கரும்புலி மேஜர் சிற்றம்பலம்
என்றைக்குமே வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த முகாம் இன்றும் அதேபோல இயங்கிக்கொண்டிருந்தது. தலைநகரில் தங்கள் உயிர்களைக் கொடுக்கச் செய்து முடிக்கப்போகும் அந்தத் தாக்குதலுக்காய் அவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருகிறார்கள். ஆனால் அவைகள் முன் எழுந்த எண்ணங்களெல்லாம் சிற்றம்பலம் பற்றித்தானிருந்தது.
இந்தத் தாக்குதலை சிற்றம்பலம் என்னென்றுதான் செய்து முடிக்கப்போகின்றான்…….?
இந்த நீண்ட நடைப் பயணத்தை இவன் எப்படி நடந்து கடக்கப்போகின்றான்…….?
ஏற்கனவே விழுப்புண்பட்டு சிறு எலும்புத்துண்டு அகற்றப்பட்ட காலொன்று அதற்க்கு அவனைச் சுமக்கக்கூடிய பாரம் கொண்ட பொதி அவன் சுமப்பதர்க்காய் காத்திருக்கிறது. இத்தனையும் சுமந்து கொண்டு இவனால் இதைச் செய்துவிட முடியுமா…? என்ற வினாக்கள் அங்கிருந்த போராளிகளின் மனத்தைக் குடைந்துகொண்டிருந்தது.
ஆனால் இந்தத் தாக்குதலுக்காய் தூக்கம் தொலைந்துபோய்ப் பல இரவுகளைச் சுமந்திருந்த சிற்றம்பலம் உற்சாகமாய் இறுதிநேர இரவுகளை மட்டுமல்ல , அவனது வாழ்க்கையே சுமைகள் நிறைந்ததுதான்.
சின்ன வயதிலேயே தந்தையின் உழைப்பு முடங்கிப்போக குடும்பத்தின் சுமையை தாஸனே அவன்தான் சிற்றம்பலம். தாங்க வேண்டியதாயிற்று. அவனது எதிர்கால வாழ்க்கைக்காக பள்ளிசெல்லுகின்ற வயது அப்போது. அந்த வயதில் அதை விட்டுவிட்டதால் அவனது எதிர்காலம்? அதனால்தான் அவள் அதைச் சொல்லவேண்டி வந்தது.
“தம்பி நீ வேலைக்கு போக வேண்டாமடா. பள்ளிக்கூடத்துக்கு போ. நான் ஏதும் சின்ன வேலையென்றாலும் செய்து சாப்பாடு போடுறேன்.” அம்மா சொல்லி முடித்து விட்டு அவனைப் பார்ப்பதற்குள் அவன் போய்விடுவான்.
காலையில் மாமாவின் “சைக்கிள்” கடையில் நிற்கும் அவன் அவசர அவசரமாய்ப் பள்ளிக்கூடம் போய்ன், பின் மீண்டும் சைக்கிள் கடையில், தோட்டத்தில் எறைவாறாய் நிற்காமல் சுற்றும் பூமிபோல் சுழன்ருகொண்டிருந்தான். அவன் அப்படியிருந்தும் அவனது முயற்சிக்கு மேலால் வந்து நிற்கும் , குடும்பத்தின் செலவீனங்கள்.
இனி அந்த முடிவைத்தவிர வேறுதெரிவுகள் அவனுக்கில்லை. நிகழ்கால வாழ்க்கைக்காய் அவனது எதிர்கால வாழ்க்கையை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம். தாஸன் இப்பொழுது மாணவனல்ல; பள்ளிப் பருவத்தில் குடும்பச்சுமை தாங்கிய உழைப்பாளி.
எரிபொருளில் இயங்கும் வாகனம் போல அவனது உழைப்பில் இயங்கிக்கொண்டிருந்தது அந்தக் குடும்பம். தாஸன் வியர்வையையும் தாயின் கண்ணிரையுமே தாம் உண்ணுவதாய் எண்ணியது அவனது உறவுகள்.
