லெப். சுடரொளி
வீட்டுக்கொரு ஆண் பிள்ளையாயிருந்தும் விடுதலையை நேசித்த வீரன்.
கடல் அலைகளும் அதன் நுரைகளும் கால்தடவிச் சென்றோடும் மணற்கரைகளில் சிம்மானின் நினைவுகளை காலம் எழுதிச் செல்கிறது. ஆம் அவன் பிறந்த வடமராட்சி கிழக்கு சிம்மானின் வரலாற்றாலும் தனது வீரத்தை நிரப்பியிருக்கிறது. கடலோரக் கிராமத்தில் பிறந்தவன் அந்தக் கரைகளில் காலாற நடந்தவன் கடுமையான போராட்ட வாழ்வை நேசித்தானென்பது வியப்புக்குரியதே.
ஓவ்வொரு வீரனின் இயல்பான வாழ்வினுள் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடப்பதை அவர்களோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே அறியவும் ஆழமாய் உணரவும் முடியும். அத்தைகயவனாய் தான் சிம்மான் என்னோடு அறிமுகமானான்.
1989ம் ஆண்டு வவுனியா பாலமோட்டை அடர்ந்த காட்டுப்பகுதியில் எங்களது பாசறையமைந்தது. அங்கேதான் உருவத்தில் சிறியவனான துடிப்பான அதே நேரம் நகைச்சுவையான ஒரு போராளியாக என்னுடன் அறிமுகமானான்.
எங்கள் கிராமப்புற வாழ்விலிருந்து மாறுபட்ட பாலமோட்டை அடர்காடு எங்களுக்கு புதிய வாழ்வைத் தந்தது. ஒளிகாணாத இருளுமல்லாத பாதைகளால் நாங்கள் அடைய வேண்டிய இலக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அந்தப்பாசறை எங்களைப் புடம் போட்டெடுக்கும் முனைப்பில் ஒவ்வொரு போராளியின் மனவுறுதியையும் செயலுறுதியையும் பரீட்சிக்கும் களமாகவும் மாறியிருந்தது.
பாலமோட்டைக் காடுகளே இந்திய இராணுவ காலத்தில் புலிகளின் வரலாற்றில் முக்கிய பங்கை வகித்த வரலாற்றைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருந்தது.
கடுமையான காலகட்டமான இந்திய இராணுவ காலத்தில் புலிகளுக்கும் பிரேமதாச அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் காலம். எந்த நேரமும் இந்தியப்படைகளால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட வழிதேடிக்கொண்டிருந்த காலமும் அதுவே. அந்த இறுக்கமான காலப்பகுதியில் அரசியல் போராளிகளை பாலமோட்டைக் காட்டில் உலங்கு வானூர்தியில் ஏற்றிச் செல்ல இலங்கையரச விமானப்படை வந்து செல்லும்.
அந்த நேரத்தில் அரசியல் பேச்சுக்குச் சென்று திரும்பும் யோகியண்ணன் உள்ளிட்ட போராளிகளைப் பத்திரமாக வழியனுப்பி வைத்து மீளவும் கொண்டு வந்து இறக்கப்படும் இடத்தில் பாதுகாப்பபு வழங்கி அவர்களை எமது தங்கிடத்திற்கு கொண்டு வரும் பணியும் எமக்காயமைந்த பணிகளில் ஒன்று. அந்தப் பாதுகாப்புப் பணியில் நாங்கள் நித்திரை கொண்டு அதற்கான தண்டனையும் பெற்ற அனுபவம் கூட இனிமையான காலமே.
வரலாற்றின் வெற்றியின் தடயங்களையும் இறுக்கமான கள நிலமையையும் கொண்டு மௌனமாகத் தனது பணியை ஆற்றிக் கொண்டிருந்த பாலமோட்டையில் நாங்கள் பயிற்சிக்காகத் தயாராகினோம்.
கூடப்பயிற்சிக்காய் வந்திருந்தவர்களின் சொந்தப் பெயர்களையோ ஊர்களையோ அறிய ஆவலாயிருந்தாலும் அன்றைய இயக்கக்கட்டுப்பாடு கேட்டு அறிய முடியாததாகவே இருந்தது. எங்கள் பாசறையானது முற்றிலும் வித்தியாசமான கட்டுப்பாடுகளையும் விதிகளையும் கொண்டிருந்தது. புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியில் இந்தப் பயிற்சியின் தொடக்கமே புதிய பரிணாமங்களை உருவாக்கியதெனலாம்.
அப்போதுதான் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகள் ஆரம்ப பயிற்சியை முடித்து புலனாய்வுப் பயிற்சிக்கு எம்முடன் இணைக்கப்பட்டிருந்தார்கள்.
அன்றைய காலம் இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள் எமது விடுதலைப் போராட்டம் உட்பட்டிருந்தாலும் தேசியத்தலைவர் அவர்கள் அனைத்து முற்றுகையையும் உடைத்து போராட்டத்தையும் போராளிகளையும் இயக்கக் கட்டமைப்புகளையும் சீர் செய்த வண்ணமே இருந்தார்.
அவ்வாறான இறுக்கமான காலகட்டத்திலும் கூட அவரது சிந்தனையில் உதித்ததுதான் எமது புலனாய்வுப்பயிற்சிமுகாம். அப்போதைய பிரதித்தலைவர் மாத்தையா அவர்களின் நிருவாகத்தின் கீழ் சலீம் அவர்களின் பொறுப்புக்கு உட்பட்டு பிரிகேடியர் மாதவன் மாஸ்ரரின் கடும்பயிற்சிக்கு உட்படுத்தப்படுகிறோம் என்பதனை புரிந்து கொள்ள முடியவில்லை.
எல்லா மாவட்டத்திலிருந்தும் ஐந்து ஐந்து போராளிகள் வந்திருந்தார்கள். யாழ்மாவட்டத்தில் இருந்து கூடுதலான போராளிகள் வந்திருந்தார்கள். முதலில் தனித்தனியாக மாத்தையா அவர்கள் வெளிமாவட்டங்களிலிருந்து வந்த போராளிகளை நேர்முகம் செய்திருந்தார்.
அப்போது அவர் சொன்னார் :- நாம் எந்த ஒரு நிலைமையிலும் எக்கட்டளையையும் ஏற்றுச் செயற்படும் போராளியாகவே இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்தப் பயிற்சியில் நாங்கள் கலந்து கொள்ளலாமெனவும் கூறப்பட்டது.
