லெப். கேணல் விசு
வாழ்வினைக் கரைத்து வீரம் விதைத்தவன்
புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு / அருமை.
1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம், இந்தியப்படை வருகை என பல வரலாறுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு . இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல் .சுருங்கக் கூறின் ‘கண்ணையும் பாதுகாக்கவேண்டும், இமையையும் பாதுகாக்க வேண்டும்’ அதேநேரம் பார்க்கவும் வேண்டும்.
‘கல்மடு’, ‘இராமநாதபுரம்’; கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு ஊர்கள் அவை. காட்டுப்புறங்களை ஒரு பகுதியாகவும், நீர்த்தேக்கங்கள், மக்கள் குடியிருப்புக்களை மறு பகுதியாகவும் உள்ளடக்கிய புதிய விஞ்ஞான வரவு அற்ற அம்மக்களின் வாழ்க்கைக்கான ‘ஆதாரம்’ நிறைந்த அந்தக் கிராமங்கள் புலிகளின் வரவினால் புளங்காகிதம் அடைந்தன. புலிகளை ” எங்கடை பொடியள் ” என ஒருபகுதி மக்களும், ”பெரிசு” என இன்னொரு பகுதி மக்களும் உரிமையுடன் அழைத்தனர். விசுவுக்கு அந்த ஊர் மக்கள் வைத்த பெயர் ‘சின்ன விசு’.
புலிகளின் அசைவுகளை எப்படியோ இந்தியப் படையினர் மோப்பம் பிடித்துவிடுவர். இருப்பினும் இந்தியப் படையினருக்கு ‘தண்ணி காட்டிவிட்டு’ காட்டுக்குள் உள்ள தமது அணிகளுக்கு உணவுப் பொருட்களையும், வேறு தேவையான பொருட்களையும் எடுத்துச்செல்லும் ஒருசில போராளிகளுள் விசுவும் ஒருவன்.
ஒரு தொகுதிப் பொருட்களை எடுத்துச் செல்லவேண்டுமெனில் இந்தியப் படையினருடன் பல சண்டைகள் பிடித்தே செல்ல வேண்டியிருக்கும். சிலவேளை பல சண்டைகளுக்குப் பிறகு அப்பொருட்களை இழக்கவேண்டியும் இருக்கும். அதற்கும் மேலாகப் பல உயிர்களையும் விலையாகக் கொடுக்கவும் நேரிடும்.
இப்படித்தான் ஒரு நாள் நெத்தலியாற்றுக் கரையிலிருந்து அறுபதுபேர் கொண்ட பெண்கள் அணி ஒன்றிற்கு உணவுப் பொருட்கள் தீரும் நிலையில் உள்ளது என விசுவுக்குத் தகவல் வந்தது. இராமநாதபுரத்தில் உள்ள ஆதரவாளர் ஒருவரின் மாட்டு வண்டியைப் பெற்றுக்கொண்டு ஜேம்சுடனும் இன்னுமொரு போராளியுடனும் சேர்ந்து உணவுப் பொருட்களை வண்டியில் ஏற்றிக் காட்டுவழியே நீண்ட தூரம் பயணித்து, பெண் போராளிகளின் தளத்தை அண்மித்தபோது, இந்தியப் படையினர் அம்முகாமைத் தாக்க காட்டுக்குள் இறங்கிவிட்டனர் என அறிந்த பெண் போராளிகள் தமது தளத்தினை கைவிட்டுச் சென்றிருந்தனர். அத்தளத்தினுள் பிரவேசித்தவர்களுக்கு விடயம் விளங்கிவிட்டது .கிணற்றடிவரை சென்ற விசுவுக்கு, மரம் செடிகளின் முறிவு ஒலியும், குரங்குகளின் கத்தல் ஒலியும் நிகழப்போகின்ற அனர்த்தத்தை உணர்த்தி நின்றன. நிலைமையை விளங்கிக்கொண்டு சுதாரித்துக் கொண்ட விசு, ”ஜேம்ஸ் வாற ஜூனியஸ் பொடியள் பசியோட வருவாங்கள். உடன் எடுத்துவந்த பொருட்களை இறக்கி சமைக்கத் தொடங்குங்கோ” விசுவின் பேச்சிலிருந்த மறை பொருளைத் தெளிவாக விளங்கிக் கொண்ட ஜேம்ஸ் வண்டிலை நோக்கி நடக்கத் தொடங்கினான். பின் மூவரும் வண்டிலை வந்தடைந்தனர். இவர்களின் நகர்வினைக் கண்காணித்துக் கொண்டிருந்த இந்தியப் படையினர் வண்டிலுக்குப் பின்னால் பின் தொடரத் தொடங்கினர். இதனை மூவரும் நன்கறிந்திருந்தனர். பல துன்பங்களுக்கு மத்தியில் எடுத்துவந்த இவ் உணவுப்பொருட்களை எப்படியாவது காப்பற்றவேண்டும் என்ற விருப்பு அவர்களுக்கு; ”எங்களைப் பின் தொடருறாங்கள் மச்சான், கடைசிவரைக்கும் இப்ப எங்களைச் சுடமாட்டாங்கள். எங்கட தளத்தை அறிவதுதான் அவங்களின்ரை நோக்கம்” விசு கூறியபோது, ”வண்டிலை விட்டுவிட்டு இறங்கித் தப்பி ஓடுவம்” ஜேம்ஸ் கூறினான். மற்றப் போராளியும் அதற்கு ஆமோதிக்க வண்டில் நிறுத்தப்பட்டது. இந்தியப் படையினரின் துப்பாக்கிகள் ‘சடசட’ க்கத் தொடங்கின. துப்பாக்கியால் சுட்டபடியே அவர்கள் மூவரும் இறங்கி ஒரு பக்கமாக ஓடினர். இடையில் விசு காட்டுக்குள் பாதை மாறிவிட்டான் .ஜேம்சும் மற்றப் போராளியும் தொட்டியடியில் ஏறியபோது விசுவைக் காணவில்லை. இரண்டு நாட்களின் பின்னர் முல்லைத்தீவுக் காட்டுப்புறத்தில் உள்ள சிறு ஊர் ஒன்றில் தனியாக விசு ஏறினான். பின் அவர்கள் ஒன்று சேர்ந்தபோது, ” உங்களை நம்ப ஏலாது மச்சான். என்ர G-3 துப்பாக்கியைத்தான் நம்பவேணும்” எனத் தனது துப்பாக்கியை முத்தமிட்டபடியே கூறினான் விசு. ”சும்மா இரு மச்சான்” மாடுகளை அவிட்டு விட்டவங்கள் மாடு போற திசையை நோக்கிப் பின்னாலேயே போய் எங்களுக்கு மாடும் வண்டிலும் தந்தவங்களைப் பிடிச்சிட்டாங்களாம். இனி சனம் என்னத்தைத் தந்தாலும் மாடுகளை மட்டும் தராது” ஜேம்ஸ் கூறினான். ”அதுக்கென்ன, மணிகளுக்குப் பதிலாக இனி சயனைட்டைக் கட்டிவிடுவம்” விசு கூறியபோது அந்த இடம் சிரிப்பொலியால் நிறைந்திருந்தது.
