கடற்புலி கப்டன் ஈழப்பதி
சிங்கள தேசத்தில் வாழ்ந்தவன் தன் தாயின் இனத்துக்காக காற்றுடன் கலந்தவன் கடற்புலி கப்டன் ஈழப்பதி.
காலத்தின் ஓர் வரலாறாகி உறங்கும் இவனது வீரத்தின் தடத்தை தேசத்தின் பணிக்காக தோழமையான நினைவுகளுடன் இவன் வீரியம் உரைக்கும் போது ஓர் தைரியம் எனக்குள்ளே பிறக்குறது.
ஈழப்பதி எனும் மாவீரனின் சுவடு யார்தான் அறிவார்! ஓர் சில மனம் அறியும்….
எம் தேசத்தின் விடியலுக்காய் தம் உடல் – உளம் அனைத்தையும் ஈகம் செய்து ஒப்பிட முடியா தியாகத்துடன் வீரத்துயில் கொள்ளும் மாவீரர்களின் வரலாறு சற்று வித்தியாசமானதும், மாறுபட்டதுமாக இருக்கும். வேறு தேசத்தில் பிறந்தாலும் தாய்மண்ணிலே நினைவுகள் இருக்கும் என்பது போல் தேசங்கள் கடல்கள் கடந்தும் வாழ்ந்து எம் தேசத்தை தாங்கிப் பயணித்த வரலாறு அதன் வீரங்கள் எம்மை ஓர் கனம் மெய்சிலிர்க்க வைக்கும். அப்படியான தியாகங்களும், வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத காவியப்புருஷர்களே எம் மாவீரர்கள்.
ஈழப்பதி, எம்மண்ணின் மைந்தன்தான், தாய் தமிழீழ நாட்டைச் சேர்ந்தவர் – தந்தை சிங்கள நாட்டைச் சேர்ந்தவர். ஆகவே இவனது வாழ்வின் வட்டமும் தந்தை – தாயோடு சிங்கள நாட்டில் கண்டி மாவட்டத்தில் இருந்தது.
அறிவயது முதல் – இளமைக் காலம் வரையும் சிங்கள நாட்டில் சிங்களத்தில் தான் பெருபாலான நண்பர்களும் சிங்கள மொழியினரே இவனது வாழ்வியல் பழகுவோருக்கு வித்தியாசமானதாக இருக்கும். சிங்கள மொழியை சாதாரணமாக பேசுவான். என்னும் சில நாட்டு மொழிகளும் சரளமாக பேசும் ஆற்றலும் திறமையும் உண்டு இவனில் அதை தொடரும் குறிப்பில் இணைக்கிறேன்.
சிங்கள நாட்டில் வாழ்ந்தாலும் தாய்மொழி தமிழை மறந்ததும் இல்லை, அதை பேசாமல் இருந்ததும் இல்லை. தமிழை ஓர் மழமை போல் பேசுவான். அந்தக் குரலை வைத்து யாரும் இலகுவில் இனம் காண்பார்கள் இது ஈழப்பதிதான் என்று.
தாயின் பிறந்த நாட்டைப் பற்றி அறிந்திருந்தாலும் தொடர்ந்த போர்காலத்தில் இவனால் தமிழீழத்துக்கு வரமுடியவில்லை. பின்பு தமிழீழத்தில் சமாதான மேகம் சூழ்ந்த காலம் தமிழீழத்தில் தாயாரின் உறவினர்களைப் பார்க்க யாழ்பாணத்துக்கு சென்றுகொண்டிருக்கையில் தமிழீழம் (வன்னி) இவனை வியப்பில் ஆழ்த்தியதும், எங்கள் மக்களின் அன்பும் – பாசமும் (வந்தாரை வாழவைத்த பூமி என ஓர் புலவன் அன்று சும்மா வரையவில்லையே!….) தன்னைக் கவர எம் போராட்டம் பற்றி முதலில் பேச்சில் அறிந்திருந்தவற்றை இவனால் நேரில் பார்க்கும் சமயத்தில் தன்னை அறியாமலே ஓர் உந்துதல் மனதில் பிறந்தது. மாவீரர் துயிலுமில்லம் அது என்னை மென்மேலும் ஓர் விடுதலைக் அணிசேர்க்கும் ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் அணியில் என்னை இணைத்தது என ஓர் உந்துதலுடன் அடிக்கடி கூறுவான்.
அவனது உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளும் அதில் கலந்திருக்கும் ஓர் விதமான விடுதலையின் தாகம் கொண்ட பயணத்தின் பூரிப்பும் தெரியும்.
