சுதுமலைப் பிரகடனம்
இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது.
நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன். தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.
இதன் பின்னர் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆயுதங்கள் பலாலி இராணுவ முகாமில் வைத்து இந்திய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.
ஆனால் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி , தலைவர் பிரபாகரனுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாது இழுத்தடித்து வந்ததோடு, தமிழ்த் துரோகக் குழுக்களை தமிழீழப்பகுதிகளில் கொண்டு வந்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் எதிரான செயல்களைப் புரிய அவர்களை ஏவிவிட்டார்.
தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 .08.04….
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். அந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது
இலங்கை அரசிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படப்போகின்றது என்றும், ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்’ என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தம் புலிகளின் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அந்த இந்திய அதிகாரிகள் புலிகளிடம் தெரிவித்தார்கள்.
தமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள்|| என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
19.07.1987 இடம்பெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பல தடவைகள் இந்திய அதிகாரிகளுக்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. தவிர்க்க முடியாமல் இந்திய நேரடித் தலையீடுகள் ஈழப் பிரச்சனையில் ஏற்பட்ட பின்னர், அதனை எப்படியாகிலும் எதிர்கொண்டேயாக வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இருந்தது. அதனால் இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியா பயணமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியில் தீர்மானித்தார்.
இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணமாக விமர்சகர்களால் கருதப்பட்ட திரு.பிரபாகரன் அவர்களின் அந்த இந்தியப் பயணம், 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய ஹெலிக்காப்பரில் திரு.பிரபாகரன் புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்டார்.
புதுடில்லி அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான குழுவினர், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள ‘அஷோகா’ ஹோட்டலில், 518ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். தங்கவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவதை விட, ‘சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்’ என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
புலிகளின் தலைவர்கள் இருந்த விடுதியின் வெளியே இந்தியாவின் ‘கறுப்புப் பூனைகள்’ பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருந்தார்கள். அறையில் இருந்த தலைவர்கள் வெளியே நடமாட இந்தக் ‘கறுப்புப் பூனை’ பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள். புலிகளின் தலைவர்கள் வெளியில் எவரையும் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உள்ளே இருந்த தொலையேசியின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. பேச்சுவார்தைக்கு என்று கூறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள், ஒருவகையில் சிறைவைக்கப்பட்டது போன்றே நடத்தப்பட்டார்கள்.
இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் நேர்மையில் புலிகளைச் சந்தேகம் கொள்ளவைத்த மற்றுமொரு சம்பவமாக இந்த ‘அஷோக்கா ஹோட்டல்’ சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.
இந்தியா மீது புலிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த ஒரு சம்பவமாக இந்த சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.
இந்தியாவை நம்பி அதன் விருந்தினராக வந்திருந்த புலிகளின் தலைவரை கைதுசெய்து சிறைவைத்தது போன்று நடந்துகொண்ட இந்தியாவின் நம்பிக்கைத் துரோகச் செயலே, இந்தியா பற்றிய ஒரு எதிர் நிலைப்பாட்டை புலிகள் பிற்காலத்தில் எடுப்பதற்கும் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.
இந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும், இந்தியாவின் முகத்தில் கரிபூசவேண்டும் என்று ஒவ்வொரு ஈழத்தமிழனையும் நினைக்கவைத்த ஒரு சம்பவமாக இந்தச் சம்பவத்தைக் பல இராணுவ ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை அடைத்துவைத்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒப்பந்தத்தை அவர் மீது திணித்த இந்திய அரசின் அடாவடித்தனத்தையும், எதேச்சாதிகாரத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும், ஈழத் தமிழர்கள் இன்றுவரை மனதினில் நிறுத்தியபடிதான் இருக்கின்றார்கள்.
24ம் திகதி முதல் ‘அஷோகா’ ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர்களை, 28ம் திகதியே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார்.
புலிகளின் தலைவர்கள் வெளித் தொடர்புகள் எதுவும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், ‘புலிகள் ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள்’ என்று இந்திய தரப்பினரால் வெளி உலகிற்கு கூறப்பட்ட பொய்யையும் மறுப்பதற்கு எவருமே இல்லாமல் போயிருந்தது.
சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ராஜீவ் காந்தி, பலவாறான நெருக்குதல்களையும், மிரட்டல்களையும் பிரயோகித்து புலிகளை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தார்.
வெறும் கலந்துரையாடல்களுக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டிருந்த தமிழீழ தலைவர்கள் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததானது, ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் மன்னிக்கமுடியாத துரோகத்தை ஈழத் தமிழருக்கு வெளிப்படுத்தியிருந்தது.
