லெப். கேணல் மதனா
வவுணதீவில் வரலாறு எழுதியவள்
மட்டக்களப்பில் போராட்டத்துக்கு மேன்மேலும் ஆளணியைச் சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக் கட்டி வளர்த்ததில் அவள் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டம் இவர்களுக்கு மிகவும் வேதனையும், சோதனையும் நிறைந்த காலமாகவே இருந்தது. மட்டுநகர் காடுகளை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றுமுழுதாக ஆக்கிரமித்திருந்த காலமது. அடிப்படை வசதிகள் கூட இன்றிய நிலையில், நம்பிக்கையும் மனவுறுதியும் மட்டும் பலமாகக் கொண்ட தருணங்களில் மதனா ஒருபோதும் சோர்வடைந்ததில்லை. தனது தோழிகளுக்குத் தெம்பூட்டி உற்சாகப்படுத்துவாள். இதன் பின்னர் படையணியைத் திரட்டி, அப்படையணிகள் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான தாக்குதலிகளில் பங்குபற்ற வகைசெய்தாள்.
கட்டுமுறிவு இராணுவமுகாம் தகர்ப்பு, தரவைக்குளம் இராணுவ முகாம் தகர்ப்பு, 4 ஆம் முச்சந்தி இராணுவமுகாம் தகர்ப்பு போன்ற பாரிய தாக்குதல்களிலும் அனைத்து பதுங்கித் தாக்குதல்களிலும் திறம்பட செயலாற்றினாள். 4 ஆம் முச்சந்தி முகாம் தாக்குதலின்போது கப்டன் அன்பரசி வீரச்சாவடைந்தாள். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவளும் மதனாவுடன் சேர்ந்து படையணியின் வளர்ச்சிக்கு தோளோடு தோள்கொடுத்து உதவியவள். இவளது ஞாபகமாகவே மட்டு அம்பாறை மகளிர் படையணிக்கு அன்பரசி படையணி என்று பெயர் சூட்டப்பட்டது. மதனாவினது சுறுசுறுப்பையும், துணிவையும், புத்துணர்வையும், களங்களில் படைநடத்தும் திறமையையும் கண்ணுற்ற முதுநிலைப் படைத்துறை ஆணையாளருள் ஒருவரான கருணா அம்மான் அவர்கள் மதனாவை அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதியாக நியமித்தார்.
அன்போடும் அரவணைப்போடும் தன் தோழிகளுடன் ஆடிப்பாடி மகிழ்வாள். முகாமில் தாயாகவும் கடமையில் கண்ணியமாகவும், களத்தில் படை நடத்தும் தளபதியாகவும் நின்று போராளிகளை வழி நடத்திக் கொண்டிருந்தாள். இவளுக்கு சக தோழிகளுடன் சேர்ந்து விளையாடுவதேன்றாலே அலாதிப்பிரியம். பின்னேரம் நான்கு மணியாகிவிட்டால் தன் படையணியினரை முகாமில் தங்க விடமாட்டாள். கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், வட்டக்காவடி எனப் பல்வேறு விளையாட்டுக்களை சக தோழியர் அனைவரையுமே விளையாடுவதற்கு உற்சாகப்படுத்தி தானும் சேர்ந்து விளையாடுவாள். இதனால் ஒவ்வொரு போராளியின் மனநிலையும் சமநிலைப்படுகின்றது என்பது அவளின் எண்ணம்.
மதனா பங்குபற்றிய தாக்குதல்களில் மக்கள் நிறைந்து வாழும் சந்தவெளி, முறக்கொட்டான்சேனை, மாவடிவேம்பு ஆகிய இடங்களில் ரோந்துசென்ற சிங்கள இராணுவத்தினர்மீது மேற்கொண்ட தாக்குதல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தன. இதில் பெருமளவு எதிரிகளும் இராணுவ தளபாடங்களும் அழிக்கப்பட்டன. மதனாவின் வழிநடத்தலில் பெண்புலிகளின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். மக்கள் அதிசயித்தனர். புளுகுணாவி வெற்றிச் சமரிலும் மதனா தனது படையணியினருடன் பெரும் பங்காற்றினாள். மட்டக்களப்பில் இவளின் பாதம் படாத மண்ணே இல்லையெனலாம். கிழக்குக் காடுகளின் காட்டுமரங்கள், மலைகள், அருவிகள் அத்தனையும் இவளை அறியும்.
1997.03.05 இல் கஜபாகு சிறப்புப்படையினர் நிலைகொண்டிருந்த வவுணுதீவு ஆக்கிரமிப்பு இராணுவமுகாம் மீதான தாக்குதலில் இவளது அணிக்கு ஒரு இலக்குக் கொடுக்கப்பட்டது. அதிகாலை 1.05 மணிக்கு சண்டை ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து எட்டுமணி நேரம் உக்கிரமோதல் தொடர்ந்தது. நூறுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் எஞ்சிய எதிரிகள் திகில் அடைந்து ஓடத் தொடங்கினர். தனக்குக் கொடுக்கப்பட்ட பகுதியை வெற்றிகரமாகக் கைப்பற்றிய மதனாவின் குரல் ஆர்வத்துடன் தொலைத்தொடர்பு சாதனத்தில் ஒலித்தது.
“நாங்கள் எங்கள் பகுதியை முற்றாகப் பிடித்து கிளியர் பண்ணிவிட்டோம்”.
களத்தில் அவளது பணி முடிந்தபின்னர் கூவிச்சென்ற எறிகணை ஒன்று இவளது உயிரைப் பறித்துக்கொண்டது. காயம்பட்ட தோழி ஒருத்தி மதனாவின் உடலைச் சுமந்தபடி வந்து கொண்டிருந்தாள்.
மதனா……..மகளிர் படைநடத்திய இளைய தளபதி அவள். அவளது பெயர் சொல்ல இன்று நீண்ட அணியாய் அவர்கள்.
மதனா பங்குபற்றிய தாக்குதல்களில் மக்கள் நிறைந்து வாழும் சந்தவெளி, முறக்கொட்டான்சேனை, மாவடிவேம்பு ஆகிய இடங்களில் ரோந்துசென்ற சிங்கள இராணுவத்தினர்மீது மேற்கொண்ட தாக்குதல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தன. இதில் பெருமளவு எதிரிகளும் இராணுவ தளபாடங்களும் அழிக்கப்பட்டன. மதனாவின் வழிநடத்தலில் பெண்புலிகளின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். மக்கள் அதிசயித்தனர். புளுகுணாவி வெற்றிச் சமரிலும் மதனா தனது படையணியினருடன் பெரும் பங்காற்றினாள். மட்டக்களப்பில் இவளின் பாதம் படாத மண்ணே இல்லையெனலாம். கிழக்குக் காடுகளின் காட்டுமரங்கள், மலைகள், அருவிகள் அத்தனையும் இவளை அறியும்.
நினைவில் நிறைந்த தோழிகள் தொகுப்பிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”