இரு இராணுவம் என்பதற்கான அளவுகோல் போர்வலு எனின் அது சரியானதே!
இரு இராணுவம் என்பதற்கான அளவுகோல் போர்வலு எனின் அது சரியானதே!
தமிழீழ போராட்ட வரலாற்றில் 31 நாட்கள் ஆனையிறவுப் படைத்தளத்தைச் சூழ நடைபெற்று முடிந்த ஆ.க.வெ.இராணுவ நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பொட்டு அவர்கள் “விடுதலைப் புலிகள்” ஏட்டிற்கு 1991ம் ஆண்டு அளித்த செவ்வி.
¶ ஒரு இராணுவ அதிகாரி இந்தச் சமரை வளைகுடா போருடன் ஒப்பிட்டுள்ளார். இந்த ஒப்பீடு சரியானதா?
» அவர் எதனை அடிப்படையாக வைத்து இதனைக் கூறியுள்ளார் என்பது எனக்கு விளங்கவில்லை. நில அமைப்பை அடிப்படையாக வைத்து இக்கருத்து கூறப்பட்டிருந்தால், அது ஓரளவுக்குச் சரியானதுதான். நீண்ட பெரும் வெளிகளும், மணற்பரப்புக்களும், சிறு பற்றைகளுமே இந்தப் போரின் உயிர்ப்பரப்பாக அமைந்தது.
போரில் படைகளின் ஆள், ஆயுத பலத்தினை அடிப்படையாக நோக்கின் அது பன்னாட்டுப் படைகளுடன் ஈராக் படையின் விகிதாசாரத்தினை விட சிறிலங்கா படைப்பலத்துடனான எமது படைப் பலத்தின் வீதம் குறைவானதே.
ஆனால் போர் முடிவுகளின் அடிப்படையில் நோக்கினால் அது வளைகுடா போர் முடிவுகளுக்கு முற்றிலுமாகவே நேர் எதிராக அமைந்துள்ளது. ஈராக் சரணடைந்து அவமானத்துடன் தலை குனிந்து நிற்கிறது. தமிழீழம் பெருமையுடன் எழுந்து, சிலிர்த்து, புதிய போர் அனுபவங்களுடன் காத்திருக்கின்றது.
¶ இந்தச் சமரிலிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட போர் அனுபவங்கள் என்ன?
» போர் அனுபவங்கள் ……அவற்றை இதில் கூற முற்பட்டால், அது ஒரு பெரும் தொடராக நீழும். எனினும் சுருக்கமாகச் சொல்வதானால், நாம் இந்தப் போரின் பின்னால் எமது படைப் பிரிவுகட்குரிய பயிற்சி முறைகளில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள், விசேட பயிற்சி முறைகளின் அவசியம் என்பன பற்றி உணர்ந்துள்ளோம்.
பெரிய படையணியைப் போரில் ஈடுபடுத்தும் போது, அதுவும் நீண்ட நாட்போரில் ஈடுபடுத்தும்போது செய்யப்படவேண்டிய பின் களவேலைகளான விநியோகம், மருத்துவம், படைப்பிரிவு மாற்றங்கள் பற்றி புதிய பாடங்களைப் படித்துள்ளோம்.
இதைவிடவும் இன்னும் அதிகம் கூற முடியும். ஆனால் தொடரும் போரின் இடையில் கிடைக்கும் அனுபவத்தொடரானது இப்போது பகிரங்கப்படுத்த முடியாதது. ஆனால் உறுதியாக ஒன்றைக் கூறமுடியும்.
எம்மை எதிர்ப்பது எந்தப் பெரியபடையாக இருந்தாலும், அது எமது போராளிகளை நேருக்கு நேர் சந்திப்பது, எதிரிக்கு மிகவும் கடினமான காரியமாகவே தொடர்ந்தும் இருக்கும் என்பதை மீண்டும் ஒரு தடவை பெருமையுடன் உணர்ந்துள்ளோம், உணர்த்தியுமுள்ளோம்.
¶ இலங்கையில் இரண்டு இராணுவங்கள் உள்ளதாக உலகப் பத்திரிகைகள் விமர்சிக்கின்றன. இந்தக் கணிப்பு சரியானதா?
» இந்த விமர்சனமானது சண்டைக்களத்துள் நின்று சொல்லப்பட்டதல்ல. யுத்த களத்தில் சிறிலங்காப் படைகளுக்கு ஏற்பட்ட சேதங்களையும், அவர்களின் திணறல்களையும் கணக்கிட்டதனால் எழுந்த கருத்தே மேற்கண்ட விமர்சனமாகும்.
ஆனையிறவு முற்றுகைச் சண்டையானது, சிறிலங்கா இராணுவத்தாலும் வெளி உலகத்தினாலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதற்கென முறியடிப்பு நடவடிக்கையும் சிறிலங்காவால் தீர்மானிக்கப்பட்டே இருந்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட முற்றுகைக்கான, முறியடிப்பு நடவடிக்கையானது, எதிர்பாராத எதிர்ப்புக்களையும், இழப்புக்களையும் சந்தித்த வேளையில் அவர்கள் இவ் எதிர்ப்பை வழங்கக்கூடிய அணியின் ஆயுத, ஆள்பலம் பற்றி கணிப்பிடுகின்றார்கள் . அந்தக் கணிப்பின் போது அந்த விமர்சகர்கள் குறிப்பிட்ட போர் வலுவை வழங்கக்கூடிய படைபற்றிய கணிப்பீடுகளுக்கு, வழமையான இராணுவ அமைப்புக்களது போர் வலுவையே அளவு கோலாகப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் விடுதலைப் புலிகளது இராணுவ அமைப்பானது களத்தில் போரிடும் வேளையில், எமது போராளிகளது ஒப்பற்ற வீரத்தால், வெளி ஆட்களால் நம்புதற்கரிய போர்த்திறனுடன் செயற்படுகிறது.
