கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா
பழிக்குப்பழி
தொழிலுக்குப் போன என்ர அப்பாவைக் கொலை செய்தவனை நான் சும்மா விடமாட்டன்? இந்த ஓர்மந்தான் சஞ்சனாவைக் கரும்புலியாக மாற்றியது.
ஏற்கனவே ஒரு தடவை சிறிலங்காக் கடற்படையால் தொழிலுக்குப் போன அப்பாவைக் கடலில் வைச்சுக் கைது செய்த போது, வீட்டில் ஒரு நேர உலை வைக்க அம்மா பட்ட பாட்டை அவள் நேரில் பார்த்திருந்தாள். அந்த நேரத்தில் சிறியவளாக இருந்தாலும் அம்மாவுடன் இணைந்து குடும்பச் சுமையைத் தாங்கியவள் சஞ்சனா அப்போதே அவளது மனத்தில் விடுதலை பற்றிய கருமுளை கொள்ளத் தொடங்கியதை யாரும் அறியவில்லை.
சஞ்சனா வீட்டில் இருந்த காலத்தில் பொறுப்புணர்வோடு எல்லா வேலைகளையும் செய்வாள்.
யாருடனும் அதிகம் பேசமாட்டாள். சஞ்சனா வீட்டில் இருக்கிறாளா…? இல்லையா…? என்று உள்ளே போய்த்தான் பார்க்க வேண்டும். அந்தளவு அமைதியானவள் அவள்
அச்ச உணர்வு இவளிடத்தில் அதிகம் இருந்தது. எதைக் கண்டாலும் கலக்கம். பாம்பைக் கண்டா… அட்டையைப் பார்த்தா… மயிர்க்கொட்டியைப் பார்த்தா… ஏன் சில மனிதர்களைக் கண்டாலே அவளுக்கு அச்சம். தனிய எங்கையும் போகமாட்டாள் அவளுக்கு எல்லாத்துக்குமே அம்மா வேணும்.
படிப்பு அவளுக்கு விருப்பமான ஒன்றல்ல…
பொம்பிளப் பிள்ளையள் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற வலுக்கட்டாயத்தில் தான் அவள் பத்தாவது வரை படித்து முடித்திருந்தாள்.
அப்பா விடுதலையாகி வந்தபின் ஒருநாள் சஞ்சனாவைக் காணவில்லை. வீட்டை விட்டுப் பக்கத்தில் கூட ஓர் இடமும் போகாதவள் எப்படி எங்கே போயிருப்பாள்….? இவள் போராடப் புறப்பட்டிருப்பாள் என்ற எண்ணம் அம்மாவுக்கு இல்லை.
அம்மா கலங்கிப் போய் எல்லா இடமும் தேடினாள். ஆனால் போன இடம் தெரிந்த போது அம்மா அமைதியானாள்.
என்ர பிள்ளையா…?
போராடவா….?
இயக்கத்தில் இவளால நிண்டு பிடிக்கேலாது இண்டைக்கோ நாளைக்கோ அவள் திரும்பி வருவாள் என்று அம்மா எதிர்பார்த்தாள். ஆனால், பிள்ளையைப் பற்றி வரும் ஒவ்வொரு செய்தியும் அம்மாவுக்குப் பெரும் புதுமையாக இருந்தது.
என் மகளா….? அம்மா தனக்குள்ளே பல தடவைகள் கேள்வி கேட்டுப் பார்த்து விட்டாள். மிஞ்சியது வியப்புத்தான்.
சஞ்சனாவின் சண்டைக் களங்கள் நீண்டன.
சில காலம் அரசியல் பணியிலும் அவள் செயற்பட வேண்டி இருந்தது.
முல்லைச் சமர் வெற்றியின் பின் முல்லை மண்ணில் நடந்த பல்வகைப் படைக்கலப் பயிற்சியின் போது அவள் தனது கால் ஒன்றை இழக்க நேருகிறது.