இத்தனை கடினங்களையும் அவன் தாங்கியது அவனது ஒரேயொரு அக்காவிற்க்காகவும் – தம்பிக்காகவும் தான். காலையிலிருந்து மாலை மடியும்வரை அங்கொருவேலை, இங்கொருவேலை என ஓடி ஓடி உழைத்து, இளைக்க இளைக்க கையில் காசுடன் வந்து நிற்கும் அவனது களைப்பு, தன் உறவுகளோடு சேர்ந்து உணவு உண்ணும் போது மறைந்து போகும். அந்த மன ஆறுதலுடன் தான் அவனது இரவுத் தூக்கம் கழியும்.
அன்றும் அக்காவுடன் கடைக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் புடவைக்கடை ஒன்றின் முன் அக்கா நின்றுவிட்டாள். அவளுக்கு பிடித்த சட்டையோன்றைக் கண்வெட்டாமல் அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். தாஸன் தன் அருகில் வந்தவனின் காலடி ஓசையைக் காணாது திரும்பிய போது, கடைக்காரன் சட்டையின் விலையை சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அவனது உழைப்பிற்கு அது பொருத்தமானதல்ல நிறைவேற்ற முடியாத அக்காவின் ஆசையை எண்ணி அவனது உள்ளம் ஏங்கியது. ஒரு மலையின் உச்சியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத அருவி ஒன்று கசிவதுபோல அவனது விழிகள் மெல்லக் கசிய, அதைக்கண்டோ என்னவோ அவள் சட்டையைப் பார்க்காதவள் போல தொடர்ந்து நடந்தாள்.
தாஸன் தன் அக்காவின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தாலும் அவனது மனம் யாருக்காகவும் இளகும். சிங்கள இராணுவத்தின் கண்ணிவெடியில் சிக்கி காலொன்றை இழந்தபின் அவள் அணிந்திருந்தது, செயற்கைக்கால். தாஸனின் சொந்தங்களுக்குள் அவளும் அடங்குகிறாள்.அவன் கண்களுக்கு அவள் தென்படும் போதெல்லாம் அவள் அணிந்திருந்த செயற்கைக் கால்பாதம் அவளிற்கு பொருத்தமற்று இருப்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நல்ல பாதம் அணிய வேண்டும் என்ற அவளின் ஆசையை உணர்ந்து கொண்டு அதற்காகப் பணம் சேர்க்க, அதிகாலையில் எழுந்து யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சிவரை துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்து தினசரிப் பத்திரிகை கொடுத்து உழைத்து அவனின் மனதின் மென்மையை அவனுடன் நெருங்கிப் பழகியோருக்குத் தெரியும்.
இவ்வாறு, தான் குடும்பத்தின் மீதும் உறவுகள் மீதும் வைத்திருந்த பாசத்தைப் பயிற்சிப் பாசறையில் தன் தோழர்களுக்குச் சொல்லிவிட்டு மெளனமாக இருந்தான். “மச்சான் குடும்பம், சொந்தமென்று உருகி வழிகிறாய் பிறகு ஏன் வீட்டை விட்டு இயக்கத்திற்கு வந்தாய், பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாம் தானே…?” அந்த வினாவின் பின் நிலவிய மெளனத்தைக் கலைத்துவிட்டு அவன் உறுதியாய்ச் சொன்ன வார்த்தைகளில் எவ்வளவு அத்தங்கள் பொதிந்திருந்ததன.
“மச்சான் நான் அக்காவிளையும் எங்களின் வீட்டுக்க்காரரிலும் எல்லோரின் மீதும் பாசமாகத்தானிருந்தனான். இப்பவும் அதைவிட மேலாப் பாசம் வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று சொல்றன் வெள்ளம் வருகிறதென்றால் அணைகட்ட வேணுமென்று எல்லோருக்கும் தெரியும். அணையை வெள்ளம் வாற இடத்தில்தான் கட்டவேணும். வீட்டைச் சுற்றிக் கட்டக்கூடாது. எங்களின் ஆட்கள் இப்பவும் வீட்டைச் சுற்றித்தான் அணைகட்டிக்கொண்டிருக்கினம்.”