ஒரு மரபுவழி இராணுவத்தை, அதன் முழுமையான நவீன, இராணுவ பலத்துடனான நகர்வினை, விடுதலிப் புலிகள் தம் உயிரையே கவசமாக்கித் தடுத்துள்ளனர்.
ஆக இரு இராணுவம் என்பதற்கான அளவு கோல் “போர் வலு” எனின் அது சரியானதே. ஆனால் ஆள்,ஆயுதக் கணக்குகளின் அடிப்படையில் அமையுமானால் அதற்கான நிலையை நாமடைய இன்னும் நாட்கள் உள்ளன. அப்படி ஒரு நிலை ஏற்படும் போது எமது விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரிய வரலாற்றுத்திருப்பம் ஏற்படும் என்றே நான் நம்புகின்றேன்.
¶ மரபுவழி இராணுவமாகப் புலிப்படை வடிவமாற்றம் பெறவிழைவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எத்தகைய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என எண்ணுகிறீர்கள்?
» மரபுவழி இராணுவமாகவும் எம்மால் போரிட முடியும் என்பதை நாம் சிறிலங்காவுக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளோம். இதை உணர்ந்து சிறிலங்கா அரசானது தமிழீழ மக்களது தன்னாட்சி உரிமையை அங்கீகரித்து அதன் அடிப்படையில் ஒரு தீர்வுகாண முன்வருமானால் அது புத்திசாலித்தனமாக இருக்கும்.
அதைவிடுத்து தமிழரின் இராணுவ பலத்தினை முறியடிக்கவெனத் தம் இராணுவத்தினது ஆள்,ஆயுதப் பலத்தினைத் தொடர்ந்து அதிகரிக்க முற்படுமேயானால், அதுவும் எமக்குச் சாதகமானதே. ஏனென்றால் அவர்களால் தாங்க முடியாத பொருளாதார, இராணுவச் சுமையினை அது அவர்கள் மீது சுமத்தும். அந்தத் தொடர் அழுத்தமானது அவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடையும் போது முடிவுகள் அவர்களது விருப்பங்களுக்கு அப்பால் சென்று தீர்மானிக்கப்படும் நிலை ஏற்படும்.
எந்த விருப்பு வெறுப்புக்களுக்கும் உட்படாது நிலைமையைத் தெளிவாக அவதானித்த எவருமே இந்த முடிவுக்கே வருவர். இதுவே தொடர்ச்சியாக நடந்தும் வந்துள்ளது.
தமிழர் தம் இராணுவ பலமே அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தவல்ல மூல காரணமாக அமைந்துள்ளது.
ஆகவே தமிழீழ மக்களது தேசிய இராணுவம் என்பது தமிழீழ விடுதலையின் ஆரம்பமே.
¶ இந்தச் சமரில் எவ்வளவோ மகத்தான தியாகங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதைப் பற்றி ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?
» நான் முதலில் கூறியதுபோல் எமது போராளிகள் தம் உயிரையே கவசமாக்கிப் போராடினார்கள். காயமடைந்து விழும் போராளியைத் தாங்கவென ஆயுதங்களற்ற நிலையில் நகர்ந்தார்கள். காயமடைந்த போராளியின் ஆயுதத்தை ஓயவிடாது இயக்கவென ரவைகளின் மத்தியில் காத்திருந்தார்கள்.
எதிரியின் கவசவாகனங்கள் எமது நிலையினை ஊடுருவும் நேரத்தில் தோழர்களது மீள் ஒழுங்கமைப்புக்கு அவகாசம் வேண்டி தம்மையே கவசமாக்கி, தம்மிலே தடம் பதிய நின்று போரிட்டார்கள்.
சண்டைக்களம் வெடித்து,அதிர்ந்து கொண்டிருக்கிறது.எமதுநிலை ஒன்றுள் எதிரி ஊடுருவுகின்றான். தன்னுடலில் ஏற்பட்ட படுகாயத்தை- தனது நுரையீரல் ரவை ஒன்றால் கிழிக்கப்பட்டதைக் கூட உணராமல் தனது படையை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஒரு தளபதி அவனது விருப்பத்திற்கு மாறாகச் சண்டைக்களத்திலிருந்து சகபோராளிகளால் பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றான்.
வேறொரு பொழுது, வேறொரு போர்க்களம். எதிரி எம் நிலையைத் தாண்டுகின்றான். அவனது நகர்வைத்தொடர்ந்து செய்யவிடேன் என்றுசொல்லி எதிரிப்படையுடன் தன்னைக் கலந்து காணாமல் போன “ஈழவன்”.
இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு புதிய வரலாறாய் புதிய அத்தியாயத்துள் புகுந்து கொண்டிருக்கின்றது. இந்த வரலாறு எழுதப்படுவது ஆயுதங்களினால் மட்டுமல்ல.எமது போராளிகளின் தீரம், தியாகம், அவர்தம் உயிர்கலந்தே இவ்வரலாறு எழுதப்படுகிறது.
தம் உயிரை; தம் உடலை; “தம்மையே” தியாகம் செய்த போராளிகளை நாளைய தமிழீழ வரலாறு கூறும்.
விடுதலைப் புலிகள் (ஆவணி, புரட்டாதி 1991) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”