பண்டாரவன்னியனின் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரம்…
பண்டாரவன்னியன் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரக் கடலில் கரும்புலித் தாக்குதல் 03.09.1995….
கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன்
பண்டாரவன்னியனின் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரம்.
கடல் தரையோடு கைகோர்க்கும் ஒரு நெய்தற் கிராமம்.
புரட்டாசி 3ம் நாளின் கருக்கல் பொழுது. நிலவற்ற வான் எதுவும் மின்னுதலற்ற ‘றாடர்‘ திரை.
அலைகடல் கடந்து அரசாட்சி படர்ந்த சோழப் பேரரசனின் கொள்ளுப் பேரர்கள் நீலவரிப் படகுகளை நீருக்குள் இறக்கினர்.
சுடுநீர்ச் சுரப்பிகளை முடியில் தரித்து தேசத்திற்கு மகிமையளிக்கும் தலைநகர் கடந்து…..
மீன்பாடுகின்ற ஒரு கரையோரக் கிராமத்தில் தரையேறும் பயணம்.
“கண்ணாளனின்” தோள்களில் தட்டி “நகுலன்” சிரத்தான்.
அணி புறப்பட்டது. அலை வழிவிட்டது. பயணம் விரைவுபட்டது.
ஆழியில் கவிந்திருந்த காரிருள் பிரித்து விடுதலைப்புலிகளின் படகணி விரைந்து கொண்டிருக்க….
இரவு 09:30 மணியை நேரம் கடந்து கொண்டிருக்க குச்சவெளியை அணி நெருங்கிக் கொடிருக்க…..
எதிர்பட்டன “டோறா”க்கள், தடைப்பட்டது பயணம். இயக்கப்பட்டன துப்பாக்கிகள்.
கடுஞ்சண்டை…..! சன்னங்கள் செய்த வர்ணஜாலம்….. இருள் வானில் கிழித்தன ஒளிக்கோடுகள்.
இந்து நாட்களுக்கு முன்னர்….
முல்லைத்தீவு ‘ஐரிஷ் மோனா‘ப் பிசகில்…..
இரண்டு ‘டோறா’க்களை இழந்த கணக்கை முடிக்கும் அவாவில் விரைந்து தாக்கினான் பகைவன்.
எதிர்த்து நின்று விடாமல் மோதிய கடற்புலிகளின் படகுகள் திடீரெனத் திரும்பியோடத் தொடங்கிவிட்டன. பகைவன் பூரித்துப் போனான். தலைகால் புரியாத மகிழ்வில் அவன் தன்னிலை மறந்தான்….! உற்சாகம் கரைபுரண்டோட “டோறா”க்கள் கலைத்துக்கொண்டோடின.
ஆனால் …..!
அது ஒரு தந்திரோபாயப் பின்வாங்கல்….
பொறிக்குள் விழ வைக்க விடுதலைப்புலிகள் செய்த ஒரு யுத்த உத்தி….!
மதிநுட்பத்தோடு நகர்த்திய வியூக வளைவு….
உவகை பொங்கியதால் பகைவன் ஊகிக்கத் தவறினான்.
ஆத்திரத்திலும், ஆனந்தத்திலும் அவன் நிதானமிழந்தான்.
துரத்தி….. துரத்தி…. அடித்தான்.
குச்சவெளியிலிருந்து புல்மோட்டை வரை இருபது நிமிட நேர மரண ஓட்டம்.
கடற்புலிகளின் படகுகளை “டோறாக்கள்” மிக வேகமாக நெருங்கின. படகுகளை முந்திக்கொண்டு சன்னங்கள் சீறின.
ஆகக் கடைசிப்பதிவு 280 மீற்றர் இடைவெளி, கடற்புலிகளையே கலைத்தடித்தவர்கள் என்ற பதக்கமொன்றைப் பெற அந்த “டோறாக்களின்” கட்டளை அதிகாரிகள் ஆசைப்பட்டிருக்கலாம்.
ஆசை மோசம் செய்துவிட்டது பகைவனுக்கு…..!
கலைத்தடிப்பதில் கவனமாயிருந்தவன் , அக்கம் பக்கத்தை அவதானிக்கத் தவறினான்.
அது ஒரு “…. போரியல் தவறு…..”
சுற்றிவரக் கருமை; கருமையோடு கடற்கரும்புலிகள்; கடற்கரும்புலிகளோடு வெடிகள் !
நகுலனும், கண்ணாளனும் அசுரவேகத்தில் அண்மித்தார்கள். அலையன்னை ஆராதித்தாள்.
ஏமாற்றப்பட்டதால் ஏதுமறியாத பகைவன் எதிர்பார்த்திருக்கவே மாட்டான்… பக்கவாட்டாக “டோறாவின்” பின் மூலையில் விழுந்தது இடி.
அதைக் காற்றிலே ஊதினார்கள் கடற்கரும்புலிகள். புல்மோட்டைக்கடலிலே எழுதினார்கள் வரலாற்றை.
இருளைக் கலைத்த பேரொளியோடு, செவியில் முழங்கியது பேரொலி. கடலதிர்ந்த அந்தக் கணப்போழுதிற்க்குப் பிறகு “டோறாவைக்” கடல் விழுங்கத் தொடங்கியது. கடற்புலிகளின் “றாடர்” திரையில் மின்னி மின்னி மறைந்த “டோறா” மெல்ல மெல்ல இல்லாமலே போய்விட்டது.
ஆனால்…..
சந்திரிக்கா அரசு சங்கதியை மறைத்து; முழ்கடித்த தேதியை இருட்டித்தது. தங்களது தப்பிவிட்டதாக தப்படமடித்தது.
ஆயினும்…
மறுநாள் பகல் முழுவதும் உலங்கு வானூர்த்தி ஒன்று கடலைத் தடவியதே ஏனாம்…?
பதிந்து பதிந்து கண்களால் துலாவியதே எதற்காம்….?
மீன்களை ஊடறுத்து அடிமண்ணில் தேடியதே எதையாம்…?
– உயிராயுதத்திலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”