அந்த வார்த்தைகளின் கனதியில் பின் தோழர்களால் பேசமுடியவில்லை. அவனது அர்த்தம் பொதிந்த வார்த்தைகளைப் புரிந்து கொண்டதால் அவர்கள் மெளனித்துப்போனார்கள். அவனது உள்ளத்து உறுதியும் வார்த்தைகளின் தெளிவும் அவர்களை அதிசயிக்க வைத்தது.
ஆனாலும் மற்றவர்கள் வாழ்க்கைக்காக ஏங்கும்போது தன்னை இழந்து, வருத்தி அவர்களின் மகிழ்வில் மனநிறைவடையும் அவனது இயல்பு இன்னமும் மாறாமலிருந்தது.
பயிற்சிப் போராளிகளிற்கு தாயாக, தந்தையாக சிற்றம்பலம் இயங்கிக்கொண்டிருந்தான். பகல் முழுவதும் பெற்ற கடின பயிற்சியின் விளைவாய்ப் போராளிகள் உறக்கத்திற்குச் சென்றுவிடுவார்கள். சிற்றம்பலத்தின் படுக்கை வெறுமையாக இருக்கும். காய்ச்சலினால் நடுங்கிகொண்டிருக்கும் போராளிகளைத் தன் மடியில் வைத்து உணர்வூட்டிக்கொண்டிருப்பான் சிற்றம்பலம். அவர்கள் தூங்காவிட்டால் சிற்றம்பலத்தின் படுக்கை அன்று வெறுமையுடனேயே கழியும்.
இப்படி அவன் எத்தனை மென்மையாயினும், அவனது இலட்சிய உறுதி உருக்குப் போன்று கடினமானதாகவேயிருந்தது.
சேந்தாங்குளப்பகுதியில் சிங்கள இராணுவத்தின் சுழல்க்காற்று இராணுவ நடவடிக்கைக்கு எதிராய் விடுதலைப்புலிகள் சுழன்று சுழன்று பதிலடித்தாக்குதல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவனாய் சிற்றம்பலமும் சண்டையிட்டுக்கொண்டிருக்க, துப்பாக்கி ரவையொன்று அவனது காலைத் துளைத்துச் சென்றது. அவனது காலிலிருந்து வழிந்த குருதியுடன் எலும்பின் சிதைந்த துகள்களும் கலந்திருந்தன.
சிற்றம்பலத்தால் இனி சண்டை செய்ய முடியாது; அவனால் இனி பயிற்சி செய்யமுடியாது; என்றுதான் எல்லோரும் எண்ணினார்கள். ஆனால் ஒன்றுக்கொன்று சமநில்லாது நிற்கும் அந்தக் கால்களாலேயே தன்னால் இயன்றதை செய்து முடித்துவிட வேண்டுமென்று அவன் முயற்சித்துக்கொண்டிருந்தான். காயமடைந்த காலிற்கு மட்டை கட்டிய நிலையில் மருதத்துவ விடுதியில் சிற்றம்பலம் ஓய்வேடுத்துகொண்டிருக, காயம் மாறிய நிலையில் இருந்த போராளிகளை கூட்டிச்செல்ல வாகனம் வந்திருந்தது. காயம மாறிய போராளிகள் உற்சாகத்துடன் செல்ல அவர்களை வழியனுப்ப மருத்துவ விடுதிப் பொறுப்பாளர், சிற்றம்பலத்திற்கு ஆறுதல் சொல்ல வந்தபோது அவனைக் காணவில்லை. முகாமின் சகல இடத்திலும் தேடுதல் நடத்தியாகிவிட்டது. சிற்றம்பலம் எங்கே போயிருப்பான். என்பதை இப்போது அவரால் விளங்கிக்கொள்ள முடிந்தது. மட்டை கட்டி ஆறாதிருக்கும் காயத்துடன் சமர்முனைகுப் புறப்பட்டுவிட்டான். பின்னர் அவனைத் தேடிப்ப்பிடித்து சண்டைக்குப் போகாமல் மறிக்க அவனுடன் பெரும் போராட்ட மொன்றே நடத்த வேண்டியதாயிற்று.