ஆனால் அதன் பின் அவளுக்குள் ஒரு புதுவேகம்; மாற்று வலுவுள்ள காலைக் கொழுவிக் கொண்டு மீண்டும் கடலில் அவள் இறங்கி விட்டாள்.
“இந்நிலையில் அக்காவின் காலைப் பறித்தவனை சும்மா விடமாட்டன்” என அவள் தம்பியும் போராளியாகி 2ம் லெப். சோழ நிலவனாக வீரச்சாவையும் தழுவி விட்டான்.
இந்நிலையில் தான் கடற்றொழிலுக்குப் போன சஞ்சனாவின் தந்தை திரும்பி வரவில்லை.
‘இரவு சிறீலங்காக் கடற்படை மீன் பிடிக்கப் போன சனத்தின்ர படகுகள் மீது தாக்குதல் செய்ததாம்…. தொழிலுக்குப் போன கனபேர் வீடு திரும்பேல்ல… அதில சஞ்சனாவின்ர அப்பாவும் ஓராள்…”
செய்தி அவள் காதுகளுக்கு எட்டிய போது அவள் துடித்துப் போனாள்.
வீட்டு நிலைமை அவள் முன் கேள்விக்குறியாகி நின்றது. தங்கையின் படிப்பு, அவள் எதிர்காலம், அன்றாட வாழ்க்கைச்செலவு என ஒவ்வொன்றும் அவள் முன் பெரும் சுமையாகத் தெரிந்தது.
ஆனாலும், “அம்மா சமாளிப்பா…” அவள் மனத்தில் உறுதி இருந்தது.
அதனால், “பழிக்குப் பழி” வாங்கும் உணர்வு அவளுக்குள் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. அவள் தன்னைக் கரும்புலி அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு தலைவருக்கு மடல் எழுதினாள்.
ஆனாலும் தலைவரிடமிருந்து இசைவு வர அவள் காத்திருக்க வேண்டியிருந்தது.
எனினும் அவளது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இறுதியில் வென்றது.
ஆனால் கரும்புலிப் பயிற்சிகள் எடுத்த பின்னும் அவளுக்கான இலக்கிற்காக அவள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. கிட்டத் தட்ட 8 ஆண்டுகள் அவள் பொறுமை காத்தாள்.
சஞ்சனாவின் பொறுமையை இந்த இடத்தில் நாம் நினைக்காமல் இருக்கமுடியாது.
“இனி எங்க உனக்கு இலக்குக் கிடைக்கப்போகுது…” மற்றவர்கள் செய்யும் பகிடி இப்போது அவளுக்குள் அழுகையாக மாறிவிடும்.
“”என்ன சஞ்சனா… எங்களோட கதைக்காட்டி நாங்க இடிச்ச பிறகு தனிய இருந்து அழ வேண்டிவரும்…” மீண்டும் நாங்கள் பகிடி செய்யத் தொடங்கினால்.
‘நீங்கள் எல்லாரும் பார்த்துக்கொண்டு இருக்க எதிரியின்ர டோறாப் படகொன்றை நான் தாக்கத்தான் போறன்…” அவள் கீச்சுக் குரலில் சொல்லி விட்டு, எல்லோரையும் முறைத்துப் பார்த்து விட்டு கடற்கரை மணலில் கால் புதையப் புதைய அவள் நகர்ந்து செல்லுவாள்.
11.05.2006 வழமை போலவே சஞ்சனாவின் படகு படகுத் தாங்கியிலிருந்து இறக்க கரையில் நின்று வழியனுப்பிய தோழர் தோழியருக்கு…
“இண்டைக்கு நான் திரும்பி வரவே மாட்டன்… வெற்றிலைக்கேணிக் கடலில் ஒரு டோறா தாழுது…” அவளது விரைவுப் படகு விரைந்தது.
“என்ர அப்பாவைக் கொலை செய்தவனச் சும்மா விடமாட்டன்” அவளது எண்ணம் நிறைவேறிக்கொண்டது.
‘கடலிலே காவியம் படைப்போம்’
நினைவுப்பகிர்வு:- பிரமிளா.
விடுதலைப் புலிகள் (04.09.08) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”