போரும் சமாதானமும் ஒரு பார்வை
புகழ் பூத்த ரஷ்ய எழுத்தாளர் லியோ தால்ஸ்தாய் எழுதிய பிரசித்திபெற்ற போரும் சமாதானமும் என்ற நூல் போரின் கொடுமையையும் அன்பின் வலிமையையும் கூறுகின்றதென்றால் விடுதலைப்புலிகள் அமைப்பின் மதியுரைஞர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் என்ற நூல் 50 ஆண்டுகளாக ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் முகமாக சிறிலங்கா இனவாத அரசுகள் போருக்கும் சமாதானத்துக்கும் இடையே மாறி மாறி நடத்துகின்ற அரசியல் சித்து விளையாட்டை விலாவாரியாக விளக்கி நிற்கிறது. தேசியத்தலைவர் அவர்கள் சென்ற வருட மாவீரர் தின உரையில் குறிப்பிட்டது போல், போரும் அற்ற சமாதானமும் அற்ற சூன்ய நிலையின் வலியை நூலின் பக்கங்களில் விரியும் சமாதான நாடகங்களை வாசிக்கையில் உணர முடிகிறது. திம்புவில் தொடங்கி ஜெனிவா வரை நீண்ட சமாதான பேச்சுக்களின் இன்றியமையாத பங்காளி என்ற சாதகமான சூழல் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நிகழ்வுகளை ஆற்றொழுக்கான கோர்வையுடன் அலுப்புத் தராமல் விபரிப்பதை சாத்தியமாக்கியிருக்கிறது.
தமிழ் தேசிய எழுச்சியும் ஆயதப்போராட்டமும், இலங்கையில் இந்திய தலையீடு, பிரேமதாச விடுதலைப்புலிகள் பேச்சு, யாழ்பாணத்தில் நிகழ்ந்த சமாதான பேச்சுக்கள், புலிகளின் போரியல் வளர்ச்சியும் நோர்வேயின் சமாதான முயற்சியும் என்ற ஐம்பெரும் அத்தியாயங்களையும், பண்டா செல்வா ஒப்பந்தம், இணைப்பு சி என அறியப்பட்ட அதிகார பரவலாக்கல் தொடர்பான பிரேரணைகளின் ஆங்கில வடிவம், இந்திய-இலங்கை உடன்படிக்கை, பிரேமதாச- ராஜீவ் காந்திக்கு இடையிலான கடிதப் பரிமாற்றங்கள், சிறிலங்கா-விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தம், வடக்கு கிழக்கு இடைக்கால தன்னாட்சி அதிகார சபை நிறுவுவதற்கான உடன்படிக்கை தொடர்பாக விடுதலைப்புலிகளின் யோசனைகள் என்ற 6 பின்னிணைப்புக்களையும் கொண்டு 790 பக்கங்களில் விரிந்திருக்கும் ஒரு வரலாற்று ஆவணமாக போரும் சமாதானமும் விளங்குகிறது. தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் முதிர்ச்சி மிக்க அரசியல் சாணக்கியனாக, தமிழீழ களநிலை அறிந்தவராக, தேசிய தலைவரின் உணர்வுகளை மொழிபெயர்ப்பவராக, மூன்று தசாப்தங்களாக விரிந்த ஆயுதமேந்திய விடுதலைப்போரின் வாழுகின்ற சாட்சியாக, திம்பு முதல் ஜெனிவா வரை சமாதான பேச்சுக்களில் கிண்டலும் கேலியும் கண்டிப்பும் உருக்கமும் தேவைகளுக்கு ஏற்ப தேர்ந்து பிரயோகித்து சிங்கள அரச தரப்புப் பிரதிநிதிகளை தனது மதிநுட்பத்தால் திணறடிப்பவராகவிருக்கின்ற திரு அன்ரன் பாலசிங்கம் தன் அனுபவங்களை வரலாற்றுடன் பிணைத்துத் தந்திருக்கும் இந்த நூல் தமிழர் தரப்பில் அரசியல் இராஜதந்திர அணுகு முறைகள் தொடர்பாக வெளிவரும் முன்னோடியான நூல் என நான் கருதுகிறேன்.
போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று முழங்கிய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் சமாதானத்துக்கான போர் என்று முழங்கிய சந்திரிக்காவும் சமாதானத்தின்பால் நின்று சமாதானத்துக்காக என்று கூறிய ரணில் விக்கிரமசிங்கவும், மாறி மாறி சமாதானத்தை வைத்து ஆடுகின்ற ரெஸ்ட் பந்தயம் வருடக் கணக்கில் தொடர்கின்றது. திம்பு பேச்சுவார்த்தைகளின் போது இறுதித் தீர்வு குறித்து பேச வலியுறுத்தி நின்ற தமிழர் தரப்பு இன்று ஜெனிவாவில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு சரத்தையாவது ஒழுங்காக அமுல்படுத்த கோரி நிற்கிறது. பரந்த இந்நூற் பரப்பின் மூன்று தசாப்தங்களின் தொடர்ச்சியான வரலாற்று நீரோட்டத்தில் பயணிக்கும் வாசகர்களால் திம்புவில் இருந்து ஜெனிவா வருவதற்குள் சமாதானம் எட்ட முடியாத ஆழத்திற்கு இறங்கி விட்டதை அவதானிக்க முடியும். ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப்போரின் ஆரம்ப காலமான 80 களில் பேச்சுககளில் சிறிலங்கா அரசு தூக்கிப்பிடித்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பு, தமிழர் சுயநிர்ணய உரிமை மறுப்பு போன்ற பதாகைகள், இரு தசாப்தங்களின் பின்பு பல கொடுமையான போர்களும் பொருளாதார அடக்கு முறைகளும் இனப்படுகொலைகளும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பின்பு பல்லாயிரக்கணக்கான மாவீரர்களும் பொதுமக்களும் உயிர் பலி கொடுத்த பின்பு தமிழர் தேசம் 70வீதமான நிலப்பரப்பை தமது ஆளுகைக்குள் வைத்திருக்கும் வேளையிலே மிக பலமான போரியல் வெற்றிகளின் அடித்தளத்தலே கட்டப்பட்ட உறுதியான வலுச்சமநிலை பெற்றிருக்கின்ற இவ்வேளையிலே இன்றும் அதே ஒற்றையாட்சி அரசியல் யாப்பு, சுயநிர்ணய உரிமை மறுப்பு போன்ற பதாகைகள் சிங்கள தரப்பால் மீண்டும் உயர்த்தப்படுகின்ற முரண்நகையைக் காண முடிகிறது. திம்புப் பேச்சுக்கள் பற்றி இந்திய தூதுவர் டிக்சித் குறிப்பிடுகையில் ‘இலங்கை அரச சார்பிலே கலந்து கொண்ட அரசியல் அமைப்புச்சட்ட நிபுணரான ஜெயவர்த்தனவின் பேச்சுக்கான அணுகுமுறையானது உயிரோட்டமற்றது. இயந்திரமாக சட்ட நியமங்களுக்குள் மட்டும் இயங்கியது. தமிழர்தரப்பு கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் போதெல்லாம் அவை சிறிலங்காவின் யாப்பையும் ஒற்றையாட்சி முறைமையையும் மீறுவதாக அமைந்திருப்பதாக தொடர்ச்சியாக அவர் வலியுறுத்தினார். இதனால் திம்பு பேச்சுவார்த்தைகள் செவிடர்களின் கருத்தாடல் ஆகியது.”(பக்கம் 150) என்கிறார். வாசகர்களான நமக்கும் முப்பது வருடங்களாக முன்பு பேசியதையே மீளவும் மீளவும் பேசும் சமாதான பேச்சுவார்த்தைகளின் தவிர்க்கமுடியாத விவரிப்பு நூலின் அரைவாசிக்கு மேற்பட்ட பகுதிகளை திரும்பத்திரும்ப வாசிப்பது போன்ற உணாவினை ஏற்படுத்துகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஜெனிவா பேச்சுக்களின் போதும் இதே எதிரொலிகளைக் கேட்டிருக்கிறோம். சட்ட நுணுக்கங்களிலும் சொற்தேர்வுகளிலும் காட்டுகின்ற ஆர்வம் தமிழர் தரப்பின் அடிப்படைப் பிரச்சனைகளை இதயபூர்வமாக மனிதத்துடன் அணுகுவதில் காட்டாத வரை திம்பு பேச்சுக்கள் மட்டுமல்ல அனைத்துப் பேச்சுக்களும் செவிடர்களுக்கிடையிலான கருத்தாடல்களாகவே முடியும் என்பதை நூல் தெளிவாக காட்டுகிறது.