அவனது இலட்சியப்பற்றும் தேசத்தின் மீது கொண்ட உறுதியையும் அவனது செயல்களே சொல்லி நிற்கின்றன. அந்த உறுதியுடன்தான் அவன் கரும்புலிகள் அணியில் இணைந்து கொண்டான்.
சாதாரண மனிதன் கூட கடினப்பட்டு எடுக்கும் அந்த பயிற்சியை சிற்றம்பலம் தன் உடல் வலிமையாலல்ல , மன வலிமையால்த்தான் எடுத்தான். அவனது அந்த முயற்சியில் இறுதியில் அவனது மூன்று வருட கடின உழைப்பின் விளைவைக் காட்ட அவனன்று உற்சாகமாய் இயங்கிக்கொண்டிருந்தான்.
ஆனால் எல்லோர் முகத்திலும் கவலைக்குறிகள்; கண்ணீர்க் கோடுகள்; அந்த இரவுப் பொழுதின் மெளனத்திலும் யாருக்கும் கேட்க்காத சின்னச் சின்ன முனுங்கள். எல்லாமே சிற்றம்பலம் பிரிந்துவிடப்போகிறான் என்பதனால்த்தான். என்றைக்குமே மற்றவர்களுக்காகவே வாழப் பழகிப் போனவன். இன்றைய கையசைபின் பின் நாளைய வரலாறாய்ப் போகும் அவனை எண்ணி அவர்கள் விக்கித்துப்போய் நிற்க. அவனோ தோளில் பாரச்சுமையை தாங்க, மெல்லக்குனிந்து தோளில் கொழுவி இடுப்புப் பட்டியை கட்டினான். அவனது உறுதிபோலவே அந்தச் சுமையும் உறுதியாக அவனைப் பற்றிக்கொண்டது.
பறவைகளின் ராகங்களும், பூச்சிகளின் ரீங்காரமும், விலங்குகளின் இடைவிட்ட உறுமல்களும் காட்டுக்குள் கேட்டுக்கொண்டிருந்த பொழுதில் அந்தப் போராளிகளின் தழுவல்களின் பின்னால் கையசைப்புடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள். சிற்றம்பலம் தன் இயலாத காலால் இழுத்திழுத்து நடந்துகொண்டிருந்தான். அவன் நடந்துகொண்டிருந்தது அவனது கால்கலாலல்ல, மன வலிமையால்த்தான். ஏனென்றால் அவன் கடக்கப்போவது நான்கைந்து கி.மீ தூரமில்லை. நூற்றிப்பத்து கி.மீ. களையும் தாண்டிய தூரம்.
உடலை உட்புகுத்த முடியாத இறுகல் பற்றைகளுக்குள்ளால் தோளில் தாங்கிய அந்தப் பாரச்சுமையுடன் கைகளாலும் கால்களாலும் நடந்துகொண்டிருந்தார்கள். நான்கைந்து நாள் தொடர்ட்சியான பயணம். ஓய்வென்பது உணவுண்ணும் போது மட்டும்தான். நித்திரையைக் கண்டு நீண்ட நேரமானதால் கண்கள் சிவந்துபோக அந்த சுட்டெரிக்கும் வெயிலுக்குள்ளால் நடந்துகொண்டிருந்தார்கள். வியர்வை அடியில் தங்க இடமில்லாமல் அடியிலிருந்து வழிந்துகொண்டிருண்டிருந்தது.
இத்தனை துயர்களுக்குள்ளாலும் தன் தோழர்களுடன் நடந்துகொண்டிருக்கிற சிற்றம்பலம், இடையில் பாரத்தின் சுமையும் உடலின் வேதனையும் தாக்க அவனது கரங்கள் நிலத்தைத் தொட்டுவிட்டன். அவன் எழ முயசித்துக் கொண்டிருந்தான். ஆனால்… ஆனால் அது அவனால் முடியவில்லை. “கையைக் குடுங்கடா மச்சான் என்னால எழும்பேலாமல் கிடக்கு” என்றவன் தோழர்களின் உதவியுடன் மெல்ல எழுந்து ஒவ்வொரு அடியாக எடுத்தெடுத்து வைத்தான். உடலால் வழிந்த வியர்வையையும் கண்களால் வளிந்த நீரும் அவன் போகும் வழிகளில் தடங்களாகக் கிடந்தது.
