ஆற்றல்மிகு வீரர்களாக எங்கள் அன்னையர்
பூரணம் அம்மா,
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
மட்டக்களப்பின் அந்த வைத்தியசாலையில் குப்பிகடித்து வீரச்சாவடைந்த அந்த இரு இளைஞர்களின் உடல்களையும் சிங்களப்படைகள் கொண்டுவந்து வீசிவிட்டுப் போனபோது, பூரணம் அம்மாவும் அங்கேதான் நின்றிருந்தார். அருகில் சென்றுபார்க்கமுடியாமல் யார்பெற்ற பிள்ளைகளோ என்று குழறி அழுதுவிட்டு சிங்களப்படைகளை திட்டித்தீர்த்து சபித்து வீடு திரும்பியிருந்தவரைச் சந்திக்க, அவர் உணவூட்டி பகையிடமிருந்து மறைத்துப் பாதுகாத்த பிள்ளைகளின் வருகை.
வாசல்வரை வந்தவர்களுக்குள் தயக்கம். அன்றுவரைக்கும் இல்லாத தடுமாற்றம். போராடு என்று அம்மாவே அனுப்பிய அவரது ஒரே ஒரு மகன்தான் வைத்தியசாலையில் போடப்பட்டவன் என்பதை எப்படிச் சொல்வது? தாங்குவாவா? சத்தம் போட்டு குழறுவாரா? ” அவனைக் குடுத்திட்டு நீங்கள் ஏன் வந்தனீங்கள் ” என்று ஏசுவாரா? மனதுக்குள் கேள்விகள் சில நிமிடங்கள் மட்டும்தான்.
அம்மாவுக்கு பார்வையிலேயே புரிந்திருக்கவேண்டும். ” என்னைத்தான் நீங்கள் முதல்ல கண்டனீங்கள், பிறகுதானே அவனைக் கண்டனீங்கள். அவனுக்காக நீங்கள் ஏன் வராமல் நிக்கிறீங்கள். உள்ளுக்க வாங்க பிள்ளைகள் “. அம்மா அம்மாவேதான். யாருக்குவரும் இந்த மனத்திடம். மகனின் வீரச்சாவிற்கு முன்னும்சரி, பின்னும்சரி அம்மா மாறவேயில்லை. அவரின் பலமும் துணிவும் இறுதிவரை அவருடன் கூடவே இருந்தது. 1990களில் தேசத்துரோகக் குழு ஒன்றினால் பிடிக்கப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டபோதும், அம்மா அவர்களை அடித்துப் பிடித்து போராடியே உயிரைவிட்டதாக, பார்த்துக்கொண்டே ஏதும் செய்யமுடியாது நின்ற அவரது பிள்ளைகள் சொல்கிறார்கள். சாகும்போது அம்மாவுக்கு வயது 55தான்.
1984இல் இடம்பெற்ற சிறையுடைப்பு ஒன்றின்போதே அம்மா பிள்ளைகளுக்கு அறிமுகமானார். அதன்பின் அம்மாவின் உணவு வேளைகள் ஒவ்வொன்றும் யாரேனும் ஒருவரையேனும் எதிர்பார்த்துக் காத்திருந்த பின்னே இடம்பெறும். எதிர்பார்த்தவர்கள் வந்தால் உணவு பங்கிடப்படும். சிலவேளை அம்மாவிற்குரியதும் அவர்களுக்கே போகும். அம்மா தேநீரோடு மட்டும் இருந்துகொள்வாள். ஆனால் வயிறும், மனமும் நிறைந்து உற்சாகம் கூடியிருக்குமேயொழிய சோர்ந்திருக்காது. மட்டக்களப்பில் நின்று அம்மாவிடம் சாப்பிடாத போராளிகளே இல்லை எனும் அளவிற்கு அந்தத் தாய் போராளிகளை அரவணைத்திருந்தார். இத்தனைக்கும் தையல் மூலம் வந்த வருமானமே அம்மாவுக்கு பெற்ற பிள்ளைகள் மூன்றையும், வந்த பிள்ளைகள் அனைவரையும் தன் கையின் உழைப்பை நம்பியே அம்மா வளர்த்தார். ஒரே மகனை போராட்டத்திற்குத் தானே அனுப்பியபோதும் சரி, அந்த மகன் வீரச்சாவடைந்தபோதும் சரி அம்மாவின் துணிவும் விடுதலை மீதிருந்த ஓர்மமும் இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்க வைக்கும். இந்திய இராணுவம் எம் மண்ணிலிருந்த காலத்தில் அவர்களுடன் இணைந்து தேசவிரோதச் செயலில் ஈடுபட்ட அமைப்பொன்றினால் அம்மா கைதுசெய்யப்பட்டார். பழுக்கக் காய்ச்சிய கம்பிகளினால் குறியிடப்பட்டு சித்திரவதைக்குள்ளான பின்னும்கூட அம்மா எள்ளளவேனும் மாறிவிடவில்லை. சூட்டு அடையாளங்கள் தெரியும் அந்தக்கைகள் உணவிடுவதையும் அரவணைத்துக் காப்பதையும் நிறுத்தவேயில்லை தனது சாவு வரையும்.
