தமிழீழம் திரும்புதல்
தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்கு மத்திய மாநில அரசுகளின் நிர்ப்பந்தம் இருந்து கொண்டேயிருக்கும். இந்திய அரசுடன் பேசவரும்போது டில்லியிலோ அல்லது சென்னையிலோ தன்னைக் கொலை செய்து தமிழீழப் போரை அழிக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டில் இருக்கும்வரை ஆபத்து நீடிக்கவே செய்யும். எனவே தமிழீழம் திரும்பிச் செல்வதன் மூலம் விடுதலைப் போர் மேலும் வலுவடையும் என்ற உறுதியான முடிவில் தலைவர் பிரபாகரன் 1987ம் ஆண்டு தை 3ம் நாள் தமிழீழம் திரும்பினார்.
தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பியதனை அறிந்த சிறீலங்கா அரசும் அதன் படைகளும் கலக்கம் அடைந்த வேளையில், இந்திய அரசும் அதன் உளவுப்படையும் குழப்பம் அடைந்தன. இனி எவ்விதம் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடுவது என்று குழம்பிய நிலையில் சிறீலங்காப் படைகளின் சில மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஒத்துழைத்து அதன்மூலம் தமிழீழ மக்களுக்கு ஏற்படும் பாரிய அழிவுகளில் இருந்து அவர்களை மீட்கும் ~~இரட்சகர்~~ என்ற போர்வையில் தமிழீழத்தில் தன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் எனத்திட்ட மிட்டு இந்திய அரசு செயற்பட்டது.
1987 வைகாசி 1ம் நாள் உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழமக்களுக்கு ஆற்றிய உரையில் , – நாம் போராடி , இரத்தம் சிந்தி, எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும். எமக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி. இன்று இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் ஒரு உறுதி செய்து கொள்வோம். அதாவது சுதந்திர தமிழீழ தனி அரசுதான் எமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு. இறுதியான தீர்வு. இந்தத் தனி அரசை அமைக்க நாம் எமது உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம். இது எமது தொழிலாளர் தினப் பிரகடனமாக அமையட்டும்” என்றார்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”