லெப். கேணல் இளவாணன்
ஈழத்தின் கர்ணன் இளவாணன்.
இந்தப் பெயரைத் தெரியாதவர்கள் வன்னியில் இல்லையெனலாம். வறுமைப் பட்ட மக்களில் ஒருவனாக போராளி மாவீரர் குடும்பங்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை செய்பவனாக யார் கண்ணீருடன் நிக்கிறார்களோ அவர்களின் கண்ணீரைத் துடைப்பவனாக வன்னி மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்பவனாக இப்படி பல விதமாக மக்களினால் அறியப்பட்டவன் தான் மருதம் வாணிபத்தின் பொறுப்பாளரான இளவாணன்.
தமிழீழத்தின் நெற் களஞ்சியமாம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தர்மபுரத்தில் 1969.05.13 அன்று திருபுஸ்பராசா-தம்பதிகளுக்கு மகனாக பிறந் தான் உதயகுமார். இந்திரன் என்பதே இவனின் செல்லப் பெயர். சிறுவயதில் மிகவும் குறும்புக்காரனாகவும் சுட்டிப்பையனாகவும் இருந்தார். இவன் தனது ஆரம்பக்கல்வியை தர்மபுரம் மகாவித்தியாலத்திலும் உயர் தரக்கல்வியை (கலைப் பிரிவு) முரசுமோட்டை முருகானந்தா வித்தியாலத்திலும் கற்றார். கல்வி நேரம் முடிய மிகுதி நேரம் குடும்ப கஸ்ரத்தை உணர்ந்து தந்தை யாருடன் இணைந்து வயலில் வேலைசெய்து வந்தார். இதனால் இதனால் ஓரளவு குடும்பச் சுமையைக் குறைத்தார்.
இவனின் தந்தையார் ஒரு தமிழ் பற்றாளன் சமூக ஆர்வலன். தந்தை செல்வாவின் கொள்கையால் தமிழரசு கட்சியில் இணைந்து இன அடக்கு முறைக்கெதிரான அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டார். இன்றுவரை இனத்துக்கான அவரின் பணி தொடர்கிறது.
இந்திரன் எப்பொழுதும் ஏதாவது செய்து கொண்டு இருப்பான். சும்மா இருக்கவே மாட்டான். குடும்பச் சுமையைப் போக்க கடுமையாக கஸ்ரப் பட்டான். அதனால் கஸ்ரத்திலிருந்து குடும்பத்தை விலக்கியவன். இவனின் ஊரில் இந்திரனைத் தெரியாதவர்கள் இல்லை. ஒவ்வொரு வீட்டின் பிள்ளை யாகவும் வலம் வந்தான். தேடி தேடி அயலவர்களின் தேவைகளைக் கேட்டு நிறைவு செய்து கொடுப்பான்.
ஈழ தேச விடுதலையில் பங்குகொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் குடும்பப் பாரம் போராட்டத்தில் இணைய விடவில்லையெனவும் இருந்தும் தன்னால் முடிந்த உதவிகளைப் போராளிகளுக்கு செய்து கொடுத்ததாகவும் அவை தனக்கு மன நிறைவை தரவில்லையெனவும் உள் மனத்தில் தனக்கு கவலையாக இருந்ததனாலும் 1995 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் 3 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பொழுது ஊரில் நடந்த விடுதலைப் புலிகளின் பரப்புரை பணியில் தனது தந்தையும் சமூக ஆர்வலன் என்ற நிலையில் போராளிகளால் அழைக்கப்பட்டார். அவ்வேளை அங்கிருந்த மக்களில் ஒருவர் தனது செவி பட இவர் பிள்ளைகளை இணைய விட்மாட்டார். மற்றோர்களை இணைய சொல்லி போராளிகளுடன் இணைந்து செய்யப்படுகின்றார்; என கூறியதால் தான் அந்த நிகழ்விலேயே இயக்கத்தில் இணைந்து கொண்டதாகவும் அன்று அவர்; அப்படி கூறாமல் விட்டிருந்தால் தேச விடுதலைக்குப் பணி செய்ய முடியாமல்போய் இருக்கும் எனவும் போராளியான பின் அவருக்கு தான் சென்று நன்றி கூறியதாகவும் கூறிவார்.
இந்திரனாக பொன்னம்பலம்-01 முகாமிற்கு சென்றவர் இளவாணன் என்ற நாமத்துடன் தேச விடுதலைக்கு முழுமையாக ஆர்பணித்தவனாக வெளி வந்தவனை நிதித்துறை உள்வாங்கிக் கொண்டது. நிதித்துறையின் தாக்குதலணியில் இணைந்து ஓயாத அலை-01 பங்கு கொண்டு முல்லை மண் மீட்டார். இதன்பின் ஆணையிறவிலிருந்து கிளிநொச்சியை ஆக்கிரமித்த சிங்களப் படையினரின் சத்ஜெய படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் பங்கு கொண்டு விழுப்புண்ணடைந்தார். மருத்துவ மனையிலிருந்து மீண்டவரிற்கு சோழன் வாணிபத்தில் பணி வழங்கப்பட்டது.
