கப்டன் தாரகன்
கப்டன் தாரகன் தாரகையாய் ஒளிர்கிறான்….!
வன்னியின் வளங்களையெல்லாம் தன்னகத்தேயும் கொண்டமைந்ததே முள்ளிவளைக் கிராமம். அடங்காப்பற்றின் வீரமும் வரலாறும் முள்ளியவளை நிலமெங்கும் பரவியிருப்பதை வன்னியர்களின் வரலாறு சொல்கிறது. வீரமிகு வரலாற்றையும் வீரத்தையும் கொண்ட முள்ளியவளைக் கிராமம் தமிழீழ மீட்பிற்காக தனத புதல்வர்களையும் புதல்விகளையும் ஈந்த பெருமைக்குரிய கிராமங்களில் ஒன்றாகும்.03.04.1974 தம்பு தம்பதிகளின் பிள்ளையாகப் பிறந்தான் பார்த்தீபன். அக்கா , அண்ணா , தங்கையின் அன்பிற்கு அவன் ஆதாரம். சிறுவயதுக்கேயுரிய இயல்புகள் அவனையும் ஆட்கொண்டிருந்தது.
வயல்களும் வரப்புகளும் இயற்கையின் பசுமையை ஏந்தி வைத்திருக்கும் முல்லைமண்ணின் ரம்மியங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த பார்த்தீபனின் மழலைக்காலம் மகிழ்ச்சியானது.
யுத்தத்தின் சத்தங்கள் முல்லைமண்ணையும் அள்ளிக் கொண்டிருந்த காலங்களில் வெடியோசைகளும் உயிரிழப்புகளும் பார்த்தீபனின் நெஞ்சிலும் நெருப்பை விதைத்த நாட்களவை.
முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியின் மாணவனாக கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தான் பார்த்தீபன். க.பொ.த.சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்தில் கணிதத்தை தேர்வு செய்து கல்வியைத் தொடர்ந்து உயர்தரம் பரீட்சையை எழுதிவிட்டு பெறுபேறு வரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனின் வாழ்வை மாற்றியது ஈழவிடுதலைப் போராட்டம்.
1994ம் ஆண்டு வீட்டைவிட்டுக் காணாமற்போனான் பார்த்தீபன். அமைதியும் இனிமையும் நிறைந்த வீட்டையும் சுற்றத்தையும் நண்பர்களையும் பிரிந்து காடுகள் நோக்கிப் போயிருந்தான். ஆம் அவன் விடுதலைப்புலியாக மாறினான்.
மணலாற்றில் 24வது பயிற்சி முகாமில் ஆரம்பப்பயிற்சியைத் தொடங்கிய பார்த்தீபன் தாரகன் எனப்பெயர் சூட்டப்பட்டு பயிற்சியில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சி முடிந்த போது இம்ரான் பாண்டியன் படையணிக்கு தளபதி சொர்ணம் அவர்களால் தெரிவு செய்யப்பட்டான்.
தலைவரின் வெளிப்பாதுகாப்புப் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் தாரகனும் தெரிவு செய்யப்பட்டு வெளிப்பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டான். தனக்கு வழங்கப்பட்ட பணிகளில் என்றுமே நேர்மையும் நிதானமும் கூடிய கவனத்தையுடைய போராளி. ஒரு காரியத்தை எடுத்தால் அதை முடிக்கும் வரை ஓய்வு உறக்கம் பசி களைப்பு எதையும் பார்க்காமல் ஓயாது இயங்கி காரியம் முடித்த பின்னரேயே ஓயும் களப்பணியாளன்.
1996இல் விசேட இராணுவப்பயிற்சிக்குச் சென்று திறமையோடு விசேட பயிற்சியை முடித்துத் திரும்பிய தாரகன் கப்டன் கௌதமன் அடிப்படை இராணுவப் பயிற்சி முகாமின் பயிற்சி ஆசிரியராக நியமனம் பெற்று புதிய போராளிகளை வளர்த்தெடுப்பதில் கவனமாகினான்.
களமாடச் செல்லும் கனவோடு காத்திருந்த தாரகனுக்கு முதல் கள அனுபவம் 09.01.1997 ஆனையிறவு ஊடறுப்புச்சமரில் தான் ஆரம்பமாகியது.