தமிழர் தரப்பின் தார்மீக நியாயங்களைப் புரிந்து கொண்டு ஆழமான புரிந்துணர்தலுடன் செயற்படும் எந்த ஒரு சக்தியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் புலி முத்திரை குத்தப்படும் நிகழ்வும், திம்புவுக்கும் ஜெனிவாவுக்கும் இடையிலான ஒப்புநோக்கலில் காலத்தாலோ, கருத்தாடல்களாலோ மாற்றமுறாத குணாதிசயமாக இருந்து வருகிறது.
1984ல் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான சிறப்புத்தூதுவராக திரு பார்த்தசாரதியை இந்திராகாந்தி நியமித்தார். தமிழர் தரப்பின் உண்மை நிலை உணர்ந்து அதிகார பரவலாக்கல் வழங்கும் இணைப்பு “சி” எனும் திட்டத்தை அவர் முன்வைத்த போது சிங்கள பௌத்த பேரினவாதிகள் கூச்சலிட்டனர். பார்த்தசாரதியை வெளியேற்றுமாறு கோசமிட்டனர். கட்சியோடு கட்சி மோதவிட்டு புத்த பிக்குகளை தூண்டி விட்டு அதிகார பரவலாக்கற் திட்டம் முடக்கப்பட்டது. இன்று எரிக் சொல்கெய்ம், நோர்வே போன்ற சக்திகளுக்கு இனவாதிகள் காட்டும் தீவிரமான எதிர்ப்பை இந்த பின்னணியிலே பார்க்க முடியும். சிங்கள இனவாதிகள் வெளியுலக வரலாற்றை படிக்கிறார்களோ இல்லையோ தமிழர் உரிமைக் கோரிக்கைகள் பேச்சுமேசைக்கு வரும் போதெல்லாம் அவற்றைத் தம் முன்னோடிகள் வெற்றிகரமாக முடக்கிய வரலாற்றை எழுத்துக்கூட்டி படித்திருக்கிறார்கள் என்பது தெளிவு. அதிகார பரவலாக்கற் திட்டம், அரசியல் யாப்பின் 6வது சட்ட திருத்தம், சிறான் உப குழுக்கள், பொதுக்கட்டமைப்பு என முடக்கப்பட்டே வந்திருக்கின்ற தமிழர் தரப்பின் முன்வைப்புக்களின் எண்ணிக்கை, நூலை மூடுகையில் ஒரு கசப்புணர்வை நாவில் விட்டுச் செல்கிறது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கான பணிகளிலும் அவ்வளர்ச்சியில் இடர்பாடுகள் ஏற்படும் போது அத்தகைய இடர்களை நீக்குகின்ற பணிகளிலும் நூலாசிரியர் ஆற்றிய பங்கு தன்முனைப்பின்றி நூலில் வெளிப்படுகிறது. 80களின் ஆரம்ப பகுதியில் சந்திரகாசன் போன்ற இந்திய அரசின் அடிவருடிகளை வெட்டியோடி, விடுதலைப்புலிகளின் இலட்சியத்தில் இருந்து இம்மியளவும் பிசகாத வகைகயில் இந்திய இராணுவ பயிற்சியினை பெறுவதற்கான தொடர்புகளைப் பெற்றமை, 80களின் இறுதிப் பகுதியில் இந்திய இராணுவத்தினை எதிர்ப்பதற்கான ஆயத தளபாட வசதிகளை பிரேமதாசாவிடம் இருந்து பெற்றமை, திம்பு பேச்சுக்களின் போது புலிகளை தமிழ் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைத்துத் தமிழர் தரப்பை ஒரே குரலில் பேச வைத்தமை என்பவற்றைக் குறிப்பிடலாம். நூலாசிரியர் சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு என உடல் உபாதைகளுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் பேச்சுவார்த்தைக் காலங்களில் போக்கும் வரவும் நிறைந்த இராஜ தந்திரப் பணிகளில் அயராது ஈடுபட்டமையைக் காண முடிகிறது.