தேவநாயகி
தனது ஒன்பதாவது வயதில் தந்தை ளு.து.ஏ.செல்வநாயகத்திற்கு காங்கேசன்துறையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் மாலைபோட்டு அவருடன் உரையாடியதோடு அக்காவின் தமிழின விடுதலைப்பயணம் ஆரம்பித்திருந்தது.
அரசியலில் பெண்கள் அதிகம் ஈடுபடாத காலம் அது. தனது ஆயுர்வேத (D.A.M) பரீட்சையை முடித்து, தமிழரசுக்கட்சியின் உறுப்புரிமையை 1967ஆம் ஆண்டு அக்கா பெற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 24. அதற்கிடையில் எத்தனை சத்தியாக்கிரகங்கள், சட்டமறுப்பு போராட்டங்கள் அத்தனையும் விடுதலைக்காக அவரைப் புடம் போட்டவையாகவே இருந்தன.
1961ஆம் ஆண்டில் ஒரு மாணவியாகக் கலந்துகொண்ட சிங்களச் சட்டமறுப்புப் போராட்டம், ஒரு சில பெண்களே அரசியற் பணிகளில் பங்கேற்ற 1965ஆம் ஆண்டின் பொதுத்தேர்தல், 1967ஆம் ஆண்டில் மருதனார்மடத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி மாநாடு, 1969ஆம் ஆண்டில் துடிப்பான இளைஞர் சமுதாயத்தை உள்வாங்கி தமிழரசுக்கட்சி கொண்ட புதுத்தோற்றம், 1970ஆம் ஆண்டின் பொதுத்தேர்தல் என அனைத்தினோடும் அக்கா இணைந்திருந்தார்.
1972மே மாதம் 14நாள் தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாக்கப்பட்டபோது அக்கா போன்ற இளம் சமூகத்தவர் எதிர்த்தபோதும் வட்டுக்கோட்டை தனித்தமிழ் தீர்மானம்,
அவர்களைத் தொடர்ந்தும் அரசியல் பாதையில் பயணிக்கவே வைத்தது. 1978ஆம் ஆண்டு வரையும் அவரது சாத்வீக அரசியலைத் தொடர்ந்து 1978இல் தலைவர் பிரபாகரனை சந்தித்ததோடு ஆரம்பித்த அவரது அடுத்தகட்டப் பணியானது, காலத்திற்கேற்றவாறு மாற்றம்பெற்று 1990களில் இராணுவப் பயிற்சி பெற்ற போராளியாகவும், வைத்தியராகவும் இன்றும் தொடர்கின்றது.
1977ஆம் ஆண்டு தனித் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பில் வெற்றிபெற்று கட்டுவனில் நடத்தப்பட்ட வெற்றிவிழாவின்போது தந்தை செல்வநாயகம் ” தமிழ்மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும். தமிழீழம்தான் முடிந்த முடிவு. தமிழீழத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அதை நாங்கள் எடுக்கத் தவறினால், இளைஞர்கள் அதை எடுக்க முன்வருவார்கள் “.
என்று உரையாற்றியதை நினைவுகூரும் அக்கா, ” அவருடைய வழி சரியென்றுதான் வெளிக்கிட்டனான். பிறகு அவர்காலம் முடிந்ததும், அவர் நம்பிச்சென்ற அந்த இளைஞர் படையோடு என்னை இணைத்துக்கொண்டேன் ” என்கிறார். யாழ்.நெடுஞ்சாலை திறக்கப்பட்டபோது அக்காவைப் பார்த்து சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த ஒருவன், ” சுடுதண்ணீரிலயா குளிக்கிறனீங்கள் ” என அவரது வயதைக் குறிப்பிட கிண்டலாகக் கேட்டபோது, அக்கா சொன்ன பதில் இப்போதும் காதில் ஒலிக்கிறது. ” நீ உதில இருக்குமட்டும் நான் சுடுதண்ணியில குளிக்கிறதைப்பற்றி யோசிக்கமாட்டன் “.
1984ஆம் ஆண்டின் மாரிகாலப்பகுதி அது. ஒரு சில ஆயுதங்களுடன் ஐந்து, ஆறுபேர் என போராளிகள் அனைத்து மாவட்டங்களிலும் பரவத்தொடங்கிய நேரம்.
திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் காடு, அடர்காட்டின் அசாதாரண அமைதியும் திடீர் திடீர் என எழும் யானைபோன்ற காட்டு மிருகங்களின் சத்தங்களுமாய் ஓர் புதிதான, புதிரான சூழல். சிங்களப் படைகளின் சுற்றிவளைப்புக்களிலிருந்தும், தேடுதல்களிலிருந்தும் தப்புவதற்காக அப்படியான காடுகளே புலிகளின் வாழிடங்களாயின.
காட்டில் வாழும் ஜீவராசிகளுக்கு காடும் அதனோடிணைந்த இயற்கையும் உணவளிக்கும், கரந்துறையும் இந்தப் போராளிகளுக்கு உணவு? அட, அதைப்பற்றி என்ன கவலை!? அதற்குத்தான் அம்மா இருக்கிறாரே!
