரலாறும் பலரது வரலாற்றின் வேர்களும் பரவியிருக்கிறது.
தலைவர் பிரபாகரன் வந்து தங்கி வாழ்ந்து அவரைப் பாதுகாத்த ஊர்களில் வடக்குப்புன்னாலைக்கட்டுவனும் ஒன்று. தலைவருடன் வாழ்ந்த போராளிகளில் ஒருவர் தலைவர் நன்றியுடன் ஞாபகம் கொள்ளும் ஒருவர் பற்றி ஒருமுறை உரையாடிய போது சொன்னவை :-
புன்னாலைக்கட்டுவனில் தலைவரை பாதுகாத்த குடும்பங்களில் ஒன்று சுவிஸ் குலம் (குலம்மாமா) அவர்களது. 80களில் இராணுவ கெடுபிடிகளின் அலைச்சலும் அச்சுறுத்தலும் நிறைந்த காலப்பகுதியில் குலம்மாமா தனது வீட்டில் தலைவரை காத்து கவனித்தது பற்றி தலைவர் அடிக்கடி நினைவு கூருவாராம்.
வசதிகள் குறைந்த தனது வீட்டில் தனது 3 தங்கைகளையும் வீட்டின் வெளியே இராணுவ நடமாட்டத்தை அவதானிக்க விட்டு தலைவரை வீட்டினுள் நித்திரை கொள்ள இடம் கொடுத்து தலைவனைக் காக்க தான் உறங்காமல் குலம்மாமா விழித்திருப்பாராம். அவரைப் போல அவரது தங்கைகளும் தலைவரைக் கண்ணாகக் கவனித்துப் பாதுகாத்து அனுப்புவதாக கூறுவாராம்.
தனது ஆரம்பகால வாழ்வு பற்றி தலைவரின் நினைவுகளில் அடிக்கடி நினைவு கொள்ளப்படும் மனிதராக குலம்மாமா இருந்தார். தலைவரால் நினைவு கொள்ளப்படும் உயர்ந்தவர்களுள் தலைவரின் மதிப்பையும் அன்பையும் பெற்றிருந்த குலம்மாமா பிறந்ததும் இதே புன்னாலைக்கட்டுவன்தான்.
80களில் அவ்ரோ விமானம் மீதான குண்டுவெடிப்புத் தாக்குதலின் சந்தேகத்தின் பெயரால் அரச படைகளால் கைது செய்யப்பட்டு குலம்மாமா சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு சிறந்த முன்னுதாரணமான போராளியும் கூட. இயக்கம் நாடு இவ்விரண்டையும் தன்வாழ்வாக வாழ்ந்து இன்று கடனாளியாக ஆனாலும் தேசத்தின் இழப்பின் முன்னால் தனது இழப்பொன்றும் பெரிதில்லையென வாழும் அற்புதமனிதன்.
இவரைப் பற்றி இவரது ஆரம்பம் இயக்கம் விசுவாசம் நேர்மை பற்றி அறியாதவர்கள் சிலர் சிலகாலங்கள் முதல் துரோகிப்பட்டம் வழங்கியது இங்கு நினiவுகூரத்தக்கது. எவர் எத்தகைய விமர்சனத்தை குலம்மாமா மீது கொண்டிருந்தாலும் இன்றும் தான்நேசித்த தலைவனை , தேசத்தை இதயபூர்வமாக நேசித்து இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கும் குலம் என்ற மனிதனை தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலிருந்து யாராலும் விலக்கிவிட முடியாது.
இந்த ஊரில் குறிப்பிடத்தக்க போராளிகளில் முதல் வீரச்சாவடைந்த போராளி லெப்.குவிசாசன். 85 காலமென நினைவு. யாழ் நகரப்பகுதியில் இராணுவத்துடனான நேரடி மோதலொன்றில் வீரச்சாவடைந்த மாவீரர். இவரது குடும்பமும் முழுமையாகத் தங்களை ஈழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தியாகங்களைப் புரிந்த குடும்பங்களில் ஒன்று.
லெப்.குவிவாசன் மாமாவின் அம்மா புனிதமன்ரி. எங்கள் தலைவனின் குழந்தைகளான துவாரகா , சாள்ஸ் இருவரையும் குழந்தைகளாய் இருந்த காலத்தில் பராமரித்து வளர்த்தது எல்லோராலும் வீரத்தாய் என 80களில் மதிக்கப்பட்ட புனிதமன்ரி என்பதனை வரலாறு ஒரு போதும் மறந்துவிடாது.
