புலர்கின்ற பொழுதில்…..
13,05.1997 அன்று எங்களின் ஊர்களுக்குள் ஜெயசிக்குறு என்ற பெயரில் சிங்களதேசம் எங்களுடன் மோதவந்தது. தங்கள் படைப்பலத்தின் உச்சத்தில் நின்றபடி எங்களுடன் சமர் வெடித்தது. ஆரம்பத்தில் நாங்கள் பலமாய் மோதியபோதும் கொஞ்சம் கொஞ்சமாய் அங்குலம் அங்குலமாய் எங்களது கையிற்குள்ளிருந்த நிலங்கள் எதிரியின் கைகளுக்குள் மாறிக்கொண்டிருந்தது.
ஆனாலும், பின்வாங்குவதென்பது தொடர்கதையாக மாறாமல் நிலத்தைப் பாதுகாத்தல் இல்லாதுவிடின் அங்கேயே சமரிட்டு மடிதல் என்ற உறுதியோடு புளியங்குளத்தில் எங்கள் தடுப்பரண்கள் அமைக்கப்பட்டன. கொஞ்ச நாட்களுக்கு முன் மக்களின் வாழிடமாயிருந்த அந்த ஊர் இப்போது எமது விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சமர்க்க்கலாமாய் மாறியது. புளியங்குளத்தின் சந்தியை மையமாக வைத்து எங்களது படையணிகள் நிலையமைத்துக்கொண்டன.
ஜெயசிக்குறுவின் மூன்றாம்மாத நினைவிற்கு, புளியங்குளத்தில் கொடியேற்றபோவதாக ரத்வத்த சூளுரைத்தார். அந்த திமிருடன் புளியங்குளத்தில் எங்களுடன் ஒவ்வொரு முனையிலும் மோதத் தொடங்குகிறது சிங்கள தேசத்தின் இராணுவம். இதுவரை நடந்த சண்டைகளைப்போல் அல்லாமல் மிகவும் மூர்க்கத்தனமாய் சிங்களம் எங்களுடன் மோதியது. இரவும் பகலுமாய் கண்களை விழிப்பாக்கி எதிரியையே நோக்கியபடி காவலரண்களிற்குள் காத்திருந்தார்கள் எங்கள் தோழர்கள். நான்கு அடி நீளத்தினையும் இரண்டு அடி அகலத்தினையும் கொண்ட கிடங்கிற்குள் எங்கள் வாழ்க்கையிருந்தது. இராணுவ மொழியில் சொன்னால் அது ஒரு காப்பரண்.
இராணுவத்தின் எறிகணைக் குழல்கள் ஓய்வாய் இருப்பதைவிட எங்கள் முகாமிற்குள் எறிகணைகளைத் துப்புவதிலேயே மும்முரம் காட்டின. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த ஊரின் அடையாளங்கள் அழிந்துகொண்டிருந்தது. வெடித்துச் சிதறும் இரும்புத் துண்டங்களால் நிலம் நிறைந்துகொண்டிருந்தது.
19.08.1997ன் காலைப்பொழுது புலரும்பொழுதே புளியங்குளத்திலும் அதிர்ந்து கொண்டிருந்தது. காற்றை ஊடறுத்து மூசியபடி எறிகணைகள் வெடித்துச் சிதறின. புகைக் குண்டுகளை எதிரி அதிகமாக ஏவியதால் எதனையும் அவதானிக்க முடியவில்லை. ஆனாலும், எங்களது முகாமில் ஏதோவொரு முனையில் எதிரி மோதப்போகிறான் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.
நேரம் காலை 7:30 புளியங்குளத்தின் கிழக்குப் புறமாக பழையவாடிப் பகுதியிலிருந்து டாங்கிகள் மெதுமெதுவாக முன்நகர்கின்றன. இடைவிடாத வேடியதிர்வுகளின் மத்தியில் டாங்கிகளின் ஓசையை அவதானிக்க முடியவில்லை. எங்களுக்குத் தெரியாமலேயே எங்களது அரண்களை டாங்கிகள் நெருக்குகின்றன.
பழையவாடி வீதியின் இருமருங்கிலும் இருந்த காவலரண் இரண்டிலும் துப்பாக்கிச் சத்தங்கள் ஓய்கின்றன. அந்த இடைவெளிக்குள்ளால் ஒன்றன்பின் ஒன்றாக டாங்கிகளும் துருப்புக் காவிகளும் தானியங்கித் துப்பாக்கிகளால் சுட்டபடியும் அறிகனைகளை எவியபடியும் எங்களது முகாமுக்குள் நுழைகின்றன.
