கருவேங்கைகள் பயணம்
வழமைக்கு மாறான செயற்பாடுகள், என்றும் இல்லாத முக மாற்றங்கள், நின்று கதைப்பதற்கோ, சிரிப்பதற்கோ நேரமில்லாது அவசரமாய் கழிந்தது பொழுது. எல்லாம் அன்று மாற்றமானதாகவே இருந்தது. ஒவ்வொரு கரும்புலி வீரரும் தன்னையும் தான் கொண்டு செல்லவேண்டிய ஆயுத வெடிப்பொருட்களையும் இறுதிநேரம் தயார்ப்படுத்துவதில் மிக மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவர்களிற்குள் எதோ ஒரு உணர்வு திரும்ப திரும்ப அவர்களை நிறைவுபடுத்திக் கொண்டிருந்தது. அவர்களிற்காக வந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைக் கூட கவனிக்காது தாங்கள் கொண்டுபோகும் பொருட்களுக்கு நீர்க்காப்பு போடுவதிலும், அவற்றை சரியா என்று பரீட்சிப்பதிலும் அக்கறை கொண்டிருந்தார்கள். 24.03.2000 அன்றைய பகற்பொழுது இப்படித்தான் அவர்களிற்கு கழிந்தது.
பொழுது மங்கத் தொடங்கிய வேளை அவர்கள் தங்களிற்கான பொருட்களோடு புறப்படத் தாயாரானார்கள். பாரம் சற்று அதிகமானதே இருந்தது. ஒவ்வொருவரும் தங்களிற்கு வழங்கப்பட்ட வெடிபொருட்களை விட மேலதிகமாகவும் சில வெடிபொருட்களை கொண்டு சென்றனர். எத்தனை இரவுகள் இப்படியான எதிர்பார்ப்புக்களுடன், ஆவல்களுடன் அவர்கள் வேவுக்காக திரிந்திருப்பார்கள். அவர்களின் அந்தத் தேடல் முயற்சியிலேயே எத்தனை தோழர்களை அவர்கள் இழக்க நேர்ந்திருக்கிறது. எத்தனை நாட்கள் ஒருதுளி தண்ணீர் கூட இல்லாமல் அவர்கள் அதற்காகவே அலைந்திருப்பார்கள். எல்லாம் அவர்களின் நினைவில் நிழலாடுவதை இருந்தது.
“எங்கட கையால ‘சாஜ்’ கட்டி ‘ஆட்டி’ உடைக்கோணும், எத்தனையோதரம் சர்ந்தப்பம் வந்து நழுவிற்றுது. இனியோருக்காவரும் அந்த சர்ந்தப்பத்தில் ‘ஆட்டி’யை உடைத்து அண்ணை நினைக்கிறதை செய்து காட்ட வேணும்.” இப்படி ஒவ்வொருவரின் ஆழமான உணர்வும், காற்று அவர்களோடு பேசுவதாய் உணரவைத்தது. அவர்கள் அத்தனை பாரங்களோடு ஒவ்வொருவரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள்.
“நாங்கள் போறம்… இந்த முறை எப்படியும் நினைத்தை செய்து முடிப்பம் இல்லாட்டி… ….” சிரித்தார்கள். எல்லோரும் ஒரே அர்த்தத்தோடு சிரித்தார்கள். கைகுலுக்கினார்கள், கட்டித்தழுவினார்கள். “ஒவ்வொருவற்ற காதுக்கும் நிச்சயமாக வெற்றிச் செய்திவரும்” என்று மூச்சைப் பேச்சாக்கினார்கள்.!
அவர்களின் பார்வை வானத்தையோ அல்லது பூமியையோ நோக்கியபடி உறுதியாய் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரது கால்களும் இலக்கை நோக்கி நடப்பதற்காக குறுகுறுத்தன. வெற்றிலைக்கேணி கடற்கரையிலிருந்து அவர்களின் பயணம் ஆரம்பமானது. சிறிய படகுகள் அலைகளில் சத்தமின்றி இருளோடு இருளாகப் புறப்படன.