இன்னும் ஒரு நாள், 1988ம் ஆண்டு வைகாசி மாதம் பழைய கண்டி வீதியினை இணைக்கும் கொக்காவில் சந்தியில் இந்தியப் படையினர் பதுங்கித் தாக்கியதில் புலிவீரன் ஒருவனுக்குக் கால் முறிந்துவிட்டது. வீதிவழியே ‘அம்புலன்ஸ்’ வண்டியில் எடுத்துச்செல்ல முடியுமா என்ன ? இல்லையே. காட்டுவழியேதான் பாதை முறிக்கவேண்டும். கால் முறிந்தவனுக்கு உடனடிச் சிகிச்சையளிப்பதாயின் வட்டக்கச்சி செல்லவேண்டும். போகும் வழியில் இன்னொருவனுக்குக்கூட இன்னொரு இடத்தில் ‘கால் முறியலாம்’. எப்படியும் போய்ச் சேர்ந்தாலும் மருத்துவரை அழைத்து வருவதென்பது கடினமான காரியம். ஒவ்வொரு உள்ளூர் மருத்துவரையும் இந்தியப்படையினர் தமது கண்காணிப்பில் வைத்திருந்தனர்.
தோள் கொடுத்தவனை, சிலவேளை உயிர் தந்தவனை, தப்பியோட வழியிருந்தும் நண்பனுக்காகச் சண்டையிட்டவனை, உணவு தனக்குக் கிடைக்கும் வேளை நண்பனுக்காக ஒருபிடி சோற்றை காற்சட்டைப் பையினுள் வைத்து எடுத்து வருபவனை, அந்தப் புலிவீரனை விட்டுச்செல்ல முடியுமா என்ன ? ”மச்சான், இவனுடன் நான் நிக்கிறன். நீங்கள் போய் ‘டொக்டர்’ யாரையாவது கூட்டிக்கொண்டு வாங்கோ” என விசு கூறியபோது அவனின் G – 3 துப்பாக்கியையும், அவனையும் நம்பி காயப்பட்ட போராளியை அவனுடன் விட்டுவிட்டுச் சக தோழர்கள் காட்டுவழியே நகர்ந்தனர்.
யாரோ பாதகன் எதிரிக்குக் காட்டிக் கொடுத்துவிட்டான் . அன்று அந்த ஊர் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டது…… விசுவும் காயம்பட்ட போராளியும் சிறு பற்றை ஒன்றினுள் சருகுகளால் தம்மை உரு மறைத்தபடியே அன்று முழுவதும் கிடந்தனர். இந்தியப் படையினரின் ‘அந்த மணம்’ மூக்கை அரித்தது. ‘பீடிப்புகை’ உணவு நீர் இன்றியிருந்த வயிற்றுக்கு குமட்டியது. ”அண்ணை, என்னாலை இனியும் வேதனையைத் தாங்கிக்கொண்டிருக்க ஏலாமல் கிடக்கு” விசுவின் காதோரம் காயப்பட்ட போராளி கூறியபோது, விசு அவனின் சயனைட்டை வேண்டித் தன்னுடன் வைத்துக்கொண்டான்.”என்ர G-3 இல இருக்கிற ரவைகள் முடிஞ்சபிறகு நீ வேணுமெண்டா குப்பியைக் கடி” விசு கூறினான் .
இந்தியப் படையின் கண்களில் அவர்கள் அகப்படாமல் போகவே தமது சுற்றிவளைப்பைக் கைவிட்டு இரவே இந்தியப்படையினர் தளம் திரும்பிவிட்டனர். இரவானதால் நிலமை அறிவதில் சிக்கல்கள் எழவே, காலையானதும் மருத்துவருடன் வந்த சக போராளிகளுக்கு முழுநாளும் அவர்கள் பட்ட வேதனைகளை அவர்களின் கண்கள் சொல்லி நின்றன.
இக்காலப்பகுதியில் விசுவுடன் தளத்தில் நின்ற ஜேம்ஸ் அவர்கள் நினைவு கூருகையில், ”கடலில் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கும்போது ஒரு படகு எமக்கு ஆறுகள் வந்துகொண்டிருக்குமானால் எமக்கு எவ்வளவு பாதுகாப்பு உணர்வு ஏற்படுமோ அப்படியோர் உணர்வு, விசு எம்முடன் கூட வந்தால் ஏற்படும்… நாங்கள் எல்லோரும் நல்லாச் சண்டை பிடிப்பம். ஆனால் எங்களுக்கு சயனைட் குப்பியை எப்ப வாய்க்குள்ள வைக்கலாம் என்ற எண்ணம்தான் அலைகளாய் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் விவேகத்துடனும், கூடுதலான சகிப்புத் தன்மையுடனும் தன்னையும் துப்பாக்கியையும் நம்பி, ‘வெல்வதற்காகவே சண்டையிடுகின்றோம்’ என்ற உணர்வுடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பார் விசு” என்றார் மெல்லிய சிரிப்புடன்.
