நாட்டுப்பற்றாளர் மா. கனகரெத்தினம்
தொண்டனாக வாழ்ந்து மறைந்த நாட்டுப்பற்றாளர் மா. கனகரெத்தினம் !
அமரர் மா. கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அவர் விரும்பப்பட்டார்.
இப்படியான சிறப்புக்கள் பொருந்திய மட்டக்களப்பு மண்ணுக்கும், தமிழ் பேசும் நல்லுலகத்துக்கும் பெருமை சேர்த்த மா. கனகரெத்தினம் ஐயாவின் 25 ஆவது நினைவு தினம் இன்றாகும்.
எந்தவொரு காரியத்தைப் பொறுப்பெடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பது இவரது மாற்றுரு திறமை. சிறிய உதவிகளாக இருந்தாலும் சரி, பலரை தொடர்புகொண்டு முடிக்க வேண்டிய பெரிய வேலைகளாக இருந்தாலும் சரி எப்படியும் அதை முடித்தே தீருவார். முடியவில்லை என்று சாக்குப் போக்கு சொல்வது இவர் அகராதியிலேயே இல்லை.
எந்நேரமும் எவருக்காவது உதவிசெய்ய தயாராகவிருப்பது இவரது மற்றொரு பண்பு. தனக்குரிய பல வேலைக் கஷ்டங்களுக்கு மத்தியிலும் ‘உதவி’ என்று கோரிவந்த ஒருவரையும் தட்டிக் கழிக்கமாட்டார்.
மட்டக்களப்பு பிரஜைகள்குழு செயலாளராகவும், ஆரையம்பதி சமாதானக் குழு அமைப்பாளராகவும், நெருக்கடியான கட்டங்களில் எல்லாம், இவர் உயிரைத் துச்சமென மதித்து பணியாற்றியமை இங்கு நினைவு கூரத்தக்கது.
ஆரம்பகாலத்தில் விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவரும், விடுதலைப் போராளிகளினால் அன்பாக மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவருமான நாட்டுப்பற்றாளர் கனகரெத்தினம் அவர்கள் ஊருக்காகவும், சமூகத்திற்காகவும் ஆற்றிய பணிகள் பல. தளபதி அருணா, பொட்டு அம்மான், குமரப்பா, ரமணன், தளபதி றீகன் ஆகியோரின் பெரு மதிப்பைப் பெற்றவரும், அவர்களுடன் இணைந்து செயற்பட்டவருமான மா. கனகரெத்தினம், காத்தான்குடி, ஆரையம்பதி கிராமங்களைச் சேர்ந்த தமிழ் – முஸ்லீம் இனக்கலவரம் உச்சக்கட்டம் அடைந்திருந்த வேளையில் இரு சமூகங்களிடையேயும் இவர் சென்ற சமாதானத் தூதின் மூலம் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக செயற்பட்ட மாபெரும் மனிதர்.
இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், மேற்படி அமைப்புகள் மூலமும் இவர் பெரிதும் உதவினார்.
தமிழ், முஸ்லீம் இனங்களுக்கு அவர் செய்த அந்த உன்னத பணியை இன்றுவரை அந்த மக்கள் நினைவுகூருவதோடு இன்னும் நன்றியுடையவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
தற்பொழுதைய கிழக்கின் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மிகவும் கேவலமாக தங்களின் அரசியல் இலாபத்திற்காகவும், விடுதலைப்புலிகள் கட்டிக்காத்த தேசிய ஒற்றுமையை அழிக்கும் நோக்கிற்காகவும் அந்த மாமனிதன் செய்த மாபெரும் தேசியப் பணியை ஒரு நொடியில் அழித்து விட்டிருக்கிறார்கள். எனவே மக்கள் இப்படியான இனத்துரோகிகளைக் இனம்கண்டு அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
– ஆரையம்பதியில் இருந்து தமிழின் தோழன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”