கொஞ்ச நேரத்திற்குள் நிலைமை மாறியிருந்தது. எங்களது முகாமிற்கு உள்ளேயே எதிரியுடன் சண்டையிடவேண்டிய நிலை. டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களால் டாங்கிகளைத் தாக்க முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் எதிர்பார்த்ததையும் விட கிட்டவாக டாங்கிகள் எங்களுக்குள். அந்தக் குறுகிய தூரத்திற்குள் டாங்கிகளைத் தாக்கமுடியாது. இதனால் தங்கள் ஆயுதங்களைச் சுமந்தபடி டாங்கிகளைத் தாக்கமுடியாது. இதனால் தங்கள் ஆயுதங்களைச் சுமந்தபடி டாங்கிகளுக்கும் தங்களுக்குமான இடைவெளியை அதிகரிப்பதற்காக பின்னோக்கி ஓடுகிறார்கள் போராளிகள்.
புளியங்குள முகாமின் உட்புறம் கனரக வாகனங்களில் எதிரியும் முகாமிற்கு வெளியில் துருப்பினருமாய் இரண்டு பக்கங்களிலும் சமரிடவேண்டிய நிலையில் எங்களது அணிகள் டாங்கிகளும் துருப்புக் காவிகளும் எங்களது முகாமிற்குள் நின்றபடி எங்களது முகாமிற்குள் நின்றபடி எங்களது காப்பரண்களை நேராகக் குறிபார்த்துச் சுட முனைந்தபோதும் காப்பரண்களில் நின்ற போராளிகள் அதைப் பொருட்படுத்தாமல் முன்னே நகர்ந்துகொண்டிருக்கும் எதிரியுடன் சமரிட்டனர்.
முகாமிற்குள் நுழைந்த டாங்கிகள் எங்களது இலக்குகளைத் தேடி அழிக்க முனைந்தது. அதற்குள் அந்தப் புளியங்குள முகாமை வழிநடத்திய கட்டளைத் தளபதியின் அரணையும் அந்த டாங்கிகள் குறிவைத்துத் தாக்கத் தவறவில்லை.
மணித்துளிகள் நகர்ந்துகொண்டிருந்தன. சண்டை தொடர்ந்துகொண்டிருந்தது. தங்களது துருப்பினரை எதிர்பார்த்து முகாமிற்குள் நுழைந்த டாங்கிகள் சுழன்ருகொண்டிருந்தன. ஆனால், ஒரு ராணுவச் சிப்பாய்க்கூட எங்கள் போராளிகள் உள்நுழைய விடவில்லை.
ஆரம்பத்தில் சண்டித்தனத்துடன் உள்நுழைந்த டாங்கிகளுக்கு இப்போது ஆப்பிழுத்த குரங்கின் நிலை. அவர்கள் நம்பியிருந்ததுபோல் இராணுவச் சிப்பாய்கள் துணைக்கு வரவில்லை. டாங்கிகள் தப்பியோடுவதற்கு முடிவெடுக்கின்றன. இப்போது டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் இயங்கத் தொடங்குகின்றன. ஓயாத எறிகணை வீச்சிற்குள்ளும் பதற்றமடையாமல் தங்கள் ஆயுதங்களைச் சமநிலைப்படுத்தி டாங்கிகளைக் குறிவைக்கின்றனர்.சமநேரத்தில் டாங்கிகள் எங்கள் போராளிகளிக் குறிவைக்கின்றன. மூடிய இரும்புக் கவசத்திற்குள் எதிரியும் வெட்டைவெளியில் எங்களது மண்ணே எங்களது போராளிகளுக்கு கவசமாயிருக்க, இரண்டு பகுதியிலும் வெடியதிர்வுகள் கேட்கின்றன.
எங்களது தளத்திற்குள்ளிருந்து தப்பியோட முனைந்த துருப்புக்காவிமீது பகலவன் அடுத்தடுத்து மூன்று எறிகணைகளைச் செலுத்தி தாக்கி அழித்தான். அதற்குள் இருந்த ஆக்கிரமிப்புப் படையிடரும் அதனுடன் சேர்ந்து அழிந்தனர்.