இவர்கள் வரிசையில் புன்னாலைக்கட்டுவனில் இருந்து போராளிகளாக புறப்பட்ட பலரில் வீரச்சாவடைந்தவர்கள் வரிசையில் கப்டன் லோலோ (இந்திய இராணுவகாலத்தில் வீரச்சாவு) , கப்டன் றங்கன் (இந்திய இராணுவகாலத்தில் வீரச்சாவு) வரிசையில் 1992இல் வீரச்சாவடைந்து தனது இலட்சியத்தில் உறுதியோடு பயணித் மாவீரர் மேஜர் டொச்சண்ணாவும் ஒருவர்.
குழந்தைப் பருவத்தில் பெற்றோரை இழந்த டொச்சரண்ணாவின் இயற்பெயர் ஜெயக்குமார். ஊரில் ஜெயா என எல்லோராலும் அழைக்கப்பட்ட இளைஞன். புன்னாலைக்கட்டுவன் தொடக்கம் குப்பிளான் , ஏழாலை , குரும்பசிட்டி , வசாவிளான், பலாலி என அயல் ஊர்களெங்கும் அறியப்பட்ட ஜெயாண்ணா இராணுத்தின் கெடுபிடிகள் அதிகரித்த காலங்களில் அந்தக் கொடுமைகளைத் தானும் அனுபவித்தான்.
ஊரைச் சுற்றிவளைக்கும் இராணுவத்தினரால் ஊரிலிருந்து இழுத்துச் செல்லப்படும் இளைஞர்களின் துயரில் அலையும் அம்மாக்களின் கண்ணீரின் கனதியும் பள்ளிமாணவனாக இருந்த ஜெயாண்ணாவையும் போராட்டம் பற்றிச் சிந்திக்க வைத்தது.
எல்லாக் கொடுமைகளுக்குமான தீர்வு தானும் விடுதலைப் போராட்டத்தில் இணைவதே தீர்வென்றெண்ணித் தன்னையும் விடுதலைப்புலிகளுடன் இணைத்து தனது பிரதேசத்துக்கே ஆயுதம் தரித்துத் திரும்பி வந்தார்.
86களில் இராணுவத்தினர் முழுமையாக முகாம்களில் அடக்கப்பட்ட காலம். அப்போது பலாலி முகாமிலிருந்த இராணுவத்தினர் வசாவிளான் நோக்கி முன்னேற முயன்ற காலம்.
திடீரென காணாமற்போன ஜெயாண்ணா போராளியாக ஊரில் வந்திறங்கினார். இரவுகளில் வசாவிளான் பகுதியில் சென்றியிருக்கும் போராளிகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க கேணியடியில் அமைந்த எங்கள் கடைக்கு வந்து போவார். அப்பாவோடு அதிக நெருக்கத்தைக் கொண்ட போராளிகளில் டொச்சண்ணாவும் ஒருவர்.
டொச்சண்ணாவுக்கு அப்பாவின் பிரத்தியேக கவனிப்பு எப்போதுமே காத்திருக்கும். எங்களோடு அடிபட்டு எங்கள் வீட்டிலும் ஒருவனாக வந்து போன போராளி. அம்மா இல்லாத பிள்ளையென்றதால் அதிகம் அன்பை எங்களிடத்திலும் பெற்றுக் கொண்டார். பதின்ம வயதுகளில் தனது வீட்டிற்காகவும் தன்னை வளர்த்த அம்மம்மாவுக்காகவும் உழைத்த பொறுப்புள்ள பிள்ளை.
விவரிக்க முடியாத துயரையும் வெளியில் தெரிவிக்க முடியாத இழப்பின் கனத்தையும் இதயத்தில் சுமந்து திரிந்த தென்றல் அது. மெல்லிய உயர்ந்த உருவமான டொச்சண்ணா அன்றைய காலத்து நினைவுகளில் எப்போதுமே சிரித்தபடி சயிக்கிளில் வந்திறங்கும் இனிமையான போராளி.
நாய்க்குட்டியென டொச்சண்ணாவை சொல்வார்கள். நாய்க்குட்டியென்ற அடைமொழி ஏன் அவரது பெயருக்குப் பின்னால் வந்ததெனத் தெரியாத வயது அது. கோபம் வந்தால் நாய்க்குட்டியென்று சொல்லிச் சினத்தாலும் சிரிப்போடு ஏற்றுக் கொண்டு போய்விடும் மனிதன்.
ஒருமுறை நாய்க்குட்டியென்ற பெயருக்கான காரணத்தை அந்த வீரனின் தோழன் ஒருவனிடமிருந்து அறிந்த போது அந்த இனிமையான போராளி மீதான மதிப்பு மேலுயர்ந்தது.
