கடற்கரும்புலி மேஜர் கனிநிலா
விரதம்…
அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள். எப்போதும் மற்றவர்களைச் சீண்டிப் பார்ப்பதிலும் சிரிக்க வைப்பதிலும்தான் பெரும்பாலான அவளது பொழுதுகள் கழியும். அந்தப் பாசறையில் எல்லோருக்கும் இளைய வளாக அவள் இருப்பதால் அவள்தான் கதாநாயகி.
தன்னுடைய கடமைகளில் அவள் ஒருநாளும் பின்னிற்பதில்லை.
சமையற்கூட முறை என்றால் இரவு படுக்கும் போதே அவள் சொல்லுவாள் என்ன விடியவே எழுப்பி விடுங்கோ, எனக்கு நாளைக்கு முதன்மையான பணியிருக்கு…. முழுகி, மடிப்புக் குலையாத உடையோடு வந்து நிற்பாள். என்ன… எங்க போகப் போறா என்று எல்லோரும் கேட்டால், முதன்மையான வேலைக்கு வெளியில போகப்போறன் என்று சொல்லி விட்டு ஒன்றுக்கு நாலு தடவை தலைவாரி முகப்பூச்சுக்கள் பூசி அவள் எங்கேயோ” புறப்படத் தயாராகி விட்டாள்.
எங்க பிள்ள போகப் போற… மூத்த அக்காக்கள் கேட்டால், நேரம் வரேக்க நீங்களே புரிஞ்சு கொள்ளுவியள் என்று சொல்லி விட்டு நேரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டாள். நேரம் நெருங்க சாப்பாட்டு வாளியோடு சற்றுத் தள்ளியிருக்கும் சமையற் கூடத்திற்கு போய் விட்டாள்.
ஆக அவள் போட்ட ஆர்ப்பாட்டம் எல்லாம் சாப்பாடு எடுக்கப்போவதற்குத்தான். இப்படித்தான் இவளது குழப்படிகள் இருந்தன. இவள் கடற் கரும்புலிகளணிக்கு வந்து ஒரு வருடம் கழிந்துவிட்டது. தனக்கு இன்னும் சரியான இலக்கு அமையவில்லையே என்ற ஆதங்கம் அவளிற்கு இருந்தது.
இந்த நேரத்தில் தான் விரதம் இருந்தா நினைச்சது நடக்கும் என்று யாரோ ஒரு அம்மா சொன்னதைச் செய்ய அவள் துணிந்துவிட்டாள்.
வெள்ளிக்கிழமை விரதம் இருக்க வேண்டும். ஆனால் அவளால் ஒரு பொழுதும் சாப்பிடாமல் இருக்க முடியாது.
என்ன செய்யலாம் அவள் யோசித்தாள் அம்மா இருக்கிறாதானே ஏன் கவலைப்படுவான். உடனே அம்மாவுக்கு கடிதம் எழுதினாள்.
அம்மா ஏழு வெள்ளி விரதமிருந்தா நினைத்தது நடக்குமாம். எனக்கு நெடு நாளா ஒரு விருப்பம் நான் விரதம் இருக்கமாட்டன் எண்டு உங்களுக்குத் தெரியும் தானே. எனக்காக நினைச்சு நீங்க விரதம் இருங்கோ. எனக்கு என்ன ஆசை எண்டதை நான் நினைக்கிறன்.
அம்மாவுக்குச் சொல்லப் பத்தாது பிள்ளை கேட்டு விட்டாள், அதுகும் அவள் நினைச்ச காரியத்திற்காக. அம்மாவுக்கு ஏற்கனவே ஒரு மாவீரன் இந்தப் பிள்ளைக்காவது ஒன்றும் நடக்கக்கூடாது என எண்ணிய அம்மா விரதமிருக்கத் தொடங்கி விட்டாள்.
“என்ரை பிள்ளை நினைச்சது நடக்க வேண்டும்”
இது தான் அம்மாவின் வேண்டுதலாக இருந்தது. ஒருவாறாக நான்கு வெள்ளி கடந்து விட்டது. மறுநாள் பிள்ளை நினைத்தது நடந்தேறியது.
இப்போதும் சிறீலங்காக் கடற்படையால் என்ன, ஏது என்று அறிய முடியாத அந்தத் தாக்குதல். நாயாற்றுக் கடலில் சுப்ப டோறா மூழ்கடித்த தாக்குதலில் அம்மாவின் மகள் வரலாறாகி விட்டாள்.
ஏதும் அறியா அப்பாவி அம்மா இப்போதும் சொல்லிச் சொல்லி அழுகிறா என்ர பிள்ளையின்ர சாவுக்கு நான் காரணமாகி விட்டேனே என்று.
அம்மாவின் மகள் வேறு யாருமல்லள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சினி யோடு புதிய வரலாறு எழுதிய மேஜர் கனிநிலா தான்.
நினைவுப்பகிர்வு:- பிரமிளா.
விடுதலைப் புலிகள் (04.09.08) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”