பயிற்சியின் கடினம் எதுவென்று பார்த்துவிடும் உறுதியோடு சிம்மான் உட்பட பயிற்சிக்கென வந்த அனைத்துப் போராளிகளும் மாத்தையா அவர்களின் கட்டளைகள் விளக்கவுரைகளை ஏற்றுக் கொண்டு பயிற்சியின் கடினம் தெரியாதவர்களாய் அனைத்துக்கும் தயரானோம்.
இதில் என்னுடன் பயிற்சிக்கு வந்தவர்களுக்கும் எமது அணியோடு இணைத்துக் கொள்ளப்பட்ட பெண்போராளிகளுக்கும் இன்னும் சில போராளிகளுக்கும் ஏற்கனவே களச்சண்டை அனுபவம் இருந்தமையால் நடக்கப்போகும் பயிற்சியின் கடுமையை ஒரளவு உணர்ந்திருந்தனர்.
ஆனால் அங்கேயே பயிற்சியை முடித்து பயிற்சி முடிந்தவுடன் இச்சிறப்பு பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு வந்தவர்ளுக்கு அதன் கடுமையைப் புரிந்து கொள்ள அவகாசம் தேவைப்பட்டது. அத்தைகயவர்களுள் சிம்மான் போன்ற சிலரும் உள்ளடங்கலாகினர்.
விளையாட்டும் வீடும் உறவுகளும் தாளையடிக் கடற்கரையும் மட்டுமே உலகாயிருந்த சிம்மான் இயக்கத்தில் இணையும் போது மிகச்சிறியவனாகவே இருந்தான். அவன் தனது ஆரம்பக் கல்வியை தாளையடி பாடசாலையில் பயின்றவன்.
அவனது ஊர் அடிக்கடி இந்திய இராணுவத்தால் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டு திடீர் திடீரென அவனது கிராமமும் அமைதிய இழந்து போகிற தருணங்கள் அடிக்கடி நிகழ்ந்தது. இச்சுற்றிவளைப்பு இளைஞர்களை ஊரில் நிம்மதியாக இருக்கவிடாது தொல்லையாகவே இருந்தது. இதனால் சிம்மானை அவனது பெற்றோர் யாழ்நகரில் உள்ள பற்றிக்கல்லுரியில் இணைத்தார்கள். அத்தோடு விடுதியிருந்தே அவன் கல்வியைத் தொடர விடப்பட்டிருந்தான்.
அந்த நாட்களில் தான் சிம்மானுக்கு சந்திரன் அறிமுகமாகிறான். சந்திரன் ஒரு அநாமதேயக் கரும்புலியாக கொழும்பு நகரில் காவியமானது ஒரு வரலாறு. சிலரால் மட்டுமே அறியப்பட்ட மறைமுகக்கரும்புலி சந்திரன் ஊடாக சிம்மான் போராளியாகினான். தாயகத்தின் விடுதலையை சிம்மான் உணர்ந்த காலமும் அதுவே.
வீட்டில் ஒரேயொரு ஆண்பிள்ளையவன். அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் ஒரு செல்லப்பிள்ளையாகவே அவன் வாழ்ந்து வந்திருக்கிறான். அவனுக்கு உடன் பிறந்த இரு பெண் சகோதரிகள் இருந்தார்கள். அவன் மீது அவர்கள் அளவு கடந்த பாசத்தைக் காட்டி அவனைப் பார்த்து வந்தார்கள். அவனென்றால் உயிராகவே அவன் மீது பாசமாக இருந்தார்கள்.
குட்டி இத்தாலி என அழைக்கப்படும் இவனது ஊரான தாழையடி செம்பியன்பற்று கிராமத்திலிருந்து இவனது உறவுமுறையான மாமாமார் தந்தையின் உறவுகள் யாவரும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்திருந்தார்கள். நினைத்தால் அவனால் விரும்பும் வசதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதியோடு அவனது குடும்பச்சூழல் அமைந்திருந்தது.
இத்தகைய வசதிகள் இருந்தும் தனது சிறிய வயதில் அனைத்து உறவுகளையும் வசதிகளையும் துறந்து சந்திரன் ஊடாக விடுதலைப்புலிகள் அமைப்பில் போராட்டத்தில் இணைந்து கொண்டான்.
வவுனியாஅடர்ந்த காட்டுப் பகுதியில் அமீர் பயிற்சியாசிரியராக இருந்த பயிற்சி முகாமில் சிம்மான் பயிற்சியை முடித்திருந்தான். அன்றைய இந்திய இராணுவ காலகட்டத்தில் போராட்டம் என்பதும் பயிற்சிகள் என்பதும் நினைத்துப் பார்த்தால் இன்றும் மனசை ஒரு உறை நிலைக்குக் கொண்டு செல்லும் நிகழ்வுதான்.
இந்திய முற்றுகைக்குள் அதிகாலை தொடக்கம் மதியம் வரையில் கடும் பயிற்சிகளையும் செய்து கொண்டு உணவுப் பொருட்களை எடுத்து வருவதென்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது அக்காலம். கடும் பயிற்சி நீண்டதூர நடைப்பயணத்தின் போது திசையறிகருவி மூலம் சென்று காடுகளை ஊடறுத்துத் தினம் ஒவ்வொரு பாதையை அமைத்துச் சென்று எம்மைவிடவும் பாரம் கூடிய உணவுப் பொதிகளைக் காவிவருவது என்பதும் அதன் வலியும் வேதனையும் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியமுடியும்.
கடுமையும் இனிமையும் நிறைந்த பயிற்சியை நிறைவு செய்து அடுத்த கடும் பயிற்சிக்கு இணைந்து கொண்டவன் தான் சிம்மானென்ற இனிமையானதொரு பாச உணர்வோடு நட்பை வளர்த்துக் கொண்ட தோழன் சிம்மான் என்ற சுடரொளி.
பாலமோட்டை அடர்ந்தகாட்டில் அன்றைய பிரதித்தலைவரான மாத்தையாவின் 37 என்ற சுட்டுப்பெயரைக் கொண்டு இயங்கிய ஒரு முகாம் எமக்கான பயிற்சி முகாமாக அமைக்கப்பட்டிருந்தது.
அனைத்து முகாம்களுக்குமான பொறுப்பாளராக லெப்.கெணல் கிறேசி அவர்கள் இருந்தார். எங்களது புலனாய்வுப்பகுதிக்கு சலீம் அவர்கள் பொறுப்பாக இருந்தார். நாம் அவருக்கு கீழ் தனியாக சண்டையணியுடன் கலக்கப்படாமல் பெண் போராளிகள் தனியாகவும் ஆண்போராளிகள் தனியாகவும் 37 முகாமில் ஒரு பகுதியில் தனித்துவமாக இருந்தோம். அந்தப்பகுதியின் காவல்கடமை யாவையும் நாமே கவனித்து வந்தோம்.
எமக்கான முதல்நாள் கலந்துரையாடல் மாத்தையா அவர்களால் நடத்தப்பட்டது. பயிற்சியின் நோக்கம் கடுமை யாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்த மாத்தையா அவர்கள் தினமும் பயிற்சியின் போது 10கிலோ மண்மூடையை சுமந்தபடியே பயிற்சியை செய்ய வேண்டும். இரவு நித்திரைக்கு செல்லும் போது மட்டுமே அந்து மணல்மூடையைக் கழற்ற அனுமதிக்கப்படும் என்றார்;. அதுவரையும் நாங்கள் என்ன பணிகளைச் செய்தாலும் எம் முதுகில் அந்த 10கிலோ மண்மூடையைக் கழற்றவேகூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இப்பயிற்சியினை சலீம் அவர்களும் மாதவன் மாஸ்ரர் அவர்களும் நெறிப்படுத்துவார்கள்; எனவும் குறிப்பிட்டார். இக்கடும் பயிற்சியைப் பெற விரும்பாதவர்கள் விலகிக் கொள்ளாம் எனவும் மீண்டும் கூறப்பட்டது. எனினும் யாரும் விலகாது பயிற்சியை முடிக்கவே தயாராக இருந்தார்கள்.
இப்படியாகப் பயிற்சி தொடங்கிய நாளிலிருந்து நாம் யாரும் நிம்தியாகத் தூங்கியதில்லை. பயிற்சியின் கடுமை எந்த நேரமும் முதுகில் எம்மோடே காவப்பட்டுக் கொண்டிருந்த 10கிலோ மண்மூடையோடு இவ்வாறு தொடாந்த பயிற்சியின் கடினத்தின் அசதியில் நின்றபடியே சிம்மான் நித்திரைக்குச் சென்று விடுவான். எங்கு அவனுக்கு இடைவெளி கிடைக்கிறதோ அங்கே அவன் அவனது துப்பாக்கியோடும் மண்மூட்டையோடும் நித்திரையாகிவிடுவான்.
மாதவன் மாஸ்ரர் முக்கியமான பாடங்களைப் படிப்பிக்கும் போது கூட நித்திரையாகிவிடுவான். எங்களது முகாமில் தினம் தினம் தண்டனை பெறும் போராளியாகவே சிம்மான் இருந்தான்.
தண்டனைக்காக சிறிய மரக்குற்றியொன்றில் மாதவன் மாஸ்ரர் எற்றிவிடுவார். அதில் இரு கால்களையும் வைத்துக் கொண்டு எத்துணையுமில்லாமல் துப்பாக்கியையும் பிடித்து நிற்பதென்பது கடினம். பலர் பலமுறை அந்த மரக்குற்றியிலிருந்து தவறி விழுந்து திரும்பத் திரும்ப ஏறிக் கொண்டிருப்பார்கள். ஆனால் சிம்மானோ அந்த கடினமான நிலமையிலும் மரக்குற்றியில் நின்றவாறு நித்திரையாகிவிடுவான். அந்த நித்திரை சிம்மானைத் தவிர யாராலுமே
இயலாதது.அவனது அதிசயமாக நிலையும் நித்திரையும் காணுகிற யாவரும் சிரிப்பார்கள்.
மாதவன் மாஸ்ரரை தனது குறும்புகளாலும் நின்றபடியான நித்திரையாலும் சினப்படுத்தியிருக்கிறான். எத்தனை தண்டனை கொடுத்தாலும் அத்தனையையும் சாதாரணமாக செய்து முடித்துவிட்டு மாஸ்ரர் முன்னால் சாதாரணமாகவே இருப்பான்.
இனி கொடுப்பதற்கு தண்டனையே இல்லையென்ற நிலமையில் மாதவன் மாஸ்ரர் சொல்லுவார்….! மச்சான் சிம்மான் அம்மாவாணை இனி ஏலாது சொல்லீட்டு போமச்சான்….! என்பார். ஆனால் இவனோ அதனையும் சிரித்துக் கொண்டு ரசித்தான். ஆனால் கடினமான பயிற்சியை விட்டு விலகிப் போகவில்லை. பயிற்சியின் கடுமையைத் தாங்க முடியாமல் மன்னாரைச் சேர்ந்த பஸ்தியான் என்ற போராளி ஒருவர் சயனைட் கடித்து பின்னர் மருத்துவப் போராளிகளால் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைத்திருந்தான். அப்படியிருந்தும் சிம்மான் போன்ற இன்று மாவீரர்களான பல போராளிகள் உறுதியுடன் தங்கள் பயிற்சியை முடித்ததும் கடமைகளை முடித்ததும் வரலாற்றில் மறக்க முடியாதது.
எமது புலனாய்வுப் பயிற்சியின் தொடர்ச்சி பலமாதங்களைக் கடந்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்புப்படைகளும் தேசவிரோதிகளும் எமது மண்ணைவிட்டு வெளியேறத் தொடங்கினார்கள். இவ்வேளையில் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்த வண்ணமிருந்தது. எங்கள் அணிகளையும் தாக்குதலுக்குத் தயாராகும்படி தலைவர் அவர்களிடமிருந்து கட்டளை வந்தது. இதற்காக கிறேசி அவர்கள் சிறப்புப் பயிற்சியை ஆரம்பித்தார். எமது துறைப்போராளிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர்.
ஒன்று கிளிநொச்சி பகுதியிலிருந்து வெளியேறிக் கொண்டியிருந்த ஈஎன்டிஎல்எவ் மீது மறிப்புத் தாக்குதல் அடுத்தது வவுனியா பகுதியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த ஈபிஆர்எல்எவ் புளட் மீது வழிமறிப்புத் தாக்குதல். இதில் நெளுக்குளம் பகுதியில் நடந்த மறிப்புச் சமரில் சிம்மானும் கலந்து கொண்டான்.