அவ்வாணிபத்தின் பொறுப்பளராக இருந்த லெப்.கேணல் பாவரசன் (பைப்) அவர்களின் நம்பிக்கையாளனாக தனது பணியைத் திறம்படச்செய்து வந்தார். சோழன் வாணிபம் மூலம் விழுப்புண்ணடைந்த போராளிகளுக்காக நாளாந்தம் வழங்கப்படும் உணவுக்கான பொருட்களை வழங்கும் பணியே இவனிடம் வழங்கப்பட்டது. இதில் இறைச்சிக்காக வழங்கப்படும் மாடுகளிலிருந்து பாலினைக் கறந்து போராளிகளுக்கு வழங்கினார். 1997 இல் பால்மா என்பது பெயர் அளவிலேயே அறியப்பட்ட காலம். இவனின் இந்த செயல் பெரும் வியப்பையும் வரவேற்பையும் பெற்றது. இதனால் விழுப்புண்ணடைந்த போராளிகள் இழந்த சக்தியினை மீண்டும் பெற்றுக் கொண்டனர். இவ்விடயம் பைப் அண்ணா மூலம் நிதித்துறைப் பொறுப்பாளரான பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் செவிக்கு எட்டியதும் இவனை அழைத்து பாராட்டு தெரிவித்தார். இந்தச் செய்தி தலைவர் வரை சென்றடைந்தது.
மாவீரன் லெப்.கேணல் பாவசரன் (பைப்) அண்ணையை அடிக்கடி நினைவு கூறுவார். தனது இவ்வளர்ச்சிக்கும் இயக்கத்தில் ஒவ்வொரு போராளிகள் எவ்வாறு இருக்கவேண்டும் என அவரைப் பார்த்து அறிந்து கொண்டதாகவும் கூறுவார். இவர்மீது கொண்ட பாசத்தின் காரணமாக தனது மகனுக்கு பாவரசன் எனப் பெயர் சூட்டினார்.
இளவாணனின் கடமையுணர்வு வேகம் ஆளுமை என்பவற்றை அறிந்த தமிழேந்தி அண்ணை இயக்கம் முழுமையாகவும் நாளாந்த வழங்கல்கள் வழங்கப்படும் பிரிவைத் தனியாகப் பிரித்து மருதம் வாணிபம் என பெயரிட்டு பணி வழங்கினார்.
சிறிய வாணிபமாக உருவான மருதம் வாணிபம். பின்னாளில் இவரின் ஆளுமையால் பெரும் விருட்சமாக வளர்ந்து வந்ததனையும் அதனால் இயக்கமும் போராளிகளும் மக்களும் பயன்னடைந்ததையும் வன்னிநிலம் அறியும்.
தமிழேந்தியண்ணையின் நம்பிக்கையாளனாகவும் அவர் வீரச்சாவடையும் வரை அவர் அருகில் இருந்தவர். இயக்கத்தின் எல்லாத் துறைத் தளபதிகள் பொறுப்பாளர்கள் போராளிகளால் விரும்பப்பட்டவர். அவர்களே இவரை வந்து சந்தித்து இவரிற்குப் பாராட்டுக் கூறிச் சென்றனர். ஒரு தடவை சாள்ஸ் அன்ரனி படையணி சிறப்புத் தளபதியாக இருந்த கேணல்.கோபித் இவரின் முகாமிற்கு வந்திருந்தார். “என்ன கோபித் இங்க என கேட்ட பொழுது நான் தலைவரைச் சந்திக்க வந்தனான் மீண்டும் களமுனை போகப் போகிறேன் இளவாணன் அண்ணை பெடியன்களுக்கு உணவுப் பொருட்களை கொண்டுபோகச் சொன்னவர்” அதுதான் வந்தேன் என்றான். இவ்வாறாக ஒவ்வொரு போராளிகளின் நலனிலும் அக்கறையுடனும் இருந்தார்.
தன்னுடன் பணியாற்றிய பணியாளர்களுடன் அக்கறையும் கண்டிப்புடனும் பழகினார். அவர்களில் ஒருவனாக நின்று பணி செய்வார். மிகவும் எளிமையாக வாழ்ந்தார்.
