லெப். கேணல் வேணு
“கண்ணிவெடித் தாக்குதல் நடந்ததாம். பத்து ஆமி செத்துப்போனாங்களாம்” இரண்டு வரிகளில் இந்தச் செய்தி முடிந்துவிடும். ஆனால் இதனுடைய பெறுமதி இதன் பரிமாணம் மிகப்பெரியது. இதே வேளை கண்ணிவெடித் தயாரிப்பு முயற்சிகளில் நாம் இழந்துள்ள செல்வங்களின் பெறுமதியை நினைத்தால் கைதடி, அடம்பன், நீராவியடி வஞ்சியன்குளம்…. என்ன தவறு நடந்தது? பெரும்பாலும் இதனைச் சொல்வதற்கு இதனுடன் சம்பந்தப்பட்ட எவருமே மிஞ்சுவதில்லை. இவ்வாறான சம்பவங்களில் ஒன்று தான் மன்னாரை அதிரவைத்த வஞ்சியன்குளம் விபத்து.
ஆட்காட்டிவெளி இங்குதான் மன்னார்ப் பிராந்தியத் தளபதி வேணுவும் உருவானான். 1984ல் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவன், மன்னார்த் தளபதியாக முகாமில் உருவாகியவன். பயிற்சி முகாமில் இருந்து வெளிவரும் போது இவன் ஒரு வைத்தியனாகவே வந்தான். விஞ்ஞானப் பிரிவில் அவன் கற்ற கல்வி மருத்துவப் பயிற்சிகளை அவன் பெற்றுக்கொள்வதற்குப் பெரிதும் உதவியது. இவன் பங்குகொண்ட முதற் தாக்குதல் மன்னார் மாவட்டப் போராளிகளைப் பொறுத்தவரை மிக முக்கியமானதாகும். மன்னார்த் தீவினுள் அமைந்திருந்த இந்த மாவட்டத்தின் பிரதான பொலிஸ் நிலையத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலின் போது காயமடைந்த போராளிகளுக்கு வைத்தியனாகச் சென்றான். அன்றிலிருந்து மன்னார் மாவட்டப் போராளிகளைப் பொறுத்தவரை இவனே டொக்டர். ஆனாலும் இடையிடையே கிடைக்கும் போர்க்களங்களிலும் தனது முத்திரையைப் பதிக்க இவன் தவறவில்லை.
17-01-1986 அன்று நாயாற்று வெளியில் அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான லெப். கேணல் விக்டரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினரை, கண்டல் சந்தியில் வழிமறித்துத் தாக்கிய குழுவில் இவனும் ஒருவனாக இருந்தான். ” பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலையில் ஓடிய இராணுவம், நீண்ட காலத்திற்கு அந்தப் பக்கத்தையே நினைக்காமலிருந்தது.
பரப்புக் கடந்தான், வட்டக்கண்டல் போன்ற மிகப் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலத்த போக்குவரத்துச் சிரமங்களின் மத்தியிலேயே மன்னார் அடம்பன் போன்ற வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டும். இவனோ அந்த நிலையை மாற்றி மக்களைத் தேடி மருத்துவம் செய்யும் மருத்துவனானான். ஆட்காட்டிவெளியில் வைத்திய நிலையம் ஒன்றினை நிறுவி அப்பகுதி மக்களின் அன்புக்கு பாத்திரமானான். இரவு பகல் எந்த நேரமானாலும் பொதுமக்களுக்கோ, போராளிகளுக்கோ வேணுதான் டொக்டர்.
இக்காலத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமானான் வேணு. காரணம் அவர்களோடு அவன் பழகிய விதம் மக்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு என்பனதான். குடும்பத்தவர் எவருமே இந்த மண்ணில் இல்லாத நிலையில் இவன் மறைந்த போது, உனக்குச் சொந்தங்கள் நிறைய உண்டு எனக் கூறிற்று. பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வரண்ட பூமியாம் மன்னாரைத் தம் கண்ணீரால் ஈரமாக்கினர் அப்பகுதி மக்கள்.
07-11-1989 அன்று வில்பத்துக் காட்டில் “பச்சைப் புலிகள்” எனப்படும் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதலை இவன் முறியடித்த விதம், சாதனைக்குரியதாகும். பெட்டியுடன் இணைக்கப்பட்ட உழவு இயந்திரத்தில், தனது 14 தோழர்களுடன் பயணமாகிக் கொண்டிருந்தான் இவன். அப்போது, மறைந்திருந்த சிறீலங்காப் படையினர் இவர்கள் மேல் தாக்குதல் தொடுத்தனர். பாதுகாப்பான நிலைகளில் இராணுவத்தினர், பாதகமான நிலைகளில் போராளிகள். ஆனாலும் இவன் எதிர்த்தாக்குதல் தொடுத்தான். சண்டையை எமக்குச் சாதகமாக மாற்றினான். அதனால் உயிரிழந்த தமது சகா ஒருவனை விட்டு விட்டு சிறீலங்காப் படை தப்பியோடியது. உயிரிழந்த இராணுவத்தினது உடலுடன் ஒரு சில ஆயுதங்களையும் கைப்பற்றி வந்தான். இத்தாக்குதலில் ஈடுபட்ட அணிக்குத் தலைவனும் இவனே. வைத்தியனும் இவனே.
இந்திய இராணுவத்துடனான போர் நிகழ்ந்த காலப்பகுதி, இவனை மன்னார் மாவட்டத்தின் எதிர்காலத் தளபதியாக இனங்காட்டியது. இயக்கத்தின் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் வல்லவன் இவன். 1991ம் ஆண்டு இவன் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்றான். அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள், தமது திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்தது சிறீலங்கா இராணுவத்தினருக்கு.
அது ஒரு கொடிய நாள், ஏற்கனவே மிகப் பெரிய வெற்றிகளையெல்லாம் (60 இராணுவத்தினர் பலியான சம்பவம் உட்பட) எமக்குத் தந்த வஞ்சியன் குளத்தில் எமக்கு ஒரு சோகம் காத்திருந்தது. சிறந்த தளபதி, திறமையான மருத்துவன் – மன்னார் மக்களின் அன்புக்குப் பாத்திரமான வேணுவை இழந்தோம்.
அவனுடன் மேஜர் சயந்தன், மேஜர் குகன், கப்டன் குட்டிமணி, என்று நால்வரை – எங்கள் நான்கு கண்மணிகளை வெடிமருந்து விபத்தில் நாம் இழந்தோம்.
நன்றி மாவீரர் குறிப்பேடு
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “