கப்டன் அன்பரசன்
|| தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன் கப்டன் அன்பரசன்
‘ஐயா’ என்றுதான் அவன் எங்களால் அழைக்கப்பட்டான். அவன் அதை விரும்பாதபோதும், சிலவேளைகளில் ‘இப்பிடிக் கூப்பிட்டா இனி நான் கதைக்க மாட்டன்’ என்று விசனத்துடன் சொன்னாலும் இறுதிவரை நாங்கள் அவனை ‘ஐயா’ என்றுதான் கூப்பிட்டோம். மற்றப் பிரிவினர் அவனை அன்பரசன் என்று கூப்பிட்டாலும் நாங்கள் அவனை ‘ஐயா’ என்றுதான் அழைப்போம். அவன் யாழ்ப்பாணத்தில் ஐயர் குடும்பமொன்றைச் சேர்ந்தவன் என்பதுதான் அதற்குக் காரணம்.
இயக்கம் அவனுக்கு வைத்த பெயர் அன்பரசன். அவனது வீட்டுப்பெயர் சரியாகத் தெரியாது. பொதுவாகவே போராளிகளின் இயற்பெயர்கள் மற்றவர்களுக்குத் தெரியாமலேயே இருக்கும். முன்பு அவனோடு படித்த ஒருவன் ஒருமுறை வீதியிற் கண்டு அவனைக் கூப்பிட்டபோது அவனது பெயர் இறுதியில் ‘சர்மா’ என்று முடியுமென்பதை அறிந்துகொண்டோம்.
அன்பரசனை நான் சந்தித்தது 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில். வெவ்வேறு கடமைகளில் இருந்த நாம் ஒரு கற்கைநெறிக்காக ஓரிடத்துக்கு வந்திருந்தோம். அதன்பின் அவனது இறப்புவரை ஒன்றாகவே இருந்தோம்.
அன்பரசன் 1995 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் போராட்டத்தில் இணைந்தான். ‘கெனடி -1’ என்ற பெயரில் நடத்தப்பட்ட அடிப்படைப் பயிற்சி முகாமில் தனது பயிற்சியை நிறைவு செய்தான். அதன்பின்னர் இம்ரான்-பாண்டியன் படையணியில் கடமையாற்றினான்.
கற்கைநெறியில் பல படையணிகளிலிருந்தும், துறைகளிலிருந்தும் போராளிகள் பங்கெடுத்தனர். ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் தளமமைத்து எமது கற்கைநெறி தொடங்கியது. தள அமைப்பு வேலைகள் முடிந்து படிப்புத் தொடங்கிக் கொஞ்ச நாட்களிலேயே ‘ஜெயசிக்குறு’ தொடங்கிவிட்டது. அதுவும் முதலிரு நாட்களிலேயே நெடுங்கேணிப் பகுதியை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிவிட்டது.
எமது தளத்துக்கும் நெடுங்கேணியில் நிற்கும் இராணுவத்துக்குமிடையே அடர்ந்த காடு மட்டுமே இருந்ததால் சண்டையொன்றை எதிர்கொள்ளும் நிலைக்கு எமது கற்கைநெறித் தளம் மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவை வந்தது. சண்டைகள் வலுக்க நாமும் இடங்கள் மாறிமாறி நகர வேண்டிவந்தது. ஜெயசிக்குறுவில் மக்கள் மட்டுமன்றி நாமும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம். நமது படிப்பும் இழுபட்டுக்கொண்டிருந்தது. ஜெயசிக்குறு இராணுவத்தினர் மீது நடந்த முதலாவது வலிந்த தாக்குதலான தாண்டிக்குளச் சமர் தொடக்கம் அதன்பிறகு நடந்த பல சண்டைகளுக்கு படித்துக்கொண்டிருந்த அணிகளும் அழைத்துச் செல்லப்பட்டன. அவற்றில் வீரச்சாவுகள், காயங்கள் என்று அணிகள் சேதமடைய மிகுதிப் பேரோடு படிப்புத் தொடர்ந்தது.
இடையிடையே ஒவ்வொரு படைப் பிரிவும் துறையும் ஓரிருவரை மீள அழைத்துக் கொள்ளும். சிலவேளைகளில் படிப்பு முற்றாக நிறுத்தப்பட்டு அணிகள் தத்தமது இடங்களுக்குச் சென்று தமது பணிகளைத் தொடரும். பிறகு மீண்டும் படிப்பு நின்ற இடத்திலிருந்து தொடங்கும். மீளத் தொடங்கும்போது இன்னும் சிலர் குறைந்திருப்பார்கள். ஜெயசிக்குறுவோடு தொடங்கிய படிப்பு இழுபட்டு இழுபட்டு பதினான்கு மாதங்களின் பின்னர் முடிவடைந்தது. தொடங்கிய போதிருந்த போராளிகளின் எண்ணிக்கையில் சரி அரைவாசிப் பேர்தான் அந்தக் கற்கைநெறியை முடித்தனர். அதற்கு முன்பே வீரச்சாவடைந்தவர்களில் கப்டன் அன்பரசனும் ஒருவன்.
