உலகத் தொழிலாளர்களின் உறுதுணையை தமிழீழ விடுதலைக்கு உறுதிசெய்யும் நாள்.
உழைப்பவனே பொருளுலகைப் படைக்கின்றான். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தின்றான்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகம் 01.05.1994 அன்று மேதினத்தை முன்னிட்டு புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்கு விடுத்த செய்தியை இன்றைய காலத்தில் மீள் வெளியீடாக தேசக்காற்று பதிவு செய்வதையிட்டு மனநிறைவடைகிறது.
மே 1: உலகத் தொழிலாளர்களின் உறுதுணையை தமிழீழ விடுதலைக்கு உறுதிசெய்யும் நாள்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்கு!
இன்று நாங்கள் தொழிலாளர் தினத்தை உணர்வு பூர்வமாகக் கொண்டாடுகின்றோம். இந்நாள் தொழிலாளர்களின் எழுச்சி நாளாகவும், சுபிட்சமாகவும், சுதந்திரமாகவும் வாழுகின்ற உரிமையை வென்றெடுப்பதற்காக உறுதிபூணும் நாளாகவும் விளங்குகின்றது. உலகத் தொழிலாளர்கள் தமது மீட்சிக்காக ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நாளாகவும் இது அமைகிறது.
உலகை இயக்கும் சக்தியாகத் தொழிலாளர்களே விளங்குகின்றார்கள். மனித சமுதாயத்தின் இருப்புக்கு ஆதாரமாக இருப்பவர்களும் தொழிலாலர்களேதான். எனவே தொழிலாளர்களின் விடுதலை என்பது மனித சமூகத்தின் விடுதலை என்பதாகின்றது. உலகத் தொழிலாளர்கள் என்ற பெரும் சமூகத்தினுள், தமிழீழத்தின் பரந்துபட்ட உழைக்கும் மக்களும் சங்கமிக்கின்றார்கள். எனவே உலகத் தொழிலாளர்களின் கூட்டுறவும், ஒத்துழைப்பும் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கு உறுதுணையாக அமைகிறது.
தமிழீழத்திலும், புலம் பெயர்ந்து குடியேறிகளாக, அகதிகளாக வாழும் நாடுகளிலும் இந்நாளை நாம் கொண்டாடும் போது, எமது இக்கட்டான நிலையை நாம் நன்கு உணர்ந்து கொள்கிறோம். தமிழீழத்தை தனது ஆதிக்கக் காலில் இட்டு நசுக்க அந்நிய சிங்கள இனவாத அரசானது அயராது முயலுகின்றது. பொருளாதாரத்தை சீர்குலைத்து தமிழீழ மக்களை ஓட்டாண்டிகளாக்க நினைக்கின்றது. விவசாயம் செய்யவும், கடலில் மீன் பிடிக்கவும் தடைகளை விதிக்கின்றது. குண்டுகளை வீசிக் குடிமனைகளையும், ஆலயங்களையும், கல்விக்கூடங்களையும், வைத்தியசாலைகளையும், தொழில் நிலைகளையும் அழிகின்றது. பொருளாதார, உணவு, மருந்துத் தடைகளை இறுக்கி மக்களைப் பட்டணியில் வருத்தவும், சாகடிக்கவும் செய்கிறது. மக்களைச் சொல்லொணாத் துன்பங்களுக்குள்ளாக்குவதன் மூலமும், இனப்படுகொலைத் திட்டமொன்றை அரங்கேற்றுவதன் மூலமும், மக்களின் மன, உடல் உறுதியைச் சீர்குலைத்து போராட்டத்தை நசுக்கிவிட எண்ணுகிறது. சுதந்திரக்காற்றை சுவாசிக்க விரும்புகிறவர்களின் மூச்சை முழுமையாக நிறுத்திவிட விரும்புகிறது. அல்லாது போனால் அடிமைத்தனம் என்ற நச்சுக்காற்றைச் சுவாசிக்குமாறு நெருக்குகிறது.
இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையோ தேசிய முரண்பாடோ இல்லவே இல்லை என முரட்டுத்தனமாக வாதிடும் சிறிலங்கா அரசானது, அதனை உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளுமாறு பிரச்சாரங்களைப் புரிந்து வருகின்றது. சிங்கள இனவாத ஒடுக்குமுறையானது அங்கு இல்லையெனவும், தமிழீழ மக்கள் சகல உரிமைகளுடனும், சமாதானமாகவும் வாழ்வதாகவும் பொய்ச்சித்திரம் ஒன்றைத் தீட்டிக்காட்டுகின்றது. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகள், தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடியவை என்றும், அங்கு அகதிகள் திருப்பி அனுப்பப்படலாம் என்றும் கயிறு திரிக்கின்றது. இத்தகு மாயப் பிரச்சாரமானது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், அவர்களின் ஓரளவு பாதுகாப்பான வாழ்க்கையையும் ஒரு சேரக் குழிதோண்டிப் புதைக்கும் நோக்கம் கொண்டது. இது குறித்து புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் எச்சரிக்கை அடைவது மாத்திரமல்ல, இப்பிரச்சாரத்தை முறியடிக்க முழுமையாக உழைக்க வேண்டியவர்களாகவும் உள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை “பயங்கரவாத இயக்கம்” எனக் காட்டி சர்வதேச அரங்கில் அந்நியப்படுத்தல், சிறிலங்கா அரச யாப்பினுள் காணக்கூடிய மலினப்பட்ட அரைகுறைத் தீர்வுகளை வைத்து மக்களை ஏமாற்றுதல், உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து போராட்டத்தைச் சீர்குலைத்தல் என்ற ரீதியில் சிறிலங்கா அரசாங்கம் செயல்ப்படுகின்றது, இந்தச் சீர்குலைவு நடவடிக்கைகளால் மீளமுடியாத பாதிப்புக்குள்ளாகப் போவது, தமிழீழத்திலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற அனைத்துத் தமிழீழ மக்களுமேயாகும்.
இத்தகைய ஆபத்தை உணர்ந்து, இதனைத் தடுத்து நிறுத்த இன்றே தீர்மானம் எடுப்போம். வெளிநாட்டு அரசாங்கங்கள் எந்த வகையிலும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு உதவ முன்வரதவாறு ஓங்கிக் குரல் எழுப்புவோம், தமிழீழ மக்கள் சக்தியானது, தடைகளை உடைத்து விடுதலையை வென்றெடுப்பதற்கு ஒன்று திரண்டு பாயவேண்டும். அதன் ஓடத்திற்கு உறுதுணையாக உலக உழைக்கும் மக்களை அனைத்துச் செல்வோம் என இன்றைய நாளில் உறுதி செய்வோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”