1996 நடுப்பகுதியில் முல்லைத்தீவு முகாம் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட போது இலங்கையரச படைகளுக்கு பெருத்த இழப்பையும் கொடுத்ததோடு இலங்கை இராணுவத்தின் உளவுரணும் புலிகளால் சிதைக்கப்பட்டிருந்த காலமது.
முல்லைத்தீவை இழந்த படையினர் சத்ஜெய 1 எனும் பெயரில் பரந்தனையும் , சத்ஜெய 2,3 நடவடிக்கையை மேற்கொண்டு கிளிநொச்சியையும் கைப்பற்றியிருந்தனர்.
எனினும் புலிகள் ஓய்ந்து விடாமல் தொடர்ந்த அடுத்த நடவடிக்கைக்குத் தயாராகினர். வன்னிக்கு அச்சுறுத்தலாக அமைந்த ஆனையிறவுப் படைத்தளமும் சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி வெற்றியும் அரசபடைகளுக்கு வெற்றிகளாக அமைந்தது.
ஓயாத அலைகள் ஒன்று தொடக்கம் தொடர் சமர்களில் புலிகளின் அணிகள் சண்டையிட்டுக் கொணண்டிருந்த சம நேரத்தில் அடுத்ததொரு ஊடறுப்புச் சமருக்கான ஏற்பாடுகள் , பயிற்சிகளிலும் போராளிகளை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஆனையிறவு தொடக்கம் கிளிநொச்சி வரையும் சிறீலங்காப்படைகளின் ஆதிக்கம் நிலையாகியிருந்த சமயம் அது. கிளிநொச்சி முகாம் மீது எவ்வித தாக்குதலையும் நிகழ்த்தாமல் பரந்தன் , ஆனையிறவு ஊடறுப்பினை மேற்கொள்ளும் நடவடிக்கையில் தயாராகிக் கொண்டிருந்தனர். இத்தாக்குதல் வெற்றி பெறுகிற போது கிளிநொச்சித் தளம் தனிமைப்படுத்தப்பட்டு இலகுவாக கிளிநொச்சியை மீட்கலாம் என்பது முடிவாகியது.
ஆனையிறவு பரந்தன் பகுதிகளை ஊடறுத்துச் செல்ல 1996வருட இறுதிப்பகுதியின் காலநிலை இடமளிக்காமல் போனது. நீரேரிகளையும் சதுப்பு நிலங்களையும் தாண்டிச் செல்ல வேண்டிய இப்பகுதிகளின் நீரின் மட்டம் அதிகரித்திருந்ததோடு சமருக்கான அகபுற காரணிகளும் தடையாகியது. இதனால் அணிகள் நகர முடியாது போனது.
கிளிநொச்சி வெற்றியோடு படைகள் சற்று அதிக எதிர்பார்ப்பைக் கொண்டு அடுத்த நகர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
ஆனையிறவு பிரதான மையத்தைத் தகர்த்துக் கைப்பற்றுவதோடு பரந்தன் சந்தி உள்ளடங்கலாக பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம் உட்பட படையினர் வசமிருந்த படைத்தளத்தையும் கைப்பற்றி கிளிநொச்சிக்கான தொடர்பை துண்டிக்கும் திட்டத்தில் அணிகளை தயார் செய்தார்கள். தாக்குதல் வெற்றியளிக்காது விட்டால் தாக்குதலை நிறுத்திக் கொள்வதெனவும் திட்டமிடப்பட்டது.
எதிரியா புலிகளா என்ற சவாலில் புலிகள் குறித்தபடி தாக்குதலிற்கு அணிகளை நகர்த்தி 09.01.1997 அன்று பரந்தன் ,ஆனையிறவு ஊடறுப்புச் சமருக்குத் தயாராகினார்.
08.01.1997 அன்று இருள் கவ்விய பொழுதில் நீரேரிகள் , சதுப்புகள் , வெட்டைகள் தாண்டி நீண்டதூரம் நகர்ந்து அணிகள் நிலைகளைச் சென்றடைந்து தயாராகியது. ஆனையிறவு மையத்தினுள் நுளைந்து ஆட்லறிகளை அழிக்கும் நடவடிக்கைக்குத் தயாராகி திட்டமிட்டபடி 09ம் திகதி தாக்குதல் ஆரம்பித்தது.
