ஒளியின் கண்ணீரும் கதையின் கதையும்
கார்த்திகை மாத மழையில் கல்லும் விறைத்து விடும் ஆனால் எம் காவல் தெய்வங்கள் உறங்கும் கல்லறைகள் மட்டும் கம்பீரமாக எழுந்து நிற்கும். பசுமைநிறைந்த மாதத்தில் மாவீரர்களின் தியாகங்கள் பசுமரத்தாணியாய் எல்லோர் நெஞ்சங்களிலும் நிழலாடும். எம் சரித்திர நாயகருக்கென்றே மண்ணில் இருந்து கிளர்த்தெழுந்த கார்த்திகைச்செடி தமிழீழ தேசிய மலரை பிரசவிக்கும். தமிழீழத்தின் அத்திவாரங்களாய் ஆறடி நிலத்தில் புதைந்து போயுள்ள ஆன்ம விடுதலையின் வித்துக்கள் ஒருகணம் சிலிர்க்கும். எம் தேசத்துத் தலைவனின் மடிமீது உயிர் துறந்து ஈகவரலாற்றை தொடங்கி வைத்த அந்த முதல் வித்தின் நினைவு நாளில் இப்புனித இல்லங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வீரர்களின் திருமுகங்களையும் சரித்திரமாகிவிட்ட அவர்களின் சாதனையின் உச்சங்களையும் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஒவ்வொரு தீபங்களிலும் காணமுடியும்.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் கூறிச் சென்ற சங்க காலம் இன்று மீண்டும் தமிழீழத்தில் மறு பிரப்பெடுத்திருக்கின்றது. கால மாற்றங்களாலும் அன்னியப் படையெடுப்புக்களாலும் உறைநிலைக்கு போன சங்ககாலம் எம் தலைவன் மேதகு வே. பிரபாகரனின் விழிச்சுட்டெரிக்கும் பார்வியினாலும் எம் மாவீரர்களின் வீரத் தியாகங்களினாலும் உருகி இன்று தமிழீழத்தில் ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது. அவ் ஆற்றிலே காதலும் வீரமும் மீண்டும் முக்குளித்து எழுகிறது வீட்டுக்கொருவர் நாட்டைக் காக்க விரைந்ததும் தந்தை போர்க்களத்தில் மடிந்திட பிள்ளை போர்க்கோலம் பூண்ட மரபும், மார்பில் அம்பேந்திய மகனின் வித்துடல் கண்டு மகிழ்ந்த தாயும் என்ற வரலாறு இன்று தமிழீழத்திலேதான் தோன்றியிருக்கிறது.
அடுத்த நாள் கனவுகளை முதல்நாள் உறங்கமுன் சிந்திக்கும் எம்மவர்களிடையே அடுத்தநாள் என் தேசத்திற்காக வெடிக்கப் போகின்றேன் என்று தெரிந்தும் முதல் நாள் கூட முகத்தில் வெண் தாமைரையோடு உறுதிபூணும் நெருப்புக்குழந்தைகள். விடுதலைப்பசிக்கு தன் பசியை மறந்து தன்னையே ஆகாரமாக்கிய எம் தேசத்தின் அகிம்சைப்புலிமறவன். கழுத்திலிட்ட திருமண மாலைகளில் உள்ள மலர்கள் உதிரும் முன்னரே உதிர்ந்து போன வீரபுருசர்கள். கெரில்லாப்படையாக எழுந்து எமது படையணியை ஒரு புதிய திருப்புமுனையோடு மரபுப்படையாக மாற்றிய வீரத்தளபதிகள். விடுதலைப்போராட்டம் தவழ்ந்து எடுத்தடி வைக்க வழிகோலிய மூத்த உறுப்பினர்கள். உறுதியான எம் போராட்டத்தில் எம் ஒருவரால் வரும் பாதிப்பை முன்னுணர்ந்து உயிருடன் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்ற மன வைராக்கியத்துடன் தம்மையே அழித்துக்கொண்ட இலட்சியவாதிகள். ஓங்கி அடிக்கின்ற அலைகளின் நடுவே ஓடி விளையாடிய கடற்புலி மறவர்கள். ஆணுக்கு பெண் சரிநிகர் என ஆழக்கடலடியில் பல மைல்களைக் கடந்து சரித்திரம் படைத்த உத்தமிகளின் உயிர்மூச்சுக்கள். எதிரியின் சிங்கக் குகையினுள்ளே சென்று சிங்கத்தின் பற்களையே எண்ணிப்பார்த்த வேவுப்புலி வீரர்கள். தன் பிள்ளையின் வாழ்வும் அவர்போன்ற சிறார்களின் எதிர்காலமும் போர் என்ற அரக்கனின் கால்களில் நசிபடக்கூடாது என்பதற்காக எல்லைப்படையாகி மாவீரராகிவிட்ட மறத்தமிழர்கள். தன் பிஞ்சு மழலையின் கையில் எதிர்காலம் இயந்திரத்துப்பாக்கியை திணிக்காமல் இருக்க அக்குழந்தையின் கையால் அஞ்சலி பெற்று விதையாகிப் போன தாயும் என்று இன்னும் சொல்லிலடங்கா சாதனையோடு இங்கு விழுமூடித் தூங்குகிறார்கள். அமைதியாகுங்கள் இவர்கள் எங்கள் உள் மனதுகளில் நிறைந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது ஒலிக்கும் ஆலய மணிகளே நாளை எம் ஈழத்தை சிதைக்கவரும் ஈனர்களுக்கான சாவு மணியாகும். இவர்களுக்கு நாம் ஏற்றும் ஒளி தீபங்களே பெரும் தீயாகி எதிரி படையைச் சுட்டெரிக்கும் எம் தேசியத் தலைவனின் ஆணை ஏற்று அவன் சுட்டு விரல் காட்டும் திசையில் எம்தேச விடியலினைத் தரிசிப்போம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”