வானவிளிம்பு, உயர்ந்த பெருத்த தென்னந் தோப்புகளையும், அடர்ந்த மரங்களையும், வெளிகளையும் பிரித்துக் காட்டியது. நட்சத்திரங்களின் மங்கிய வெளிச்சம் வானத்திலும் ஓலைக் குடிசைகள் இருப்பது போலவும் அந்த குடிசைகளின் துவாரங்களினாலேயே இந்த ஒளி கசிவதாகவும் தெரிந்தது. படகு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தாலும் அவர்களின் இதயம் வேகமாகத் துடித்துக்கொண்டிருந்தது. திட்டம், நகர்வு, தாக்குதல் என்று ஒவ்வொன்றையும் சுரம்மாறாது நினைவுகள் அசைபோட்டன.
தாழையடி இராணுவ தளத்திலிருந்து கடற்கரையை நோக்கி வெளிச்சங்கள் தெரிந்தது. அந்த வெளிச்சங்கள் அவனது சின்ன “ரோச்” லைட்டுகளில் இருந்துதான் பிரிந்திருக்கும். அவன் ரோந்திற்காகவோ அல்லது வேறு பாதுகாப்பு ஏற்பாடு ஒன்றிற்காகவோ நகர்ந்து கொண்டிருக்கிறான். அல்லது பயத்தில் இருளை தனக்குக் கிட்ட வரவிடாது விரட்டுவதற்காக இவ்வாறு செய்கிறான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு சிரித்தார்கள்.
படகிற்குள் மெளனம் குடிகொண்டிருந்தது. காற்று ஈரத்தை சுமந்து வீசிக்கொண்டிருந்தது. சத்தமில்லாது படகு கரையைத் தொடும் தூரத்திற்குள் வந்துவிட்டது. படகின் இரண்டு கரைகளாலும் இரு கறுப்பு உருவங்கள் தண்ணீருக்குள் குதித்தன. அவர்கள் சுமந்து செல்லும் பொருட்களின் தோற்றம் அவற்றைப் பெரிய மனிதர்களாக உருமாற்றிக் காட்டியது. தண்ணீருக்குள் இறங்கியவர்கள் துப்பாக்கியை மூடியிருந்த நீர்க்காப்பை அகற்றி சுடுவதற்குத் தயாரானார்கள். எந்த நேரமும் தாக்குதல் ஆரம்பிக்கலாம் ஏனென்றால் அது எதிரியின் கோட்டைகள் நிறைந்த இடம். செம்பியன்பற்றுக்கும் மாமூலைக்கும் இடையிலான பிரதேசத்தில் தான் இது நிகழ்ந்து கொண்டிருந்தது.
இறங்கிய இருவரும் துப்பாக்கியை சுடுவதற்கு ஏற்றவாறு பிடித்துக்கொண்டு சற்றுக்குனிந்து சத்தமில்லாது இரண்டு முனைகளிலும் பிரிந்து ஓடியது வானவிளிம்பில் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் நிலையெடுத்த பின், எந்தவிதமான ஆபத்தும் தென்படவில்லை யென்பதற்கு மணிக்கூட்டு வெளிச்சத்தில் சமிக்கை செய்தார்கள். அதன் பின்னே படகு கரையடைந்தது. அந்த படகிலிருந்து மற்றப் படகிற்கு சமிக்கை காட்டப்பட்டது. அதுவும் விரைந்துவந்து கரையை தொட்டது. ஒவ்வொருவரும் நிதானமாக எதற்கும் தயாராக படகுகளிலிருந்து குதித்தார்கள்.
அவர்களின் பார்வை இப்போது முன்னோக்கியதாக கூர்மையடைந்திருந்தது. படகில் ஏற்றிய வந்தவர்களிற்கும், இதுவரை ஒன்றாகவே நின்று இறுதிக்கணமும் பிரியமனமின்றி தவித்து நிற்கும் தோழர்களிற்காகவும் ஒருமுறை திரும்பிப் புன்னகைத்தார்கள். அதற்கு மேல் அவர்களிற்கு அவகாசம் கிடைக்கவில்லை. நகருவதற்கான வியூகங்கள் அமைத்து முன்னேறத் தொடங்கினர்கள். கால் புதைந்து புதைந்து எழும் அந்த மணல், கடற்கரை ஓரமாகவே வளைந்து நெளிந்துபோகும் பாதை, மணல் மேடுகளில் நடுவில் வளர்ந்திருக்கும் கண்டல்காடுகள் அவற்றினூடு அவர்களின் கால்கள் முன்னேறின.
