ஈழத்தமிழர் எம் நெஞ்சில் உறங்கும் எம்.ஜி.ஆர்
1987 ஆண்டு அது. அண்ணா தொழிலகம் என்ற உள்ளூர் உற்பத்தி நிறுவனத்தின் பற்பொடி தயாரிக்கும் களஞ்சியத்தின் தூசு பரவிய அறைக்குள் இருநூறு பேருக்கு மேல் அடைந்து கிடைக்கிறோம். அதுதான் எமக்கு அப்போது வாய்த்த தற்காலிக அகதி முகாம். பலர் கோயில்களுக்குச் சென்று அடைக்கலமாகி விட்டாலும், இந்த அண்ணா தொழிலகத்தின் நான்கு அடுக்கு மாடிக் கட்டடத்தின் கீழ் அறையில் ஒளிந்திருந்த எமக்கு இருந்த ஒரே அற்ப நம்பிக்கை தூரத்தில் இருந்து வரும் எம பாணம் எம்மைத் தாக்காது என்பது தான்.
தூரத்தில் இருந்து பாய்ந்து வரும் ஷெல் கணைகள் எங்கோ ஒரு மூலையில் குத்தி வெடிக்கும் ஓசை தொடந்து ஒலிக்கிறது. மாரிகாலம் தொடக்கி வைத்த பெருமழைச் சத்ததுக்கு மேலாக ஷெல் மழை ஓசை எல்லாப் பக்கமும் கேட்கிறது. அது வேறென்றுமில்லை காங்கேசன் துறை வீதிப்பக்கமாக நகர்ந்து வரும் இந்திய அமைதிப்படையினரின் முன்னெடுப்பின் கட்டியம் தான்.
அவர்கள் காங்கேசன் துறையில் இருந்து ஒரு அணியாகவும், பலாலிப்பக்கம் இருந்து இன்னொரு அணியாகவும் பிரிந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதல் தேவை முன்னே எதிர்ப்படும் எல்லாம் நாசமாகிப் போக வேண்டும். அதற்கு மேலால் தான் செயின் புளாக்குகள் எனப்படும் சுடுகலன்கள் பொருத்திய இராணுவ வண்டிகள் பாய்ந்து வரும். எல்லாப் பக்கமும் தன் கழுத்தைத் திருப்பி அந்த செயின் புளாக்குள் எறிகணைகளை ஏவிக் கொண்டே இன்னும் முன்னே முன்னே நகர்கின்றன.
அந்தப் படையணிக்கும் சரி, பாய்ந்து வரும் ஏவுகணைகளுக்கும் சரி கிளியர் ஆக வேண்டிய முன்னால் எதிர்ப்படும் கிராமங்கள் எல்லாமே புலிகள் தான். அதுக்கு ஆறு மாசக் குழந்தையும் சரி அறுபது வயது கிழவனும் சரி எல்லாம் ஒன்று தான்.
“என்ரை பிள்ளையார்க் கிழவா! என்னைக் காப்பாற்று”, பக்கத்து வீட்டுக்கார அன்ரி பெரும் குரலெடுத்து அழுகிறா. எனக்கு இரண்டு வயசு மூத்த பாலகுமார் முன்னால் மாட்டியிருக்கும் அம்மனின் படத்தையும், சாயிபாபா படத்தையும் மாறி மாறி நடுங்கிக் கொண்டே தொட்டுத் தொட்டு “தாயே….தாயே” என்று புலம்புகிறான்.
எல்லாரையும் பார்க்கையில் எனக்கு பயம் இன்னும் இரண்டு மடங்கு, மூன்று மடங்காக எகிறுகிறது. அம்மாவின் நைலெக்ஸ் சீலையில் என்னுடைய கண்ணீர்த் துளிகள் தொப்பு தொப்பாக விழ அவரின் கையைப் பிடித்துக் கொள்கிறேன் பயத்தோடு. அம்மாவின் வாயில் எல்லாத் தேவாரங்களும் ஒழுங்கில்லாமல் அவசரகதியில் புலம்பலாக வருகின்றன.
ஒன்று இரண்டாக ஆரம்பித்த அழுகுரல்கள் இப்போது ஒட்டுமொத்தமாக அந்தப் பற்பொடி அறையையே ஆக்கிரமிக்கிறது. ஏனென்றால், கிட்ட கிட்ட ஏவுகணை ஒலி கேட்குதே.
தொப்புள் கொடி உறவாக, கண்ணுக்குத் தெரியாத உறவுப்பாலத்தைப் போட்டு வைத்து ஒரு தாய் மக்கள் போல் பழகி அது நாள் வரை இருந்த இந்திய -ஈழ உறவை சிங்கள அரசியல் சாணக்கியம் விழுங்கி ஏப்பம் விட்டதன் அறுவடையின் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தோம். ஒபரேஷன் பூமாலை மூலம் சாப்பாட்டுப் பொதி போட்டு சில மாதங்களில் வாய்க்கரிசியும் அவர்களாலேயே போடப்படுகிறது.