பழகுவதற்கு மிகவும் சுவாரசியமாக இருப்பான் அன்பரசன். அவனது வேலைகளில் நேர்த்தியும் அழகுணர்ச்சியும் நிறையவே இருக்கும். காட்டில் தளம் அமைத்துக் கொண்டிருக்கும்போது மற்றவர்களுக்கு நிறையவே கரைச்சலைக் கொடுப்பான். கொட்டில் போடத் தடிகள் வெட்டும்போதுகூட அவனது தொல்லை தொடரும். நடப்படும் கப்புகள் ஒரே மொத்தமாக இருப்பது தொடக்கம், அவை ஒரே நிறமாக இருப்பது வரை சில்லறை விடயங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பான்.
“ஐயா, பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டியள் போல இஞ்ச ஆரும் கொட்டில் வடிவு பாத்து மார்க்ஸ் போடப்போறாங்களோ? இருக்கிறதுக்கு நல்ல பலமான கொட்டில் போட்டாச்சரி. அதுவும் எத்தினநாள் இஞ்ச இருக்கப்போறோமோ தெரியேல. சும்மா முட்டையில மயிர் பிடுங்கிற வேலையை விட்டிட்டுச் சும்மா இரும்.”
என்று மற்றவர்களிடம் நல்ல பேச்சு வாங்குவான். ஆனால் விடாப்பிடியாக நின்று தான் நினைத்தமாதிரியே கொட்டிலைப் போடவைத்து விடுவான். சாப்பாட்டுப் பாத்திரங்கள் வைக்கும் பரண் அமைப்பதென்றால் சும்மா வரிச்சுத்தடிகளை வைத்து வரிந்து பரண் அமைத்துவிடுவோம். மறுநாள் பார்த்தால் அவையெல்லாம் கழற்றி எறியப்பட்டு புதுப்பரண் அமைக்கப்பட்டிருக்கும். விண்ணாங்குக் கட்டைகளைப் பிளந்து, சீவி அழகாக அடுக்கிக் கட்டப்பட்டிருக்கும் அப்பரண்.
எதையும் ஆராய்வதில் துருதுருவென்றிருந்தான். அவன் ஒரு வானொலிப் பெட்டி வைத்திருந்தான். அதைக் கழற்றிப் பூட்டாத நாளேயில்லை. அதற்காக எல்லோரிடமும் பேச்சு வாங்கிக் கொண்டேயிருப்பான். வானொலி கொஞ்சம் கரகரத்தாலும் உடனே அதைச் சரிசெய்ய வேண்டுமென்பது அவனெண்ணம். புலிகளின் குரலில் தொடர்நாடகம் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் பெட்டியைக் கழற்றுவான். அவனைத் திட்டக்கூட நேரமில்லாமல் மற்றக் கொட்டில்களுக்கு ஓடவேண்டும் நாடகத்தைக் கேட்க.
“ஐயா, ஒழுங்காத்தானே அது பாடிக்கொண்டிருக்கு. பிறகென்ன கோதாரிக்கு புடுங்கிக் கொண்டிருக்கிறீர்?” என்று அடிக்கடி யாராவது பேசிக்கொண்டேயிருப்பார்கள்.
1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம். கற்கை நெறியின் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தோம். வெடித்தல் தொகுதிகளின் பொறிமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலுக்காக இயக்கத்தின் பொறிமுறைக் களஞ்சியம் இருக்கும் இடத்திற்கு அனைவரும் போயிருந்தோம். ஒருகிழமை அங்கேயே தங்கியிருந்து அனைத்து வெடிபொருட்களையும் பார்த்துப் படித்துக்கொள்வதே திட்டம்.
ஜூன் மாதம் நான்காம் நாள். அதுவொரு வியாழக்கிழமை. காலையிலேயே படிப்புத் தொடங்கிவிட்டது.
ஒவ்வோர் அறையிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெடிபொருட்கள் செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அனேகமானவை நெடுக்குவெட்டுமுகமாக மூன்றிலொரு பகுதி வெட்டி அகற்றப்பட்டு, அவற்றின் உள்ளமைப்பைப் பார்வையிடக் கூடியவாறு வைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே தனித்தனியாகப் படித்திருந்த பொறியமைப்புக்களை ஒன்றாகவே வைத்து முழுமையாக அறிந்து கொள்வதே அந்த ஒரு கிழமைக்குரிய செயற்றிட்டம்.
ஆறுபேர் கொண்ட அணிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வோர் அணிக்கும் ஓரறை என்று வழங்கப்பட்டது. அணிகள் அறைமாறி அறைமாறி எல்லாம் பார்த்து முடித்துவிட்டன. பின் ஒரு சிறிய இடைவேளை. அதன்பின் அறைக்கொருவரைப் பொறுப்பாக நியமித்துவிட்டு, ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் விரும்பிய அறையில் போய் வெடிபொருட்களைப் பார்த்து விரிவாக அறிந்து கொள்ளலாம், ஆனால் ஓரறையில் ஆறுபேர்தாம் அதிகபட்சமாக இருக்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நாம் முதலிற் சென்றது கையெறிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு. விதவிதமான கையெறிகுண்டுகள் – வெளிநாட்டுத் தயாரிப்பு, இயக்கத் தயாரிப்பு, பயன்பாட்டிலில்லாமற் போய் தசாப்தங்கள் ஆகிவிட்ட அரிய கைக்குண்டுகள் என்று சுமார் 300 வரையான கையெறிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் மூன்றிலொரு பகுதி நெடுக்குவெட்டுமுகமாக வெட்டியெடுக்கப்பட்டிருந்தன. அவற்றின் பொறித் தொகுதிகள் கெற்புடன் (Detonator) சேர்த்து அகற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் குண்டுகள் வெடிமருந்துடன் இருந்தாலும் அவை பாதுகாப்பான நிலையிலேயே இருந்தன.
அகற்றப்பட்ட பொறித்தொகுதிகள் தனியாக வைக்கப்பட்டிருந்தன. பார்த்தறிவதற்கு ஏதுவாக அவையும் நெடுக்குமுகமாக வெட்டப்பட்டிருந்தன. சில பொறித் தொகுதிகள் கெற்புடன் சேர்ந்திருந்ததால் இன்னும் ஆபத்தான நிலையிலேயே இருந்தன. எவரும் தொட்டுப் பார்க்கக்கூடாது என்ற அறிவிப்போடு அவை தனியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
கையெறிகுண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நாம் போனபோது அன்பரசன் எம்மோடு இருக்கவில்லை. விலாவாரியாக பார்வையிட்டுவிட்டு ‘ஒரு செக்கன் குண்டு’ என அழைக்கப்படும் குண்டின் பொறிமுறைத் தொகுதியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தோம். நானும் இன்னொருவனும் தரையில் அமர்ந்திருக்க இன்னும் நாலுபேர் எம்மைச் சுற்றி குனிந்தபடி நின்றிருந்தனர்.
தீடீரென்று ‘டப்’ என்றொரு சத்தம் என் பின்னால் கேட்டது. திரும்பினேன். எனக்கு நேர்பின்னே அன்பரசன். கையில் ஏதோ இருந்தது. முகம் வெளிறியிருந்தது. ஒருகண நேரம்தான். நிலைமையின் விபரீதத்தை நான் அறிவதற்குள் எல்லாம் நடந்துவிட்டது. அன்பரசன் அறைக்கதவை நோக்கிப் பாய்ந்தான். கதவு நிலைகளுக்கிடையில் ஒரு வெளிச்சம், கூடவே பெரியதொரு சத்தம்.
என்ன நடந்ததென்று உடனடியாக எனக்குப் புரியவில்லை. ‘டப்’ என்ற வெடிப்பிச் சத்தம் கேட்டதும் நான் திரும்பிப் பார்த்தபோது அன்பரசன் நின்றதுதான் தெரியும். அன்பரசன் எப்போது அந்த அறைக்குள் வந்தானென்று தெரியவில்லை. நடக்கப் போகும் விபரீதத்தை நான் உணரக்கூட இல்லை. அதற்குள் எல்லாம் நடந்துவிட்டது. கதவு நிலைகளுக்கிடையில் அன்பரசனின் வயிற்றோடு ஒட்டி குண்டு வெடித்தபோது அவனின் முதுகின் பின்னே நாமிருந்ததால் நிலத்தில் இருந்த எமக்குக் காயமேதுமில்லை. கதவு நிலையடியில் நின்று கொண்டிருந்தவர்களில் இருவர் கடுமையான காயத்துக்குள்ளாகினர். அன்பரசன் கதவு நிலைகளுக்கிடையில் சுருண்டு வீழ்ந்தான்.
