ஒரு சத்திய வேள்வியில் தர்மமே வெற்றிகொள்ளும்…
ஒருபுறம் யுத்தத்தை தீவிரப்படுத்திக் கொண்டு, மறுபுறம் சமாதானப் பேச்சுக்களை நடாத்தி, புலிகள் மீது நெருக்குதல் கொடுத்து ஒரு தீர்வைத் திணித்துவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகின்றது. போரும், பேச்சும் என்ற இந்த இரட்டை வேதா அணுகுமுறையை எமது விடுதலை இயக்கம் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. தமிழீழ மண்மீது பெரும் ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டு, தமிழ் மக்கள் பெருந்தொகையில் கொன்று குவிக்கப்பட்டால் நாம் திறந்து வைத்திருக்கும் சமாதானக் கதவு மூடப்பட்டுவிடும் என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூற விரும்புகின்றேன்.
நாம் சமாதான மார்க்கத்திற்கு விரோதிகள் அல்லர். ஆனால், சமாதான அணுகுமுறை என்பது எமது மக்களின் உரிமைகளையும், நலன்களையும் விட்டுக்கொடுக்கும் விவகாரம் அல்ல. எனினும் எமது மக்களின் உரிமையை வென்றெடுக்க முடியாமானால், எமது மக்களின் நலன்களைப் பேணிப்பாதுகாக்க முடியுமானால் சமாதான வழிமுறையை நாம் தழுவிக்கொள்ளத் தயார். ஆனால், எமது எதிரியோ சமாதான அணுகுமுறையை ஒரு அரசியல் பொறியாகக் கையாள விரும்புகின்றான். எனவே எதிரியின் தந்திரோபாயத்தையிட்டு நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
அஞ்சாத் துணிவும், உறுதியும் எம்மிடமுள்ள வரை எந்தச் சக்தியாலும் எம்மை வென்றுவிடமுடியாது. ஒரு சத்திய யுத்தத்தில் தர்மமே வெற்றிகொள்ளும் என்பது வரலாற்று உண்மை.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
(“எனது மக்களின் விடுதலைக்காக” தொகுப்பிலிருந்து தேசக்காற்று)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”