அடர்ந்த கண்டல் காடு நிறைந்த ஒரு இடத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அகற்றப்படாதிருந்த நீர்க்காப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அங்கே தடயங்களாக இருந்த பொருட்களை மணலில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு மிக அவதானத்துடன் எழுந்து நடந்தார்கள். அவர்கள் போகும் திசையில் தொலைதூரத்தில் ஆட்லறிகள் இயங்கிய சத்தம்; அதைத் தொடர்ந்து வானத்தையும் பூமியையும் அதிர வைக்கும் சத்தம் எல்லாம் தெளிவாகக் கேட்டது. எல்லோருடைய மனதிலும் நம்பிக்கை; எங்களுடைய இலக்குகள் இருக்கிறன, இனி எப்படியும் அவை அழிக்கப்பட்டுவிடும் என்று.
நடந்துகொண்டிருந்தபடியே தனது தோளை வெட்டிய வெடிமருந்துப் பொதிகளைச் சீர்செய்துவிட்டு “சத்தம் போடுங்கோ இஞ்ச உங்களுக்கான சாமான்களோட நான் வாறனெண்டு உங்களுக்கு தெரியாது தானே” என்று எலோருக்கும் கேட்கும்படியாக கூறிவிட்டு சிரித்தான் தனுசன்.
அவனின் சுவாபமே தனித்துவமானது. உச்சி பிரித்து மேவி வாரப்பட்டிருக்கும் தலைமயிரும் கறுப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் இருக்கும் அவனது கண்களும், கதைக்கும் போதும் சிரிக்கும் போதும் கண்ணை மூடிமூடித்திறக்கின்ற அசைவுகளும், உயர்ந்த உடற்கட்டான அவனுடைய உருவமும் அவனை ஒருமுறை பார்த்தவர்களின் மனதைக்கூட பற்றிக்கொள்ளும். அவனது வார்த்தையிலிருந்த உறுதியும் நகைச்சுவையும் எல்லோரையும் ஒருகணம் சிரிக்கவைத்தது.
தனுசனது கவசமே அலட்டிக் கொள்ளாது அதிகமான செயற்பாடுகள் மூலமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சுபாவம்தான். இலக்கிற்காக அவன் தெரிவு செய்யப்பட்டதில் இருந்து பயிற்சி எடுத்தது. அதற்காக நகர்வது அனைத்திலுமே அவனின் செயற்பாடுகளில் தன்னை இனம் காட்டிக் கொண்டான். எல்லாப் போராளிகளுடனும் அதிகமாக சிரித்துக் கதைத்தான். அடிக்கடி “இந்த ஆட்டிலறிகளை நிட்சயமா உடைப்பேன்” என்று உறுதியாய்க் கூறி புன்னகைத்தான். இன்று, இலக்கிற்கும் அவனிற்குமான தூரங்களை காலடிகள் குறைத்துக் கொண்டிருந்ததன. அவன் உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் இருந்தான். அவனிற்கென கொஞ்சப் பொதிகள் கொடுத்தபோதும் அவன் மேலதிகமாகவும் புறப்படும் போது தனக்கு வழங்கிய வெடிமருந்துப் பொதிகள் போதாது என்று “இன்னும் கொஞ்சம் ‘சாஜ்’ தாங்கோ நான் கொண்டு போவன். தேவைப்படும்” என்று வாங்கி அதையும் சேர்த்து சுமந்து கொண்டு நடந்தான். ஒவ்வொருவரது நெஞ்சிற்குள்ளும் தலைவர் கதைத்தது. தளபதிகள் எடுத்துரைத்தது. போராளிகள் விடை கொடுத்தது என்று, ஒவ்வொன்றும் வந்துபோனது.