அம்மா ஏற்கனவே ஒரு மகனை இந்த மண்ணிற்காக ஈந்திருந்தா சாதாரணமாக, வழமையாக சந்திக்கின்ற பெண்களைவிட அம்மா வேறுபட்டே இருந்தார். உடல் வலுவில், அச்சமென்றால ஏதென்றே அறியாத மனத்துணிவில் அங்கிருந்த அந்த இளைஞர் குழு ஆச்சரியப்படத்தக்க வகையில் அவரது இயல்புகள், ஆற்றல்கஇருந்தன.
காட்டில் அவர்களது இருப்பிட ஒரு பேராறையும் சில அருவிகளையும் தாண்டியதாக இருந்தது. அவற்றின் ஆழமும், அகலமும் கண்ணுக்குத் தெரியாத சுழிகளும் ஆற்றைப்பற்றிய அழகிய கற்பனைகளுக்கப்பால் திகிலை ஊட்டுவதாகவே எப்போதும் இருக்கும். திசையை ஊகித்துப் பாதையை உருவாக்குவதென்பது கடும் சிரமமானதாகவும், அனைத்து இடங்களுமே ஒரே மாதிரியானதாகவும் தோன்றி புத்தியைக் குழப்பி மயங்கச் செய்துவிடும் பயங்கர மிருகங்களின் காலடிகளும், எச்சங்களும் அவற்றின் இருப்பு அருகாமையில் என்பதை உணர்த்தும். இத்தனையையும் தாண்டி அம்மா உணவு சுமந்துவருவார். முதலில வெளியில் யாருக்கும் தெரியாதவாறு உள்ளுக்குள் இருக்கும் பிள்ளைகளுக்கு நான்கு, ஐந்து நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டின் ஓரப் பகுதியொன்றில் சேர்க்கத் தொடங்குவார். வேண்டிய அளவு சேர்ந்ததும், அன்றே சாப்பிடக்கூடிய சமைத்த உணவுடன் புறப்படுவார். பற்றையொன்றுக்குள் சேர்த்த அனைத்தையும் ஒன்றுதிரட்டி ஒருபெரும் மூட்டையாகக் கட்டி தலையில் தூக்கி வைத்தாரென்றால் நடைதான். பிள்ளைகளிருக்குமிடம் சேருவதுமட்டுமே குறியாயிருக்க, காடும் இடையிடையே பாயும் ஆறுகளும் அம்மாவின் கட்டளைக்கு அடிபணியும் விதமாக அப்படி ஒரு நடை. நனைந்து, காய்ந்து பின் நனைந்தபடியே உரிய இடம் சேர்ந்து உணவைப் பங்கிட்டு, தேநீர் தயாரித்து கொடுத்து, நான்கைந்து நாட்களுக்குரிய பொருட்களை ஒப்படைத்து அவர்களது அவசரத் தேவைகளைக் கேட்டறிந்து மீண்டும் ஊர்நோக்கி நடக்கத்தொடங்குவார். அம்மாவுக்குள் எங்கிருந்துதான் இத்தனை பலமும், துணிவும் தோன்றியிருக்கும்? பிள்ளைகள் வியப்பிற்குள்ளாவார்கள்.
இதற்கிடையே ஊருக்குள் ஓர் அவலம். போராளிகளுக்கு உதவியதற்காகவோ, அன்றி தங்களுக்கெதிராக மக்கள் எதுவும் செய்யக்கூடாது என்பதற்காகவோ சிங்களப்படைகள் ஒரு கோரக் கொடுமையை அந்த மக்கள்முன் அரங்கேற்றியது.
இரு தமிழ் இளைஞர்கள் பிடிக்கப்பட்டு, அவர்கள் இருவரது உள்ளங்கைகளுக்கூடேயும் முள்ளுக்கம் குத்திக் கோர்த்து பிணைக்கப்பட்டு கோரமாக கொலைசெய்யப்பட்டனர். பார்ப்போரை அச்சத்திற்குள்ளாக்கிய இந்தச் செயல் அம்மாவையும் தற்காலிகமாகவேனும் தடுக்கும் என நினைத்திருக்க, அம்மாவின் காட்டுப்பயணம் மறுநாளும்…. தோலில் சுருக்கங்கள் தோன்றத்தொடங்கிய வயதின் பின்னும் அவருக்கிருந்த வலிமை, களைப்பின்மை பின்னாளில் களமாடவென வந்த பெண்களின் வருகைக்கு ஒரு ஆரம்ப அறிகுறி என்பது வெளிப்படை. அம்மாவுக்கு இப்போது தொண்ணூறை தாண்டிய வயது. இப்போதும் வாழ்கிறார் தன் வாரிசுகளின் வெற்றிகளை இடுங்கிய கண்களால் இரசித்தபடி.
– தமிழவள்
தமிழீழ விடுதலைப்புலிகள் இதழ் ( ஆடி – ஆவணி 2005 )
|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||