தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்
தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்!
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கீழ் ஒரு போராளியாக, பொறுப்பாளராக, தளபதியாக இருந்து செயற்படுவதை இட்டு நான் பெருமை அடைகிறேன். தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்பும் உளவியல் போரை நடத்த சிங்கள அரசாங்கம் முனைகிறது. எனவே நாம் அவர்களின் உளவியல் போரை முறியடிக்க வேண்டும். எனவே மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற் படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கும் தேசியத்தலைவர் அவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் இருப்பதாக சில பத்திரிகைகளும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இது சம்பந்தமாக தங்களின் கருத்தை இவ்விடத்தில் கூறிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக நடைபெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் மாவீரர்களின் பெற்றோர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை அவர்கள் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், எனக்கும் தலைவர் அவர்களுக்கும் இடையில் பிரச்சினை என்று வெளியாகிய இந்தச் செய்தியானது சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற ஒரு உளவியல் போர். சமாதான காலத்தில் இப்படியான உளவியல் போர்களை அடிக்கடி இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் இப்படியான உளவியல் போரை 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு கூட நடத்தி வந்திருந்தது. இது உங்கள் அனைவருக்கும் தெரியும். ?தலைவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு? இப்படியான கட்டுக்கதையை சிறிலங்கா அரச படைகள் மட்டும் செய்யவில்லை.
இந்த நாட்டினுடைய சனாதிபதி சந்திரிகா கூட இந்தியா சென்றிருந்த போது இந்துப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் சூசை சிகிச்சைக்காச் செல்லவில்லை அவர் விடுதலைப்புலிகளின் தலைவருடன் முரண்பட்டுத்தான் வெளிநாட்டுக்குப் போனவர். அங்கே புலிகளின் போராட்டத்தின் மூத்த நலன் விரும்பிகளின் வற்புறுத்தலின் காரணமாகத் தான் மீண்டும் வன்னிக்குத் திரும்பி வந்தார் எனக் கூறியிருந்தார். ஆனால் நான் வெளிநாடு சென்றது சிகிச்சைக்காகத் தான். இது தான் உண்மை. நான் சிகிச்சைக்காகத் தான் போனேன். சிகிச்சை பெற்றேன்.இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறேன்.
தலைவருக்கும் எனக்கும் இடையில் முரண்பாடு என அரசாங்கம் உளவியல் போரை தொடங்கியதன் காரணம் எங்கள் தலைவர் தமிழீழ கடற்படையை கட்டி எழுப்புவதற்காக கிட்டத்தட்ட 300 கோடி ரூபாவை ஒதுக்கியிருக்கிறார். இந்தப் பணத்தை புலம் பெயர்ந்து வாழ்கின்ற எங்கள் மக்களிடம் கேட்டிருக்கிறார் என்ற தகவல் ஒருவழியாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு சென்றடைய அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தக் கதையை சிறிலங்கா அரசாங்கம் பரப்பியது. உண்மையில் தலைவருடன் சமகாலத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதனால் தலைவரைப் பற்றி முழுமையாகத் தெரிவதற்கு வாய்ப்பில்லை.
உண்மையில் தலைவருக்குக் கீழ் இருந்து ஒரு போராளியாக, பொறுப்பாளராக, தளபதியாக செயற்படுவதை இpட்டு நான் பெருமை அடைகிறேன். எங்களுடைய தலைவர் தமிழ் மக்களுக்கான விடுதலைப் பாதையை சீரான பாதையில் நடத்திச் செல்கின்ற ஒரு அச்சாணியாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். நான் அவரிடத்தில் மதிப்பையையும், மரியாதையையும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் எம்மீது ஒரு பெரும் உளவியல் போரை நடத்துகிறது. இதன் மூலம் மக்களிடத்தில் ஒரு பெரும் குழப்பத்தை உண்டு பண்ணிவிடலாம் என நினைக்கிறது. இன்று இவர்கள் தமது கோர முகத்தை வல்வெட்டித்துறையிலும் நிகழ்த்தி இருக்கிறது. எமது விடுதலைப் போராட்டத்தில் பல கட்டங்களையும் போராடித் தாண்டி வந்து இன்று இந்த நிலையை நான் அடைவதற்கு எங்கள் தலைவர் அவர்களின் வளர்ப்புத் தான் காரணம்.
1985 ஆம் ஆண்டு வெற்றிலைக் கேணிக் கடலில் நாம் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கடற்படை எம்மைத் தாக்கியது. நாங்கள் பின் வாங்கினோம். பத்து ஆண்டுகளின் பி;ன்னர் தலைவரது நேர்த்தியான வழிகாட்டலில் அதே கடற்படையை நாம் விரட்டி அடிக்கிறோம்.
இன்று கருணா என்ற நச்சு விதை எங்கள் போராட்டத்தில் போட்டுவிட்டது. இதனை அரசு தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கிறது. இதனை எல்லாம் தூக்கி எறியுங்கள். இவர்களின் பேச்சை ஏற்றுக் கொண்டால் தான் அவர்கள் உளவியல் போரில் வெற்றி அடைவார்கள். நீங்கள் அதனைக் கருத்தில் எடுக்காது வீட்டீர்கள் என்றால் உளவியல் போரிலும் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள். அன்பான மக்களே, நாங்கள் அவர்களை நிழல் யுத்தத்தில் எப்படித் தோற்கடித்தோம். அதே போல உளவியல் யுத்தத்திலும் நாங்கள் தோற்கடிப்போம். அதற்காக நீங்கள் அவர்களின் கருத்துக்களை நம்பாதீர்கள். இது தான் இதற்கான ஒரேவழி.
நாங்கள் ஒரு மரபுவழி இராணுவம். ஒரு இராணுவத்தின் தளபதிகள் எங்கேயும் எப்போதும் மாற்றப்படலாம். மரபுவழி இராணுவமாக நாங்கள் பரிணாமம் பெற்றது தான் இதன் காரணம். உங்கள் பிள்ளைகள் எம்மை மரபு வழிப்படையாக உயர்த்தி இருக்கிறார்கள். இந்தக் கட்டமைப்பில் இத்தகைய மாற்றங்கள் நிச்சயம் நடைபெறும். இவை குழப்பத்திற்குரிய காரணங்கள் அல்ல. எனவே நீங்கள் குழம்ப வேண்டாம். ஒன்றிணைந்து அவர்களின் உளவியல் போரையும் முறியடிப்போம் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
கேணல் சூசை
கடற்புலிகளின் சிறப்புத் தளபதி
தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”