இரும்பொறை 02 கடற்புலிகளின் பாசறையில் ஈழப்பதி எனும் பெயருடன் தன் விடுதலைப் போரியல் பயணத்தை தொடர்கிறான் ஓர் போராளியாக……
ஈழப்பதி, சிங்கள மொழி தேர்சி பெற்றவனாக இருந்தமையால் எம் போராட்டத்தை பற்றி சிங்கள் ஊடகங்கள் பரப்பும் பொய் பிரசாரங்கள் செய்தித் தாளில் ஏதாவது வந்தால் அதை போராளிகளுக்கு விளங்கபடுதுதல் போன்றவற்றாலும் சில செயற்பாட்டாலும் வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் போராளிகள் கலைநிகழ்வில் ஈழப்பதி பங்கு பெற்றும் அணியின் நிகழ்வென்றால் அவனின் இசையில் சில பாடல்கள் ஒலிக்கும். நன்கு இசை அமைக்கும் தேர்சி பெற்றவன். வசிகரித்த புன்னகையுடன் நகைச்சுவைகள் சொல்வதாலும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பழகும் சிறப்பம்சம் கொண்டமையால் எல்லோர் மனதையும் கவர்ந்தான்.
முல்லைத்தீவு இரும்பொறை 02 பயிற்சிகளை முடித்து பின் சிறப்புத் தளபதியால் லெப்.கேணல் கடாபி அண்ணாவிடம் சில போராளிகளுடன் வழக்கப்படுகிறான்.
கடற்புலிகளின் சதீஸ் டோறா இயந்திரவியல் கல்லூரியில் (இயந்திரத்துறை) உள்வாங்க அங்கு இயந்திரங்கள் பழைய போராளிகளுடன் இணைந்து கற்கிறான். கடற்சமரில் எடுக்கப்பட்ட பகைவனின் படகின் இயந்திரங்கள், என்னும் பலவகையான இயந்திரம் அறியப்படுத்தப் படுகிறது. அப்போது அந்த இயந்திரம் (எதிரியின் டோறா) அதன் பாகங்கள் வேற்றுநாட்டு மொழியில் இருந்தது அந்த மொழி தெரிந்த ஒருவர் அது தொடர்பான விடையங்கள் கற்பிக்கையில் அப்போது ஈழப்பதியும் அந்த நாட்டின் மொழி ஓரளறு தனக்கு தெரியும் என்று கூறி சில விடயங்களை இலகுவாக போராளிகள் அறியும் வண்ணம் செய்கிறான் அப்படி நீள்கையில் பொறுப்பதிகாரி லெப்.கேணல் கடாபி அண்ணா முதல் சிறப்புத் தளபதிவரை பாராட்டி சிறப்புத் தளபதி ஓர் பெரிய அந்த நாட்டின் மொழி அடங்கிய அகராதி புத்தகத்தை வழங்குகின்றார்.
கடற்புலிப் படகின் உள்ளிணைப்பு இயந்திரம், வெளியிணைப்பு இயந்திரம், பெட்ரோல் இயந்திரம், டிசல் இயந்திரம் என அனைத்து வகையான இயந்திர சீரமைப்பில் தேர்சி பெற்று அவ்வப்போது தன் முயற்சிகளை காண்பித்து அனைவரைரும் பிறப்பிக்க வைக்கும் ஆற்றலும் உண்டு.
நாளும் கானகத்தின் இடையிடையே புகுந்து சந்து போந்து என பாசறையை சுற்றி வரும் இவன் சிலதருனத்தில் தேடினால் ஏதும் மரத்துள் சாய்தவண்ணம் கையில் ஓர் பெரிய கொப்பியை வைத்துக்கொண்டு கவிதை புனைவான். அதை அனைவருக்கும் வாசித்தும் காட்டுவான். சில தருணத்தில் மாவீரர் குறிப்புகளை எழுதி அதை தினம் தினம் படித்து தமிழீழ மாவட்டங்களில் நினைவின் இடங்களில் குறிப்பிடுவான். சில சுவடுகளை வரைந்து ஓர் புத்தகமாக்கி வைத்திருப்பான் அதைப் படிக்கையில் எமக்கும் ஓர் வீரம் பிறக்கும்.