எங்களது பகுதிக்குள் உள்நுழைய முற்பட்டபோது கண்ணிவெடியில் சிக்கிய T55 ரக ராங்கியோன்று நகரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. பின்னர், அதைக் கட்டியிழுத்து மீட்பதற்கு வந்த டாங்கிக்கு பகலவன் நாங்களு எறிகணைகளைச் செலுத்தி தாக்கி அழித்தான். அழிந்துகொண்டிருந்த டாங்கிகளுக்குத் துனைபுரியவென வந்த இன்னுமொரு டாங்கியை மணிவண்ணனும் தமிழவனும் தாக்கி அழித்தார்கள்.
ஒன்றன்பின் ஒன்றாக தங்கள் கவசங்கள் அழிந்துகொண்டிருந்ததால் எஞ்சியவை கண்டிவீதி வழியே தப்பி ஓடின. தப்பி ஓடிய துருப்புக்காவி ஒன்றைத் தாக்கி செயலிழக்கச் செய்தனர் டாங்கி எதிர்ப்பாயுதத்தைத் தாக்கிய வீரர்கள். துருப்புக்காவி செயலிழந்ததும் அதற்குள் இருந்த இராணுவத்தினர் இறங்கித் தப்பியோட முனைந்தபோதும் அவர்கள் எவரும் எமது முகாமைக் கடந்து போகவில்லை. அதிகாலையிலிருந்து மாலை நான்கு மணிவரை எதிரியின் ஆட்லறிகளுக்கும், மோட்டார் எறிகணைகளுக்கும் கனரக ஆயுதங்களின் சூட்டிற்கும் விமானங்களின் இடைவிடாத தாக்குதலிற்கும் முகம்கொடுத்து, எதிரியின் கவசப்படையினர் பலத்தைச் சிதைத்தனர் புலிவீரர்கள். சமரின் முடிவில் துருப்புக்கானை ஒன்று எங்கள் வசமாகியது. இரண்டு T55 ரக டாங்கிகளும் ஒரு துருப்புக்காவியும் அழிந்தன. எஞ்சியவை சேதத்துடன் தப்பியோடின. பல இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
அன்றைய நாளில் புளியங்குளத்தில் கொடியேற்றுவதற்கு ரத்வத்த தயாராகவும் இருந்திருக்கக்கூடும். ஆயினும், எப்போதும் தங்கள் ஆயுத பலத்தின் மீதே அவர்கள் நம்பிக்கை வைத்ததினால் அன்றைய நாளில் எங்களுடன் தோற்றுப்போயினர். ஆயினும் புளியங்குளத்தில் கழிந்த ஒவ்வொரு நாட்களும் மறக்க முடியாதவை.
தண்ணீர் நிறைத்தபடி இருந்த பதுங்கு குழிகளுக்குள் தங்களின் ஆயுதங்களைக் காப்பாற்ருவதற்க்காக உடல் முழுவதும் தண்ணீருக்குள் இருக்க, தங்கள் ஆயுதங்களைக் கையில் தூக்கி வைத்தபடி நின்று காவல் புரிந்த பெண் போராளிகளும்………………. காவலரணில் மாற்றி விடுவதற்குக்கூட போராளிகள் இல்லாமல் இரவுபகலாய் எங்கள் தோழர்கள் விழித்திருந்த நாட்களும்……………. மறக்க முடியாதவை.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முனையில் முட்டிமோதும் எதிரியுடன் அருகிலிருந்த போராளிகள் சமரிட்டு மடிந்துகொண்டிருந்தபோதும் அந்த முகாம் எங்களின் கைக்குள்ளிருந்தது.
ஆனாலும், புளியங்குளத்தை தங்கள் ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவருவதற்கு ரத்வத்தவின் படைகள் தொடர்ந்து மோதின. சின்னச் சின்னதாய் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முனையில் எங்களுடன் மோதலைப் புரிந்து எங்களைச் சீண்டிக்கொண்டிருந்தன சிங்களப் படைகள். எங்களின் பல தோழர்கள் நாளாந்தம் மடிந்துகொண்டிருந்தார்கள். ஆனாலும், ஒவ்வொரு சாவிலும் எஞ்சியிருந்த ஒவ்வொரு வீரனும் உறுதியெடுத்துக்கொண்டான்.
