ஒரு விடுதலை இயக்கத்தின் போராட்ட நோக்கத்தை மக்களுக்கு உணர்த்தவும் இயக்கத்திற்கும் மக்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தவும் ஊடகங்கள் இன்றியமையாதவை என தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கருதினார்.
1986 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டில் “நிதர்சனம் என்ற பெயரில் தொலைகாட்சி ஒளிபரப்புத் தொடங்கப்பட்டது. 1988- இல் “புலிகளின் குரல்”என்ற பெயரில் செய்தி மடல் வெளியிடப்பட்டது.
1990 நவம்பர் 21 ஆம் நாள் முதல் புலிகளின் குரல் – பண்பலை வானொலி ஒலிபரப்பு தொடங்க பட்டது.
தாயக மக்களின் உண்மைக் குரலாகவும் , தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணக் குரலாகவும் புலிகளின் குரல் வானொலி தமிழீழ பரப்பு முழுவதும் தன் ஒலி வீச்சு எல்லையை விரிவுபடுத்தியது.
தமிழீழ மக்கள் எதிர் கொண்ட அத்தனை இடப்பெயர்வுகளையும் தாங்கிய புலிகளின் குரல் மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்து, மக்களுக்கு தொடர்ந்து தான் சேவையை வழங்கிக்கொண்டு இருந்தது .
சிங்கள பேரினவாத அரசின் வான் குண்டு வீச்சுக்களாலும், எறிகணைத் தாக்குதல்களாலும் ஒலிபரப்பைக் குலைப்பதற்குப் பகைப் படையினர் செய்த பல்வேறு இடர்ப்பாடுகளாலும் தளர்ந்து விடாமல் தொடர்ந்து , புலிகளின் குரல் வானொலி தான் சேவைகளை வழங்கியது.
1998-ஆம் அண்டு வன்னியின் கொக்காவில் பகுதியில் புலிகளின் குரல் வானொலி செயற்பட்டுக்கொண்டிருந்தது. அந்த ஆண்டின் நடுப்பகுதியில், சிங்கள அரசு மேற்கொண்ட ஜெயசிக்குறு படை நடவடிக்கையின் போது ஒரு நாள் செய்திவாசிப்பாளர் கி.திருமாறன்அவர்கள், மாலை நேரச் செய்தி அறிக்கையை வழங்கத் தேவையான ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தார் . அந்த நேரத்தில் நடத்தப்பட்ட வான் குண்டு வீச்சு தாக்குதலால் வானொலிக் கலையகத்தின் ஒரு பகுதி சிதைக்கப்பட்டது. அந்த நிலையிலும் பதற்றமடையவில்லை , கலக்கம் அடையவில்லை, ஒலிபரப்பு நிறுத்தப்படவில்லை. மாறாகத் திருமாறன் சிங்களப்படைகளுக்கு கலக்கம் ஏற்படும் வகையில் ஒரு பாடலை ஒலிபரப்பினார்.
“குண்டுகள் விழுந்தால் என்ன? -வீடு
குலுங்கி இடிந்தால் என்ன?-உடல்
துண்டுகளால் பறந்தால் என்ன? – நாங்கள்
துடித்து மடிந்தால் என்ன?- விடுதலைத்
தாகம் என்றும் தணியாது! எங்கள்
தாயகம் யார்க்கும் பணியாது!”
குண்டு வீச்சு நடத்தப்பட்ட நிலையிலும் ஒலிபரப்பை நிறுத்தாமல், விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் இந்த பாடல் ஒலிபரப்பப்பட்டதைக் கேட்டு சிங்கள படையினர் மிரண்டனர், தமிழர்கள் எழுச்சியுடன் எழுந்தனர்.
புலிகளின் குரலில் ஆண்டு தோறும் நவம்பர் 27ஆம் நாள், தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை ஒலிபரப்பப்பட்டது.
“நாடு” என்ற நிகழ்ச்சியில், கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதைகள் இடம்பெற்றன.
“தமிழர்பாடு”என்ற நிகழ்ச்சியில் யோகரத்தினம் யோகி அவர்களின் உரைகள் ஒலிபரப்பப்பட்டது.
கருத்துக்களம் , உலகவலம், கருத்துப்பகிர்வு, செய்தி வீச்சு ,அகமும் புறமும், கணப்பொழுது, செய்தியறிக்கை , நாளிதழ் நாழி, மாற்றம் முதலான நிகழ்சிகள் சுவைபட ஒலிபரப்பப்பட்டன.
தொடர் நாடகங்களும் இடம் பெற்றன , சாவு அறிவித்தல், வீரச்சாவு அறிவித்தல் , மாவீரர் பாடல், பள்ளிப்பிள்ளைகளுக்குப் பயன்தரும் நிகழ்சிகள் முதலானவை தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டன.