அந்த ஊர்களில் புலிகள் அணியின் வரவு என்பதும், நடவடிக்கைகள் என்பவையும் புதியவர்கள் பலரை போராளிகளாகப் புலிகள் அமைப்பில் இணைத்தன. ஓர் இடத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் இருந்தாலே இந்தியப்படைகள் மோப்பம் பிடித்துவிடுவர்.
இருந்தும் முப்பது புதியவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகள் கொடுத்துப் போராளிகளாக்கும் பொறுப்பு விசுவிடம் வழங்கப்பட்டது. ஆயுதப்பயிற்ச்சி, அரசியல் கல்வி, அடிப்படைத்தேவைகள் எல்லாமே விசுவின் கைகளில்தான்.
புதியவர்களுக்குப் பயிற்சி முடியும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. ”காட்டுக்குள்ள மீண்டும் இந்தியப்படைகள் இறங்கப் போறங்களாம்” விரைவாகச் செய்தி ஒன்று கிடைத்தது. ” ஒரு தளத்தினை அமைப்பது என்பது அவ்வளவு இலகுவான பணியா? இல்லையே, கிணற்றில் இருந்து மண் சுமந்த நோவே முள்ளந்தண்டிலிருந்து இன்னமும் போகவில்லை. காட்டுக்குள் பொருட்களைச் சுமந்தெடுத்த சுமைகள் சுகமானதல்ல…… எப்படியும் எதிரியின் நகர்வைத் தடுக்க வேண்டும். அல்லது எதிரி எம்மை அண்மிப்பதையாவது தெரிந்துகொள்ள வேண்டும்……. சிந்தித்த விசுவுக்கு மணலாறுக் காட்டிலிருந்து வந்த ‘ஜொனி ‘ மிதிவெடிகள் நினைவுக்கு வர 1988 ஆவணி 26 அன்று புதிய போராளிகள் சிலரை அழைத்து, ”மிதிவெடிகளை எடுத்துக் கொண்டு வாங்கோ ” என்று கூறியவன் தன புதிய போராளி அணியுடன் ‘எதிரி வரலாம்’ என எதிர்பார்த்த காட்டின் பாதைகளினூடே குறிப்பிட தூரம்வரை நடந்திருந்தான். ”உங்களுக்குப் பயிற்சியாகவும் இருக்கட்டும். அதேநேரம் எதிரிக்கு நீங்கள் வைக்கிற முதற் பொறியாகவும் இருக்கட்டும்” என புதிய போராளிகளிடம் கூறிய விசு மிதிவெடி வைக்கபட்டுக் கொண்டிருப்பதனை அருகில் நின்று அவதானித்துக் கொண்டிருந்தான். மிதிவெடி ஒன்றினைப் புதைத்த சிவம் அதனை உருமறைத்துவிட்டு எழுந்த போது மரவேர் ஒன்றில் கால் இடறுப்பட தான் மறைத்து வைத்த மிதிவெடியின் மேலேயே தவறுதலாக விழ….. ”நான் ஓர் ஆபத்தான நண்பன்” என்பதை மிதிவெடி சொல்லியது. மிதிவெடியின் மேல் சிவம் விழப்போகிறான் எனத் தெரிந்ததும் சிவத்தைப் பிடிக்கப்போன விசுவின் வலது முழங்கைக்கு சற்றுக் கீழ் துண்டாடப்பட்டது. இடக்கையில் விரல்கள் அனைத்தும் சிதறின. உடல் முழுவதும் காயங்கள் . சிவம் சாவுடன் போராடிக்கொண்டிருக்க காயமின்றித் தப்பிய ஒருவன் தளத்திற்கு ஓடிச்சென்று தோழர்களுடன் திரும்பி வந்துகொண்டிருந்தபோது தன் தோழர்களைப் பார்த்து ‘கைகளிரண்டும் இல்லை மச்சான்’, ‘கைகளிரண்டும் இல்லை மச்சான்’ என அரை மயக்கத்துடன் கூறத் தொடங்கினான். முகத்தில் வேதனையைக் காட்டிக்கொள்ளவில்லை. மனதில் வேதனைகள் இல்லாதிருக்குமா என்ன ?
நாற்பது கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் வடமராட்சிக் கரையோர எல்லையை நோக்கி காயப்பட்ட தம் சக தோழர்களுடன் கல்மடுவிலிருந்து புலிகள் அணி ஒன்று புறப்பட்டிருந்தது. மெல்லிய உடற்கட்டை உடைய விசுவைச் சுமந்தவாறே போராளி ஒருவன் வேகமாக முன்னே நடந்து கொண்டிருந்தான் .
‘தமிழ்நாடு ‘
அறுவைச் சிகிச்சைகள் முடிவடைந்து கைகளுக்குப் போடப்பட்டிருந் கட்டுக்களை அவிழ்க்கும் நாளும் வந்தது .
விரல்கள் இல்லாத இடக்கையின் பெருவிரலுக்கும், மோதிர விரலுக்கும் இடையே காணப்படும் பகுதியை வெட்டி விரல் போன்ற ஒன்றை மருத்துவர் உருவாக்கியிருந்தார். ”டொக்டர் எனக்கொரு விரல் எப்படியும் உருவாக்கித் தர வேண்டும்” என அவன் மருத்துவரிடம் கேட்டது வீண் போகவில்லை.
1989 இன் நடுப்பகுதியில் அந்தப் பனைமரத்தின் ஓலைகள் மீண்டும் அவனுக்குத் தெரிந்தன. பிரிந்து சென்ற அனைத்தோடும் மீண்டும் சேரும் நாள் ”நான் எவ்வளவோ நாட்டுக்காகச் செய்யவேண்டிக்கிடக்கு” தனக்கென உருவாக்கிய விரலை மீண்டுமொருமுறை பார்க்கிறான் . அந்தப் பனை மரங்கள் முழுமையாகத் தெரிந்தன. கரை சேர்ந்த படகிலிருந்து ”தூக்கவா விசு அண்ணை” போராளி ஒருவன் கேட்க ”என்னால் முடியும் மச்சான்” என்று கூறி விட்டுக் கரையேறினான். அந்தப் பனை மரமும், ஓயாத அந்தக் கடலின் அலைகளும் தங்களுடன் அவனையும் தொடர்புபடுத்திப் பார்த்திருக்கும்.
மீண்டும் வன்னியில் விசு 3.7 எனும் குறியீட்டுப் பெயருடைய தளத்தில் போராளி அணி ஒன்றிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான் . இங்கு அவன் துப்பாக்கி எடுத்துக் குறிபார்த்து தன இலக்கை வீழ்த்தியபோது மருத்துவருக்கு மீண்டுமொருமுறை நன்றி கூறியிருப்பான் .
1990 இல் போராட்டத்தின் பட்டறிவு புலிகளின் புலனாய்வுச் செயற்பாட்டை நிறுவனப்படுத்த வேண்டிய தேவையினை தலைவர் அவர்களுக்கு ஏற்படுத்தியபோது அதற்காக தேர்வு செய்யப்பட்ட அணியில் விசுவும் இருந்தான்.
1990 ஜூன், இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் யாழ் – வன்னிக்கான தரைத்தொடர்பை சிங்களப் படையினர் ஆனையிறவில் துண்டித்தனர். கொம்படிப் பாதையே வன்னிக்கான தொடர்பனபோது, புலனாய்வுத்துறைப் போராளிகளின் போக்குவரத்து வேலைகளினையும், பொருள் மாற்றும் வேலையினையும் விசுவே பொறுப்பெடுத்திருந்தான். இக்காலப்பகுதியில் புலனாய்வு வேலை ஒன்றினை பொறுப்பேற்கும்படி புலனாய்வுப் பொறுப்பாளர் அவர்கள் கேட்டபோது ”நான் சண்டைக்கெண்டாப் போறான் அம்மான். எனக்குப் புலனாய்வு வேலை சரி வருகுதில்லை”. விசுவின் இம்மனநிலை பற்றி புலனாய்வுப் பொறுப்பாளர் கூறியபோது, ”விசுவிற்கு புலனாய்வு அறிவென்பது இயற்கையாகவே இருந்தது. தன் நம்பிக்கை என்பது அதைவிடப் பெரிதாக இருந்தது. ஆனால்,அவன் ஏன் புலனாய்வு வேலைகளில் அதிக நாட்டம் கொள்ளவில்லை? இது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. எமது விடுதலைப் போரை நாம் வெல்ல வேண்டும் என்றால் புலனாய்வுச் செயற்பாடு எவ்வளவு முக்கியமானது என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும். ஆனாலும் சண்டைக்கான துறையில் அவன் இருந்ததால் அவன் முடிவு சரியானதுதான்” என்றார் .
விசுவின் மனநிலையறிந்த பொறுப்பாளர் விசுவுக்கு சண்டைக் களத்துடன் தொடர்புடைய பணியைக் கொடுக்கத் தொடங்கினார்.
1993 நவம்பர் 11 இல் பூநகரி தரைப்படை மற்றும் கடற்படைக் கூட்டுத்தளங்கள் மீது ‘தவளைப்பாய்ச்சல்’ நடவடிக்கையைப் புலிகள் தீர்மானித்த போது, வழங்கல் பணியை மேற்கொள்ளும் நடவடிக்கைப் பகுதி ஒன்றிற்கு விசு பொறுப்பாக நியமிக்கப்பட்டான்.
அன்று நீரேரியைக் கிளித்தவாறே அவனின் படகு விரைந்து வந்துகொண்டிருந்தது…. திடீரென வானில் தோன்றிய எதிரியின் ‘புக்காரா’ வானூர்தி ஒன்று படகை நோக்கி வேகமாக குத்திப் பதிந்தது. ”டேய், அடிக்கப் போறானடா” எல்லோரும் நீருக்குள் பாய்ந்து நீந்தத் தொடங்கினர். படகு நீருக்குள் அமிழ்ந்து கொண்டிருந்தது. இல்லாத கைகளுடன் விசு கரையேறுவதற்காய் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருந்தான். அவனின் ‘கோல் கொமாண்டோ’ நீரினுள் அவனைவிட்டுப் பிரிந்துகொண்டிருந்தது. கப்டன் வண்ணன் நீரோட்டத்துடன் போராடித் தோற்றுக் கொண்டிருந்தான். விசு வருவானா? என்பதைவிட ‘அட விசுவிற்கு நீந்தக் கைகள் இல்லையே’ என ஏங்கிய உள்ளங்களே அதிகம்.
”இதயம் வெடித்து மீன்களே அக்கடலேரியில் மிதந்து கொண்டிருந்த போதும், அந்தி சாயும் நேரம் அவன் வந்த கரையேறினான்.
பின் இன்னுமோர் புதிய பணி அவனுக்குக் கொடுக்கப்பட்டது.” வணிகம் ”ஐம்பது வீதம் பணம் இலாபம், ஐம்பது வீதம் புலனாய்வு இலாபம். அவன் தன போராட்ட வாழ்வில் கண்டிராத புதியதோர் பணி.
சாரம், அரைக்கை சேட், அரும்பிய தாடி அவனை வணிகனாக காட்டிக்கொண்டிருக்க , ஒட்டிய உடலும், வெட்டிய கைகளும் அவனைப் போராளியாகவே காட்டிக்கொண்டிருந்தன.