இது வெற்றிகரமான தாக்குதலாக முடிந்திருந்த போதும் சமநேரத்தில் வவுனியா செட்டிகுளத்தில் உள்ள முசல்குத்தி பகுதியில் நிலைகொண்டிருந்த புளொட் மாணிக்கதாசனின் முகாம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இத்தாக்குதல் தோல்வியில் முடிந்திருந்தது. இதனால் முசல்குத்தி புளட் முகாம் மீது பெரியளவிலான தாக்குதலை மேற்கொள்ள பல தளபதிகளும் பங்கேற்றனர் நடந்த சண்டையில் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது. மாணிக்கதாசன் தப்பி சென்றிருந்தார்;. இவ்வெற்றிகரத் தாக்குலில் சிம்மானும் கலந்து கொண்டான்.
இத்தாக்குதல் முடிவுற எமக்கான புலனாய்வுப் பணி காத்திருந்தது. இவ்வேளையில் மாத்தையா அவர்களிடமிருந்து புலானய்வுத்துறையின் பொறுப்பை பொட்டு அம்மான் பொறுப்பேற்கிறார். இவரே சிம்மானை இறுதிக்காலம் வரையும் வழிநடத்தினார். பொட்டு அம்மான் பொறுப்பேற்ற பின்பு மாதவன் மாஸ்ரர் வவுனியா
நெழுக்குளத்திலும் சலீம் அவர்கள் துணுக்காயிலும் மாதகல் லெப்.கேணல் ராஜண்ணா லெப்.கேணல் சூட்டண்ணனுடனும் யாழ்ப்பாணத்திலும் லெப்.கேணல்.மல்லியண்ணன் கிளிநொச்சியிலும் புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சிம்மான் வவுனியா நெளுக்குளத்தில் மாதவன் மாஸ்ரருடன் விசாரணைப்பணியில் ஈடுபட்டிருந்தான். அப்பணி முடிந்த கையோடு யாழ்ப்பாணத்தில் லெப்.கேணல்.பொஸ்கோ அண்ணனுடன் விடப்பட்டான். அவரோடு சிம்மான் தகவல் சேகரிப்பிலும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டான். அப்போது தர்சன் என்ற பெயரிலும் புலனாய்வுப் பணியில் செயற்பட்டான்.
கோப்பாய் பகுதியில் இருந்து புலனாய்வில் செயற்பட்ட சிம்மான் அங்கு நின்ற போது அவன் அனைத்து வாகனங்களையும் செலுத்த இலகுவாகக் கற்றிருந்தான்.
இவ்வேளையில் பொறுப்பாளரின் அனுமதியின்றி வாகனத்தை ஓடி ஒரு விபத்தில் மாட்டியிருந்தான். இது பொறுப்பாளருக்குத் தெரியவர யாழ் கோட்டைப் பகுதியில் தண்டனைக்காக விடப்பட்டியிருந்தான். தண்டனைக்காலம் முடியும் போதே நான் வெளியகவேலை ஒன்றிலிருந்து மீண்டும் வந்திருந்தேன்.அன்றிலிருந்து என்னுடன் மீண்டும் நட்பினை வளர்த்தவன் வீரச்சாவு அடையும் வரை பிரியாத நண்பனாகவே இருந்தான்.
அவ்வேளை நான் வடமராட்சி புலனாய்வுத்துறைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தேன். இதன் போது இருவரும் குடும்ப உறவு போல அவன் மூலம் அவனது குடும்பத்தினருடன் பழகச் சந்தர்ப்பம் கிடைத்தது.
நானும் அவனும் சில நாட்களில் சண்டை பிடித்து பலமாதங்கள் கதைக்காமலே இருந்த நினைவுகளையும் மீட்டுக் கொண்டான். இருவரும் சிறு சிறு சண்டைகள் பிடித்தாலும் அவன் தானாகவே வந்து என்னுடன் கதைப்பான். இப்படி அவனிடம் குழந்தைத்தனமும் அதேநேரம் அன்பாகவும் என்னுடன் பழகிய காலங்கள் நினைவுக்குள் இன்னும் பச்சையம் மாறாமல் இருக்கிறது….!
சிம்மான் சிறந்த நண்பனாக இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் தோழனாக என்னோடு உறவாகினான். இவ்வேளையில் சிறுவயதில் வழமையாக எல்லோருக்கும் வருவது போல ஒரு காதல் அவனுக்கும் வந்தியிருந்தது.
அவனுடன் ஒன்றாகப் படித்த பெண்ணை அவன் நேசிக்கத் தொடங்கினான். காதல் அவனை மிகவும் நேசிக்க வைத்தது. தனது காதலியைச் சந்திக்க போகும் போதெல்லாம் என்னையும் அழைத்துக் கொண்டே போவான். நானும் அவன் எண்ணம் நிறைவேறி குடும்பமாகி வாழ்வான் என்றே நினைத்திருந்தேன். போராளிகளின் வாழ்க்கை அனைத்தையும் கடந்தது என்பதனை அவனது வீர மரணம் வரை நான் உணரவேயில்லை.
பொஸ்கோ அண்ணன் நிருவாகத்திலிருந்து ராயு அண்ணனின் கண்காணிப்புப் பிரிவு நிருவாகத்தில் செயற்பட்டு வந்தான். அம்முகாமுக்கும் அவனே பொறுப்பாகவும் இருந்தான். எந்த வேளையிலும் இவன் பாடசாலை மாணவன் போன்றே தோற்றம் தருவான். ஒரு புலனாய்வாளனுக்குரிய மாற்றங்கள் இலகுத் தன்மை யாவையும் சிம்மான் பெற்றிருந்தான். காலத்திற்கும் கடமைக்கும் ஏற்ப அவன் தன்னை மாற்றியமைத்துத் தனது கடமையில் சிறந்தவனாகவே இருந்தான்.
அவன் எப்போதும் தன்னோடு வைத்திருக்கும் பாக்கர் பேனையும், கொப்பியும் லுமாலா சயிக்கிளும் இன்னும் என் நினைவோடிருக்கிறது. இவனது குறும்புகளால் நான் மாதவன் மாஸ்ரரிடம் பலமுறை தண்டனை பெற்றிருக்கிறேன். மாஸ்ரருக்கு தெரியாமல் என்னை வெளியில் கூட்டிப்போகவே பிரயத்தனப்படுவான்.