அணிகள் நகர்ந்து அகிலன் வெட்டைக்கரைய (சிறுநீரேரி) வந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டிக்கொண்டிருந்தது. அகிலன் வெட்டையில் பரந்து நின்றிருந்த நீர் காற்று வீசும் நேரம் தவிர மீதியெல்லாம் அமைதியாய் இருந்தது. ஆட்லறிகள் ஏவப்படுகின்ற சத்தம் அவர்களிற்குள் ஒரு வேகமேற்படுத்தியது. மெல்ல மெல்ல ஒவ்வொருவராக நடந்தார்கள். ஆழம் அதிகமான இடங்களில் சத்தியாவும், ஆந்திராவும் தாண்டு மீண்டார்கள். இரண்டு பேருமே உருவத்தில் மிகச் சிறியவர்கள். அவர்களின் இந்த சிறிய தோற்றம் பலதடவைகளில் அவர்களிற்கு இலக்கு கிடைக்காது போவதற்கு காரணமாய் இருந்தது. என்றாலும் இம்முறை அவர்களிற்கு அந்த சர்ந்தப்பம் கிடைத்துள்ளது.
மலர்விழி தன் தலைமையிலேயே இவ்விருவரையும் அழைத்துச் சென்றாள். தண்ணீரின் ஆழம் அதிகமான இடங்களில் நுனிக்காலில் நடந்தும் அதைவிட ஆழம் அதிகமானால் மலர்விழியின் தோள்களில் பிடித்தபடியும் சத்தியா தன் தண்ணீர்க் கடப்பு பயணத்தை தொடர்ந்தாள். ஆந்திராவும் அப்படியே. மற்ற கரும்புலிவீரர்களும் அவர்களுக்கு உதவினார்கள். தண்ணீரும் பாதங்களைப் பிடித்திழுக்கும் சுரிகளும் பயணத்தை சிரமமாக்கியது. யாரும் அதைக் கஸ்ரமாக பெரிதுபடுத்தவில்லை. எந்தவிதமான தடயமும் ஏற்படாது கரையேறியவர்கள். சற்றுத் தூரம் நடந்து ஒரு மறைப்பான இடத்தில் ஓய்வேடுத்துக்கொண்டார்கள்.
சிலர் தங்கள் துப்பாக்கிகளை துப்பரவு செய்தார்கள். சிலர் அப்படியே அந்த புதர்கள் மண்டிக்கிடந்த இடத்திலேயே படுத்திருந்தார்கள். இன்னும் சிலர் தாங்கள் கொண்டுவந்த உலர் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு மற்றவர்களிற்கு அன்பாய் கொடுத்துக் கொண்டுமிருந்தார்கள். அது ஒரு இராணுவ பிரதேசம் என்ற உணர்வு தெரியாது அவர்கள் இயல்பாகவே பேசினார்கள். சிரித்தார்கள். ஆளாளாய் கிண்டலடித்தார்கள். அந்த இடத்திலேயே மறுநாள் பகற்பொழுது கழிந்தது.
பகற்பொழுதில் தான் அந்த இடமெல்லாம் இராணுவ நடமாட்டம் அதிகமான இடமெனத் தெரிந்தது. இராணுவ சப்பாத்தின் அடையாளங்கள் ஆங்காங்கே பளிச்சிட்டன. மாலைச் சூரியன் சற்று மரங்களிற்குள் மறையத் தொடங்கின. இதுவரையும் ஒன்றாக நகர்ந்த அணி இனி இரண்டாக பிரிந்து வேறுதிசையில் இன்னொரு இலக்கைத் தேடப்போகிறது. களத்தினுள்ளும் ஓர் உணர்ச்சி பொங்கும் பிரிவு, பளையில் அமைந்திருந்த ஆட்லறித்தளம் நோக்கிப் போகின்ற தனுசன், சுதாயினி அடங்கிய அணியைப் பார்த்து “உங்களுக்கு நல்ல சர்ந்தப்பம் கிடைத்திருக்கு இதவிடக்கூடாது, ஆட்டி தகர்க்க வேண்றுமெண்டது கனபேரின் எதிர்பார்ப்பு” என்றாள் மலர்விழி. கூறிவிட்டு தனது தோள்ப் பையிலிருந்து “பழரின்” ஒன்றை எடுத்து வெட்டினாள். ஒரு தாயிற்குரிய பரிவோடும் , பாசத்தோடும் ஒவ்வொரு போராளிக்கும் கொடுத்தாள். அந்தக் கணங்களில் கண்கள் மெல்லக் கசிந்தன. இதே அணிகளில் இனியார் வெற்றிச் சேதியோடு திரும்புவார்கள்?