இந்த நூலினை தொகுத்துப் பார்க்கையில் அரசியற் சொல்லாடல்கள் நிறைந்த ஒரு வரலாற்று ஆவணமாகத் தென்படுகின்ற போதும் நெஞ்சத்தை நெகிழ வைக்கின்ற சம்பவங்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. இந்திய ஆகிரமிப்புக் காலத்திலே தமிழீழ கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா படையால் கைது செய்யப்பட்ட குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு போராளிகளது விடுதலை குறித்து இரண்டு நாட்டு இராணுவங்களும் கையை விரித்து விட்டவேளையில் தலைவரின் உத்தரவுப்படி அவரிடமிருந்து சைனைட் குப்பிகளை சுமந்து சென்று பன்னிரு போராளிகளிடமும் கையளித்த நிகழ்வை திரு. பாலசிங்கம் குறிப்பிடுகிறார். ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராட்ட இலட்சியத்திற்காக நான் ஆற்றிய செயற்பாடுகளில் இதுவே எனது ஆன்மாவை உலுப்பிய மிகவும் வேதனையான பணியாகும்”.(பக்கம் 219) என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
2002ல் ரணில் அரசுடன் நிகழ்ந்த பேச்சுக்களின் பங்குபெறுவதற்காக மாலைதீவின் ஊடாக வன்னிக்கு சிறிய கடல் விமானம் ஒன்றில் தான் மேற்கொண்ட பிரயாணத்தைப் பற்றி குறிப்பிடும் போது ‘மூன்று வருடங்களுக்கு முன்பு மிக கடுமையாக நோய்வாய்ப்பட்டு வன்னியை விட்டு புறப்பட்ட அந்த நாள் அப்போது என் நினைவில் வந்தது. எப்போதாவது வன்னிக்கு திரும்புவேன் என்று அதுவும் உயிருடன் திரும்புவேன் என்று அப்போது நான் கற்பனை செய்து கூடப்பார்க்கவில்லை” (பக்கம் 612) என்று குறிப்பிடுகிறார்.
தமிழரின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவர் சர்வதேச பிராந்திய அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்த போதெல்லாம் ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவிதியை மட்டுமே சிந்திப்பவராய் செயற்பட்டமையையும் அவரது நேர்முக எதிரிகளால் கூட பின் நாட்களில் புகழ்ந்துரைக்கப்பட்டதையும் நூலில் காண முடிகிறது. இந்திய அரசின் இராஜதந்திரிகளுடனான தலைவரின் நேருக்கு நேர் விவாதங்களில் முகத்திலறையும் கேள்விகளையும் சுளீர் என்ற பதில்களையும் தருணம் அறிந்து அவர்களுடன் மென்போக்கைக் கடைப்பிடிக்கும் நேர்த்தியையும் அவதானிக்கிறோம். 1986ல் கிழக்கு மாகாணத்தை முக்கூறாக பிரிக்கும் எல்லை வரையறையுடன் கூடிய ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் இடைக்கால தீர்வுத் திட்டத்துடன் ஒத்துழைக்குமாறும் அதன்மூலம் விரைவில் பெங்களுரில் நடக்கும் சார்க் உச்சி மாநாட்டில் ராஜீவ் காந்தி நிறைவேற்றிய சாதனையாக அவரது புகழை உயர்த்த உதவுமாறும் இந்திய தூதுவர் ஏ.பி வெங்கடேஸ்வரன் தலைவரை வேண்டினார். அதனால் கோபமுற்ற தலைவர் ‘ராஜீவ் காந்தியை திருப்திப்படுத்தி அவரது புகழை ஓங்கச் செய்வதற்காக எமது மக்களின் அரசியல் இலட்சியத்தை கைவிடச்சொல்கிறீர்களா?” எனப் பதிலளித்ததைக் காண்கிறோம். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள தலைவர் மறுத்த போது கோபங் கொண்ட திரு.