ஈழப்பதி நன்றாக மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாடுவான். இவனின் அந்த திறமையால் சதிஸ் இயந்திரவியல் பல தடவை வெற்றி வாகை சூடியது. சில தருணங்களில் பொறுப்பாளரின் அனுமதியுடன் தேவிபுரத்திலிருந்து எங்களின் போராளிகளின் வட்டுவாகல் பாசறை சென்று விளையாடுவோம் அது ஓர் வித்தியாசமான அனுபவங்கள் இன்று யாவும் காற்றில் கரைந்து போனதோ………
அப்படியாக ஓர் நாள் சதிஸ் இயந்திரவியல் பாசறையில் இருந்த போராளிகளுடன் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவர் அன்பு கலந்த வற்புறுத்தலால் ஓர் மட்டைப்பந்து விளையாட்டு ஒழுங்கு செய்யப்பட்டது. மறுநாள் அதிகாலை செல்ல இருந்தார்கள் ஆனால் அன்று சாலையில் இருந்த போராளிகளுடன் எம் சதிஸ் இயந்திரவியல் பாசறை நோக்கி கொண்டு வந்த செய்தி அனைவர் மத்தியிலும் பேரிடியாக விழுந்தது. அனைவரையும் கலங்க வைத்தது அவனையும் நன்கு அது வருத்தியது. அதுதான் “சுனாமி” எம் மக்கள் மீது என் கடல் தாயே! என கூறி மீட்பில் இறங்கிச் செயற்பட்ட போராளிகளுடன் ஈழப்பதியின் உருவமும் தெரிந்தது.
சுனாமியால் அழிக்கப்பட்டு மீள்கட்டுமானம் செய்யப்பட்ட தமிழீழ கரையோர மாவட்டத்தின் மீனவர்களின் இயந்திரங்கள் சரிசெய்யும் வேலைகள் போராளிகளால் முன்னெடுக்கப்பட்டது.
லெப்.கேணல் கடாபி அண்ணாவின் தலைமையில் 12 இயந்திரவியல் போராளிகள் வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, முள்ளியவளை என மாறி மாறி மக்களின் பாதிக்கப்பட்ட மீனவர்கள் இயந்திரங்களை சரி செய்து அதின் பதிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ஈழப்பதியும் ஒருவனாக திறம்பட செய்தான். பின்னாளில் அப்படியாக கடற்கரும்புலி.மேஜர் மங்கை படகு கட்டுமானப் போராளிகளும் செய்து அனைவரின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றனர்.
கடற்புலி அணிக்குள் எம்.வி.அகத், எம்.ரி சொய்சின், எம்.ரி.கொய் நினைவான விளையாட்டுப் போட்டியின் போது சிறப்புத் தளபதி அவர்கள் வெற்றிக்கிண்ணம் வழக்க அதை பெற்றுக்கொள்ளும் கப்டன் ஈழப்பதி.
நாட்கள் செல்ல ஓர் இரகசிய வேலைத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்படுகிறான். அப்படியாக அவன் அந்த சூழ்நிலைக்கு தேவைப்பட்டமையால் லெப்.கேணல் ஸ்ரிபன் அவனையும் அழைத்து ஓர் கடலலை மீதில் ஓர் பயணம்….
அதிலே மீண்டும் ஓர் சந்திப்பு ஆயினும் இனியும் காண்பேனா என பிரிய மனமின்றி நேரமும் நெருங்கிக்கொண்டிருந்தமையால் தொலைத்தொடர்பு சாதனத்தினுடான உரையாடலுடன் பிரிவு….
அவனோ தாயகம் நோக்கி செல்கிறான்…… இனி எப்போது காண்பேன்…. அல்லது….. அல்லது………… என மனம் ஆயிரம் கேள்விகளை நினைத்தபடி………..
ஆனால் சர்வதேசக் கடற்பரப்பில் இருந்து தாயக நோக்கி செல்கையில் பகவனின் முற்றுக்கைக்கு உள்ளாக நீளும் கடற்சமரில் எதிரியின் வான்தாக்குதலில் லெப் கேணல் ஸ்ரிபன், கரும்புலி லெப் கேணல் விதுசன் – வெள்ளை, கரும்புலி லெப்.கேணல் அந்தணன், லெப்.கேணல் லிங்கவேந்தன், லெப்.கேணல் மனோஜ் எனும் சில கடற்புலிப் போராளிகளுடன் கப்டன் ஈழப்பதியும் ஒருவனாக…………
நிச்சயம் பகை முன் பணிந்திருக்க மாட்டான், தாயின் இனத்தின் விடுதலைக்காக தன் உயிர்ப்பூவை வீசி கடலன்னை அதிர காற்றுடன் கலந்து கடலிலே காவியமானான்……………
நினைவுப் பகிர்வு :- இசைவழுதி (தமிழீழப் பறவை கனடாவில்………)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”