அங்கு தாமதம் என்ற வார்த்தைக்கு இடமில்லை. ஒவ்வொரு மணித்துளியும் ஒவ்வொரு துளி இரத்தமாக மதிகபட்டது. தனுசன், சுதாயினி அடங்கிய குழு பளை நோக்கியும், மலர்விழி, சத்தியா, ஆந்திரா அடங்கிய குழு தாமரைக்குளம் நோக்கியும், பிரிந்து நடந்தனர். இனி கடக்கவேண்டிய மிகப் பெரும்தடை கண்டி வீதி A9 – பிரதானசாலை.
வீதியோரத்தில் முட்கம்பி வேலிகள். அதைக் கடந்தால் ரோந்து வந்துபோகும் இராணுவத்தினர். அதிகளவு ஒளிசிந்தி இரைந்தபடி ஓடித்திரியும் “றக்”குகள். அத்தனை ஆபத்துக்களையும் கடந்துவிட்டால் இலக்கு தகர்க்கப்படுவது உறுதியாகிவிடும். இந்தக் கணத்திலும் அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதியை மீண்டும் சொல்லிக்கொண்டனர். “ஒராள் மிச்சமென்டாலும் உள்ளுக்கபோய் ஆட்டியை உடைக்கோணும்” ஒவ்வருவருமே அதன் திட்டத்தையும் நடைமுறைபடுத்த வேண்டிய விதத்தையும் நன்கு அறிந்து வைத்திருந்தனர். கண்டி வீதி கடப்பதற்காக அங்குலம் அங்குலமாய் நகர்ந்து, தடைக்கம்பி வெட்டி, மண்ணணை ஏறி ஒவ்வொருவராக சமிக்கை கொடுத்து கிட்ட அழைத்து, அவர்களை நிலையெடுக்கச் செய்து இப்படி ஒவ்வொன்றும் அங்கே நிதானமாக அரங்கேறிகொண்டிருந்தன.
கண்டி வீதியால் கிடுகிடுத்தபடி சைக்கிளில்; ரோந்துக்கு வந்த இராணுவம் போய்வரும் நடமாட்டம் தெரிந்தது. அடுத்தடுத்து சில இராணுவத்தினர் ரோச்லைட்டுக்களுடன் போவதும் வருவதுமாக இருந்தனர். அவர்கள் போகும் போது சிங்களப் பாடல்களையோ அல்லது வேறு எத்தனையோ கத்திக்கொண்டே சென்று வந்தார்கள். அவர்கள் கதைக்கும் சிங்கள சொற்களுக்குள் கலந்துவந்த சில ஆங்கிலச் சொற்கள் அவர்கள் காவல்கடமையை மாற்றுகின்றார்கள் என்று உணரக்கூடியதாக இருந்தது. அதற்கு பின் எல்லாம் மெளனம் .
பழைய வடிவமைப்பிலான ஒரு கார்போன்ற வாகனம் பளையிலிருந்து முகமாலைப் பக்கமாய் விரைந்தது. அணி வீதிகரையை வந்ததும் வேகமாக கடக்க முயன்றார்கள். முன்னேசென்ற ஒருவன் வேகமாக நடந்து கண்டிவீதியை கடந்தான். அடுத்தவன் தனது நிலையிலிருந்து எழுந்தான். கடப்பதற்காக விரைவாக நடந்தான்.