மாஸ்ரருக்கு தெரியும் அங்கே அவன் வந்தால் என்னைக் கூட்டிப்போவானென்று. இதனை உணர்ந்த மாஸ்ரர் அடிக்கடி கேட்பார். என்ன ஆளைக்கூட்டிக் கொண்டு போகப்போறிங்களே மச்சான் பகிடியாய் கேட்பார். சிம்மானுடன் கிடைக்கும் நேரமெல்லாம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவனது உறவினர்களின் வீடுகளிற்கெல்லாம் சென்று வருவோம்.
இப்படியே நாட்கள் போக இயக்கத்தின் வளர்ச்சியும் செயற்பாடுகளும் வளர்ச்சி காண இவனுக்கும் பொறுப்புகள் வரத் தொடங்கியது. இந்தக் காலத்தில் திருநெல்வேலி பல்கலைக்கழகத்துக்கு பின்பாக அமைந்திருந்த இரகசிய முகாமுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான். இம்முகாமில் தான் மாத்தையா அவர்கள் விசாரணை எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வேளையில் மாத்தையாவிற்கான சகல தேவைகளையும் இவனே கவனித்தான். பத்திரிகைகள், தொடக்கம் யாவையும் கொடுத்துக் கவனித்தான்.
இக்காலப்பகுதியில் பூனகரி முகாம் தகர்ப்புக்கான ஆயுத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. தாக்குதலை வழிநடத்த வேண்டிய பொறுப்பு தளபதி பால்ராஜ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த போதும் அவர் யாழ்தேவி சண்டையில் காயமடைந்திருந்ததால் பொட்டு அம்மான் அவர்கள் தாக்குதல் ஒருங்கிணைப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இச்சண்டைக்காக அனைவரும் தயார்படுத்தப்பட்டு பயிற்சிகள் ஆரம்பமாகின. இதன் போது மல்லியண்ணனும் சூட்டண்ணனும் புலானய்வுத்துறைப் போராளிகளுக்கான தளபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
இச்சந்தர்ப்பத்தில் நான் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கு புலனாய்வுப் பொறுப்பாளராக பொறுப்பேற்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். இதற்கான போராளிகள் தெரிவுகளைச் செய்யும்படி தலைவரும் பொட்டுஅம்மானும் கேட்டுக் கொண்டனர்.
இதில் யாழ் மாவட்டப் புலனாய்வுப் போராளிகள் மட்டக்களப்பிற்கு வர ஆளுக்கு ஆள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதனையறிந்த சிம்மான் என்னை இரவு பகலாக உன்னுடன் கூட்டிப்போய்விடு மச்சான் என கேட்டுக் கொண்டேயிருந்தான்.
நானும் அவனை அம்மானுடன் கதைத்து அழைத்துப் போவதென்றே சொல்லியிருந்தேன். இதற்காக ஒருமுறை அம்மானுடன் கதைத்து பேச்சு வாங்கி பிறகு ஒரு வகையாக அம்மானை சமாளித்து அவனை என்னோடு கூட்டிப்போக அனுமதியும் பெற்றேன்.
அம்மானுக்கு சிறு தயக்கம் இருந்து கொண்டேயிருந்தது. காரணம் சிம்மானின் குழப்படிகளை அறிந்திருந்தார்.
ஒருமுறை நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வொன்று :-
ஒருமுறை அவனது தந்தையின் சகோதரர் அவுஸ்ரேலியாவில் இருந்து ஊரில் வந்து நின்றார். அப்போது சிம்மானும் விடுமுறையில் போயிருந்தான். அப்போது அந்தச் சித்தப்பா கொண்டு வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு உடுப்பிட்டியில் நின்ற என்னிடம் வந்திருந்தான். வா மச்சான் வீட்டை போய் வருவோமென அடம்பிடித்தான்.
இருவரும் போவதை அறிந்தால் அம்மான் கோபப்படுவார் என நான் மறுக்க இவனோ பறாவயில்லை இருவரும் சேர்ந்து தண்டனையைச் செய்வோமெனச் சொன்னான். இன்று நீ வராது விட்டால் உன்னுடன் இனிமேல் ஒருபோதும் கதைக்கமாட்டேன் என்றான். அவனது அன்புக்கு முன்னால் தண்டனையொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஒருவாறு என்னை சமாளித்து மோட்டார் சயிக்கிளில் ஏற்றிக் கொண்டு தாளையடி நோக்கி புறப்பட்டான்.
இவன் வளமையில் வேகமாகவே வாகனத்தைச் செலுத்துவான். அன்றும் நான் பின்னாலிருக்க அவன் வேகமாகவே மோட்டார் சைக்கிளை ஓடினான். உடுப்பிட்டியிலிருந்து நெல்லியடி நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் போது கடற்புலிகளின் முகாமைத் தாண்டி வரும் வீதி வளைவில் வந்த ஒரு பெண்ணோடு மோதி மூவரும் துக்கி எறியப்பட்டோம்.
அதே சமயம் அவ்வழியால் வந்த கடற்புலி போராளிகளால் மீட்கப்பட்டு மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தோம். இச்சம்பவத்தால் அம்மான் என்னுடன் கோபத்திலிருந்தார். இந்த நிகழ்வை அவ்வேளையில் அம்மான் நினைத்திருக்கக் கூடும்.
இவ்வேளையில் றொபேட்டிடம் இருந்த யாழ்மாவட்ட புலனாய்வுப் பொறுப்பு பூனகரி முகாம்தாக்குதல் முடியும் வரை என்னிடம் தரப்பட்டு யாழ்மாவட்ட புலனாய்வுப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தேன்.
அம்மான் பூனகரி முகாம் தாக்குதல் ஒருங்கமைப்புக்குத் தயாராகியிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் புலனாய்வுத்துறை வெளிவேலை செய்யும் போராளிகளும் தாக்குதலின் தேவை கருதி தாக்குதல் அணிக்காக பெயர்கள் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
நான் நினைத்துக்கூட பார்க்காத அந்தப்பெயர் அப்பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த நான் மட்டக்களப்புக்குக் கூட்டிப்போவதாக இருந்த சிம்மானின் பெயர். நான் அவனுக்காக வேலைகளை மனதில் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது அவனை இவ்வாறு உடன் சண்டையணியில் இணைத்தது கவலையைத் தந்தது. இதுவிடயம் பற்றி அவனும் அறிந்திருந்தான். அவன் என்னிடம் வந்த போது இதுபற்றி சொன்னான்.