இக்காலப்பகுதியில் விசுவுடன் பணியாற்றிய பணியாளர் ஒருவர் நினைவு கூருகையில் ”இந்த மனிசனிட்ட ஒரு குணமிருக்கு, அவரின் தனிப்பட்ட தேவைகளுக்காக எந்த உதவியை நாம் செய்து கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார். ஒரு நாள் நான் மலசல கூடத்திற்கு தண்ணீர் அள்ளிவைத்தேன். அந்தத் தண்ணீரைக் கீழே ஊற்றிய அவர் சற்றுக் கோபத்துடன், ”உங்களுக்குத் தருகிற ஊதியத்திற்கு இயக்கத்திற்கு வேலை செய்யுங்கோ. எனக்கு கைகள் இருக்கின்றன. நீங்கள்தான் கைகள் இல்லை என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கிறியள்” . அதுக்குப் பிறகு நானெந்தப் பணிகளும் செய்து கொடுக்கிறதில்லை. அப்படி ஏதாவது செய்யத்தொடங்கினாலே ‘பாணி’ ஒட்டப்போகுது என அறுக்கவும் தொடங்கி விடுவார் ‘ என்றார்.
இக்காலப்பகுதியில் கிளாலி நீரேரியில் தன் ஆயுதமான ‘கோல் கொமாண்டோ’ வை இழந்த துயர் விசுவை வாட்டிக்கொண்டிருக்க, போகுமிடங்களெல்லாம் கோல் கொமாண்டோ ஒன்றினைப் பொருத்தி எடுப்பதற்காக அதன் உதிரிப் பாகங்களைத் தேடிப் பெற்றுக்கொண்டான். ”அண்ணை, உங்களுக்குக் கைகளுமில்லை பிறகேன் ஆயுதம்” கேட்கக் கூடாத கேள்வியை போராளி ஒருவன் கேட்டேவிட்டான். ”டேய் என்னதான் இருந்தாலும் சண்டையிட்டுத்தான் நாங்கள் நாட்டைப் பிடிக்க வேண்டும்…. நாட்டைப் பிடித்த பிறகும் துவக்கு தேவைப்படும்”, ‘வலிமையே வாழும்’ என்ற பொது விதி விசுவின் உணர்வுகளுடன் பிரதிபலித்தது.
ஜூன் 05 விளக்குவைத்தகுளம் நோக்கிய சிங்களப்படைகளின் ஜெயசிக்குறு தாக்குதலில் மேஜர் குட்டி வீரச்சாவடைய, பின்கள வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசுவுக்கு புலனாய்வுப் பொறுப்பாளரிடமிருந்து செய்தி வந்திருந்தது ”புலனாய்வுத்துறைப் படையணியைப் பொறுப்பெடுக்கவும்”.
அணிப் பொறுப்பினை எடுக்கும் பொழுது விசுவின் முன்னே எதிரியின் பாரிய நகர்வினைத் தடுக்கும் பொறுப்புடன் இன்னுமொரு பாரிய பொறுப்புமிருந்தது.
புலனாய்வை மட்டுமே பட்டறிவாகக் கொண்ட போராளிகள். ‘துணிவு’ மட்டுமே அவர்களுக்கான தகுதியாய் இருந்தது . ஏனைய அணிகள் தொடர்ச்சியாக சண்டைக்களங்களில் நின்றமையால் கூடுதலான சண்டை அனுபவம் கொண்டிருந்த போராளிகளைக் கொண்டிருந்தன.
எனவே, தன் அணிக்கும் உறுதியான ஓர் அடித்தளத்தை இட்டு சண்டைக்களங்களில் காத்திரமான பங்கைக் கொடுக்க வேண்டிய மற்றுமோர் முக்கிய பொறுப்பினையும் அவன் நன்கு விளங்கியிருந்தான். சிறந்த படையணிக்கு அடித்தளமிடுவதற்கான ஒவ்வொரு சிறு விடயங்களையும் தலைவர் அவர்கள் கூறுவதுபோல் தன்னிலிருந்தே ஆரம்பித்தான்.
விசுவின் கைகளுக்கிடையிலும் ஒரு மண்வெட்டி இருக்கும் . அந்த மண்வெட்டியும் தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கும் .
ஒரு இரவு, வேவுக்காரன் பின்னால் வந்து அடிக்க எத்தனித்தபோது முதலில் தன் துப்பாக்கியை இயக்கிச் சண்டையிட்ட அந்தப்போராளி, ”தம்பி உன்ர கோல்சரை கட்டிக்கொண்டு படு” அடிக்கடி விசு கூறுவதை நினைவுபடுத்திக் கொள்கிறான் .
”அண்ணா, எங்களுக்கு ஒரு சண்டையும் கொளுவுது இல்லை” காவலரணில் நிற்கும் போராளி ஒருவன் கேட்டான். ”ஆமி என்ன வேவு பார்க்காமலேயே சண்டைக்கு வாறான் ? நீங்கள் பலமாக இருந்தால் அவன் எப்படி வருவான்” . தனக்குள்ளும் அக்கேள்வி இருப்பதை மறைத்தபடியே இயல்பாகக் கூறுவான்.
“டேய், விசுவண்ணை காய்ச்சல்”. காவலரனுக்குப் பொறுப்பான போராளி கூறுவான். “தம்பி இரண்டு போரையும் பின்னுக்கு அனுப்பிவிட்டு அதை டம்பிப் பொயின்ற் ஆக்கு”. “அதால ஆமி உடைச்சா?” “டேய், ஆமி உடைச்சா நாங்கள் மூடி அடிப்பாமடா”. விசு கூறுவான். “அண்ணை இவன் மாறி எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தில சேர்ந்திட்டான்”. ஒரு போராளி குத்தலாய் சொல்ல, “மச்சான், சின்னச் சத்தம் கேட்டாலும் என்ன என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கோ”. கூறியவாறே விசு மறுகாவலரணுக்குச் செல்வான்.