சாவகச்சேரிப் பக்கமிருந்து உறுமலோடு எதோ ஒரு வாகனம் வந்தது. அதன் பிரகாசமான வெளிட்சம் அவனை முழுமையாகக் காட்டியது. கண்ணைப் பறிக்கும் பளிச்சென்ற வெளிச்சம். விரைவாய் திரும்பிவந்த இடத்திற்க்குச் சென்றான். பின்வந்தவர்களை மறைவேடுக்கச் சொன்னான். எல்லாம் ஒருகணத்திற்குள் செய்து முடிந்தது. தண்ணீருக்குள் வந்துகொண்டிருந்தவர்கள் அப்படியே அதற்குள்ளே அமிழ்ந்தார்கள். மரங்களிற்குள், பற்றைகளிற்குள், மண்திட்டுகளிற்குள் என்று அவசர அவசரமாக தங்களை மறைத்துக் கொண்டார்கள். அது இராணுவ “றக்” வண்டி. அந்த வண்டி நிறைய எறிகணைகளை ஏற்றிச் செல்வது அந்த பெட்டிகள் மூலம் அறியமுடிந்தது. அதைக் கண்டபோது அவர்களிற்கு மெய்சிலிர்த்தது. எங்கோ ஓர் நடவடிக்கைக்கு இராணுவம் தன்னை தயார் செய்கிறது. என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்கள்.
ஆட்லறிகளின் அதிர்வு மிக கிட்டவாகவும் எத்தனை என்று அறியக்கூடியதாகவும் இருந்தது. அந்த வாகனத்தின் புகையும், அது கிளப்பிச் சென்ற காற்றும் அடங்க்கமுன் அணி வேகமாக கடந்தது.
கண்டிவீதியை கடந்ததும் மனதில் நம்பிக்கை பளிச்சிட்டது; இனி எப்படியும் அந்த இலக்குகளை அழிக்கப்பட்டுவிடும் என்று தென்னந்தோப்புகள், பற்றைக்காடுகள் வடலிகள் என்று ஒவ்வொரு இடத்தையும் வேகமாகக் கடந்து தளத்திலிருந்து சற்றுத் தூரத்திற்குள் தங்கிக்கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் சிரித்து, கதைத்து தங்களின் இறுதிநேர ஓய்வையும் உணவையும் பகிர்ந்து கொண்டார்கள். நித்திரை கொள்பவர்களை தட்டியெழுப்பி “ஏன் இப்ப அவசரப்படுறியள். இனி ஒரேடியா தூங்கலாம் தானே” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் சுதாயினி. வழமையான அவளது குறும்புப் பார்வை சிரிப்பு எல்லாமே அப்படியே இருந்தன. முகமெல்லாம் முத்து முத்தாக வியர்த்துப்போயிருந்தது. இயல்பாகவே அவளிற்கு முகம், கைகாலெல்லாம் வியர்த்துப் போய்த்தான் இருக்கும். எபோதும் சிரிக்காமல் கதைத்து அவளிற்கு பழக்கம் இல்லை; இன்றும் சிரித்தபடியே.
அவளின் உடற்தோற்றத்திற்கு ஏற்றது போல் அவளிற்கு (“லோ”) வழங்கப்பட்டிருந்தது. அது அவளின் மடியில் அவளைப்போலவே அடுத்த கட்ட பூகம்பத்தை நினைத்தபடி மெளனமாய்க் கிடந்தது. ஒவ்வொரு உணவுப் பொதிகளையுமே எடுத்து உண்டபடி தங்களிற்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். “எப்படி வெளிநாட்டுச் சாப்பாடு, கதிரை மேசைதான் இல்லை பத்தையேன்றாலும் சந்தோசமான சாப்பாடு” சொல்லி முடித்து மூச்சு விட்டான் தனுசன். அவர்கள் ஓய்வை முடித்து அங்கிருந்து புறப்படத் தயாரானார்கள். தலைகோதிவிட்டு, கசங்கிய உடுப்பை சரிசெய்து , வியர்த்து உருமாறிய முகங்களை துடைத்து ஏதோ கொண்டாட்டத்திற்கு போவது போல அவர்கள் தயாரானார்கள்.
இலக்கை அண்மிக்க , அண்மிக்க உணர்வின் வேகம் அதிகமானது. சண்டைக்கான தயார் நிலையில் அவர்கள் நகர்ந்தார்கள். கொண்டுபோன தண்ணீர்க் “கான்”கள் அவர்களைப்போலவே தண்ணீருக்காய் தவித்தது. ஒரு மோட்டை! அந்த பரப்பின் ஓர் முலையில கொஞ்சம் தண்ணீர்! அது எப்படி என்னமாதிரி என்று தெரியாது. என்றாலும் அதைக் குடித்தார்கள். பனை மரங்களோடு ஒட்டி வளர்ந்திருக்கும் சிறுபற்றைகளும், மணற்பிரதேசத்தில் முளைத்த புற்களையும் கவசமாக்கி அங்குலம் அங்குலமாய் நகர்ந்தார்கள். அவர்களின் கண்களிற்குள் அந்த தளத்தின் பிரமாண்டமான உருவம் தெரிந்தது.