மட்டக்களப்பு வந்தும் சண்டைபிடிக்கத்தானே போறன்…இந்தச் சண்டைக்கு நான் போய் வந்தால் அனுபவமாகவே இருக்கும் உனக்கும் உதவியாயிருக்கும் என்றவன். ஆனால் நீ என்னை மட்டக்களப்புக்கு விட்டுவிட்டு போகாமல் இருந்தால் சரியென்றான்.
இருந்தும் நான் றொபேட்டுன் கதைப்பதாக அவனிடம் சொல்லிவிட்டு அம்மானை சந்திக்க முயற்சித்து முடியாது போக றொபேட்டிடம் கேட்டேன். அவனை நான் கூட்டிப்போக உள்ள வேளையில் கட்டாயம் சண்டைக்கு வர வேணுமா
எனக்கேட்டேன். றொபேட் சண்டையின் கடுமை பற்றியும் ஆட்கள் பற்றாக்குறை பற்றியும் விளக்கியதால் நானும் வேறு வழியில்லாமல் திரும்பிவிட்டேன்.
சண்டைக்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டு அணியணியாக போராளிகள் பிரிக்கபட்டார்கள். அப்போது எனது ஓய்வு நேரங்களில் இவன் என்னிடம் வந்துவிடுவான். கிடைத்த அந்த ஓய்வுகளில் தனது குடும்பம் , காதல் போராட்டப் பணிகள் பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டான். தேசத்தின் விடுதலையைத் தேடிய கால்களின் வேகம் பூனகரியின் வெற்றியின் நாதமாக….! அணிகள் தயாராகின….!
பூனகரி முகாம் தகர்ப்புப் பயிற்சிக்காக பிரியும் நேரம் வந்தது. அந்த நாள் வந்த போது இது நிரந்தர பிரிவென்று நான் நினைக்கவேயில்லை. மாறாக திரும்பி வருவானென்றே நினைத்திருந்தேன். போருக்குப் போகும் போது ஒருவித கலக்கத்துடனேயே பார்த்தான். என்றுமில்லாத அவனது கலக்கம் அவன் என்ன நினைக்கிறான் என்பதை என்னால் ஊகிக்க முடியாதிருந்தது.
சண்டைக்கான பயிற்சி தொண்டமானாறு , அச்சுவேலி பகுதிகளில் நடந்து கொண்டிருந்தது. அப்பயிற்சி முகாமுக்கு மல்லியண்ணன் யாரையும் அனுமதிப்பதில்லை. ஆனால் நான் அவனைத் தேடிப்போனேன். அவனைச் சந்திக்க வேண்டும் நிறையப் பேசவேண்டுமென அவனருகில் போனாலும் அவனது முகத்தைப் பார்த்த போது எல்லாம் மறந்துவிடும்
பயிற்சி நடந்து கொண்டிருக்கும் போது முகம் வாடியிருந்தது. மனசுக்குள் அவன் சொல்வதற்காய் பலவற்றைப் புதைத்து வைத்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அவனிடம் ஆற அமர எதையும் கேட்டறியும் நிலமையில் நிலமை இருக்கவில்லை. அப்போது பயிற்சியின் போது அவனுடன் பயிற்சியில் ஈடுபட்ட சக போராளிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தந்தான். தங்கைமார் அம்மா உறவினர்கள் காதலியென விசாரித்துவிட்டு அனைவரையும் சுகம் விசாரித்தாய் சொல்லு மச்சான் எனச்சொன்னான். அத்துடன் ஒரு கடிதத்தையும் தந்தான். அத்துடன் பாக்கர் பேiனையையும் தந்தான். அவன் பழகிய ஒரு வீடு அது யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் இருந்தது. அவர்களின் வீட்டில் அவனுடன் நட்பினை வளர்த்திருந்த ஒரு பிள்ளை அவன் தூரம் போவதைத் தெரிந்து போகும் போது பாக்கர் பேனையொன்று கேட்டுள்ளது. அதையும் தந்து கடிதம் ஒன்றையும் தந்திருந்தான்.
அந்தக் கடிதம்:-
தனக்குச் சாவு வரும் என்பதைத் தெரிந்து கொண்டு ஒரு போராளி போருக்குப் போவது எப்படியான உள்ளுணர்வை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாயிருக்கும். தான் சாகும் தருணத்திலும் தங்களை நேசித்தவர்களுக்காக எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்ற அவனது தியாகத்தினையே நான் கண்டு கொண்டேன்.
அத்தோடு இத்தாக்குதலில் தான் மரணித்தால் தனது காதலிக்கு தனது வித்துடலைக் காட்டுமாறும் பூமாலை ஒன்றைக் கொடுத்து எனக்கு அணிவித்து விடு எனவும் வேண்டிக் கொண்டான்.
இதனை நானோ வழமையான கதையாகவே நினைத்தேன். இவன் என்னுடன் மட்டக்களப்பு வருவான் என்ற திடமான நம்பிக்கையுடனே இருந்த என்னால் அவனது மரணத்தை நினைக்கவே தெரியாது போயிருந்தது.
இரும்பாயிருக்கும் போராளிகளின் மனவுறுதியின் அடியிலும் ஈரமான நினைவுகளும் சின்னச் சின்ன ஆசைகளும் இருப்பதை யாராலும் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
பூனகரித் தளம் தேடிய புலிகளணி இறுதிப் பிரிவு நாளது. அன்றைய நாள் அவனுடன் கதைத்து பம்பல் அடித்து விட்டுப் போராளிகளிடம் விடைபெறும் நேரம் அவனுக்குச் சொன்னேன். தாக்குதல் வெல்லும் நீ திரும்பி வருவாய் நீ வந்த பிறகு மட்டக்களப்பு போவோம் என்றேன்.
