முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்
முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்
முல்லை நிலம் விடுதலைப்புலிகளின் வெடி அதிர்வுகளால் சிலிர்த்தது. கடலும் கடல் சார்ந்த நிலத்திலும் இடியும் மின்னலுமாக போர்க்களம். புகைமண்டலங்க்களுள் இருந்து எழுந்த தீச்சுவாலைகள் எட்டுத் திக்கும் உதயத்தின் வரவுக்கான சந்தோஷக் கனல்களை மூட்டின.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டோம் என்று வீணான, கற்பிதமான போக்கிலிருந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு இது கசப்பானதும் மறக்க முடியாததுமான ஒரு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பெற்ற தாக்குதல் ஒவ்வொன்றின் போதும், சிறீலங்கா இராணுவம் தமது முகாங்களை உசார்படுத்தி விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஏற்ற ஆயுதங்களை செய்வது வழமை. இம்முகாம் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பது குறித்து சிறீலங்கா இராணுவத்திற்கு புலனாய்வாளர்கள் முற்கூட்டியே தெரிவித்திருந்தும் அவர்களால் முகாம் மீதான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போனமை சிறீலங்கா இராணுவத்தினரின் பலவீனத்தையே கோடிட்டுக் காட்டுகிறது.
கடற்புலிகளின் பலம் குறித்து சிங்கள இராணுவ விமர்சகர்களே வியந்து பேசியிருக்கிறார்கள். கடற்புலிகளின் ஆதிக்கம் வலுப்பெற்று வருவது குறித்த அச்சத்தை அவர்கள் நிறையவே கொண்டிருந்தார்கள். இவ் வளர்ச்சிப் போக்கு இராணுவ முகாம்களுக்கான, யாழ் குடாநாட்டிலுள்ள விநியோகப் பாதைகளை அறுத்துவிடும் ஆபத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இதனால் படையினருக்கான ஆயுத தளபாடங்கள், உணவு, மருந்து என இத்தியாதி தேவைகளுக்கான தட்டுப்பாடுகள் அவர்களை நெருங்கத் தொடங்கும். அத்தோடு அவர்கள் முகாம்களை விட்டு வெளியேற முடியாத அவல நிலையம், அடிக்கடி தொடரும் விடுதலைப்புலிகளின் ஓயாத தாக்குதல்களும் இராணுவ பலத்தை பலமிழக்கச் செய்துவிடும் என்பதை இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையானது விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாய உத்திகளில் பலத்த மாற்றத்தைக் கொணரும் என்றும் இந்த இடப்பெயர்வு விடுதலைப்புலிகளின் படை பல சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்றும் எச்சரித்தனர். வன்னிப் பிராந்தியத்தில் ஒரு முகப்படுத்தப்பட்ட முறையில் களம் அமைத்திருக்கும் விடுதலைப் புலிகள் பலமான தாக்குதல்களை மேற்கொள்வார்கள் என்பது குறித்த அச்சத்தையும் தெரிவித்தார்கள்.
முல்லை இராணுவ முகாம் மீதான தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகளின் படைக்கல சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளமை யாழ் குடாநாட்டிற்குச் செல்லும் கடல், ஆகாய ரீதியிலான சுயாதீனப் போக்குவரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
கடல் பரப்பைப் பொருத்தவரை கொழும்பிலிருந்து தென்பகுதி ஊடாக திருமலை செல்லும் கடற்பரப்பானது இதுவரை சிறீலங்காப் படைகளிற்கு பாதுகாப்பானதாகவே இருந்து வருகிறது. ஆனால், திருமலையிலிருந்து வடக்கே செல்லும் கடற்பாதையானது சிறீலங்காவுக்கு மிகவும் பாதுகாப்பற்ற பகுதியாகவே உள்ளது. இதனால், குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் உள்ள தமது முகாம்களில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை நிறுத்தி கனரக ஆயுதங்களைக் குவித்து பலப்படுத்தி வருகின்றனர். யாழ் குடாநாட்டில் இருந்த பலாலி முப்படைத்தளம், காரைநகர் கடற்படைத்தளம், மண்டைதீவு இராணுவ முகாம் ஆகியவற்றில் மண்டைதீவு இராணுவ முகாம் சென்ற வருடம் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. (இது 1996 வரையப்பட்ட கட்டுரை தேசக்காற்று இணையம் வரலாற்றுடன் இணைக்கிறது) வரலாற்றுச் சிறப்பானதாக அமைந்தது. அத்துடன் ஆனையிறவு, பூநகரி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களிலும் இவர்களது பாரிய இராணுவ முகாங்கள் அமைந்திருக்கின்றன. இதில் மன்னார் இராணுவ முகாமானது மேற்கில் அவர்களது போக்குவரத்திற்கு ஒரு முக்கிய தளமாக அமைந்திருக்கிறது. கிழக்கில் திருமலையிலிருந்து யாழ்ப்பணத்திற்கு இராணுவ விநியோகங்களைச் செய்வதற்கு முல்லைத்தீவு இராணுவ முகாமானது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. கடற்புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கும் இந்த முல்லைத்தீவு இராணுவ முகாம் சிறீலங்காப் படையணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வந்தது. விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் உள்ள ஆக்கிரமிப்பு இராணுவத்தை தாக்கியழிப்பதற்கு இது மாத்திரம் காரணமல்ல. வேறு பல காரணங்களும் இருப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது சென்ற வருடம் சிறீலங்கா இராணுவத்தினரால் யாழ் குடாநாடு மீது மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையில் பெருமளவு படைகளை விடுதலைப் புலிகள் ஈடுபடுத்தாமல் சிறுதொகையான வீரர்களை மட்டும் தாக்குதலில் ஈடுபடுத்திவிட்டு உத்திரீதியான நகர்வை மேற்கொண்டிருந்தார்கள்.
வன்னிப் பிராந்தியத்தில் தளமிட்டிருக்கும் விடுதலைப் புளிவீரர்களிற்கு மிக அருகாமையில் முல்லைத்தீவு முகாம் இருந்தது. அது விடுதலைப்புலிகளுக்கு ஆபத்தானதாக இருந்தது. மேலும், பெருமளவு மக்கள் தங்கியிருக்கும் வன்னி பெருநிலப்பரப்பு மீதான ஆக்கிரமிப்புக்கு ஏதுவான மேடையாக இருந்தது. வன்னிப் படையெடுப்பு நடவடிக்கை ஒன்று முப்படையின் பலத்தையும் கூட்டி மேற்கொள்ளப்படும் பட்சத்தில் முல்லை இராணுவ முகாமின் இருப்பு பலத்த இன அழிவை ஏற்படுத்தும் என்பது விடுதலைப் புலிகளின் கருத்தாக இருந்தது. அதனால் அவ்வாறானதொரு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள முன் வன்னிப்பிராந்தியத்தில் உள்ள இவ் இராணுவ முகாமை தாக்கியழித்துவிட விடுதலைப் புலிகள் அலையாய் எழுந்தார்கள்.
யாழ்ப்பாணத்தை சிறீலங்காப் படைகள் ஆக்கிரமித்தபோது, விடுதலைப் புலிகளினதும் மக்களினதும் இடப்பெயர்வு ஒரு தற்காலிகப் பின்னடைவுதான் என்பதை விடுதலைப்புலிகள் தெளிவாக விளங்கியிருந்தார்கள். விடுதலைப் புலிகள் திட்டமிடப்பட்ட மரபு ரீதியான ஒரு படை நகர்வை அன்றிருந்த சூழலில் எதிர்கொள்ள விரும்பவில்லை. தாம் விரும்பியவாறு எதிரியை எதிர்கொள்ளல் என்பதை முல்லைத்தீவில் நீருபித்துக் காட்டினர்.
1500 இராணுவத்தினர் இருந்த முகாமில் 30 பேரே உயிர் தப்பினர். 122 மில்லி மீற்றர் பீரங்கிகள், கவச வாகனங்கள் என்ற ரீதியில் பல கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இன்னொரு விசேசமாக உதவிக்கு வந்த படைகளை முறியடித்தும் பின்வாங்கச் செய்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம் முகாம் பகுதியை கட்டுப்பாட்டிலேயே விடுதலைப்புலிகள் வைத்துக்கொண்டனர். இதன் மூலம் விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்த ஒரு படை பல சக்தியை உருவாக்கி அந்த சக்தியைக் கொண்டு ஓயாத அலையாக எழுந்து போராட்ட வரலாற்றில் புதிய பரிமாணங்களைப் படித்தும் தொட்டும் நிற்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.
– எரிமலை (ஆடி, ஆவணி 1996) இதழிலிருந்து தேசக்காற்று.