இவரின் இளகிய மனதிற்கு எடுத்துக்காட்டாகத் தனது காதலி விழுப்புண்ணடைந்து கால் ஒன்று இழந்த நிலையிலும் அவரைத் திருமணம் செய்தார். தலைக்கு மேல் பணி இருந்தாலும் ஒரு குடும்பத் தலைவனாக வீட்டில் அத்தனை வேலைகளையும் சலிக்காமல் செய்து கொடுப்பார். துணைவியைக் கஸ்ரப்பட விடமாட்டார். இவர்களின் இல்லற வாழ்வின் பரிசாக இரு மகன்கள் இவரின் துணைவி இவரின் நேர்மைக்கும் பணிக்கு என்றுமே துணை இருந்தவர்.
வறுமைப்பட்ட மக்களுக்கு பசியைப் போக்குவனாக மாவீரர் குடும்பங்களில் ஒருவனாக நின்று அவர்களின் தேவைகளை செய்யும் செவ்வனாக போராளி கள் குடும்பங்களின் சுமைமைகளைத் தாங்கும் சுமை தாங்கியாக ஏனைய மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை வழங்கும் வங்கியாள னாகயென பலவிதமாக தனது பணிகளைச் செய்தவர். இவை அனைத்தும் இவரின் வழமையான பணிகளைவிட மேலதிகமானவை.
களமுனை சென்று முன்னரங்கம் அமைக்கும் பணிகளா புதிய போராளிகளை இணைக்க வேண்டுமா என தமிழேந்தியண்ணை சொல்லி முடிப்பதற்கு முன் முதல் ஆளாக நான் செய்கிறேன் அண்ணை எனக் கூறி தனது போராளிகள் பணியாளர்களுடன் அப்பணிகளை முன்னின்று செவ்வனவே செய்து முடிப்பார் இளவாணன்.
2009.03 மாத காலப் பகுதியில் ஆனந்தபுரம் களமுனையில் மாவீரர் லெப்.கேணல் பாரதி அண்ணை கண்டு கதைத்த பொழுது அவருக்கு முதல் குழந்தை பிறந்து சில நாட்களே. குழந்தை தாய் எப்படி நலமா? எனக் கேட்டேன். அவர் இளவாணன் நான் இல்லையென அறிந்து பால்மா ஏனைய பொருட்களைக் கொடுத்து விட்டார். அதனால் நலமாக இருக்கிறார்கள் என்றேன். இப்படி தான் களத்தில் நிற்கும் போராளிகள் பலர் இளவாணன் குடும்பத் தேவைகளை அறிந்து அவற்றை செய்வார் என்ற மனநிறைவுடன் தமது பணிகளைச் செய்தார்கள்.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் உக்கிமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எங்கும் எதிரியின் எறிகணை வீச்சுக்கள் அதையெல்லாம் தாண்டி மக்கள் மருதம் வாணிபம் எங்கு இருக்கிறது எனத் தேடிச் சென்று தேவையான பொருட்களைப் பெற்றுக்கொண்டார்கள். யாருக்கும் இல்லையெனக் கூறாமல் இருக்கும் பொருட்களை எல்லோருக்கும் பங்கீடு செய்து வழங்கினார். அக்காலத்தில் கர்ப்பிணியாக இருந்த பல தாய்மார்கள் ஆரோக்கியமாக குழந்தைகளைப் பெறவும் விழுப்புண்ணடைந்தவர்கள் (போராளிகள் மக்கள்) இன்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அன்று இளவாணன் அண்ணை வழங்கிய பால்மாவே காரணம் என இன்று வரை பலர் கூறிவருகின்றனர்.
“அன்பில்லாதவர் எல்லாப் பொருட்களையும் தமக்கே உரிமையாக்கிக்கொண்டு வாழும் தன்னலக்காராக இருப்பர். அன்புடையோரோ தம் உடம்பையும் உயிரையும் பிறர் நலத்திற்காக ஈய்ந்து மகிழும் இயல்புடையவராக வாழ்வார்” என்ற திருவள்ளுவரின் வாக்குக்கு அமைய மக்கள் மக்கள் என மக்களோடு ஓயாது உழைத்தவர். இரட்டை முள்ளிவாய்க்கால் பகுதியில் மண் அணை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை 22.04.2009 அன்று எதிரியின் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். இவரின் வித்துடல் வைத்திருந்த இடத்தில் அத்தனை எறிகணை வீச்சுகளுக்கு மத்தியில் போராளிகள் மக்கள் என பலர் திரண்டு இறுதி அஞ்சலி செய்தனர்.
இளவாணன் ஈழத்தின் கர்ணன். இறுதியாக அவனிடம் கொடுப்பதற்கு உயிரைவிட எதுவும் இருக்கவில்லை. அதையும் தாயக விடுதலைக்காக கொடுத்து தர்ம யுத்தத்தில் தன் பணிமுடித்தான்.
நினைவுப்பகிர்வு:- வயவை நண்பன்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”