வீதியில் கண்டெடுத்த நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து அந்த நாய்க்குட்டியைத் தன்னோடு கொண்டு திரிந்து அன்பைப் பொழிந்த இளைஞனின் கருணையை காலம் ஒரு போதும் தனது நன்றியால் நினைவு வைத்திருக்கும்.
பலாலியிலிருந்த இராணுவத்தினரால் ஏவப்படும் எறிகணைகள் புன்னாலைக்கட்டுவன் குப்பிளான் ஏழாலையென நீண்டது. உலங்குவானூர்தியின் தாக்குதல் தொடர் மரணத்தின் கொடிய கையால் பலரது உயிர்கள் இடுங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
வாசவிளான் மத்தியமகா வித்தியாலயம் மாணவர்களின் நடமாட்டம் கலகலப்பு எதுவுமின்றி அனாதையானது. டொச்சண்ணாவையும் சிறந்த மாணவனாக உருவாக்கியதும் அதே பாடசாலைதான்.
இரவிரவாக தொடர் தாக்குதல். வெடிச்சத்தங்கள் இரவை அறுத்து எங்கள் அமைதியைக் கொன்றது. வசாவிளான் மத்தியமகாவித்தியாலத்தைக் கைப்பற்றும் கனவோடு இராணுவத்தின் இலக்கும் நகர்வும் ஆரம்பித்தது.
டொச்சண்ணா படித்த பாடசாலையான வசாவிளான் மத்தியமகா வித்தியாலயத்தினைக் கைப்பற்றும் முயற்சியில் புறப்பட்ட இராணுவத்தினரோடு சமராட எங்களது டொச்சண்ணாவும் இணைந்து கொண்டது வரலாறு. எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சியோடு தனது பாடசாலையை தான் நேசித்த ஊர்களைக் காக்கும் கனவோடு களமாடிய வேங்கை.
வசாவிளான் மத்தியமகா வித்தியாலயம் இராணுவத்தினரிடம் பிடிபடுகிற போது அவர்களுக்கான வசதிகள் எதையும் இல்லாமல் செய்யும் முயற்சியில் போராளிகள் ஈடுபட்டார்கள். மெல்ல மெல்ல இராணுவத்தின் முன்னேற்றம் தொடர் எறிகணைகள் விமானத்தாக்குதல் ஒரு கட்டத்தில் வசாவிளான் பகுதி இராணுவத்தினரிடம் பறிபோக வேண்டிய நிலமை வந்தது. புலிகள் பின்வாங்கி நின்று வசாவிளானில் தங்கியிருந்த இராணுவத்திற்குப் பெரும் தலையிடியாகினர்.
சமரொன்றின் போது களத்தில் நின்று கழுத்துப் பகுதியில் காயமடைந்து டொச்சண்ணா விழுப்புண்ணடைந்தார். என்றும் மாறாத இலட்சியக்கனவோடு காயமென்ன கடுமையென்ன எதுவும் அந்த இரும்பின் உறுதியின் முன் வெறும் துகள்களாக….!
1987 அமைதி காக்க வந்தார்கள். ஆயுதங்கள் கையளிப்பு நிறைவாகி. நிராயுதபாணிகளாய் புலிகள் நின்ற நேரம் தியாகி திலீபனண்ணா உண்ணாவிரத காலத்தில் ஓயாமல் ஓடித்திரிந்து இயங்கிய புலியாய் டொச்சண்ணா.
10.10.1987 அமைதிகாக்க வந்தபடையுடனான யுத்தம் ஆரம்பம். ஆறாத விழுப்புண்ணோடு அலைந்து களங்களில் விழியுறக்கம் மறந்த வேங்கை இந்தியப்படைகளால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறையென்ன பெரிதென்ற எங்கள் புலி எல்லா வதைகளையும் தாங்கியபடி காங்கேசன்துறை தடுப்பு முகாமில் சிறைவாசத்தை அனுபவித்தது. தான் கொண்ட கொள்கைளில் கறையில்லாமல் புனிதத்தோடே டொச்சண்ணா சிறை வாழ்வை ஒரு போராளியின் உறுதியோடு வாழ்ந்து காட்டினார்.
இந்தியப்படைகள் ஈழத்தைவிட்டு வெளியேறிய போது சாரத்தோடு எங்கள் முன் சாறக்கட்டுப்புலியாகாத் திரிந்த புலி வரிச்சீருடையோடு எங்கள் ஊருக்குள் வந்திறங்கிய போது யாராலும் நினைக்காத வளர்த்தியும் மாற்றமும் ஆனாலும் நாங்கள் அன்று பார்த்த பழகிய பழைய அதே டொச்சண்ணாவாக எங்களோடு மீண்டும்….! ஒவ்வொரு போராளியும் தனது மரணத்தின் நாளை தனது மனவேட்டில் பதிவு செய்து கொண்டேயிருப்பார்கள். ஆனால் அவர்களது பயணத்தில் எவ்வித பயமும் இல்லாது தொடர்வார்கள். அப்படியே டொச்சண்ணாவும்…!
