கடற்கரும்புலி கப்டன் வானதி
தாயக மண்ணின் காற்றே
வானதி குடும்பக்கூட்டுக்குள் வாழ்ந்த நாட்கள் மிகக்குறைவு. வீட்டின் பொருளாதார நெருக்கடி மிகுந்த நிலைமையில் அவள் பெற்றோரிடமிருந்து பிரிய நேர்ந்தது. பாடசாலையில் வெண்சிட்டாகக் கழியவேண்டிய பள்ளிப் பருவம் ஒரு வீட்டின் வேல்லையாளாக நின்ற நாட்களில் தொலைந்து போனதும், தான் நீண்ட படிப்பெல்லாம் படிக்கவேண்டும் என்ற கனவு கலைந்து போனதும் அவளுக்கு மிகுந்த கவலைதான்.
சிறுவயதிலேயே சுமக்கமுடியாத சுமைகளைத் தாங்கியதால் ஏற்பட்ட மனமுதிர்ச்சியும் இளமை வாழ்க்கையில் இழையோடிப்போன துன்பமும் அவளைப் பின்வந்த காலங்களில் நிமிர வைத்தன என்பது உண்மைதான். ஆனாலும் அவளுக்குள் இருந்த ஆழ்ந்த சோகம் முகத்திலோ, பேச்சிலோ வெளிப்பட்டுத் தெரிந்ததில்லை. துருதுருவென விழிகள் உருள எப்போதுமே சிரித்தபடி திரியும் கலகலப்பான போராளிகளுக்குள்ளே அபூர்வமான ஒரு ஆளுமை இருந்தது. எல்லோரிடமும் நேசம் கொள்ளுகின்ற பண்பு இருந்தது.
இயக்கத்தின்மீது அவள் கொண்ட பற்றும், விசுவாசமும் எப்போதும் உணர்வுபூர்வமாகச் சிந்திக்கின்ற அவள் மனோபாவமும் எங்கள் நெஞ்சங்க்களை விட்டு ஒருபோதும் அகலப்போவதில்லை.
அந்தக் கடைசி நாட்களில், அவள் இலக்கில் போய் வெடிக்கின்ற இறுதிக்காலங்களில் மட்டும் சிறுவயதிலே விட்டுப் பிரிந்த தாயையும் வெகுதூரத்தில் இருக்கும் தந்தையையும் நினைத்து மனதுக்குள் அழுதாளோ! அவளது முகத்தில் அந்தப் பிரிவின் வேதனை அப்பட்டமாகத் தெரிந்தது.
கடற்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பயிற்சி முகாமில் அவள் குறிப்பிடத்தக்க திறமைவாய்ந்த போராளி. முதன் முதலில் கடற்புலிகள் மகளிர் படையணிக்கு கொடுக்கப்பட்ட “50 கலிபர்” ஒன்று அவளுக்கு கிடைத்தது. அதனுடன்தான் அவளது கடல்வாழ்க்கை, கடற்சண்டைகள் இடம்பெற்றன. ஆரம்பத்தில் கிளாலியில் மக்கள் பாதுகாப்புப் பணியிலும், இன்னும் இடம்பெற்ற முக்கியமான சண்டைகளிலும் அவளது 50 கலிபர் ரவைகள் கக்கின.
1995.10.12ல் முல்லைத்தீவுக் கடலில் வைத்து தரையிறங்கும் கப்பல் மீதான தாக்குதலிலும் இவள் சண்டையில் நின்றாள். இச்சண்டையில் லெப்.கேணல் இளநிலா வீரச்சாவடைந்தது குறிப்பிடத்தக்கது.
முல்லைச்சமருக்குப்பின்தான் இவளுக்குக் கரும்புலிப்படகு கொடுக்கப்பட்டது. அதற்குப்பின் வந்த நாட்களில் அவளது தீவிரம் அதிகமாகியது. அவளது படகில் மிகுந்த கவனம் செலுத்தினாள். எத்தனை மைல்கள் நடந்துசென்றும் படகைக் கவனித்து, பழுதுபார்த்து படகை ஒரு உயிருள்ள பொருளாகவே நடத்துவதை பல சர்ந்தப்பங்களில் நாம் அவளிடம் அவதானித்தோம். வானதி இறுதியாக எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதத்திலும், செயற்பாடுகளிலும் அதனிடம் அவள் கொண்டுள்ள பொறுப்பும் கவனமும் விளங்கியது.
திருமலைத் துறைமுகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கடற்படைக் கப்பலொன்றின் மீது 1997.03.24 அன்று கடற்புலிகள் தொடுத்த தாக்குதலில் கரும்புலிப்படகோடு சென்ற வானதி திரும்பி வரவேயில்லை.
உலகவான் அலைகளில் கடற்சமர் எனப் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட அந்தச் சண்டையிலேயே அவளது இலக்கில் போய் இடித்தாள்.
“தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா”
பாடல்வரிகளை காற்றள்ளி வந்தது. ஆனால் அவள் இல்லை. மூசி எரியும் கடலலைகளைப்போல அவள் மேடையிலே விரும்பிப்படுகின்ர பாட்டைக் கேட்பதற்கு அவள் வரவில்லை. “கரும்புலி இவள் பாடும் பாடல்” மட்டும் இன்னும் கேட்கிறது.
நினைவில் நிறைத்த தோழிகள் தொகுப்பிலிருந்து……..
களத்தில் 143 (10.09.1997) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”