தாகம்
அவனுடைய வைகறைப் பொழுதுகள் மகிழ்ச்சியாகத்தான் விடியும்.
முகத்தில் இனம் புரியாத ஒரு பூரிப்பு படர்ந்திருக்கும்.
விரைந்து விரைந்து பணிகளை முடிப்பான்.
அந்த நாளிலும் கூட குளியலறையில் அரை மணிநேரமாக இருந்து செருப்புத் தேய்த்துக் கழுவுவான்.
குளித்து முழுகிப் புதுப்பொலிவோடு வெளிவருவான்.
உடைகளை அணிந்து நின்று , கண்ணாடிக்கு முன்னால் அழகு பார்ப்பான்.
ஆகக்கூடுதலான நேரத்தை அதில் செலவளிப்பான்.
ஒரு மன்மதன் போல் காட்சியளிப்பான்.
நல்ல சாப்பாடாக எடுத்து , நிறையச் சாப்பிடுவான். சந்தோசமாகச் சாப்பிடுவான்.
உற்சாகமாக வந்து வண்டியேடுப்பான். கூடவே வந்திருந்த ஐயாவிடம் உவகையோடு சொல்லி விடைபெற்று புறப்பட்டுப் போவான்.
போட்டுவாறனய்யா….!
பெரியவருக்கு ஆச்சரியமாயிருக்கம்.
பெருந்துயரோடும் பிரமிப்போடும் , அவன் போவதையே பார்த்துக் கொண்டிருப்பார். அவன் கண்களில் இருந்து மறையும் வரை.
அதன் பிறகு காத்துக் கொண்டிருப்பார்.
அது அவனுக்காக அல்ல ,
ஆனால் , போன காரியம் பிழைத்து அவன் திரும்பி வருவான்.
வரும்போது….
இங்கிருந்து புறப்பட்டுப் போகையில் இருந்த உற்சாகம் மறைந்து , முகம் பேயறைந்தது போல் இருக்கும்.
அந்தப் பொலிவு செத்துப் போயிருக்கும்.
தாங்க முடியாத சோகம் அவனில் மிகையாகத் தெரியும்.
தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்து குந்துவான்.
விசர் பிடித்தவன் போல உடை களையாமலே போய்க் கட்டிலில் விழுவான்.
இன்னதென்று சொல்லமுடியாத ஒரு ஆற்றாமை உணர்வுக்குள் அவன் சிக்குண்டு தவிப்பது தெரியம்.
பெரியவர் அருகிலிருந்து தடவிக் கொடுத்து ஆறுதல் சொல்லுவார்….
எதற்கு ஆறுதல்…. ? விசித்திரமான வாழ்க்கைதான்.
மதியம் சாப்பிடான். தேனீர் கூட அருந்தான். இரவும் சாப்பிடாமலே கிடப்பான். அறையை விட்டு வெளியே வரான். கண்களைக் கூரைக்குள் செருகிவிட்டு வெறித்த பார்வையோடு படுத்திருப்பான்.
அந்த நேரங்களில் எல்லாம் , ” தமிழீழத்தின் கரைகளைத் தழுவும் கடலலைகள் ” போல தாயக நினைவுகள் அவனைத் தழுவியிருக்கும்.
புரண்டு புரண்டு படுப்பான். ஆவனது மன உளைச்சல் அதில் தெரியும். மெல்ல மெல்ல இருள் கவியும்… பாவம் அவன் அப்படியே தூங்கிப் போவான்.
” என்ன மனிதர்கள் இவர்கள்…..! எப்படி இவர்களால் ?” ஐயாவிற்கு இது பெரிய புதிர். நம்புவதற்கரிய அதிசயம்.
மீண்டும் வழமை போல….
அதே உற்சாகமான விடியல்.
ஆரவாரமான புறப்பாடு பின்னர்
மனம் இடிந்து திரும்புகை
கட்டிலில் துவண்டு தலயணையில் கண்ணீர்.
மீண்டும் மறுநாள்………
இப்படித்தான் எத்தனையோ நாட்கள் , சாவும் – பகைவனும் அவனிடம் இருந்து தப்பிப்போக , அவன் ஏமாற்றத்தோடு திரும்பிக் கொண்டுருந்தான்.
ஆனால் , அந்தக் கடைசி நாளில் , அவன் மிக உறுதியாகச் சொல்லிவிட்டுதான் போனான்.
” நான் போறனய்யா………. இண்டைக்குப் பிழைக்கவே மாட்டுது….. ”
அவன் மறையும் வரை ஐயா பார்த்துக்கொண்டே நின்றார்.
அவன் வரவில்லை , அந்தச் செய்தி வந்தது.
– உயிராயுதத்திலிருந்து……
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”