“கனகாலத்துக்குப் பிறகு ஊருக்குள்ள வந்திருக்கிறம்”. பின்னால் இருந்த அறிவிடம் விசு கூறினான். வீதியில் கண்ட தெரிந்தவன் அவனை மறித்து, “என்ன விசு, கண்கள் எல்லாம் உள்ளபோயிட்டுது”. “எங்கட கண்கள் உள்ள போனதால்தான் ஆமியும் உள்ளவராமல் இருக்கிறான்” அதில் நிறைந்திருந்த ஆயிரம் கருத்துக்களை அந்தப் பொதுமகனால் அந்தக் கனத்ததில் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
ஊருக்குள் வந்த அவன் அன்று மாலையே தன் வாழ்விடத்திற்குத் திரும்பிவிடுவான். தன் பிள்ளைகளுக்கென ககச்சான்கூட வாங்கிச்செல்ல கையில் பணம் இருக்காது. அன்று அந்தப் பழைய உந்துருளிக்குக் காற்றுப்போனது. ரியூப்புக்கு ஓட்டுப்போட பணம் வேண்டும் என்ன செய்வது? அவன் தோற்றத்தைப் பார்த்தே யார் என விளங்கிக்கொண்ட அந்த ஒட்டுவேலை ஐயா அவனிடம் பணம் கேட்கவுமில்லை.
“விசு அண்ணை வந்திட்டார்” தொலைத்தொடர்பு சாதனங்க்களினூடாக போராளிகள் கதைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கும் இனம்புரியாத தெம்பு ஏற்படும்.
1997 டிசம்பர் 03 மன்னகுளப் பகுதியினூடாக எதிரி நகர்வதற்கான சாத்தியத்தை அடுத்து விசுவின் அணிகள் மன்னகுளப் பகுதிக்கு மாற்றப்பட்டன.
வீதியின் வலது பக்கத்திலிருந்து குளத்தின் அணைக்கட்டை ஒரு பக்கம் பாதுகாப்பு வேலியாக்கி அதில் ஓர் அணியையும், வீதியின் இடப்பக்கமாக (கனகராயன்குளப் பகுதி) இன்னொரு அணியையும் விசு பிரித்து விட்டிருந்தான். வீதிக்குக் குறுக்காக மாலதி படையணி நிலைகொண்டிருந்தது. அடுத்த நாள் 1997 டிசம்பர் 04, சூரியன் மேலெழுந்து கொண்டிருந்த நேரம் மன்னகுள வீதியை ஊடறுத்து சிங்கலத்திப் அதிசிறப்பு கொமாண்டோ அணியினர் வீதிக்கு அருகாக ஒரு கிலோமீற்றர் வரை முன்னேறி இருந்தனர். “எங்களுடைய முதற்கட்டப்பணி முடிவடைந்து விட்டது. கண்டி வீதியில் ஏறப்போகிறோம்”. சிங்களத் தளபதி ஒருவன் தன் கட்டளைப் பீடத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தான்.
எதிரி ஊடுருவிய பிரதேசத்தினுள் ஒரு காவலரண் மட்டும் பிடிபடாமல் இருந்தது. அக்காவலரனில் இருந்த மேஜர் நிலாம்புரி தனியாக நின்று எதிரியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். “சாண்டிலியன், நான் விசு கதைக்கிறன். உடைத்த காவலரண்களை மீண்டும் பிடித்து மற்ற அணிகளோடு லிங்க் பண்ணுங்கோ………..”
“ஒரு காவலரண் ஆமியிட்ட பிடிபடாமல் இருக்கு. அதில் எங்கட பிள்ளை ஒன்று தனியாக நின்று சண்டை பிடித்துக்கொண்டிருக்கு. ரவையைப் பார்த்து அடியுங்கடா”. முன்னே சென்றுகொண்டிருந்த அணிகளுக்கு விசு கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.
“மறுபுறத்தில் ஆப்பிழுத்த குரங்கின் கதையாய் வந்த இடம் செல்லவே வழிதெரியாதிருந்த சிங்களத்தின் 53ஆவது படையணி கொமாண்டோக்களுக்கு அமெரிக்காவின் “கீரின்பரே” படையணி கொடுத்த பயிற்சிகள் புலிகளின் தாக்குதலின் முன்னே கைகொடுக்கவில்லை. ஒரு கல்வீட்டின் உள்ளேயே சுற்றிச்சுற்றி ஓடிக்கொண்டிருந்த கொமாண்டோக்களுக்கு அந்தக் கல்வீடு கல்லறையானது. “உதவிக்கு படைகள் அனுப்புகிறோம்” என சிங்களத் தளபதிகளிடமிருந்து பதில் வந்ததே தவிர படைகள் வரவேயில்லை.
எங்கிருந்தோ வந்த குண்டின் சிரரல்கள் விசுவின் தோள்மூட்டிலும், காலிலும் காயத்தை ஏற்படுத்தின.உதவித் தளபதி அறிவின் குரல் வோக்கியில் கேட்கத்தொடங்கியது. உதவிக்கு வந்த சக அணிகளுடன் இணைந்து எதிரியால் பிசிக்கப்பட்ட காவலரண்கள் அனைத்தும் மீளவும் கைப்பற்றப்பட்டன. ஒன்பது மணிநேர சந்தியின் முடிவில் தனது நானூறு அதிசிறப்புக் கொமாண்டோக்களை சிங்களத்தின் 53ஆவது படையணி இழந்திருந்தது. அந்த நாள் சிங்களத் தளபதி சிறிலால் வீரசூரியாவுக்கு மட்டுமல்ல, சிங்களத்தின் புகழ்பூத்த 53ஆவது படையணிகளுக்கும் என்றும் மறக்கமுடியாத நாள்.
“அறிவண்ணை, விளக்குவைத்தகுளத்தில் G.P.M.G யை எதிரியினம் பறிகொடுத்த அவமானத்தை எங்கட இரத்தத்தால் கழுவியிருக்கிறம்” மருத்துவமனையில் வைத்து அறிவிடம் விசு இப்படித்தான் கூறினான்.