எதிரியின் முன்னேற்றத்துக்கு அவகாசம் கொடுக்காமல் விரைவான தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர். சாள்ஸ் அன்ரனி படையணி ஆட்லறித்தளத்தினுள் புகுந்து ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றியதோடு ஒன்பது ஆட்லறிகளையும் கைப்பற்றியது. எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளாலேயே எதிரி மீது தாக்குதல் நிகழ்த்தினர் போராளிகள்.
இதர பகுதிகளில் திட்டமிடப்பட்டது போல தாக்குதல் வெற்றியைத் தராது போனது. பரந்தன் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டது போல அமையவில்லை. கைப்பற்றிய ஆட்லறித்தளத்தை முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதானால் பரந்தன் படைத்தளம் போராளிகளிடம் விழ வேண்டும். ஆனால் நிலமை எதிரிக்கே சாதகமாகியது.
எதிரியும் புலிகளிடம் ஆட்லறித்தளத்தையோ பரந்தன் தளத்தையோ விடுவதில்லையென்ற முடிவில் சகல வளங்களையும் பயன்படுத்தி எதிர்த் தாக்குதலில் மூர்க்கமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதேபோல விடிவதற்கிடையில் வெற்றியை அடைய வேண்டுமென்ற வேகத்தோடு புலிகளும் சமரிட்டுக் கொண்டிருந்தனர்.
விடிந்தால் எதிரிக்கு ஆதரவாக விமானப்படை வந்துவிடும். அப்போது மிகவும் அச்சுறுத்தலாகவும் இடைஞ்சலாகவும் இருந்தது MI-24 உலங்குவானூர்தியின் தாக்குதல் ஆகும். அதேநேரம் வெட்டை வெளிகளில் சமரிடும் புலிகளின் அணிகளை MI-24 உலங்குவானூர்த்தியின் தாக்குதல் முன்னேற்றத்தை தடுத்துவிடும். அத்தோடு ஆட்லறிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் புலிகளின் அணிகள் கடும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். ஆகவே பரந்தனை வென்றால் மட்டுமே அடுத்த வெற்றியென்பது நிச்சயமாகியது.
புலிகளின் வரலாற்று வெற்றிகளைத் தந்த சமர்களில் பெரும்பாலும் ஒரு வழி சாதகமாகாது போனால் மாற்று வழியின் மூலம் வெல்லும் வழிகளைத் தயாராகக் கொண்டிருப்பர். இம்முறை ஓரிரவிலேயே வெற்றியை பெற்றால் மட்டுமே இழப்புகளையும் தவிர்க்கிற நேரம் எதிரியைத் தோற்கடிக்கவும் முடியும் என்பது முடிவானது.
பரந்தன் முகாம் மீதான தாக்குதல் எதிர்பார்த்தபடி வெல்ல முடியாது என்பது உறுதியானது. இனி இறுதி முடிவு கைப்பற்றிய ஆட்லறிகளை அழித்துவிட்டு அணிகள் பத்திரமாக பின்வாங்குவதே முடிவானது. தாக்குதல் தளபதிகளின் கட்டளைப்படி ஆட்லறிகளும் பெரும் ஆயுதக் களஞ்சியமும் அழிக்கப்பட்டு அணிகள் பின்வாங்கியது.
எதிரிக்கு பெரும் இழப்பையும் கொடுத்து எதிரியின் உளவுரணைத் தகர்த்த அச்சமரில் தான் தாரகனும் தனது முதல் கள அனுபவத்தைப் பெற்று சிறந்த சண்டைக்காரன் என்பதனையும் அடையாளப்படுத்தினான்.
வித்தியானந்தா கல்லூரியின் ஒருகாலத்தின் சிறந்த விளையாட்டு வீரனான விளங்கியவன் தாரகன். கப்டன் கௌதமன் (ஊரான்) உதைபந்தாட்ட அணியில் சிறந்த விரனாக மிளிர்ந்தது மட்டுமன்றி பத்திரிகைகளில் வரும் கணிதப் போட்டிகளில் கூட தனது கணிதத்திறமையை வெளிப்படுத்திய வீரன்.
சண்டையனுபவத்தைத் தொடர்ந்து கப்டன் கௌதமன் (ஊரான்) பயிற்சி பயிற்சிப்பாசறை ஒன்று முதல் மூன்று வரையான பாசறையின் பயிற்சியாசிரியனாகி சண்டைக்கள வீரர்களை வளர்த்தனுப்பினான்.