குப்பிளான் பிரதேசப் பொறுப்பாளனாக பதவியேற்று வந்த டொச்சண்ணா தான் பழகிய வீடுகளை மறக்காமல் எங்கும் வந்து போவார். 1990மேமாதம் புன்னாலைக்கட்டுவன் பெற்ற வீரப்புதல்வர்களுக்கான நினைவுநாள் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தி அந்த நினைவு நாளில் அந்த ஊரில் புலியாகி வீரச்சாவடைந்த லெப்.குவிவாசன் , கப்டன் லோலோ, கப்டன் ரங்கன் ஆகியோரின் திருவுருவப்படங்கள் தாங்கிய மேடையில் நடந்த நிகழ்வில் டொச்சண்ணா தனது தோழர்கள் பற்றி நினைவு கூர்ந்த போது ஒரு சிறந்த பேச்சாளனாகவும் எங்களது மதிப்பைப் பெற்றார்.
1990யூன் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பம். எங்கள் ஊரில் முகாமிட்டிருந்து தனது அரசியல் பணியை அக்காலத்தின் தேவையையெல்லாம் டொச்சன் என்ற இளம் போராளியின் வேகத்திலும் விவேகத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் ஏராளம்.
தனது அலுவலகத்திற்கு அண்மையில் அமைந்திருந்த வெளியில் பந்தலிட்டு கோட்டை இராணுவத்தினரை துரத்திய கோட்டை வெற்றி விழாவை தியாகி திலீபண்ணாவின் நினைவு நாளன்று நடாத்திய பெருமையும் எங்கள் டொச்சண்ணாவையே சாரும்.
காலமாற்றம் எங்கள் ஊரில் திரிந்த டொச்சண்ணாவை போர்வல்லுனராய் தளபதியாய் மாற்றியது. அரசியல் பணியிலிருந்து விடுபட்டு களத்தில் மீண்டும் சண்டைக்காரனாக…! களமே வாழ்வாக அவரது களங்கள் எங்கும் விரிந்து பரந்தது.
ஊர்கள் வெறிச்சோடி மனிதர்களை இழந்தது ஆனாலும் தான் ஓடித்திரிந்த ஊர்களைக் காக்கும் பணியில் டொச்சண்ணா மீண்டும்….! தமிழரசன் என்ற பெயர் யாருக்கும் நினைவில்லை ஆனால் டொச்சன் என்ற பெயரை அப்போது தெரியாத குழந்தையே இருக்கவில்லை. அவ்வளவுக்கு அந்தப் பெயர் யாழ்மாவட்டத்தின் அனேக இடங்களில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு படையணியை வழிநடத்தும் திறன் மிக்க தளபதியாய் மாற்றம் கொண்ட வீரன்
வலிகாமம் தாக்குதல் தளபதியாய் உயர்ந்து நின்ற போர்த்தளபதி. பலாலி,கோட்டை,மின்னல் (மணலாறு) என களங்கள் கண்ட ஓயாதபேரலை. 8தடவைகளுக்கு மேல் விழுப்புண்ணடைந்தும் இலட்சியத்தில் தனது இலக்கில் பின்னடைவைக் காணாத புன்னகைமாறாத போர்வீரன்.
களமும் காயமடைதலும் அந்தப்புலி வீரனுக்குப் புதியதில்லை. சமரொன்றில் காயமடைந்து (மின்னல் சமரென நினைவு) முழுமையாக குணமடையாத நிலமையிலும் பலாலி இராணுவத்தின் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதலில் தானும் கூடவே சண்டையில் நின்றார். அச்சண்டையின் தேவையை உணர்ந்து களத்தில் நின்றவர்களோடு தானும் ஒரு வீரனாகி நின்றார்.
அத்தாக்குதலில் புலிகளணி பெரும் வெற்றியைப் பெற்றது. பெற்ற வெற்றியில் மகிழ்ந்து ஆரவாரித்த போராளிகளின் மகிழ்ச்சியின் தருணம் அது. டொச்சண்ணாவும் இன்னும் தளபதிகள் போராளிகள் கூடி திசையெங்கும் நின்ற வேளையது. தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிரி பலாலியிலிருந்து தலைநிமிர முடியாத அளவுக்கு எறிகணைகளை ஏவிக் கொண்டிருந்தான்.
இதே களத்தில் நின்ற கப்டன் மலரவன் என்ற உன்னதமான போராளியின் உயிர் மூச்சும் வளலாய் பகுதிமீது எதிரி ஏவிய எறிகணையில் தனது மூச்சை நிறுத்தி கப்டன் மலரவனாக தன்னை வரலாற்றில் பதிவு செய்து கொண்டது.
23.11.1992 ஈழவிடுதலைப் போராட்டத்தின் போர் இலக்கியமாக போற்றப்படும் ‘போர்உலா’ என்ற இலக்கியப் பொக்கிசத்தை எங்களுக்குத் தந்த போராளி. எத்தனையோ களங்களில் தனது கள அனுபவங்களை எழுத்தாக்கிய வீரன். ஒரு கையில் பேனாவோடும் மறுகையில் துப்பாக்கியோடும் களமெங்கும் திரிந்த கப்டன் மலரவன் அவர்களின் இழப்பு பேரிழப்பாக அமைந்தது. அன்று மலரவனோடு மண்மீட்பில் 57மாவீரர்கள் தங்கள் இன்னுயிர்களை ஈகம் தந்து தங்கள் இறுதி மூச்சை பலாலிப்பகுதியில் கரைத்துக் காவியமானார்கள்.
அதேபோல எங்கள் டொச்சண்ணாவும் எறிகணைத் தாக்குதலில் படுகாயமுற்று 24.11.1992 அன்று வீரச்சாவடைந்து மேஜர் தமிழரசனாக (டொச்சன்) தான் நேசித்த இலட்சியத்தின் பாதையில் தனது கடமையை நிறைத்த மகிழ்வோடு மாவீரனாக….!
முதல் சண்டையனுபவம் கண்ட பலாலிப்பகுதியே அந்த இனிய போராளியின் இறுதிக்களமாகி எங்கள் நெஞ்சங்களில் ஆறாத துயரைத் தந்து சிரித்தபடியே நினைவுகளில் இன்றும் ஞாபகமாய்….கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் உறங்கிப் போனார்.
சிறுவனாக பின்னர் இளைஞனாக இருந்த காலத்தில் அந்தப்புலிவீரன் சயிக்கிளில் சுற்றிய மயிலிட்டி , பலாலி , வசாவிளான் , ஒட்டகப்புலம் , அச்சுவேலி , வளலாய் என ஊர்களைக் கொள்ளையிட்டு வைத்திருந்த படைகள் மீது தாக்குதல் தொடுக்கும் போர் வீரனாய் டொச்சனென எல்லாராலும் நேசிக்கப்பட்ட வீரன் இறுதி மூச்சுக் கரைந்ததும் அந்த வீரன் திரிந்த பழகிய இடங்களில் ஒன்றான வளலாய் தான் என்பது வரலாற்றின் அதிசயம் தான்.
ஒவ்வொரு போராளியின் இறுகிய இதயங்களுக்குள்ளும் ஈரமான ஒவ்வொரு காதல் நினைவும் காதலும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது. மெல்லிய , நெடிய அந்தச் சிரித்தபடி திரியும் வீரனின் இதயத்திற்குள்ளும் ஒருத்தி குடியேறியிருந்தாள் என்பதனைப் பின்னாளில் கூடவிருந்த ஒரு போராளி நினைவு கூர்ந்திருந்த போது நாங்கள் நேசித்த எங்கள் அயல் ஊரவனாகப் பிறந்து எங்கள் ஊரையும் காத்த பெருமைக்குரிய அந்தப்புலி வீரனை என்றென்றும் பெருமையோடே நினைவு கூரும் வகையில் அவனது வாழ்வும் வரலாறும் உயர்ந்து நிற்கிறது.
காதலைவிடவும் கடமையை தாயகத்தின் மீதான பாசத்தை தனது ஒவ்வொரு செயலாலும் வெளிப்படுத்தி தனது சொல் ஒவ்வொன்றின் முன்னாலும் செயலாய் வாழ்ந்து காட்டிய விடுதலைப் போராளிகளில் ஒருவராக எங்கள் நினைவுகளோடு சேர்ந்தே பயணிக்கும் தமிழரசன் அல்லது டொச்சன் என்ற மாவீரனின் நினைவுகளையும் சுமந்தபடி….அவர்களது கனவுகளை எட்டும் காலமொன்றின் வரவிற்காய்….!
கார்த்திகை 2010 (18வருட நினைவு நாளில்)
நினைவுப்பகிர்வு – சாந்தி ரமேஷ் வவுனியன் (Email – rameshsanthi@gmail.com)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”