மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும்!
தோழர் செங்கொடி:- மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும்!
தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் இன்று (28.08.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடி (வயது 27) அவர்களுக்கு ஈகவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.
இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.
“தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்” – இப்படிக்கு தோழர் செங்கொடி.
21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவர் ஈகி முத்துக்குமாரின் விவரணப்படத்தை இயக்கிய மகேந்திரன் அவர்களின் உடன்பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத் தக்கது. மூவரைக் காப்பாற்றக் கோரி சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண் வக்கீல்களின் போராட்டத்தில் நேற்று சனிக்கிழமை கலந்துவிட்டுச் சென்றுள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்துச் செய்யக் கோரி இந்தப் பெண் தீக்குளித்து மரணமானதாக தெரிவித்துள்ளார். மரண தண்டனையை குறைக்குமாறு அனுப்பப்பட்ட கருணை மனுவை இந்திய உள்துறை அமைச்சும் ஜனாதிபதியும் நிராகரித்த நிலையில் மக்கள் மன்றத்தின் முக்கியஸ்த்தர் செங்கொடி பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் இன்று தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை இரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் பெருகிவரும் நிலையில் காஞ்சீபுரத்தில் தமிழச்சி செங்கொடி தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|| இது தொடர்பாக பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை….
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.
முதல்வரிடம் முறையிடுவது, நீதி மன்றத்தில் வாதாடுவது, மக்களை திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்று பட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களை காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதை செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.
3 உயிர்களை காக்கத் தொடர்ந்து போராடுவதற்கு பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். என்றார்
ஆத்தூரில் நடந்த பாரதி இலக்கியப் பேரவையில் இன்று கண்ணகி விழா நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது,
இன்று தன் சகோதரன்…, உடன் பிறவா சகோதரன், நம் தமிழ் சகோதரன், பேரறிவாளன், சாந்தன், முருகன்…. “குற்றமற்றவன்” என்பதை மெய்ப்பிக்க வேண்டி காஞ்சிபுரத்தில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்கிற ஒரு தமிழ் சகோதரி.
அந்த கன்னகியின் சாபத்திலும் நீதியிருந்தது… இந்த செங்கொடியின் சாவிலும் நீதி இருக்கிறது…. நீதி வென்றே தீரும், நம் தேசபிதா காந்தியவர்கள் 1931 வருடத்திலேயே தூக்கு தண்டனை கூடாது என்றார்.
பண்டித நேரு அவர்களும், ஒரு மனிதனை தேதி குறித்து வைத்து கொல்லும் கொடுரம் கூடாது என்றார்கள். 1941-ம் வருடத்தில் இந்திய அரசியல் சட்ட அமலாக்க விவாதத்தில் பேசிய அண்ணல அம்பேத்கார் அவர்களும் தூக்கு தண்டனை கூடாது என்றார்கள்.
இன்று உலகில் உள்ள 137 முன்னேறிய நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்து விட்டார்கள். ஆனால் நம் நாட்டில் கூட நீன்ட நாட்களாக தூக்கு தண்டனை கொடுப்பதில்லை.
அன்று திருப்பெரும்புதூரில் நடந்த சம்பவத்திற்கும் இந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் சம்பந்தமில்லை….. முதலில் இதே வழக்கில் 24 நபர்களுக்கு தூக்கு கொடுத்தார்களே.
பின்னர் எப்படி அவர்கள் மீது குற்றமில்லை என்று முடிவு செய்யப்பட்டதோ அது போலவே, இவர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் பொய்யானது. அதை நிருபிக்க இன்னும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
அன்று பாண்டிய மன்னன் அரண்மனையில் நடந்த கொடூரம் இப்போது தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது.. தமிழக முதல்வர் அவர்களால் இதை தடுக்கும் வாய்ப்புள்ளது… நாடே இப்போது முதல்வரின் முடிவை எதிர்பார்க்கிறது’’என்று பேசினார் வைகோ.
இப்படியான அநியாய உயிர் இழப்புகளைத் தமிழக உறவுகள் தவிர்க்க வேண்டும். இந்த போராட்டத்தின் வெற்றி இந்த மூவரின் விடுதலையோடு மட்டும் சுருங்கி விடக்கூடாது. ஒட்டுமொத்த மரணதண்டனையையும் ஒழிப்பதிலேயே நமது விடுதலை பூரணப்படும் என்பதையும் உறுதியாக நினைவில் கொள்வோம் தோழர்களே!
புகலிடத்தில் இன்னமும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக தேவையான அளவு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவனத்துக்குரியது.. கண்டனத்துக்குரியது.
வீரமங்கை செங்கொடிக்கு எங்கள் வீர அஞ்சலிகள்…
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”