பொதுவாக, கையெறிகுண்டானது எறிந்தபின் குறிப்பிட்ட தாமத நேரத்தில் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்படுவது. பெரும்பாலும் இத்தாமத நேரம் நான்கு வினாடிகளாக அமைந்திருக்கும். அன்பரசன் கையில் வைத்திருந்தது ‘M75’ ரக கைக்குண்டு. அது 3000 சிதறுதுண்டுகளையும் 75 கிராம் C4 வெடிமருந்தையும் கொண்டிருக்கும். உள்ளமைப்புத் தெரிவதற்காக ஒருபகுதி வெட்டியெடுக்கப்பட்டிருந்ததால் இவற்றின் அளவு அக்குண்டில் குறைவாக இருந்தது.
தனித்தனியே கிடந்த கைக்குண்டையும் அதற்குரிய வெடித்தற் பொறிமுறைத் தொகுதியையும் எடுத்துப் பொருத்தியநிலையில் என்ன காரணத்தாலோ பொறிமுறை செயற்பட்டு, வெடிப்பி வெடித்துவிட்டது. அதுதான் முதலிற் கேட்ட ‘டப்’ சத்தம். குண்டையும் பொறியமைப்பையும் ஒன்றாக்கியது அன்பரசன்தானா அல்லது வேறுயாரும் பொருத்திப் பார்த்துவிட்டு தவறுதலாக விட்டுப் போனதை அன்பரசன் தூக்கிப் பார்த்தானா என்பது விடை தெரியாத கேள்விகள்.
உள்ளமைப்பைப் பார்வையிடுவதற்காக நெடுக்காக வெட்டப்பட்டு ஒருபகுதி அகற்றப்பட்ட காரணத்தால் அப்பொறியமைப்பு நியம தாமத நேரமான நான்கு வினாடிகளுக்குத் தாமதத்தைத் தரவில்லை. கிட்டத்தட்ட ஒரு வினாடி என்றளவுக்கு மிகக்குறைந்த தாமத நேரத்திலேயே குண்டு வெடித்துவிட்டது.
அன்று ஒரு பேரழிவிலிருந்து இயக்கம் தப்பியது. அன்பரசன் நின்ற இடத்திலேயே குண்டுவெடித்திருந்தால், அவ்வறையிலிருந்த மற்றக் குண்டுகளும் – அதன் காரணத்தால் பக்கத்து அறைகளிலிருந்த அனைத்து வெடிபொருட்களும் வெடித்து அக்கட்டடமே தகர்ந்திருக்கும். கற்கைநெறியை முடிக்குந் தருவாயிலிருந்த முப்பது வரையான போராளிகள், பொறுப்பாளர்கள், ஆசிரியர் என அனைவரும் மாண்டிருப்பர். எல்லாவற்றுக்கும் மேலாக, பல்லாண்டுகளாகச் சேர்த்துச் சேர்த்து வைத்திருந்த வெடிபொருட்களின் மாதிரிகள், கற்பித்தல் தேவைக்கேற்றாற்போல் வடிவமைக்கபட்டிருந்த வெடிபொருட்கள், பொறியமைப்புத் தொகுதிகள் என்று மிகப்பெரும் போர் அறிவியற் சொத்துகள் அழிந்து போயிருக்கும்.
அன்பரசனுக்கு இருந்தது ஒரு கண நேரந்தான். சிந்திக்க நேரமேயில்லை. அவ்விடத்திலேயே குண்டு வெடித்தால், அல்லது யன்னல் வழியாகக் குண்டை எறியமுனைந்து அது கம்பிகளிற்பட்டு மீண்டும் உள்ளே விழுந்தால் நடக்கப்போகும் அழிவு விபரீதமானது. யோசிப்பதற்குக்கூட மில்லி செக்கன்களைச் செலவிடமுடியாத தருணம். ஆனாலும் அவனது மூளை சரியாகவும் வேகமாகவும் வேலைசெய்தது. சாவின் விளிம்பிற்கூட பதற்றப்பட்டுவிடவில்லை. திகைத்துப் போய் அப்படியே நிற்கவில்லை.
குண்டை தனது வயிற்றோடு சேர்த்தபடி கதவை நோக்கிப் பாய்ந்தான். சிதைந்த இடுப்போடு, பெருமளவு சிதறுதுண்டுகளை உள்வாங்கிய அவனது உடல் கதவு நிலைகளுக்கிடையில் துவண்டது. அன்று தனது உயிரை மட்டும் கொடுத்துப் பேரழிவைத் தடுத்தான் கப்டன் அன்பரசன்.
அன்பரசன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது 04/06/1998. அதுவொரு வியாழக்கிழமை. அதற்கு அடுத்துவந்த வியாழக்கிழமையும் அதேயிடத்தில் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்தது.
|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||