தாகத்தால் வறண்ட நா தன்னிற் கடக்க அவனையறியாமலேயே அவனது கைகள் இடுப்பிலிருந்த தன்நீர்க்கானைத் தடவியது. ஆனால் தண்ணீர் முடிந்து நீண்ட நேரமாகி விட்டதை அவன் உணர்ந்துகொண்டு மெளனமாக நடந்து கொண்டிருந்தான்.
“இலக்குக்கு கிட்ட வந்திட்டம் மச்சான்” அந்தக்குரலினால் காய்ந்து வறண்டு போயிருந்த முகங்களில் இனம் புரியாத புத்துணர்ச்சி. நீண்ட பயணத்தின் முடிவில் கிடைக்கப்போகும் அந்த வெற்றிச்செய்தி.
சீனன்குடா விமானத்தளத்தின் எல்லை. எல்லோரும் ஒன்றுகூடித் திட்டத்தை மீள்நினைவு படுத்திக்கொண்டு தாக்குதளுகாய் நகர்ந்தார்கள். அரண்களை உடைத்தபடி கரும்புலி வேங்கைகள் ஆவேசத்துடன் உட்புகுந்தார்கள். அவர்கள் ஓடிச்செல்ல முயற்சித்தாலும் உடலின் களைப்பு அவர்களைத் தடுத்துக்கொண்டிருந்தது. ஆனாலும் கண்களுக்குத் தெரிந்த விமானம் நேக்கி ஓடினார்கள். சிற்றம்பலம் தன் கால்களை மடித்து நிலத்தில் நிலையெடுத்து தோளில் லாவை வைத்து இலக்கை தன் ஆயுதத்தின் குரிகாட்டியுடன் இணைத்துக்கொண்டான். அவன் சூடுவதர்க்குத் தாயாரானான். ஆனால் அதற்குள் எதிரியின் துப்பாக்கி ரவை அவன் உடலைத் தாக்க அந்த மண் சிவந்துகொண்டிருந்தது.
அவன் மீண்டும் எஞ்சிய சக்திகளை ஒன்றிணைத்து தன் ஆயுதத்தை இலக்குடன் இணைத்துக்கொண்டான். ஆனால் இப்போதும் துளைத்தன துப்பாக்கி சன்னங்கள். ஆனாலும் விசைவில்லை அழுத்தினான். அவன் கைகள் சோர்ந்தன. தன் உடல் இயக்கமற்றுப் போவதை அவன் உணர்ந்து கொண்டான்.
மெல்லச் சரிந்த அவனை அனைத்துத் தூக்க தோழர்கள் நெருங்கினார்கள். அவன் காலால் அவர்களை நெருங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தான். அவனது மார்பில் இருந்த வெடிமருந்துப் பொதியின் விசைவில்லை அழுத்தினான். அவன் நெஞ்சிலிருந்து ஓளிப்பிளம்புடன் கூடிய அதிர்வு அவன் தன் தோழர்களை விட்டுப் பிரிந்துவிட்டான்.
“வெள்ளம் வந்தா அணையை வெள்ளம் வாற இடத்தில்தான் கட்டவேணும். வீட்டைச் சுற்றிக் கட்டக்கூடாது” இது அவனது வார்த்தைகளல்ல, வாதங்களல்ல இதுவே அவனது வாழ்க்கை ஏனெனில் அந்த வருடத்தின் முதல் மாதத்தில் தன் தாயை இழந்து அந்த சோகம் மறையும் முன் மாசியில் தந்தையை இழந்த பின்னும் அடுத்து வந்த 25 நாட்களுக்குள் அவனால் அதை செய்ய முடிந்ததென்றால்……………………..
அவன் உச்சரித்தவை வெறும் வார்த்தைகளோ………… வாதங்களோ அல்லவே……………..!
நினைவுப்பகிர்வு:- புரட்சிமாறன்.
விடுதலைப்புலிகள் (மார்கழி, தை 2001) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”