11.11.1993 அன்று இருளொடு இருளாக பூனகரி தவளைப்பாய்ச்சல் தாக்குதலுக்காக அணிகள் தயாரானது. (தவளை நடவடிக்கை நீரிலும் நிலத்திலும்…) நீரிலும் நிலத்திலும் எதிரியுடன் சமராட புலிகளணி தாக்குதலுக்குத் தயாராக இருந்தார்கள். அப்போது நானும் அவ்விடத்துpற்கு செல்ல அவர்கள் பூனகரி உப்புத்தணீருக்குள் இறங்கத் தயாராகி தாக்குதலணிப் போராளிகள் நின்றார்கள்.
உப்பு நீரில் கால்நனைத்து உறுதியுடன் விடை தந்து வெற்றி பெற்று வர எங்கள் வீரர்கள் தயாரானார்கள். கரிய இருட் திரையைக் கரைத்தபடி புலிவீரர் அணியணியாய் தயாராகி உப்பு நீரில் நடந்தார்கள்.
அந்த ஈரக்காற்று மேனிதடவி ஒவ்வொரு வீரனையும் வழியனுப்பிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவராய் விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள். மனசின் அடியில் அவர்களில் யாரை இழந்து விடப்போகிறோம் என்ற ஏக்கம் தானாகவே வந்துவிட சிரித்துக் கொண்டு போகிற அவர்களுக்காக சிரித்து விடைகொடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது மச்சான் என்று கையைப்பிடித்த சிம்மான். மச்சான் நான் திரும்புவனோ தெரியாதெனச் சிரிப்புடன் பகிடி போன்று சொன்னான் சிம்மான்….நீ யோசிக்காதை நீ திரும்ப வருவாய் எனக்கூறியதும் அப்போது அவனது கையில் கட்டியிருந்த கோவில் நூலொன்றைக் கழற்றி எனது கையில் கட்டிவிட்டான்.
அவனைப் பிரியப் பிரியப்படாத எனக்கு நம்பிக்கை தருபவனாய்…., இந்தச் சிங்கள இராணுவத்தினர் இந்த முகாமிலிருந்து வெளியேற வேண்டும். நாங்கள் இச்சண்டையில் வெல்வோம் நான் திரும்பி வருவேன் வந்ததும் உன்னுடன் மட்டக்களப்பு வருவேன் யோசிக்காதையென கடைசியாக எனக்கு தைரியம் சொல்லிவிட்டு உப்புத்தண்ணீரில் இறங்கினான்.
தண்ணீரில் நடந்து கொண்டிருந்த போராளிகளோடு அவனும் நடக்கத் தொடங்கினான். அவன் மறையும் வரையும் கரையில் நின்ற நான் அவன் உருவம் மறைந்ததும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். என் கண்களில் உப்பு நீர் உவர்த்தது. சிம்மானும் அச்சமருக்கு போய்க்கொண்டிருந்தவர்களையும் சுற்றியே மனசு அலைந்து கொண்டிருக்க திரும்பிக் கொண்டிருந்தேன்.
சண்டை தொடங்கியது. கடும் வெடியோசைகளுடன் காதைப் பிளக்கும் அளவுக்கு தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சண்டையின் நிலவரத்தைப் பற்றிய நிலமையைக் கட்டளை மையத்திலிருந்து வரும் வோக்கி அலை வரிசைகளை மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருந்தேன்
வீரச்சாவுகளும் காயங்களும் வெற்றிச் செய்தி அறிவிப்புக்களும் வந்து கொண்டிருந்தது. சிம்மானின் நினைவும் எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வீரச்சாவும், காயமென வரும் அறிவிப்பும் மனசை ஆயிரம் கத்திகள் கொண்டு அறுக்கும் வலியைத் தந்து கொண்டிருந்தது. அடுத்த பெயர் எனது நண்பனாக இருக்கக் கூடாதென்ற எண்ணமே வலுத்திருந்தது.
லெப். கேணல்.சூட் அவர்களின் பெயரை வோக்கி ரோக்கி கதைகளை வைத்து வீரச்சாவு என்பதை அறிந்து கொண்டதும் எனது இதயத்தில் பேரிடியைத் தந்தமாதிரி உணர்ந்தேன். நான் நேசித்த எனக்கு மிகவும் பிடித்த தளபதிகளுள் தளபதி சூட் அண்ணனும் ஒருவர். எனக்கும் சூட்டண்ணன் அவர்களுக்கும் இருந்த தனித்த நட்பு மிகவும் வித்தியாசமான அனுபவம். அந்த நேரம் சூட் அவர்களின் இழப்பானது எமது துறைக்கும் விடுதலைப்புலிகள் ஒட்டுமொத்த அமைப்புக்கும் பேரிழப்பாக இருந்தது. இப்படியாகப் பலநூறு போராளிகள் காயம் வீரச்சாவு அறிவிப்புகளும் வந்து கொண்டிருந்தது.
தொடர் அறிவிப்புக்கள் மனசை அமைதியாக இருக்க முடியாதபடி அலைக்கழிந்தது. சிம்மான் பற்றி மல்லியண்ணனைத் தொடர்பு கொண்டு கேட்க வேண்டும் போலிருந்தது. அதே நேரம் தளபதி பால்ராஜ் அவர்களுக்கு பாதுகாப்புக்காகவும் நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது தளபதி பால்ராஜ் அவர்களும் , காயமடைந்த போராளிகளும் யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். மருத்துமவனை என்று பார்க்காமல் சுப்பர் சொனிக் விமானங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. இப்படியான நிலமைகள் இருந்தும் வீதியோர தாக்குதலினையும் பொருட்படுத்தாமல் பூனகரிக்குச் சென்றேன்.
அங்கு வழங்கல் பகுதிக்கு சென்ற போது என்னால் நம்பவே முடியாத அந்தத் துயர் வந்தது. எனது நண்பன் சிம்மானின் வீரச்சாவுச் செய்தியே என்னை வந்தடைந்தது. நம்ப முடியாத அந்தச் செய்தியை உறுதிப்படுத்த மீண்டும் தொடர்பெடுத்து கேட்டேன்.
முதலில் காயம் என்றார்கள் , பின்னர் வீரச்சாவென்றார்கள். எனது துறை சார்ந்த நண்பர்களான மஞ்சு , சிம்மான் என புலனாய்வுத்துறை சார்ந்த போராளிகளின் சாவுச்செய்திகள் கிடைத்த வண்ணமிருந்தது.