டிக்ஷிற் அவர்கள் ‘மிஸ்டர். பிரபாகரன், இத்துடன் நான்காவது தடவையாக இந்தியாவை நீங்கள் ஏமாற்றியுள்ளீர்கள்” என்றார். ‘அப்படியானால் நான்கு தடவைகள் எனது மக்களை இந்தியாவிடமிருந்து நான் காப்பாற்றியிருக்கிறேன். அதையிட்டு நான் பெருமைப்படுகிறேன்” (பக்கம் 185;) என்றார் தலைவர். ‘கொழும்பிற் பணிபுரிந்த நான்காண்டுக் காலத்தில் தமிழ்த் தீவிரவாதக் குழக்களின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தேன். இயல்பாகவே இவர்கள் அனைவரையும்விட மேன்மையானவராகவும் வித்தியாசமானவராகவும் பிரபாகரன் இருந்தார். இவர்மீது நான் குறைகண்டு தப்பபிப்பிராயம் கொண்டிருந்தபோதும் இவரது ஆழமான இலட்சியப்பற்றையும் அரசியல் ராணுவத் திறனாற்றல்களையும் நான் ஏற்றுக் கொள்ளவேண்டும். நிறைந்த அரசியற் சாணக்கியமும் போரியல் மதிநுட்பமும் படைத்தவர் என்பதை பல ஆண்டுகால நிகழ்வுகள் நிரூபிக்கின்றன” (பக்கம்244) என்று அதே டிக்ஸிற் தலைவர்மீது புகழாரம் சூட்டுகின்றார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திருப்பு முனைகளாக அமைந்த பல சந்தர்ப்பங்களில் அதை வழிநடத்திய எமது தலைவரின் தொலைநோக்குப் பார்வையால் எடுக்கப்பட்ட பல முடிவுகள் பல தரப்பினராலும் பலவாறு விமர்சிக்கப்பட்டன. இன்று அவற்றை வரலாறாகப் பார்க்கின்;ற போது அவை மிகச் சரியானவை என்பதில் சந்தேகமேயில்லை. இந்தியா தமிழ்க் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய காலத்திலே தமிழீழ, தமிழ்நாட்டு அரசியற் தலைவர்கள் பலர் இந்தியா இலங்கை மீது படையெடுப்பு நிகழ்த்தப் போவதாக கருதுகையில் தலைவர் அத்தகைய கற்பனாவாதத்தைக் கொண்டிருக்கவில்லை. மட்டுப்பத்தப்பட்ட அரசியற் குறிக்கோளை அடைவதற்கு தமிழ்ப் போராளிகளைக் கூலிப்படையாகப் பாவிப்பதே இந்திய ராணுவப் பயிற்சியின் நோக்கம் என்றும் எதற்கும் விட்டுக் கொடுக்காத கடும்போக்கை ஜே. ஆர் ஆட்சிபீடம் கடைப்பிடிக்கும் என்பதால் இந்தியத் தந்திரோபாயம் இறுதியிற் தோல்வியைச் சந்திக்கும் என்று பிரபாகரன் உணர்ந்திருந்தார் (பக்கம்106) என தலைவரின் தொலைநோக்கான அரசியற் பார்வையை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
இந்தியா என்கிற பிராந்திய சர்வவல்லமையின் அருகாமை குறித்தும் அதனுடனான நட்பின் தேவை குறித்தும் தலைவர் ஆழமான புரிதலைக் கொண்டிருந்ததுடன் தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்தியாவுடன் மோதல் ஏற்படவிருந்த சூழலில் அதனைத் தவிர்ப்பதற்கான இறுதிநேர முயற்சிகளை மேற்கொண்டார் எனவும் நூலில் வரலாற்றுப் பதிவுகளாக்கப்படுகின்றன. சின்னஞ்சிறிய கெரில்லா இயக்கம் பென்னம்பெரிய வவல்லரசை எத்தகைய உரு சூழலில் எதிர்கொள்ளநேர்ந்தது என்பதை எதிர்கால வரலாற்று வாசகனுக்கு துலாம்பரமாக எடுத்துரைத்திருக்கிறது. இந்தியாவைப் பகைக்காது இணங்கிப் போகவேண்டுமென்பதற்காக ஒருங்கிணைந்த தமிழர் தரப்பாகத் திம்புப்பேச்சுக்களில் கலந்துகொள்ள எடுத்த முடிவும் சரி, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினை அனுசரித்துப் போகவேண்டிய தேவை ஏற்பட்டபோது ஆற்றிய புகழ் பெற்ற