மீண்டும் படைவேலி வாழ்க்கை. மழையும் தன் வீச்சைக் கடுமையாக்கி இருந்தது. “பதுங்குகுழி வெட்டினா நனையத்தான் வேண்டும். அது வியர்வையாலா? மழையாலா? என்பதைக் காலநிலைதான் தீர்மானிக்க வேண்டும். தெப்பாலாய்த் தோய்ந்திருந்த போராளி ஒருவன் கூறிக்கொண்டிருந்தான். சின்னவயதில் தலைக்குப் பௌடர் போட்டு அதற்கும் ஈரம் காய்திருக்காது என எண்ணி சாம்பிராணிப் புகைபோடும் எங்கள் அம்மாக்களின் அந்தப் பிள்ளைகள் தலைதுடைக்க சிறு துண்டும்கூட இல்லாமல் தாய்நாட்டிற்காக நனைந்து கொண்டிருந்தார்கள். விசுவும் காய்வான். நனைவான். தலை துடைக்க சிறு துண்டல்ல, கைகள் இன்றியும் சிரமப்படுவான்.
தொடர்ச்சியாகக் கஞ்சி அல்லது கத்தரிக்காயும் சோறும்தான் உணவாக வந்துகொண்டிருக்கும். “மச்சான், எலும்பெல்லாம் தெரியுது. காயப்பட்டாலும் எக்ஸ்ரே எடுக்க செலவு மிச்சம்தான்”, என்றவாறே, “ஏதாவது ஆயிர்ரம் போடுவம்” விசு கூறுவான். அதாவது மிருகங்களை வேட்டையாடுவதற்காக இருவர் புறப்படுவார்கள். சிலநேரம் மான் வரும், சிலநேரம் “அண்ணை கூட்டம் ஓடிற்றுது என்ற பதில் வரும்.
டே அது மானடா, அதுக்கு நாலுகாலடா, சுட்டுப் படாட்டா, அது ஒடும்தானடா” எங்கும் சிரிப்பொலி எழும்.
கொம்பனி மேலாளர் என்ற நிலையிலிருந்து மாங்குளப் பகுதிக்கான முழுமையானை பொறுப்பாளராகக் கட்டளைப் பீடத்தினால் அவன் நியமிக்கப்பட்டான்.
ஒருசில மறிப்பு வேலியை மட்டும் பாதுகாக்கக் கட்டளையிட்டுக் கொண்டிருக்குப் பல கிலோமீற்றர்கள் மறிப்பு வேலியை எதிரி உடைக்காமல் பாதுகாக்கக் கட்டளையிடவேண்டிய பொறுப்பு….. அவன் ஒரு பொதுவான பொறுப்பாளனாக மாறினான்.
1998 யூன் 05, அன்றிரவு ‘எல்’ வடிவில் ஒலுமடுப் பக்க்கமாகத் திரும்பும் புலனாய்வுத்துறைப் படையணி பாதுகாத்த மறிப்பு வேலியில் அமைக்கப்பட்டிருந்த போலிக் காவலரணில் உள்ளே (டம்மிப் பொயின்ற்) எதிரிப்படையின் வேவுக்காரன் வந்து சென்ற தடயங்கள் தெரிந்தன. விடயம் உடனடியாக விசுவுக்குத் தெரியபடுத்தப்பட்டது. “கவனமாக இருங்கோ. அதுக்குள்ளால எப்படியும் நுழையப் பார்ப்பான்”.
“1998 யூன் 06 பட்டப்பகல் பொழுதில்….. அலட்சியமாக இருக்கும் அந்த ஒரு நிமிடமே எதிரி உன்னைத் தேடிவரும் நேரமாக இருக்கலாம்.தலைவர் அவர்கள் கூறியதை பட்டறிவில் அவர்கள் அன்று புரிந்துகொண்டார்கள். வலைவாகச் சென்ற நகர்வு அகழிக்கு மையத்தில் அந்த போலிக் காவலரண் அமைந்திருந்தது. எதிரிக்கு வாய்ப்பாகப் போய்விட்டது.
குறிப்பிட்ட தூரம்வரை சென்று வளைவுப் பகுதியில் நின்று துப்பாக்கியை நீட்டினால் எதிரியின் துப்பாக்கி சட சடக்கத் தொடங்கிவிடும். எதிரி கடுமைகாக நின்று போரிட்டுக் கொண்டிருந்தான். அறிவுக்கு விசுவிடம் இருந்து கட்டளைகள் வந்துகொண்டிருந்தன. களநிலைமை போராளிகளுக்கு சாதகமாக மாறியது. போகல பொழுதில் புலிகளின் துப்பாக்கிக் குறியில் இருந்து தப்பியோடுவதே எதிரிக்கு கடினமான பணியாக இருந்தது.
ஜெயசிக்குறு எதிர்ச்சமர் வரலாற்றில் அந்த முப்பது நிமிடச் சண்டையும் முக்கிய இடத்தைப் பெற்றது.
ஜெயசிக்குறு படைகள் 1998 பெப்ரவரி 04க்குள் கண்டிவீதியைப் பிடித்து யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்களப்படைகளுக்கான விநியோகத்தை ஏற்படுத்துவார்கள் என்ற பதில் பாதுகாப்பு அமைச்சரின் காலக்கெடுவை ஏழு மாதங்கள் கடந்திருந்தன. மாங்குள நகரினைக்கூட கைப்பற்ற முடியாமல் சிங்களப்படைகள் திணறிக் கொண்டிருந்தன.