மெல்ல மெல்ல அந்த ஏவுகணை மழை ஓய ஆரம்பிக்க, இருட்டுக் கட்டுகிறது வானம். அந்த இடைவெளியில் நாங்கள் இருந்த அகதி முகாமின் முற்றத்துக்குப் போய் இரவுக்குத் தேவையான கஞ்சியைத் தயார்படுத்த ஒரு கூட்டம் தயாராகிறது. இன்னொரு கூட்டம் றேடியோவில் பற்றறி போட்டு “ஆகாசவாணி” கேட்கத் தயாராகிறது. வானொலியைச் சுற்றி நின்ற பெரியவர்கள் எல்லோரதும் அப்போதைய ஒரே நம்பிக்கை
“எம்.ஜி.ஆர் விடமாட்டார், ஏதாவது செய்வார்”.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் தார்ப்பரியத்தை உணர்ந்து அதற்கு ஆதரவளித்த நாள் முதல் தான் இறக்கும் வரை இதய சுத்தியோடு செயற்பட்ட ஒரே தமிழினத் தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்பதை 22 வருஷங்கள் கழித்தும் இன்றும் நிரூபிக்கக் கூடியதாக இருக்கிறது இன்றைய அரசியல் களமும், தமிழீனத் தலைவர்கள் சொல்லும் காலத்துக்குக் காலம் உதிக்கும் வேதாந்தங்களும்.
தமிழக டி.ஜி.பி ஆக இருந்த கே.மோகன்தாஸ் எழுதிய “எம்.ஜி.ஆர் நிஜமும் நிழலும்” நூலை வெகு காலம் முன்னர் படித்திருந்தேன். அதில் போலீஸ்துறையில் தான் பணியாற்றிய காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவாக்கியிருந்தார். குறிப்பாக எண்பதுகளில் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த போராளி இயக்கங்களின் நடவடிக்கைகளும், அதனை எம்.ஜி.ஆர் அரசு நோக்கிய விதத்தையும் பல பக்கங்களில் சொல்லிக் கொண்டே போகிறார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தேசியத்தலைவர் பிரபாகரன் மீது எம்.ஜி.ஆர் கொண்ட நம்பிக்கை என்பனவெல்லாம் குறித்த சம்பவங்களோடு விரிகின்றன.
ஈழத்தில் எழுச்சிப் பாடல்கள் என்ற வடிவம் முளை விடுவதற்கு முன்னும் சரி, பின்னும் சரி எம்.ஜி.ஆரின் “தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை” போன்ற தத்துவப்பாடல்கள் போருக்கு அழைக்கும் பரணிப் பாடல்களாக அமைந்திருக்கின்றன.
வடமாகாணத்தின் மினிபஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருந்த பொன்.மதிமுகராசா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கழகத்தை ஆரம்பித்து அந்தக் கழகத்தின் 1991 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நினைவு நாளினை எங்கள் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடத்திய அன்று தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தினை அழைத்துச் சிறப்புரை ஆற்றச் செய்திருந்தார்.
அப்போது கூட்டத்தோடு கூட்டமாக இருந்து நிகழ்வைப் பார்த்த எமக்கு, எம்.ஜி.ஆர் தலைவர் பிரபாகரனோடு நட்புப் பாராட்டிய காலங்கள், ஆரம்ப கால உதவிகளைச் சொல்லிக் கொண்டு போக அப்போது எமக்கெல்லாம் விழிகளை விரித்த வியப்பு வந்தது.
இந்திரா காந்தி இறந்த அந்த நாள் எங்களூரில் அப்பிக் கொண்ட சோகத்தைச் சிறுவனாகப் பார்த்த எனக்கு எம்ஜிஆரின் பிரிவைக் கேட்ட போது துடிதுடித்த எங்களவர் இன்னும் கண்ணுக்குள் நிக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் ஒபரேஷன் பவான் என்ற தொடர் அவலம் நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றி நிரந்தரமாகப் பிரிந்தது எமது இனத்துக்கு இன்னும் சாபக்கேடு ஓயவில்லை என்று சொல்லாமல் சொல்லியது. இன்றும் எம்ஜிஆரைப் பெரு மதிப்போடு நெஞ்சில் வைத்துப் போற்றக் காரணம், அவர் அரசியலைக் கடந்து இதயசுத்தியோடு எமது போராட்டத்தைப் பார்த்தது மட்டும் தான். அதை இன்றைய அரசியல் விபச்சாரிகளிடம்/சந்தர்ப்பவாதிகளிடம் எதிர்பார்ப்பவன் முட்டாள் என்று சொல்லித் தெரிவதில்லை.
எம்ஜிஆர் என்ற தமிழகத் தலைவனோடு ஈழத்தமிழினத்துக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் தொலைந்து போனாலும் உங்களை மறவோம்.
– எம் ஜி ஆரின் 22வது நினைவு நாள் கட்டுரையிலிருந்து….
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”