கடற்கரும்புலிகளின் தியாகப்பயணம்
கடற்கரும்புலிகளின் தியாகப்பயணம்……..
மக்கள் பிரயாணம் செய்யும் பிரதான போக்கோரத்துப் பாதைகள் அனைத்தும் சிறிலங்கா அரசால் மூடப்பட்டுவிட்டன. ஆனால், மக்கள் பல இடர்களை அனுபவித்து இன்னல் நிறைந்த பாதைகளால் நாட்கணக்காக தூக்கமின்றி, களைத்துச் சோர்ந்து, கால்வலிக்க நடந்து, மாட்டுவண்டிகளில் ஏறி, படகுகளில் ஏறி பிரயாணித்து தமது இலக்குகளை சென்றடைகின்றனர். இனிய உறவுகளோடு கூடி மகிழவும், பேசிச் சிரிக்கவும், நெஞ்சு நிறைந்த துயரைக் கொட்டவும், பஞ்சம் போக்க்கவும் பயணிக்கின்ற மக்கள் கிளாலி நீரேரியில் படு பயங்கரமகா கொலைசெய்யப்பட்டதும் நிகழ்ந்தது. அடிக்கடி கிளாலியில் எதிரிப்படையின் விசேஷ விசைப்படகுகள் மக்களின் பிரயாணத்திற்கு இடையூறு விளைவித்தன; துன்புறுத்த்தின. அடாவடித்தனங்கள் கிளாலியில் கட்டவிழ்ந்து விடப்பட்டே இருந்தது.
மிகப்பெரிய தடை; தடைகளை எதிர்த்து உடைத்துக் கொண்டு மக்கள் அதேபாதையில், அதே ஏரியில் மீண்டும் மீண்டும் பயணித்தனர். ‘ எங்கட எரியில போகிறோம்’ என்கிற உணர்வு மட்டும் உரமாய் இருக்க, தடைகளை அவர்கள் தமது படிக்கற்களாக்கிக் கொண்டு நடந்தார்கள்.
“தமிழீழ மக்கள் தம்மீது ஏற்படுத்தப்படுகின்ற தடைகளை தாமாகவே தகர்த்து முன்னிலும் வேகமாக தமது விடுததையை நோக்கிச் செல்கின்றனர். இதுபோன்ற தடை வேறுநாடுகளில் எங்காவது ஏற்படுத்தப்பட்டிருந்தால், வெளிநாட்டு நிறுவனங்களே அத்தடைகளை தகர்ப்பதற்கு உதவியும், ஒத்தாசையும் வழங்குவதுண்டு. ஆனால், தமிழீழ மக்களிடம் இது மாறாகவே இருக்கின்றது. தமிழீழ மக்கள் தாங்களாகவே……….. புதுப்புது முன்னெடுப்புக்களை மேற்கொள்கின்றனர். இதனால் வெளிநாட்டு நிறுவனக்கள் அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது திக்குமுக்காடுகின்றன” என்று ஒரு வெளிநாட்டு கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு எமது மக்களின் மன உருதியினாலும், விடுதலைப் பற்றினாலுமே விதிக்கப்பட்ட தடைகளை கடந்து செல்ல முடிந்தது.
எமது கிளாலி நீரேரிக் கடல்.
26.08.1993 அன்று. அதிகாலை 1.30மணி.
எமது மக்கள் நெஞ்சம் நிறைந்த துயரங்களோடும், ஏக்கத்தோடும் பிரயாணம் செய்துகொண்டிருந்தனர். கடற் கரும்புலிகள் மக்கள் பிரயாணித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். கொலைவெறிச் சீற்றங்கொண்டு சிறிலங்கா கடற்படையின் ஐந்து விசேஷ விசைப்படகுகள் நீரேரியைக் கிழித்துக் கொண்டு வருகின்றன. மக்கள் தமது வாழ்வின் கணங்களை எண்ணிக் கலங்கினர். கொடிய எதிரியின் மிருகவெறிப் பாய்ச்சல். தாக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுவோம் என்றும், தமது இனிய குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டுப் போகப்போகின்றோமே என்றும் அந்த மக்கள் எண்ணிக் கலங்கிய ஒரு சில கணம்தானும் இல்லை.
எமது கடல் நீரேரி……………..,
எமது மக்கள்…………………………. என அறைந்து கூவிக்கொண்டு இரு கரும்புலி வீரர்களின் வெடிமருந்தேற்றிய விசைப்படகுகள் விரைந்து வந்து கொண்டிருந்தன.
மட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்த கடற்கரும்புலி மேஜர் வரதனும், கடற்கரும்புலி கப்டன் மதனும் தமது உயிரினும் மேலான தாய்த் தேச மக்களை நெருங்கி அழிக்க முனைந்த எதிரியின் படகுகளை நோக்கிச் சென்று ஒரே நேரத்தில் மோதினர். பேரோசை ஏரியின் திக்கு எங்கும் எழுந்து நின்றது. நெருப்பின் சுவாலை ஏரியில் சுவலித்திருந்தது. பத்துக்கும் மேற்பட்ட படையினர் மாண்டனர். எதிரியின் இரு படகுகளை எரித்து துவம்சித்து, கடற்கரும்புலி வீரர்களின் உயிர் மூச்சு தமிழீழக் காற்றில் கலந்தது.
தொடர்ந்து நடந்த கடற் சண்டையில் கடற்புலிகளான மேஜர் சிவா, லெப். பூபாலன், 2ம் லெப். சுரேந்தர் வீரமரணத்தை தழுவிக்கொண்டனர்.
இந்நிகழ்வு நடந்து 96 மணித்தியால இடைவெளிக்குள் சிறிலங்காவின் கடற்படைக்குச் சொந்தமான இஸ்ரேலிய அதிவேக டோறாப் படகு மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பருத்தித்துறையைக் கடந்துகொண்டிருந்த வேளை கடற்புலிகளின் நான்கு விசைப்படகுகள் வழிமறித்துத் தாக்கின. கடற்படையினரின் படகில் இருந்த நான்கு அதிகாரிகள் உட்பட பன்னிரண்டு சிறிலங்காப் படையினரும் அச்சத்துள் புதையலாயினர். கடற்கரும்புலிகளான மேஜர் புகழரசனும், கப்டன் மணியரசனும் வெடிமருந்து நிரப்பிய படகுடன் எதிரிப்படகுடன் மோதினர்.
தமிழீழத்தின் கடற்பரப்பில் எதிரிப்படையின் கடற்படையின் மீது நடாத்தப்பட்ட கடற்கரும்புலிகளின் மூன்றாவது ஆக்ரோஷமான தாக்குதலில் சிக்கி, நான்கு உயர் அதிகாரிகள் உட்பட பன்னிரண்டு படையினர் மரணத்தைத் தழுவிக்கொண்டனர். தமிழீழக் கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கம் அவர்களின் தியாகத்தால் வலுப்பெற்று வருகிறது. சிறிலங்கா அரசு அதிர்ச்சி நிலைக்குச் சென்று மீளத் திரும்புவதற்கிடையில், மீளவரும் அதிர்ச்சிக்குள்ளாகும் அச்சமும், கவலையும் கொண்டு நிற்கிறது.
நினைவுகளுடன்:- நிதர்சன்.
விடுதலைப்புலிகள் 1993 இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”