இந்தியத் தலைவருடனான சந்திப்பின் போதான அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் காணப்பட்ட மனநிலை பற்றி, அப்பொழுது தி.மு.கா.வின் ‘போர் வாள்’ என்று அழைக்கப்பட்டவரும், தற்போதைய ம.தி.மு.கா.வின் தலைவரும்,, ஈழ விடுதலை பற்றி பேசி ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றவருமான வை.கோபாலசாமி (வைகோ) பின்னர் ஒரு தடவை நினைவு கூர்ந்திருந்தார்.
அஷோகா ஹோட்டலில் பிரபாகரன் அவர்கள் மீதான கடும் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின்னர், திரு. பிரபாகரன் அவர்கள் வை.கோபாலசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார். அப்போது திரு.பிரபாகரன் தன்னிடம் தெரிவித்ததை வை.கோபாலசாமி இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்,
அவரது குரல் இப்பொழுதும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது. பிரபாகரன் என்னிடம் கூறினார்: நாங்கள் இந்திய அரசாங்கத்தினாலும், பிரதமர் ராஜீவ் காந்தியினாலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம். எனது முதுகில் குத்தப்பட்டுவிட்டது. என்னிடம் சயனைட் கழுத்தில் தொங்குகின்றது. தற்கொலை செய்துவிடலாமோ என்றுகூட நினைத்தேன். ஆனால், பல்லாயிரக்கணக்கான எனது சகோதர சகோதரிகளை நினைத்து என்னால் அந்த முடிவை எடுக்கமுடியவில்லை. இவ்வாறு திரு.பிரபாகரன் தெரிவித்ததாக வைகோ நினைவுகூர்ந்திருந்தார்.
இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் இந்த துரோக நடவடிக்கையே, பின்னாளில் இந்தியாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை புலிகள் எடுக்கக் காரணமாக அமைந்திருந்தன.
இந்தியத் தலைவருக்கு எதிரான துன்பியல் சம்பவம் இடம் பெறவும், இந்திய அரசின் இந்த நம்பிக்கைத் துரோகச் செயலே பிரதான காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இப்படியெல்லாம் இந்தியாவால் நெருக்கடிக்குள்ளான நிலையில் அந்த ஒப்பந்தத்தை ஏற்றதாகக் கூறி 02.08.1987 அன்று யாழ்ப்பாணம் திரும்பிய புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஒரு உரையை நிகழ்த்தினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழப் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திய முதலாவது உரை என்று அந்த உரை பிரசித்தி பெற்றிருந்தது.
திரு.பிரபாகரன் அவர்களது அந்த உரை சுதுமலைப் பிரகடனம் என்றே வரலாற்றில் பதிவாகியுள்ளது. ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’, ‘திம்புக் கோட்பாடு’, என்பது போன்று சுதுமலையில் புலிகளின் தலைமை ஆற்றிய உரை ‘சுதுமலைப் பிரகடனம்’ என்றே அழைக்கப்படுகின்றது.
இந்தியாவால் ஏமாற்றப்பட்ட நிலையில், இந்தியாவால் முதுகில் குத்தப்பட்ட நிலையில், இந்தியாவால் புலிகள் நிராயுதபாணிகளாக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவுத் திகதிகள் தீர்மானிக்கப்பட்ட நிலையில், இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இந்தியப்படைகளுக்கு எதிராகப் போராடுவது என்று புலிகள் தீர்மானம் எடுத்துவிட்ட பின்னர்தான், புலிகளின் தலைவரது சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
புலிகளது சுதுமலைப் பிரகடனத்தின் தலைப்பு
‘நாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம்” -இதுதான் விடுதலைப் புலிகளின் சுதுமலைப் பிரகடனத்தின் தலைப்பு.
விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த சுதுமலைப் பிரகடனத்தின் சில வாக்கியங்களை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்:
எமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?
இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.
இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.
ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப்படைகளுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.
நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.
எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன.
எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம்.
மேலே குறிப்பிடப்பட்ட வாக்கியங்கள் அனைத்துமே இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் மேற்கொண்ட சுதுமலைப் பிரகடத்தில் உள்ளடக்கப்பட்ட வாக்கியங்கள்.
திரு.பிரபாகரன் அவர்கள் இந்தச் சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளும் முன்னதாக மற்றொரு கசப்பான சம்பவத்தையும் அவர் இந்தியாவினால் எதிர்கொண்டிருந்தார்.
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம்,16ம்,17ம் திகதிகளில் பெங்களுரில் நடைபெற இருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துளைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியா வருவதாக இருந்தது. அவரது இந்திய விஜயத்தின் போது புலிகள் மற்றும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள் தரப்பில் இருந்து ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்று இந்தியாவின் புலனாய்வுத் துறை இந்தியப் பிரதமரை எச்சரிக்கை செய்திருந்தது.
அப்பொழுது ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு எதிராக இந்தியா தனது நகர்வை ஆரம்பித்திருந்த காலம். ஆகவே, சார்க் மாநாட்டை அடிப்படையாக வைத்து புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க ராஜீவ் காந்தி எண்ணினார்.
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி அதிகாலை தமிழ் நாட்டிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் ஒன்றுவிடாமல் முற்றுகையிடப்பட்டு அவர்களது ஆயுதங்கள் தமிழ் நாட்டுப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகுதியினுள், SAM-7 (Surface to Air Missile) விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், சக்திவாயந்த தொலைத்தொடர்பு கருவிகளும் அடங்கி இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகி இருந்தன.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தமிழ் நாடு பொலிஸார் கைது செய்தார்கள். பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவரை தமிழ் நாடு பொலிஸார் புகைப்படம் எடுத்ததுடன், அவரை அங்கு அவமானப்படுத்தும் விதத்திலும் நடந்துகொண்டார்கள்.
இந்தியாவின் பேச்சை மீறினால் இப்படியான இன்னல்களையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை புலிகளுக்கு உணர்த்தவே இந்தியா இந்த நகர்வை எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் பிரபாகரன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் இருந்த புலிகளது அலுவலகத்தில் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்த புலிகளின் ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றை புலிகளிடம் ஒப்படைக்கும்படி தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆர். உத்தரவு பிறப்பித்தார்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் முதற் தடவையாக ஒரு சாத்வீகப் போராட்டத்தை நடாத்தும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவமே, இந்தியா மீது புலிகளை பகைகொள்ள வைத்த முதலாவது சம்பவம் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றர்கள்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இந்தியா மீது முற்றாக நம்பிக்கை இழந்த நிலையில் புலிகளின் தலைவர் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழப்பாணம் திரும்பினார்.
அதாவது இந்தியா மீது விடுதலைப் புலிகள் முற்றாகவே நம்பிக்கை இழந்த நிலையில், இந்தியா மீது விடுதலைப் புலிகள் மிக மோசமாகப் பகை கொண்ட நிலையில், இந்தியாவை நம்பி இனிப் போராட்டம் நடாத்துவதில்லை என்று புலிகளின் தலைமை நிலைப்பாடு எடுத்த நிலையில், இந்தியா ஆயுதக்களைவு செய்ய முற்படும்பொழுது இந்தியப்படைகளுடன் மோதுவதென்று புலிகள் தீர்மானம் எடுத்தபின்பு, இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்று புலிகளின் தலைமை முடிவுசெய்த பின்னர்தான், இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் பலிகளின் தலைமை சுதுமலைப் பிரகடனத்தை மேற்கொண்டிருந்ததை இங்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றேன்.
இன்னும் குறிப்பாகக் கூறுவதானால், இந்தியாப் படைகளுடன் மோதுவதற்கு முடிவெடுத்த நிலையில், சுதுமலைப் பிரகடனம் ஊடாக திரு.பிரபாகரன் இந்தியாவை சிறிது காலத்திற்கு கையாள முயன்றார் என்பதைத்தான் நாம் இங்கு கவனகத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
திடுதிப்பென்று இந்தியப் படைகள் வந்திறங்கிவிட்டன. வந்ததும் வராததுமாக புலிகளிடம் ஒரு ஆயுதக்களைவை இந்தியப்படைகள் செய்ய இருந்தன. ஈழத்தமிழர்களும் இந்தியாவை தமது காவல்தெய்வங்களாக நினைத்து கிட்டத்தட்ட பூசை செய்யும் நிலையில் நின்றுகொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டு தமிழர்களும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவே இந்தியா அங்கு சென்றுள்ளதாக நம்பிக்கொண்டிருந்தார்கள்.
தமிழ் மக்களின் மனங்களில் இந்தியாவின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டவேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தது.
திலீபன் தலைமையிலான அரசியல் பிரிவினர் அந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருக்க, மறுபக்கம் இந்தியப் படையினருடன் மோதுவதற்குத் தேவையான ஆயுதங்களை குமரப்பா, புலேந்திரன் தலைமையிலான குழுவினர் பல்வேறு மார்க்கங்களில் சேகரிக்க, தமிழ் நாட்டில் இருந்த புலிகளின் பல தளங்களை கிட்டு தலைமையிலான குழுவினர் வேறு இடங்களுக்கு மாற்ற, மாத்தையா தலைமையில் வன்னிக் காடுகளில் பாரிய இரகசியத் தளம் அமைக்கப்பட, அதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் பணியைத்தான் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலைப் பிரகடனம் செய்திருந்தது.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”