23 தடவைகள் சிங்கள படையினரின் வான்குண்டு வீச்சுக்குப் “புலிகளின் குரல்” இலக்காகியதும் பல தடவைகள் மக்களுடன் இடம் பெயர நேர்ந்தது. ஆயினும், நான்காம் தமிழீழப் போரின் இறுதிக்கட்டமான 2009 ஆம் ஆண்டு மே -15 ஆம் நாள் வரை புலிகளின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.
புலிகளின் குரல் வானொலிச் சேவையின் இத்துணைச் சிறப்புகளுக்கும் அதன் பொறுப்பர் தமிழன்பனும் அவருடன் இணைந்து செயலாற்றிய போராளிகளும் பணியாளர்களுமே காரணமாக இருந்தனர்.
முள்ளிவாய்க்கால் முடிவு அன்று எனச் சொல்வதைப் போல , இன்றும் புலிகளின் குரல் தொடர்ந்து தான் சேவைகளை வழங்கி கொண்டிருக்கிறது.
இணையத்தின் ஊடாக கடந்த 2004ம் ஆண்டில் ஒலிக்க தொடங்கிய , புலிகளின் குரல் வானொலி இன்று வரை உலகெங்கும் பறந்து வாழ்கின்ற தமிழர்களின் உள்ளங்களில் விடுதலை வேட்கையைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது.
புலிகளின்குரல் வானொலி தனது இலட்சியப்பாதையில் இருந்து சற்றும் விலகி செல்லாமல் இருப்பதற்கு தலைவன் வழியில் செயலாற்றிய போராளிகள் பணியாளர்கள் தான் காரணம்.
இருந்தபோதும் புலம்பெயர் மண்ணிலும் தமிழகத்திலும் உள்ள சில செயற்பாட்டாளர்கள் தங்களின் குறுகிய எண்ணத்துக்கும் எதிரியின் எண்ணத்துக்கும் வழி வகுக்கும் செயற்பாட்டினை தொடர்ந்தும் முன்னேடுத்து வருகின்றனர் என்பதையும் எமது வானொலிக்கு சில அரசியல் தேசிய செயற்பாட்டாளர்களின் நேர்காணல்களை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது அங்கு பல தடைகளை ஏற்படுத்தி எமது வானொலியை செயலாற்ற விடமால் செய்துள்ளார்கள் .
இதற்கு சில அரசியல் தலைவர்கள் மற்றும் கவிஞர்கள் துணைபோனதையும் நாம் அறிவோம். தனி மனித வெறுப்புக்களையும் சிலர் சொல்லும் தனித்த செயற்பாடு என்ற பொய்களை இவர்கள் எம் வானொலி மீது தெரிவித்தார்கள்.
2009ம் ஆண்டுக்கு பின்னர் புலம்பெயர் தேசத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் ஒரு பக்கமாகவே நாம் இதனையும் பார்க்கின்றோம்.
எமது வானொலிக்கு நேர்காணல்கள் மற்றும் வாழ்த்துக்களை தர மறுத்த எந்தவொரு நபரையும் நம்பி புலிகளின்குரல் வானொலி ஒலிக்கவில்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
புலிகளின்குரல் வானொலியில் உங்களது நேர்காணல்கள் ஒலிக்கின்றபோது ஒரு தேசியத்தின் தனித்துவமான வானொலியில் உங்களது குரல்கள் ஒலிக்கின்றன என்று பெருமைப்பட வேண்டியது நீங்கள் தான்…
உங்களது குரல்களால் எமது தேசிய வானொலிக்கு எந்த பெருமையும் சேரப்போவதில்லை என்பதை இத்த வேளையில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
எனவே தனி மனித செயற்பாடுகளை தவிர்த்து தேசியத்தின் வழி நின்று செயற்படும்போது எமது விடுதலை பயணம் இன்னும் வேகமாக செயற்படுத்த முடியும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எத்தனையோ பெரிய வெற்றிகளையும் எத்தனையோ சாதனை பயணத்தையும் மேற்கொண்டு ஒலித்து வரும் புலிகளின்குரல் வானொலியை இன்று வரை எதிரியாலும் துரோகியாலும் தடுக்க முடியவில்லை என்பது தான் எமது மாவீரருக்கு கிடைத்த வெற்றி.
தொடர்ந்தும் புலிகளின்குரல் இணையத்தளம் இன்று புதிய பல வியங்களை உள்ளடக்கி உங்களின் பார்வையில் இயங்கும் என்பதையும் எமது நேரடி ஒலிபரப்பில் பாடல்கள் மாவீரர் மகுடம் நினைவூட்டல்கள் போன்றவை ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதையும் 25 ஆண்டுகளைக் கடந்தும் புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பின் பயணம் இன்றும் தொடர்கின்றது என்பதை அறியத்தருகின்றோம்.
நன்றி- புலிகளின்குரல் நிறுவனம்