எங்கள் முற்றத்தில் விடுதலை சீட்டென……
எங்கள் முற்றத்தில் விடுதலை சீட்டென……
அகிம்சை எனும் உயரிய ஒழுக்கத்தின்பால் இயங்குவதாக காட்டிக்கொண்டிருந்த இந்தாய தனது கோரமுகத்தைக் காட்டியது. நல்லூரில் 15.09.1987 அன்று ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போடாட்டத்தை ஆரம்பித்தான். ஒரு துளி நீர் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் அந்த தியாக வேள்வியில் மெழுகாய் உருகினான். அவன். அவன் நேசித்த மக்கள் அலையலையாய் அவன் முன் திரண்டார்கள். அவன் மெல்ல மெல்ல உருகி அணைந்து கொண்டு போவதைக்கண்டு துடித்தார்கள். அந்த மக்களின் துடிப்பைக் கண்டு அவனால் பேச முடியாத நிலையிலும் பேசவேண்டும் என்கிற துடிப்போடு அவன் பேசுகையில்……………….
“நான் இறந்து விண்ணிலிருந்து அங்கே உள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்த நாளை எதிர் பார்த்துக்கொண்டேயிருப்பேன்.” என்று கூறினான். அத்தகைய நம்பிக்கையோடு பயணித்துவிட்ட அந்த வீரர்களின் நம்பிக்கை ஒருபொழுதும் தோற்றுவிடாது. பரிபூரண சுதந்திரத்தை எமது மக்கள் அடைந்தே தீருவார்கள். திலீபன் போன்றவர்கள் மிக அருமையானவர்களே.
“ஒரு புனித இலட்சியம் நிறைவேரவேனும் எண்டதற்காகத் தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறம்.” எனத் திலீபன் நல்லூரில் உண்ணாவிரத மேடையில், அவனோடு கூட இருந்த கவிஞர் வாஞ்சிநாதன் நீர் அருந்தக் கேட்டபோது அவரிடம் இவ்வாறு கூறினான்.
எமது விடுதலைப் பயணம் அப்படிப்பட்டதுதான், எம்மை மிகக் கடுமையாக வருத்தித்தான் அந்த உயரிய விடுதலையை வென்றெடுக்க முடியும். அதுவே பெறுமதி மிக்கதாயிருக்கும் என்பதை அவனது வாழ்க்கை எமக்கு உணர்த்துகிறது.
எந்த நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் அவனது இயல்பு பாரதியார் கண்ட சிட்டுக்குருவியை எண்ணவைக்கும். அத்துணை துடிப்பு, வேகத்துடன் விசையுறத்திரிந்தான். இந்த வேகமும் துடிப்பும் எம் ஒவ்வொருவரிலும் ஆளவேண்டும். அத்தகைய வீரனின் நினைவில் நனைவோம்.
– எரிமலை (புரட்டாசி 1994) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”