சுதுமலைப் பிரகடனத்தில் நாம் இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக துப்பாக்கிகளை நீட்ட நாம் தயாராக இல்லை என ஆற்றிய உரையுஞ் சரி, தவிர்க்க முடியாத சூழல்களால் இந்தியராணுவத்துடனான மோதல்கள் வெடித்தபோது அதனைத் தடுக்கின்ற இறுதிநேர முயற்சியாக தலைவர் பிரதமர் ராஜீவிற்குத் தன் கைப்பட எழுதிய மோதல் தவிர்ப்புக் கோரும் கடிதங்களுஞ் சரி இந்தியாவுடனான உறவு குறித்த புலிகளின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு முறையும் அப்பாவிப் பொதுமக்கள் இந்தியப் படைகளால் கொல்லப்படுவதை நிறுத்தவும் நல்லெண்ணத்தை உருவாக்கவும் மோதலைத் தவிர்க்கக் கோரித் தலைவர் எழுதிய கடிதங்கள் புலிகள் பலவீனமுற்றுள்ளார்கள் என்ற பார்வையையே இந்திய கொள்கைவகுப்பாளர்களிடம் தோற்றுவித்ததென இந்திய ராணுவ ஜெனரல் திபேந்தர்சிங் அவர்களின் கூற்றைப் பார்க்கிறோம்.’கவலைக்குரிய விடயம் என்னவென்றால் விடுதலைப்புலிகளிடமிருந்து இப்படியான கோரிக்கைகள் அவர்களது கதை முடிந்ததென்று தான் டில்லியிற் கருதப்பட்டது. அதனாற் பேசுவதை விடுத்து ராணுவஅழுத்தத்தை மேலும் முடுக்கிவிடவேண்டுமென்பது தான் நிலைப்பாடாக இருந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் ஒரு தடவை டில்லிக்கு அனுப்பிவைத்த அவசரச் செய்தியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சி நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து இந்தியராணுவத் தலைமைச் செயலகத்திற்கு நான அனுப்பிவைத்த செய்தியில் புலிகள் அப்படியானதொரு கட்டத்திற்கு வரவில்லை என்பது தான் யதார்த்தநிலை எனத் தெரிவித்திருந்தேன்.” (பக்கம் 236) இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் பதவிக்கு வந்த அனுபவமற்ற தலைமைகளும் அந்தத் தலைமைகளுக்கு வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொடுக்கும்; முதிர்ச்சியற்ற ராஜதந்திரிகளின் புலிகள் தொடர்பான எதிர்மறையான அணுகுமுறையும் தான,; நடந்து முடிந்த கசப்பான அனுபவங்களுக்கு வழிகோலின என்பதை நூல் எடுத்துக் காட்டுகிறது.
ஏறக்குறைய நூலின் மூன்றில் இரண்டு பகுதி சமாதானப் பேச்சுக்களை ஆவணப்படுத்திய போதும், விடுதலைப்புலிகளின் போர் வலுச்சமநிலையை தூக்கிநிறுத்திய சமர்களின் விவரணங்கள் குறிப்பிடத்தக்க பதிவுகளாகியுள்ளன. வன்னிமீட்புப் போரில் மிக நீண்டதும் மரணத்தின் நெடுஞ்சாலை என அழைக்கப்பட்டதுமான ஜெயசிக்குறு சமர், சிங்களப்பத்திரிகையாளர் ஒருவரால் பற்றியெரியத் தவறிய தீச்சுவாலை என வர்ணிக்கப்பட்ட தீச்சுவாலை படை நடவடிக்கை ஆகியவற்றை வெற்றிகரமாக முறியடித்தது பற்றி, முல்லைத்தீவுச் சமர், ஓயாத அலைகள் என்ற நான்கு கட்ட வலிந்து தாக்கல் நடவடிக்கைகள் மூலம் வன்னிப் பெருநிலப்பரப்பை விடுவித்தது பற்றி, சிறிலங்கா இனவெறி அரசைச் சமாதானம் பேசவருமாறு கேட்கவைத்த கட்டுநாயக்க வான்படைத்தள அழிப்பு போன்ற சமர்களில் விடுதலைப்புலிப் போராளிகளின் அயராத உழைப்பும் தியாகமும் எமது தலைவரின் போரியற் தந்திரோபாயங்களும் மதிநுட்பமும் வெளிநிற்கின்றன.