மண்ணணை, இடையிடையே காவலரண், முட்கம்பித் தடை என்று அதன் பலத்தை உறுதி செய்யும் ஏற்பாடுகளும் அவர்கள் முன் விரிந்துகிடந்தது. எதிரி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து எட்டு ஆட்லறிகளை இயக்குவது தெரிந்தது. அது இயக்குவதற்காகவும் அது வேறுபக்கம் திருப்புவதற்காகவும் அவன் கொடுக்கும் கட்டளைகள் காது மடல்களில் அறைந்தன. அந்த எறிகணைகள் பெரும் சத்தத்தோடு சுவாலை கிளப்பி வெடிக்கின்றபோது அதன் சுவாலை அவர்களின் வியர்வையை உலரத்துவதாய் முகத்தில் சுட்டது. அவை இன்னும் சில வினாடிகளிற்குள் நொறுங்கப் போகிறது என்று எண்ணியபோது ஒவ்வொருவரது பற்களும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டன.
பளை புகையிரத நிலைய கட்டடத்தின் கூரை இல்லாத தோற்றம் முகம் இழந்த ஒருவனைப் போலிருந்தது. அந்த இருளையும் ஊடுருவி அவன் அமைத்திருந்த தடைகளிற்கு வெடிமருந்துகளைப் பொருத்திவிட்டு அணிகளுக்கு தாக்குதலை ஆரம்பிக்கும் சமிக்கையை கொடுக்கவென நினைத்தபோது….. திறந்த காவலரண் ஒன்றிலிருந்து இராணுவச் சிப்பாய் ஒருவன் வெளியே வந்தான். அவன் கையில் துப்பாக்கி இல்லை. பிரகாசமான ரோச்லைட் ஒன்றை வைத்து எல்லா இடமும் சுற்றியடித்தான். அவனின் பருத்த உருவமும் முரடுத்தனமான தோற்றமும் தெளிவாக வானவிளிம்பில் தெரிந்தது. முன்னே சென்றவர்களின் முகத்திற்கு நேரே அவன் ஒளிபாச்சியபோது திடுக்குற்று “கவ்த” என்றான் நடுக்கத்துடன். கரும்புலி வீரர்கள் மனதிற்குள் சிரிப்போடு கூடிய நிதானத்தோடும் நிலையாக நின்றார்கள். மறுமுறையாக தனது ஒளியை வேறு திசை ஒன்றில் பாச்சியும் சத்தமாய் ‘கவ்த’ என்றான். நிதானம்….. சிரிப்பு. மூன்றாம் முறை முகத்திற்கு நேரே ஒளிபாய்ச்சி அதட்டலாக “கவ்த” என்றதுதான் தெரியும்; அந்த சிப்பாய் அதிலேயே செத்துக்கிடந்தான்.
அணி வேகமாக உள்நுழைந்தது. “ஓடுங்கோ….. வேகமாக முன்னேறுங்கோ” என்ற சத்தத்தோடு எல்லோரும் மண்ணணை ஏறி உள்நுழைந்தார்கள். காவலரணிலிருந்து சூடுகள் வந்துகொண்டே இருந்தன.
“நான் ‘லோ’ அடிகிறன் முன்னேறுங்கோ” என்று சுதாயினி கத்தியது சத்தங்களிற்குள் அடக்கமாய் கேட்டது. அடுத்து என்ன நடந்தது என்று நிதானிப்பதற்குள் வெடியோசைகள்……… சுதாயினி நின்ற இடமே தெரியவில்லை. நிச்சயமாக எதிரியின் குறி அவளாகத்தான் இருந்திருக்கும்.