கடந்துகொண்டிருந்த ஒவ்வொரு இரவுப் பொழுதுகளிலும் காவலரணில் அருகிருக்கும் தோழன் காப்பரணுக்குள் முடங்கியபடி உறங்கிக் கிடக்க வெடிச்சத்தமில்லாத அமைதியாய் கழியும் நடுநிசியை அண்டிய நேரங்களில், முன்னே மரங்களையும் வயல்களையும் நோக்கியபடி விழித்திருந்து காவல் புரியும் வேளைகளில், கடைசியாய் எங்களுடன் இருந்துவிட்டு அன்றைய நாளில் வித்துடலாய்ப் போனவர்களின் இறுதிக் கணங்கள் எங்களுக்குள் திரைப்படமாய் ஓடிக்கொண்டிருக்கும். அந்த நினைவுகள் மறுநாள் சமரிடுவதற்கான உறுதியை எங்களுக்குத் தந்துகொண்டிருந்தது.
26.08.2003 (1997) புளியங்குளத்தில் எங்கள் தோழர்களின் உயிர் அரண்களை அசைத்தழிக்க மீண்டுமொரு முற்றுகைச் சமர்…….
அதிகாலையிலிருந்து எங்களின் முகாமை அங்குலம் அங்குலமாக எறிகணைத் துகள்களால் நிறைத்தனர். ஒவ்வொரு ஆட்லறி எறிகணை வீச்சாலும் தங்களிற்குத் திருப்தி வரும்வரை எங்களின் எல்லைக்குள் எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்தனர். பிற்பகல் 1:00 மணி அன்றைய தாக்குதலின் உச்சநேரம். எறிகணை வீச்சின் சத்தத்தின் மறைவில் நடர்ந்த டாங்கிகள் மிகவும் நெருக்கமாக எங்களது காப்பரணிற்குமுன் எதிர்ப்படுகின்றது. அந்த டாங்கிகளுடன் துருப்பினரும் முன்னகர்ந்து எங்களது காப்பரணுக்கு நெருக்கமாகச் சண்டை தொடங்கியது.
காலையிலிருந்து இந்தக் கணம்வரை எறிகணைகளால் எங்கள் பகுதியில் சல்லடை போட்டவர்கள் மீது இப்போது எங்களது எறிகணைகள் பதம் பார்த்தன. காப்பரணில் இருந்த எங்களது தோழர்கள் தங்களின் நிலைகளை மாற்றி மாற்றி எதிரியுடன் மோதிக்கொண்டிருந்தனர். எங்களது நகரும் அகழிக்குள் நின்று சமரிட்ட தோழர்கள் சிலர் குண்டேந்தி ரத்தம் சிந்தியபடி வீழ்ந்தபோதும் எங்கள் நிலைகளை விட்டு யாரும் பின் நகரவில்லை. அதேநேரம் சிங்களச் சிப்பாய்களும் அவர்களின் கவச டாங்கிகளும் எங்களின் தாக்குதலில் சிக்கிச் சிதைந்துகொண்டிருந்தன.
எங்களின் வீரர்களின் நெஞ்சுரத்தின் முன்னாள் சிங்களப்படை அன்றைய தினத்திலும் பல இராணுவ வீரர்களையும் இரண்டு ராங்கிகளையும் இழந்தது.
எஞ்சிய சிங்களச் சிப்பாய்கள் காயமடைந்த சிப்பாய்களையும் சேதமடைந்த டாங்கிகளையும் இழுத்துக்கொண்டு பின்வாங்கி ஓடினர்.
இந்தத் தாக்குதலின் பின் புளியங்குளத்தில் எங்களது நிலைகளைக் கைப்பற்றுன் நுயர்சியைப்பற்றி சிங்களம் சிந்திக்கவேயில்லை. அந்த ஊரின் ஒவ்வொரு துண்டு நிலத்திற்காகவும் எங்கள் தோழர்களின் இரத்தமும் வியர்வையும் சிந்தப்பட்டது. வெற்றியின் மகிழ்வோடு எங்கள் தோழர்கள் எங்களை விட்டுப் பிரிந்து போனார்கள். ஆனாலும், அந்தப் பிரிவுகள் எங்கள் மண்ணைப் பிரியவிடாது. எங்களது ஊர்களை எங்களுக்கு மீட்டுத் தந்தபடியிருக்கும்.
குறிப்பு: ஜெயசிக்குறிச் சமரின் ஒரு கட்டத்தில் சிறிலங்கா இராணுவம் எம்முடன் நேரடியாக மோதுவதைத் தவிர்த்து அகலக்கால் பதித்ததால் புளியங்குளத்தில் இருந்து நாமாகவே பின்வாங்கினோம். பின்னர், ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையில் இந்த ஊர் மீட்கப்பட்டது.
– புரட்சிமாறன்.
விடுதலைப்புலிகள் (கார்த்திகை 2003) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”