மாவீரர்கள் நாதன் கஜன் நினைவு சுமந்து………….
“நாதன் எனும் நாமம்” நாளும் புவி வாழும்….. “கஜனின் திருநாமம்” தரணி தினம் கூறும்….
உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்…
லெப். கேணல் நாதன் எமது விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினருள் ஒருவராவார் நேர்மையும் கண்ணியமும் மிக்க இவர் விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர் நீண்ட காலமாக அனைத்துலக நிதி திரட்டும் பொறுப்பை சுமந்து உலகமெங்கும் உழைத்தார்.
சிங்கள பேரினவாத ஆட்சியாளரின் சூட்சியால் அரச பயங்கரவாத அரூப கரங்களின் செயலால் பாரீஸ் ஈழமுரசுப் பத்திரிகை ஆசிரியரும் முற்போக்கு சிந்தனையாளனும் புரட்சிகர கொள்கைவகுப்பாளனுமாகிய கப்டன் கயனும் வீர மரணத்தை தழுவிக்கொண்டனர்.
உன்னத இலட்சியத்துக்காக எமது ஆருயிர் நண்பர்களான லெப்டினன் கேணல் நாதனும் கப்டன் கயனும் எம்மை விட்டுப் பிரிந்து 16 ஆண்டுகள் ஓடிக்கழிந்து விட்டது. எமது விடுதலை நோக்கிய பயணம் ஒப்பற்ற தியாகங்களினூடாக பல வடுக்களைச் சுமந்த படி தொடர்ந்து பயணிக்கிறது.
எமது இலட்சியத்தை நோக்கிய விடுதலை பயணத்துக்கு சர்வதேச ரீதியாக ஆதரவு திரட்டும் முயற்ச்சிக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்த சிங்கள அரசினாலும் சில ஏகாதிபத்திய சக்திகளினாலும் கைக்கூலிகளினாலும் திட்ட மிடப்பட்ட தமிழின தேசிய அடையாளச்சிதைப்பின் எதிர்ப்பை முறியடிப்பதில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வைராக்கியத்துடன் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகளை முறியடிப்பதை விட தமிழீழ மக்களின் ஆத்ம பலத்தை முறியடிப்பதிலேயே சிங்கள மற்றும் அதற்க்கு துணைபுரியும் சக்திகளும் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன. உண்மையில் விடுதலைப் போராட்டத்தின் வெற்றி மக்களின் ஆத்ம பலத்தில் தான் தங்கியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் வதைபட்டுக்கிடக்கும் சிறைப்பட்ட அகதி முகாம் வாழ்வுக்கு மத்தியிலும் விடுதலைப்போராட்டம் உலக ஒழுங்குக்கு ஏற்றவாறு அரசியல் வடிவம் எடுத்திருப்பது தமிழ் மக்களின் ஆத்ம பலத்தினால் தான் என்பதை சர்வதேச சமுதாயம் உணரத்தொடங்கியுள்ளது.
புதியதோர் உலகம் செய்யப்புறப்பட்டு நிற்க்கும் இளம்தலைமுறைதான் இன்று எமது ஆத்மபலம் அந்த மாபெரும் சக்திதான் எமது இலட்சியத்தின் நம்பிக்கை. இந்த ஆத்ம பலம் எமது விடுதலைத்தீயை அணையாது பாதுகாத்து எமது அரசியல் இலட்சியமான சுதந்திர தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க ஆதாரமாய் அமையும் இதுவே நாதனும் கஜனும் எமக்கு இந்த புலம்புயர் மண்ணில் விட்டுச்சென்ற புனிதமான பணியாகும் அவர்களினதும் தாயகக்கனவுடன் மாண்ட அனைவரினதும் இலட்ச்சியத்தை ஈடேற்றி வைப்பதே எமது கடமை என்பதை நெஞ்சில் நிறுத்தி தாயக விடுதலையை வென்றெடுப்போம்.
எனவே அந்த இலட்ச்சிய வீரர்கள் நினைவுநாளில் அவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.
தாயில் கருவாகி தமிழில் உருவாகி தலைவன் வழிநின்ற தம்பியர்கள் இவர்கள். ஈழத்திருநாட்டை எங்கள் வசமாக்க பாரிஸ் தெருவெல்லாம் பரந்து திரிந்த புலிவீரர். நிதியின் பலமாகி நேர்மை வடிவாகி வளர்ந்த குரலொன்றை இழந்து தவிக்கின்றோம். எங்கள் நிலை கூறி இந்த உலகை உருவாக்க எழுந்த கரம் ஒன்றை இழந்து விழிக்கின்றோம். நெஞ்சம் கனலாக கண்கள் குளமாக நின்று தவிக்கின்றோம். நாதன் எனும் நாமம் நாளும் புவி வாழும் கயனின் திருநாமம் தரணி தினம் கூறும்.
உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை என்ற தேசியத்தலைவரின் இலட்சிய வாய்மொழி நாதன் கஜனின் உழைப்புக்கும் ஓர் மகுடமாகும்
உனைமறக்குமா என்மனம்……
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”