சுடரும் ஒளியானவள் கப்டன் சுடர்மதி
கேப்பாப்புலவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முற்றுகைச் சமரின் போது 19.01.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சுடர்மதி அவர்களின் 06ம் ஆண்டு நினைவில்……….
சுடரும் ஒளியானவள் கப்டன் சுடர்மதி
சிந்து நீ
பளிச்சென்று சிரிப்பைச் சிந்தும்
பௌர்ணமிவட்ட முகத்தவள்
பரபரவென்று சுழலும் பார்வையால்
பார்ப்போரை வளைப்பவள் – உன்
பால் வெள்ளை மனமே – இறப்பர்ப்
பாலாய் இழுத்து ஒட்ட வைக்கும். – நண்பர்
பட்டாளம் சுற்றிச்சுற்றிவர எப்போதும்
சுறுசுறுப்பாய் இயங்கும் நீ ஓர்
துருதுருப்பான்.
அம்மா அப்பாவின்
செல்லக் கடைக்குட்டி
ஆனாலும் நீ தான்
வீட்டில் மகாராணி
அமிர்தலிங்கம் சிந்துஜாவாக
ஆயிரத்தித்தொழாயிரத்தியெண்பத்தியிரண்டு
ஒன்பதாம் மாதம் ஏழாம் தேதி
விழி மடல் திறந்தவள்
முல்லை முள்ளியவளை
பெற்றெடுத்த முத்து – புலிப்
பிள்ளைகளை அரவணைத்து
அடைக்கலம் தந்தது உன் குடும்பம்
உன் அக்காவின் குழந்தைகள்
உன்னையே வலம் வரும்
உன்னோடு பழகிய எவரும்
பின்னர் உனை மறவார்
என்னிடம் உன் கனவுகளை
எத்தனை நாள் பகிர்ந்திருப்பாய்?
என்னோடு கூடி நீ பிறக்கவில்லை – ஆனாலும்
என் தங்கையாகிவிட்டாயடி.
நுண்கலைக் கல்லூரிக்கு
நடன ஆசிரியையாக
நீ கிடைத்ததும் வரமே
நீ வளர்த்த தளிர்கள் பலர் – உன்
பெயர் சொல்ல வாழ்கிறார்கள்
கோபம் கொள்ளவே தெரியாத
குணம் உனக்கு
நேரம் காலம் பாராது பணி செய்யும்
மனம் உனக்கு
நீண்ட உன் கூந்தலைப் பின்னி
நேர்த்தியாய்க் கட்டி
நீள வரியுடையணிந்து
நிமிர்ந்து நீ நடந்து வர
பார்த்து நான் ரசித்த நாட்கள்
பனியாய்க் கரைந்ததடி
கலகலவென்று நீ கதைக்கும் அழகில்
கலவாய்க்குருவி என்று பெயர் வாங்கியவள் – நாட்டியக்
கலையில் நீ ஓர் வித்தகி
போராளியாய்ப் பரிணமிக்கு முன்பே
புலிப்படையோடு பயணித்தவள்
சலங்கை அணிந்த உன் பாதங்கள்
இசையொலித்து அதிர்கையில்
சலசலத்த மனங்களும்
எழுச்சி கொண்டு பாடும்
ஜதி கட்டி நீயாட
படை கட்டிப் பாய எண்ணும்
புரட்சியின் எண்ணங்கள்.
சுடர்மதியாய் நீ மாறி
சுடர்ந்தாய் புலிமகளாய் – உன்
வியக்க வைக்கும் செயல்களால்
விறுவிறுவென வளர்ந்தாய்
பயமென்பதை உன்னிடம்
பார்த்ததே இல்லை நான்.
போர்மேகம் பொழிந்த
குண்டுமழையில்
புதுக்குடியிருப்பு நனைந்தது
நாலா பக்கமும் எதிரியின்
முற்றுகைகள் வலுத்தது
படையணிகள் தயாராகி
காவலரண்களில் நின்றன
போராளிகள் ஒவ்வருவரும் – தலைவர்
இட்ட பணியை சிரமேற்கொண்டனர்
சமர்க்கள அணியுடன் புறப்பட
நீ தயாராகி விட்டிருந்தாய்
“வடை வாங்கித் தாங்கக்கா” என்று
உரிமையுடன் கேட்டாய்
எல்லோருக்குமாய் நான்
வடைகளைப் பகிர்ந்தேன்
நான் கடித்த வடையை
பாதியில் வாங்கி உண்டாய் – கண்கள்
பனித்தன இருவருக்கும் – நீ
விடைபெற்றுப் போகையில் என் மனம்
விம்மியது மௌனமாய்
இன்று விரையும் உன் கால்களின்பின்
நாளை நாமும் வருவோம்
என்று எண்ணிக்கொண்டேன் அப்போது.
கேப்பாப்புலவு நோக்கி
நகர்ந்தது உனது அணி
இது உனக்கு இரண்டாவது சமர்க்களம்
இத்தனை அவசரமாய்
ஈழ மண்ணை விட்டுப் பிரிவாய் என்று
எண்ணவில்லை
களம் கண்ட சில நாட்களிலே
நீ கண்மூடிப் போன சேதி வந்தது
ஓடோடிச் சென்று
உடையார்கட்டு மாவீரர் பணிமனையில்
உன் வித்துடலைப் பெற்றுக்கொண்டு
உற்றுப் பார்த்தேன் உன் முகத்தை – நீ
சலனமின்றித் துயில்வது போலிருந்தது
கதறியழத் துடித்த எண்ணத்தை
கட்டுப்படுத்தியபடி
துப்பாக்கியுடன் உன்னருகில் நின்றேன்
உனது அம்மாவின் அழுகுரல்
என் மனதை பிசைந்தது
புலிக்கொடி போர்த்திய போர்மகள் உன்னை
விசுவமடு துயில்நிலத்தில் விதைக்கையில்
எறிகணைகள் எக்கச்சக்கமாய் விழுந்தன அருகில்
எனது கண்கள் உனக்காய்க் கரைந்தது
இதயம் கனத்துப் போனது.
சிந்து நீ சிந்திச் சென்ற
எண்ணங்களில் நிறைகிறேன் – நாளை
வந்து பூக்கும் தமிழீழத்தில் – உந்தன்
வண்ணமுகம் தேடுவேன்
உன் போன்ற எம் உன்னத வீரர்புகழ்
உலகறிய எடுத்துச் சொல்வேன்
வாழும்வரை உங்கள் இலட்சிய
வரைபின் வழி தொடர்வேன்
வீழும் ஒரு நாளில் விடுதலை
கீதம் விண்ணுயர உயிர் பிரிவேன்
இது சத்தியம்!
கவியாக்கம் மற்றும் குரலோசை:- கலைமகள் (19.01.2015)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”