வன்னி மாநிலத்தின் பெரும்நிலப்பரப்பை ஜெயசிக்குறு பூதம் விழுங்கியிருந்தபோதும் விடுதலைப்புலிகளின் தலைமை அலட்டிக் கொள்ளவேயில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்பதிற் தலைவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.| (பக்கம் 544) அந்த நம்பிக்கை பொய்யாகவில்லை. எதிரி பொருதுமுனை திறக்கும் இடங்களிலெல்லாம் எதிர்ப்பைக் காட்டாது பின்வாங்க,p அவர்கள் பேராசையாலும் எதிர்ப்பேதும் இன்றி முன்னேறிய உற்சாகத்தாலும் அகலக்கால் பரப்ப வைத்து அவர்களது பாதுகாப்பு வேலியின் பருமனை மெலிதாக்கி பாயவேண்டிய தருணத்தில் உக்கிரமாக பாய்ந்து தாக்கி என தலைவரின் அதி அற்புதமான போரியல் நுட்பங்களின் விபரிப்பு வாசிப்பை வேகமெடுக்க வைக்கிறது.
1986ன் தொடக்கத்தில் சந்திரிகா அம்மையார் நூலாசிரியரை சந்தித்த போது இனப்பிரச்சனை குறித்த நீண்ட விவாதத்திற்கு பின்னர் சொன்னாராம் ‘என்றோ ஒரு நாள் நான் இலங்கை அரசியலில் ஈடுபட்டே தீருவேன். நான் ஆட்சியமைத்தால் தமிழர் மீது சுமத்தப்பட்ட ஒடுக்கு முறைகளை அகற்றி சமாதானத்துக்கும் இன ஒற்றுமைக்கும் வழிவகுப்பேன”; என்று. (பக்கம் 348) சந்திரிகாவைப்போல அவருக்கு முன்னரும் பின்னரும் வந்த சிங்கள அரசியல் தலைமைகளும் இதே வேதத்தைத்தான் ஓதியிருக்கின்றன. தமிழர் உரிமைகள் தொடர்பான போராட்டத்திற்கு சமாதானமும் போரும், போரும் சமாதானமும், என மாறி மாறி ஏய்த்து வருகின்ற அரசியலை பதிலாக வைத்திருக்கின்றன. சிங்கள தேசத்தின் இந்த ஏமாற்று அரசியலை தனது அனுபவங்களுக்கூடாக விபரித்து நிற்கும் போரும் சமாதானமும் என்ற நூலை திரு அன்ரன் பாலசிங்கத்தை தவிர வேறு யாரும் எழுதியிருப்பின் இந்தளவுக்கு வலிமையும் உண்மைத்தன்மையும் வாய்த்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்த் தேசத்தின் எதிர்கால அரசியல் வரலாறு எந்தத் திசையில் செல்லும் என்பதை சிங்களதேசத்தின் இனவாதசக்திகளே இறுதியாகத் தீர்மானிக்கும் என்ற நூலின் முடிவுரையை கல்லில் பொறித்துவைத்துக் காத்திருங்கள். போரா சமாதானமா இரண்டு தெரிவுகளும் அவர்கள் கையில்@ அதனூடாக எந்த முடிவு எட்டப்படினும் அது நமக்குச் சாதகமாகும்படி சிங்கள இனவாதிகளே வழிசெய்துதருவார்கள் என்ற வரலாறு படைக்கும் உண்மையைக் கூறிச் சென்றிருக்கிறது போரும் சமாதானமும்.
ஆக்கம்:- தா. விவேகானந்தன்
எரிமலை (சித்திரை 2006) இதழிலிருந்து……
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”