அந்தச் செய்தியோடு உடைந்து போனேன். ஒருகணம் எல்லா நம்பிக்கைகளும் போனது போன்ற பிரமையில் வெளியேறினேன். போன வழியெல்லாம் சிம்மானினதும் ஏனைய போராளி நண்பர்களினதும் நினைவுதான் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த விமானத்தாக்குதலையும் பொருட்படுத்தாது யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தேன். எனது சிந்தனை முழுவதும் சிம்மானின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதே எண்ணமாக இருந்தது.
தான் இறந்தால் தனது காதலி தனக்கு மாலையணிவிக்க வேண்டுமென்ற அவனது ஆசையை நிறைவேற்ற அவனது காதலியைத் தேடிப்போனேன். அவனது வீரச்சாவுச் செய்தியை சொன்னதும் அவனது காதலி அழுத அழுகை இன்றும் கண்ணுக்குள் நிற்கிறது.
ஒவ்வொரு மாவீரனையும் இழக்கும் எல்லாக் காதலிகளின் கண்ணீருக்கும் ஒரே கனம்தான் இருக்குமோ ? அந்தச் சமரில் மரணித்தவர்களின் காதலிகள் பெற்றோர்கள் நண்பர்கள் உறவினர்கள் கண்ணீரில் தொலைய அவர்களது வித்துடல்கள் வெற்றிகளைத் தந்துவிட்டு நிரந்தரமாய் பூனகரி மண்ணை மீட்ட நிமிர்வில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
சிம்மானின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவனது வீரச்சாவுச்செய்தி அவர்களுக்கும் போயிருந்தது. எனினும் நான் போகும் போது வித்துடல் கொண்டு வரப்படவில்லை. அன்றைய மாலைப்பொழுதில் வித்துடல் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. யாராலும் நம்ப முடியாதபடி வரிச்சீருடையில் வளர்த்தப்பட்டிருந்த சிம்மானின் வித்துடல் அடையாளம் காணமுடியாதளவு உருமாறியிருந்தது. அப்போது அவனது உறவினர் சகோதரிகள் தாயார் ஊரவர்கள் கதறி அழுதார்கள்.
அவன் வித்துடலாய் கண் முன்னே கிடந்தான். அது சிம்மான் தான்; என்பதனை யாரும் உடன் அடையாளம் காணவில்லை. உப்பு நீரில் கிடந்த அவனது உடல் நிறமும் மாறி முகமும் மாறியிருந்தது.
தம்பி உன்ர நண்பன் தானே அடையாளம் தெரியேல்ல ஒருக்கா பார் ! என அழுதார்கள். ஏற்கனவே அவனும் நானும் ஒன்றாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட காயத்தின் அடையாளமும் அவனை என்னால் இனங்காண முடிந்தது.
அன்றைய நாள் அவனது பிரிவினால் அவனை நேசித்தவர்கள் அவன்கூடப் பழிகியவர்கள் என அவனுக்காகக் கண்ணீர் விட்டழுது கொண்டிருந்தார்கள். அவனது வீட்டிலிருந்து வித்துடலை மக்கள் அஞ்சலிக்காக வல்வெட்டித்துறை வாசிகசாலையில் இரவு வைக்கப்பட்டது.
அந்த இடத்திற்கே அவனது காதலியைத் தெரிந்த ஒரு வீட்டுகாரர் அழைத்து வந்திருந்தார்கள். அந்த நேரம் அவன் நேசித்த அவனது உயிர்க்காதலி உயிரற்ற அவன் உடலைக் காணும் போதும் அந்த மாலையை அழுதபடி அவனுக்கு அணிவித்த போதும் நான் கொண்ட துயருக்கு அழவேயில்லை. காதலின் மீதம் அவனுக்கான ஞாபகமாக அவனது கடைசி ஆசையாக அவளால் அணிவிக்கப்பட்ட மாலையின் பூவாசம் மட்டுமே நிரந்தரமானது. அவன் நித்தியமானவனாக வெற்றியுடன் துயின்று கொண்டிருந்தான்.
இப்போதும் அந்த நாள் அழுத அந்தக் குரல்கள்கள் தான் ஒவ்வொரு இரவுகளும் வந்து போகும் நினைவுகளாகவுள்ளது. யாராலும் திரும்பி அழைத்துவர முடியாதவர்களின் இழப்புகளின் நினைவுகள் நிரந்தரமான துயரையே ஒவ்வொரு மாவீரரை இழந்தவர்களுக்கும் தந்துவிட்டுப் போனது. அந்த இழப்பின் வரிசையில் சிம்மான் இழக்காத மனவுறுதியோடு எங்களின் கைகளிலிருந்து எட்டாமல் போனான் மாவீரனாக மரணத்தை வென்றவனாக…..
அவனை விதை குழியில் இறக்கி மண்போட்ட அவ்வேளையில் பலாலியில் நிலைகொண்டிருந்த எதிரியின் தளம் மீது கரும்புலிகள் தாக்குதல் அணி காவியமாகிக் கொண்டிருந்தார்கள். வெளிச்சங்களோடு வெடியோசையுடன் அதிர்ந்த வண்ணமிருந்தது.
பூனகரி வெற்றியில் மீண்டும் நிமிர்ந்த தமிழர் வீரத்தின் உச்சம் பலாலியில் பேரொளியாய் கரும்புலிகள் எழுதிய காவியத்தின் வேர்கள் காற்றோடு சொன்ன சேதி காலமெல்லாம் தமிழர் வீரம் சொல்லிக் கரைந்து கொண்டிருந்தது.
சிம்மான் தனது தாயகவிடுதலைக்காகத் தன்னைத் அர்ப்பணித்து ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும் அவனது கனவுகளை நெஞ்சில் சுமக்கின்றோம். இலட்சிய வீரர்கள் என்றும் வாழ்வார்கள். சிம்மானும் சுடரொளியாக ஜெகதீபமாக என்றும் கால காலத்துக்கும் ஏனைய தாயக விடுதலைக்காக தம் இன்னுரையீர்ந்தவர்களுடன் இறவாமல் வாழ்ந்து கொண்டேயிருப்பான். எங்கள் நினைவோடும் கனவோடும் மாவீரர்களாய் குனிந்த தலைகளை நிமிர்த்தியெழ வைத்த வெற்றியின் கிரீடங்களாய்….
நினைவுப்பகிர்வு:- நிக்சன்.
மின்னஞ்சல் முகவரி:- 2012.tamil@gmail.com
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”