சிங்களப் படைகள் போய்ச்சேர வேண்டிய கிளிநொச்சி நகரினை மீண்டும் கைப்பற்ற நாள் குறித்தபோது, தற்கான பயிற்சிகளில் விசுவின் அணியும் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. கிளிநொச்சி சிங்களப் படைத்தளம் ஏறக்குறைய 20 கிலோமீற்றர் சுற்றுவட்டத்தினைக் கொண்டிருந்தது. கண்டி வீதியை தன்னகத்தே உள்ளடக்கி முப்பது மீற்றருக்கு ஒரு காவலரண், நகர்வு அகழிகள், முட்கம்பி வேலிகள், பதுங்குகுழிகள் என பதினாறுக்கும் மேற்ப்பட்ட மினிமுகாம்களையும் தன்னகத்தே கொண்டு சிங்களத்தின் புகழ்பூத்த 54வது படையணியின் பாதுகாப்பில் வைக்கபப்ட்டிருந்த பெரும் படைத்தளமாக அது விளங்கியது.
“இந்தப் படைத்தளத்தை அழிக்க வேண்டுமாயின் படைத்தளத்தின் விநியோக வழியை அடைக்கவேண்டும். விநியோக வழியை அடைக்க வேண்டுமாயின் பரந்தன் பகுதியில் கண்டிவீதியைத் துண்டாட வேண்டும்.
கண்டி வீதியைத் துண்டாடும் பணியைக் கேணல் (பிரிகேடியர்) பால்ராஜ் அவர்கள் தலைமையிலான அணிகள் பொறுப்பெடுத்திருந்தன. அவரின் அணிகளைக் கண்டிவீதிக்கு அனுப்பப் பாதை உடைத்துக் கொடுக்கவேண்டும். பாதை உடைத்தெடுத்து அகட்டிக் கொடுக்கும் பணி விசு தலைமையில் புலனாய்வுத்துறைப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது.
‘ஓயாத அலைகள் 02’ 1998 செப்ரம்பர் 27, அதிகாலை 01,20 மணிக்கு டோபிடோ வெடிக்க, முட்கம்பி வேலி துண்டாடப்படுகிறது. முட்கம்பி வேலிகளை அகற்றி உள்ளே புகுந்த அணிகள் ஒரு அணி விசு தலைமையில் வலது பக்கமாகவும் (டிப்போ வீதிப்பக்கம்) இன்னுமோர் அணி அறிவு தலைமையில் இடது பக்கமாகவும் (பரந்தன் பகுதி) பிரிந்து சென்று பத்தே நிமிடங்களில் தடைகள் உடைக்கப்பட்டு பின் இடம், வலமாக ஒரு கிலோமீற்றர் தூரமான படைவேலிகள் உடைக்கப்பட்டு பாதை கொடுக்கப்பட கண்டிவீதியைத் துண்ட்டாடும் அணி தனது வேலையைச் சரிவரச் செய்தது,
நாலு திசைகளிலிருந்தும் புலி அணிகளின் பாச்சலாலும், எறிகணை வீச்சாலும் அடித்தளம் சிதைந்து கொண்டிருந்தது. வெட்டையனா இடங்களினூடாக முன்னேறிய விசுவின் அணி உருத்திரபுரம் வீதியின் அருகே இருந்த அந்த மாடிவீட்டின் பக்கத்து காவலரணையும் கைப்பற்றி இருந்தது.
நேரம் பகல் 1:30 மணி. முதல்நாள் இரவு முழுவதும் வீழித்திருந்து சண்டையிட்ட களைப்பு ஒவ்வொரு போராளியின் முகத்தில் தெரிந்தது. விசு காவலரண் ஒன்றிற்குள் இருந்ந்தான். எதிரியின் துப்பாக்கி ரவைகள் காவலரணில் பட்டுத் தெரித்துக் கொண்டிருந்தன. காவலரணின் ஒட்டையினூடே, உள்ளே ரவை ஒன்று பட்டுத் தெறித்து விசுவின் மார்பினைத் துளைத்து நின்றது.
அந்த நிமிடம் நடக்கப்போவதை விசு உணர்ந்தான். தன் கோல் கொமாண்டோ துப்பாக்கியை அருகில் நின்ற போராளியிடம் கொடுத்தான். “தம்பி பிடிச்ச இடங்களை திருப்பி அவன் பிடிக்க விடாதீங்கோ, நிலைமையை அறிவுக்குத் தெரியப்படுத்துங்கோ”. அவர் கூரிக்கொண்டிருந்தபோதே மெல்ல மெல்ல அவன் உடல் யங்கம் அந்தப் படைத்தல அழிப்பின் வெற்றிச் செய்தியை கேட்காமலேயே நின்றுவிட்டது.
என்ன தீடிர் முடிவு என நினைக்கிறீர்களா? என்ன செய்வது, அவன் வாழ்விலும் தொடரிசைக் குறிக்குப்பதிலாய் முற்றுப்புள்ளி விழுத்தப்பட்டது.
விளக்குவைத்த குளத்தில் அணியைப் பொறுப்பெடுத்தபோது தன் முன்னே இருந்த இரண்டு பொறுப்புக்களையும் செய்துமுடித்த நிறைவு அவன் முகத்தில் தெரிந்தது.
பதினைந்து வருடங்கள் விடுதலைக்காக உழைத்த அந்தத் தீக்குச்சி வெளிச்சத்தை ஏற்றிவிட்டு மறைந்துவிட்டது. அவர்பெயரால் அவன் போற்றுபவர்களுக்கு புலனாய்வுத்துறையில் ஓர் அறிவுக்கூடம் எழுந்து நிற்கிறது. வன்னி மண்ணில் ஆலங்குளம் துயிலுமில்லம் பிள்ளையென அவனைச் சுமந்து நிற்கின்றது உங்கள் சுவாசக்காற்றையே இனிவரும் சந்ததியும் சுவாசிக்கப் போவதால் காலநதியில் உங்கள் வரலாறே தமிழன் வரலாறாய் என்றும் நிலைக்கும்.
“தோழனே சாவுக்குள் நின்று
உழைப்பவர்களுக்கு சாவின் பின்னும்
நிச்சயமாக இலக்கின்
வெற்றி மட்டுமே”.
நினைவுப்பகிர்வு:- சி. மாதுளா
விடுதலைப்புலிகள் (கார்த்திகை 2002 இதழிலிருந்து தேசக்காற்று)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”