சுதாஜினியின் வெடியதிர்வைப் போலவே ஒவ்வொருவரும் வேகமாக இலக்குகளை நெருங்கினார்கள். ஆட்டிலறிகள் , அதற்க்கான எறிகணைக் களஞ்சியங்கள் எல்லாம் தெளிவாகத் தெரிந்தன. நிலவு வருவதற்கு முன்னதாக வானம் வெளுத்திருந்தது. அந்த மங்கிய வெளிச்சத்தில் அந்த ஆட்லறிகள் உருவங்கள் கருமையாகத் தெரிந்தது. மிகவேகமான தாக்குதலில் அந்த பெரிய தளமும் அத்தனை ஆட்டிலறிகளும் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்தன. ஆயுதக் களஞ்சியங்கள் ஆங்காங்கே பெரும் சத்தமுடன் வெடித்து சின்னச்சின்ன எரிமலையாய் எரிந்துகொண்டிருந்தன.
நிலைமைகள் வெளியில் அறிவிக்கப்பட்டது . உதவிக்குச் செல்லவென இருந்த அணி அங்கே குறித்த நேரத்துக்குள் போய்ச்சேருமா என்பதில் சந்தேகம் எழுந்தது. கரும்புலி வீரர்கள் செம்பியன்பற்று கடலில் சண்டை நடக்கும் சத்தங்களை தெளிவாகக் கேட்க முடிந்தது. உதவியணி இனி வந்து சேராது என்ற முடிவிற்கு வந்தாலும் இயன்றளவு அத்தனை ஆட்லறிகளையும் பாதுகாத்தனர். தனுசன் எல்லா ஆட்டிகளுக்கும் ஓடி ஓடி வெடிமருந்துப்பொதிகளைக் கட்டி வெடிக்கக்கூடிய நிலைமைக்கு கொண்டுவந்துகொண்டிருந்தான். வேறு வேறு முகாம்களில் இருந்து அந்த தளத்தை இலக்குவைத்து எறிகணைகளை எதிரி எவிக்கொண்டிருந்தான். தனுசன் தன் பணிகளை நிறைவேற்றி முடித்தபோது அவனிற்கு அறுகொடு எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்தது. அதற்குப் பின் தனுசனின் தொடர்பு இல்லை. பொழுது வெழுக்கத் தொடங்கியது.
அத்தனை ஆட்டிலறிகளையும் தகர்த்து விட்டு பின்வாங்கும்படி கட்டளை கிடைத்தது. ஆட்டிலறிகளையும் ஆயுதக் களஞ்சியங்களையும் தகர்த்துவிட்டு வெற்றியோடு பின்வாங்கினார்கள். ஒவ்வொருவரது மனதிற்குள்ளும் அவர்களோடு வந்து பிரிந்து சென்ற மலர்விழியின் அணியும் நிச்சயம் இலக்குகளை அழித்திருக்கும் என்ற நம்பிக்கை நிறைந்திருந்தது. அறிய ஆவலாய் இருந்தது.
அவர்களோடு வந்தவர்களில் இரண்டு தோழர்கள் இல்லை. ஆனால் அவர்களின் இலக்கை வெற்றிகொண்டுவிட்டார்கள். தீர்மானித்தபடி வந்த வழியிலேயே கண்டி வீதியில் நிலைகொண்ட எமது அணிகளோடு கைகுலுக்கியபோது சொன்னான் ஒரு கரும்புலி வீரன் “எத்தனைபேர் எத்தனை இரவுகளாய் தேடி அலைந்த ஆட்லறிகள்…. அத்தனை பேரின் கனவையும் நிறைவேற்றிப் போட்டோம். ” சமரிற்கு அடித்தளமிட்டுவிட்ட நிறைவு அவர்களிடம் இருந்தது.
அவர்கள் அறிய ஆவலாய் இருந்த மற்றைய மலர்விழியின் அணி தனக்குத் தரபப்ட்ட நான்கு ஆட்டிலறிகள் கொண்ட மற்றைய தளத்தை அழித்துவிட்டது. ஆனால் அந்த கரும்புலி வீரர்களில் மலர்விழியும், ஆந்திராவும், சத்தியாவும் திரும்பவில்லை.
நினைவுப்பகிர்வு:- கிள்ளிவளவன்.
விடுதலைப்புலிகள் (வைகாசி, ஆனி 2000) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”