பின்னர் வெளிப்பாதுகாப்பணியின் பாதுகாப்பு பணியில் தனது பணிகளைத் தொடர்ந்த போது ஓயாத அலைகள் 3 நடவடிக்கை ஆரம்பமாகியது.
சண்டைக்களங்களில் சாதிக்க வேண்டும். இழந்து போன மண்ணை மீட்க வேண்டுமென்ற கனவோடு தானாகவே சண்டைக்குப் போக விரும்பி ஓயாத அலைகள் மூன்றில் இம்ராம் பாண்டியன் படையணியின் தாக்குதல் அணியோடு சென்றான்.
தனங்கிழப்பில் நிலையமைத்திருந்த அணியில் தாரகனும் ஒருவனாகினான். 01.02.2000அன்று அதிகாலை 4.30மணி. எதிரி இவர்களது பகுதியை உடைத்து முன்னேற முயன்று கொண்டிருந்தான். போராளிகளின் பகுதியைக் கைப்பற்றிவிடும் மூர்க்கத்தில் எதிரி தனது தாக்குதலை மேற்கொண்டிருந்தான்.
எதிரியின் மூர்க்கத்தை எதிர்கொண்டு போராளிகள் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். தாரகன் சண்டையில் எதிரியை எதிர்த்து வீரத்துடனும் ஓர்மத்துடனும் சமரிட்டுக் கொண்டிருந்தான்.
ஒருகட்டத்தில் பதுங்குகுளியை விட்டு வெளியில் நின்று எதிரியுடன் நேரடிச்சமரில் ஈடுபட்டான். தொடைப்பகுதியில் காயமுற்ற போதும் தனது காயத்திற்கான மருத்துவத்தை பெறாமல் பீல்ட் கொம்பிறேசரைக் கட்டிவிட்டு தொடர்ந்து எதிரியுடன் மோதிக்கொண்டிருந்தான்.
எதிரியின் எறிகணைகள் எங்கும் வெடித்துக் கொண்டிருந்தது. அந்த எறிகணைகள் தாரகனின் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தது. அங்கே தான் தாரகன் தலையில் காயமடைந்தான். ஏற்கனவே காயமடைந்த தொடைப்பகுதியால் அதிக குருதி இழக்கப்பட்டிருந்தான். அடுத்த காயத்தை தலையில் ஏற்றுக் கொண்டவன் தனது இறுதிக் கணத்தை அடைந்து கொண்டிருந்தான்.
தனங்கிழப்பு மண்ணில் கப்டன் தாரகன் தனது கடைசிக்கனவை விதைத்து விட்டு வீரச்சாவடைந்தான். தனது இறுதிக்கணத்தில் கூட எவ்வித சலனத்துக்கோ இடறலுக்கோ உட்படாமல் இறுதி வரையும் வீரத்தோடு போராடினான். மரணத்தின் கடைசி நொடியிலும் என்றும் போல புன்னகை நிறைந்த அவன் முகத்தில் எந்தச் சோர்வுமின்றி வீழ்ந்தான் வித்தாக….!
தாரகன் ஒளிரும் நட்சத்திரப் பொட்டுகளில் மின்னும் தாரகையாக தமிழீழக்கனவில் தனது வரலாற்றுத் தடங்களையும் பதித்துக் கொண்டு அமைதியாய் உறங்கினான்.
தாரகன் படித்த வித்தியானந்தா கல்லூரியும் அவனை நேசித்த அவனது ஊரும் மாணவர்களும் அவன் தோழோடு தோழ் நின்று களமாடிய தோழர்கள் அனைவரின் மனங்களும் துயரத்தில் தோய்ந்தது. அவன் நேசித்த அவனது பிறந்த ஊரான முள்ளியவளை மண்ணில் உறங்கிய மாவீரர்களோடு அவனும் முள்ளியவளை துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டான் மாவீரனாக….! எல்லோர் மனங்களிலும் நிறைந்து போனான் கப்டன் தாரகனாக…!
நினைவுப்பகிர்வு :- சாந்தி ரமேஷ் வவுனியன் (01.02.2014)
மின்னஞ்சல் :- rameshsanthi@gmail.com
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”