புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்
புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்;தில் இருந்தே உறுதியும், துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில், தலைவர் பிரபாகரன் அவர்கள், தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடு, அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார்.
(1) புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, 1975 ஆடி 27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்து அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்ப்பாண மேயருமான அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த புதிய தமிழ்ப்புலிகள் மேயரின் கார்ச் சாரதியை மடக்கி, அவரது காரிலேயே ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.
இவ்வெற்றிகரமான முதலாவது இராணுவ நடவடிக்கையைத் தானே வகுத்து அதற்குத் தலைமை தாங்கிச்சென்று செய்து முடித்த பெருமை தலைவர் பிரபாகரன் அவர்களையே சாரும். தமிழீழ மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க முயலும் தமிழ்த் துரோகிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்ததுடன் சுதந்திர தாகம் கொண்ட தமிழ் இளைஞரைப் பொறுத்தவரை இந்நடவடிக்கை தமிழீழ விடுதலையை நோக்கிய நீண்ட, கடினமான பயணத்தில் தலைவர் பிரபாகரனின் ஆளுமையிலும் தலைமைத்துவத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் அமைந்தது.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”